under review

தேவாங்க புராணம்

From Tamil Wiki
தேவாங்கபுராணம் மூலம்
தேவாங்கபுராணம் பாப்ரியா

தேவாங்க புராணம் ( 1880) தேவாங்கச் செட்டியார் குலத்தைப் பற்றிய புராணம். மாம்பழக் கவிராயரால் இயற்றப்பட்டது.போடிநாயக்கனூர் ஜமீன்தாரர் திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரை ஆதரவில் கோவை தேவாங்க குல குரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும் சம்ஸ்கிருதத்தில் இருந்து மொழியாக்கம் செய்த தேவாங்கபுராணம் மாம்பழக் கவிராயரால் தமிழில் கவிதையாக ஆக்கப்பட்டது.

எழுத்து, வெளியீடு

மூலம்

தமிழகத்தில் குடியேறிய தேவாங்கர் குலத்தைப் பற்றிய தொன்மத்தின் புராணவடிவம் இந்நூல். பொ.யு. 1532-ல் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு கவிஞர் பத்ரலிங்க கவி தாசிமாத்ரா-திவிபதி செய்யுள் வடிவில் தேவாங்க புராணத்தை எழுதினார். அதை அடிப்படையாகக் கொண்டே தேவாங்க புராணங்கள் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன. இந்நூலின் சம்ஸ்கிருத வடிவமும் உள்ளது.

எழுத்து

மாம்பழக்கவி சிங்கநாவலர் இந்நூலின் ஆசிரியர். மதுரைக்கு அருகேயுள்ள தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் வசித்து வந்த தேவாங்க குலத்தினர், தம் குலத்தின் மூலநூலாகிய தேவாங்க புராணத்தினை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க விரும்பி போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரையிடம் தெரிவித்தனர்.அவர் ஏற்பாட்டின்படி கோவை தேவாங்க குல குரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும் சமஸ்கிருதத்தில் உள்ள தேவாங்க புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தனர்.

குலவுசெழுங் கோயமுத்தூர் வளர்நிதிதே வாங்கர்குல குருவாய் வந்த
நலநளின கமுகசதா சிவானந்த தேசிகனு நாளுமின்ப
மலியுநகர்க் கலப்பதிவாழ் மூக்கய வேள் செல்வன் மனோன்மணி பொற் பாத
சலசமலர் துதியோகி தொட்டய தேசிகனுமுன்னூற் றன்மை காட்ட

என்ற பாடலில் இச்செய்தி உள்ளது.

அரங்கேற்றம்

மொழிபெயர்க்கப்பட்ட தேவாங்க புராணத்தை பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் இயற்ற, போடி நாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

துதிபெருகப் பாடியதைக்காசை வளம் மதியிலருள் சுரந்து வாழும்
முதுமறை வாழ்த்திய சவுடநாயகி பொற்கோவிலின் முன்மண்டபத்தின் மன்னோ
காசை நகர் புரக்கும் வங்கார்திருமலைப் போடயதுரைகா ரியவல்லோர்கள்
பேசுதமிழ்ப் பாவலர்தே வாங்கர்பத்தா யிரங்குலத்தோர் பெரியோர் யாரு
நேசமிகச் சூழ்சபையி ரலங்கேற்றினான்மதுர நிறைந்த கல்வி
வாசமுயர் பழனிவளம் பதிவளர் மாம்பழக் கவிஞன் மதிவல்லோனே

என்று இப்புராணத்தின் கடைசியில் பாடப்பட்டுள்ள சாற்றுக் கவி இச்செய்தியை தெரிவிக்கிறது.

இங்கு காசை என்பது இன்றைய போடி நகரைக் குறிக்கும். அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தத்தில் பாடப்பட்ட இக்கவிதையை சாமுண்டியாச்சாரியார் எழுதியுள்ளார். இதில் பாடப்பட்ட காலம் எது என்ற தகவல் இல்லை.மாம்பழக் கவிசிங்கநாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்நூல் அவர் தேனி சிற்றரசரின் ஆதரவில் இருந்தபோது எழுதப்பட்டிருக்கலாம்.

அச்சுப்பதிப்பு

பழனி மாம்பழக்கவிச் சிங்க நாவலர் இயற்றிய தேவாங்க புராணம் ஓலைச் சுவடியில் இருப்பதைக் கேள்விப்பட்டு கோவையில் புத்தக வியாபாரம் செய்து வந்த திரு.இ.ஒண்ணைய கவுண்டர் என்பவர் அதை வெளியிட்டார்.

அவர் இந்நூலில் கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்.

"அங்ஙனச் செய்யப் பெற்றுள்ள இப்புராணமானது இதுகாறும் அச்சிடாமலும், பெரும்பாலும் அத்தேவாங்க குலத்தினருக்கே தெரியாமலுங் குடத்திலிட்ட விளக்கைப் போல் பிரகாசமின்றி மறைந்து கிடந்தது. மகாவித்துவானாகிய இந்நாவலர் பெருமானியற்றிய பாடல்களைச் சேகரஞ் செய்ய விரும்பிய எனக்கு,இத்தேவாங்க புராணம் அவரால் செய்யப்பட்டுள்ளதென்று சிலரால் கேள்வியுற்று அதனைத் தேட முயற்சி செய்ததில், கோயம்புத்தூரில் வசிக்கும் ஸ்ரீநல்லமலை செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும், உடுமலைப்பேட்டை ஸ்ரீ பெ.இராமசாமி செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும் உபகரித்தார்கள்; அப்பிரதிகள் மூலப் பாடமாயிருக்கக் கண்டு கல்வியில் வல்லாரேயன்றி எல்லோருக்கும் பயன்படும் பொருட்டு,கோயம்புத்தூர் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ.ஆர்.சபாபதிப் பிள்ளையவர்களைக் கொண்டு உரையியற்றுவித்துப் புராணஞ் செய்ய முதல் நூல் காட்டியவருள் ஒருவராகிய சதாசிவ சுவாமிகளவர்களுடைய ஜேஷ்டபுத்திரரும், தேவாங்க குலகுருவுமாகிய சதாசிவமாகிய ஐயரவர்களைக் கொண்டு அம்முதநூலோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் சில விஷயம் முரண்பட, அம்முரண்பட்ட விஷயங்களுக்கெல்லாம் ஸ்ரீசபாபதி பிள்ளையவர்களைக் கொண்டே சில செய்யுளை நீக்கியும்,வேண்டுமிடங்கட்குப் பொருந்த வேறு சில செய்யுட்களைக் கூட்டியும், திருத்தியும், கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரஞ் செய்யும் மகாகனம் பொருந்திய வெரிவாட செட்டியாரவர்கள், கிரிய செட்டியாரவர்கள் முதலிய தேவாங்க குல திலகர்களது விருப்பத்தின்படி, அவர்களது திரவிய சகாயத்தை (நிதி உதவி) கொண்டு அச்சிட்டு முடித்து இன்று எல்லோருங் காண வெளிப்படுத்தினேன்" (பதிப்புரை)

இந்நூல் அச்சிடப்பட்ட ஆண்டு விஜய ளூ ஆனி மீ 28 உ என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. இந்நூலில் ஒரு போஸ்ட் கார்டை விட சிறிது பெரிய அளவிலான காகிதத்தில், புஸ்தக இருப்பு குறைவாக உள்ளதாகவும், மறுபதிப்பு செய்வதில்லை என்றும் எனவே, புத்தகம் வேண்டுவோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படியும், புஸ்தக விலையும், தபால் கூலியுள்பட ஆகும் விலை பற்றியும் அச்சிடப் பட்டு ஒட்டப்பட்டுள்ளது. அதில், 1894 ளூ ஜனவரி மீ 1 உ என்று குறிக்கப்பட்டுள்ளது. எனவே, இதிலிருந்து புத்தகம் அச்சிட்டு வெளியிடப்பட்ட வருடம் 1890 க்கு முன்னோ அல்லது 1890 களிலோ இருக்கலாம்.

சாற்றுகவி

இப்புத்தக வடிவிலான பதிப்பிற்கு உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வித்வான் பு.ப.அ.முத்துச்சாமி செட்டியார் சாற்றுக் கவி பாடியுள்ளளார். இந்நூலின் கடைசி பகுதியில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், " தேவாங்க முனிவர் ஏழாவதாரத்திலும் செய்த சாஸ்திரங்கள் இன்னவையென்று பெங்களூரில் வசிக்கும் பிரம்ம ஸ்ரீவேதமூர்த்தி நஞ்சுண்ட தீஷித சுவாமிகளவர்களைக் கொண்டு அருப்புக்கோட்டைக்கடுத்த சின்ன புளியம்பட்டியிலிருக்கும் தேவாங்க குல அபிமானி ஸ்ரீரா.ம.நா.கஉத்தாணு செட்டியாரவர்கள் எழுதி,இத்தேவாங்க புரணத்துடன் சேர்க்கும்படி அனுப்பினார்.அவருடைய இஷ்டப்படியே அச்சாஸ்திர விவரத்தை இப்புராணத்தில் சேர்த்திருக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவியோர்

இந்நூல் அச்சிடுவதற்குதப் பொருளுதவி செய்தவர்களின் விபரமும் அச்சிடப்பட்டுள்ளது.

அவர்களின் பெயர்கள் வருமாறு:

  • கோயம்புத்தூர் ஸ்ரீ.வெ.வெரிவாட செட்டியார்,
  • ஜே.தா.இராமசாமி செட்டியார்,
  • வெ.வெள்ளியங்கிரி செட்டியார்,
  • ந.கிரிய செட்டியார்,
  • சாமிரவுத்து நா.இராமையா செட்டியார்,
  • உடுமலைப்பேட்டை சாவுகார் ஸ்ரீ இராமலிங்க செட்டியார்,
  • குமாரர் திருமூர்த்தி செட்டியார்,
  • மடையாண்டி சாமி செட்டியார்,
  • சேலம் குகை கொ.ர.தம்மண செட்டியார்(முனிசிபல் கவுன்சிலர்),
  • செவ்வாய்பேட்டை சேலம் டி.மு.கோ.வக்கீல் கதிரி செட்டியார்,
  • வைத்தியலிங்கம் செட்டியார்,
  • திருப்பூர் சவுண்டப்ப செட்டியார்,
  • எம்.சுப்பிரமணிய செட்டியார்.

நூல் அமைப்பு

ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட இந்த புராணம் 29 சருக்கங்களாகப் பாடப்பட்டுள்ளது.

  1. நலன்றிகழ் பாண்டி நன்னாட்டுச் சருக்கம்
  2. வளர்தெங்காசை வளம்பதிச் சருக்கம்
  3. தவமுயர் தேவலன் சம்பவச் சருக்கம்
  4. சவுடநாயகி வரந்தரு சருக்கம்
  5. சுடர்நவ மணிமுடி சூட்டிய சருக்கம்
  6. கபிஞ்சலன் சாபம் களைந்த சருக்கம்
  7. உக்கிரதனுவன் உவணைசேர் சருக்கம்
  8. பற்பல கலையும் படைத்த சருக்கம்
  9. அமரர்கட்கு அம்பரம் அளித்த சருக்கம்
  10. மக்கட்கு அம்பரம் அளித்த சருக்கம்
  11. நாகர்க்கு அம்பரம் நல்கிய சருக்கம்
  12. அரன்விடைக் கொடுவாள் அருளிய சருக்கம்
  13. அரம்பைச் சாபம் அளித்த சருக்கம்
  14. தேவதத்தையை மணஞ்செய்த சருக்கம்
  15. பெருமான் புதல்வரைப் பெற்ற சருக்கம்
  16. நிருதர் போர்க்கேக நினைத்த சருக்கம்
  17. அரக்கர் தேவலனமர்க் கஞ்சிய சருக்கம்
  18. வியாக்ரமுகத்தனை வீட்டிய சருக்கம்
  19. விடைக்கொடிக்கரக்கர் வெந்நிடு சருக்கம்
  20. மன்னவன் இலிங்க வடிவுறு சருக்கம்
  21. அருங்கலையுணர் வித்தியாதரச் சருக்கம்
  22. தகுபுட்பதந்த அவதாரச் சருக்கம்
  23. உரங்கொள் வேதாள உற்பவச் சருக்கம்
  24. வேதாளசாப விமோசனச் சருக்கம்
  25. மாமறை திருத்திய வரமுனி சருக்கம்
  26. உயர்தேவசாலி உற்பத்திச் சருக்கம்
  27. அருட்டேவதாசமய்யன் சருக்கம்
  28. வளர்தேவாங்கன் மரபுச் சருக்கம்
  29. வாழி

உருவாக்கத் தொன்மம்

முதல் மனிதனாகிய மனுவின் வம்சமாகிய மனிதர்களுக்கு ஆடைகளை உருவாக்கி அளிக்க எவருமில்லாமல் இருந்தமையால் அவர்கள் இலைதழைகளை அணிந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டமையால் சிவன் தேவலன் என்னும் இளைஞனை உருவாக்கினார். அவன் திருமாலிடம் சென்று அவர் உந்திக்கமலத்தில் உள்ள நூலைப்பெற்று ஆடைகளை நெய்து அனைவருக்கும் அளிக்கவேண்டும் என்றும், தேவர்களின் அங்கங்களை உன் ஆடைகள் அலங்கரிப்பதால் அவனுக்குத் தேவாங்கன் என்ற பெயர் வரும் என்றும் , அவன் ஆமோத நகரை ஆட்சி செய்யலாம் என்றும் ஆணையிட்டார்.

திருமால் கொடுத்த நூலுடன் பூமிக்கு வந்த தேவலமுனிவரை ஓர் அமாவாசை நாளன்று முனிவர் வேடமிட்ட அரக்கர்களான வச்சிர முஷ்டி, புகைமுகன், புகைக் கண்ணன், சித்திரசேனன், பஞ்சசேனன் ஆகியோர் கொல்ல முயல அவர் திருமாலை துதித்தார். ஆனால் திருமாலின் சக்கரம் அரக்கர்களைக் கொல்ல முடியவில்லை. ஆகவே அவர் துர்க்கையை துதிக்க சிங்கத்தின்மேல் துர்க்கை தோன்றி அரக்கர்களைக் கொன்றாள். அவர்கள் குருதியில் தேவல முனிவன் தான் துணி நெய்யக் கொண்டு வந்திருந்த நூலைத் தோய்க்க அந்நூல் ஐந்து நிறங்களைப் பெற்றது.

போரின் போது அசுரர்கள் சிந்திய இரு துளிகள் சிங்கத்தின் இருகாதுகளில் தங்க அது தலையைக் குலுக்க காதுகளிலிருந்த இரண்டு இரத்தத் துளிகள் பூமியில் வீழ்ந்து அவை இரண்டு அசுரர்கள் ஆயின. அவர்களை அழிக்க அம்மை சூலத்தை ஏந்தவும் அசுரர்கள் இருவரும் தம்மைக் காத்து ரட்சிக்குமாறு முனிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். முனிவன் அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களைக் குலப்பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டான். இவர்கள் தேவாங்க குலமக்களுக்குத் தொண்டு செய்யும் சிங்க குலத்தார் ஆயினர்.

ஒளி பொருந்திய கீரிடத்தைத் தாங்கியிருந்ததால் அம்மை 'சவுடநாயகி' ஆனார். சௌடேஸ்வரியம்மன் நினைத்தபோது உதவிக்குவருவதாக தேவல முனிவனுக்கு வரமருளினார். சௌடேஸ்வரி அம்மை 'அமாவாசையன்று நான் உனக்கு காட்சியளித்தமையால் இந்த நாள் எனக்கும் பிறந்த நாள்" என்று அறிவித்தாள். தேவலன் ஆமோத நகரை நோக்கிப் போனான்.

ஐந்து அசுரர்களின் குருதியில் நூலைத் தோய்க்க அது ஐந்நிறம் கொண்டதற்கும், சக்கரப்படையால் அவர்கள் அழியாததற்கும் ஒரு வரலாறு உண்டு. ஊழிக்காலத்தில் அந்த அசுரர்கள் திருமாலுடன் போர் செய்தனர். அவர்களின் போர்வலிமை கண்டு மகிழ்ந்த திருமால் அவர்கள் கோரியபடி அவர்கள் திருமாலின் சக்கரத்தால் கொல்லப்பட மாட்டார்கள் என வரமளித்தார். அவர்கள் ஆணவம் கொண்டு அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகள் சோமையை கவர முயன்றபோது அவள் அவர்கள் ஒரு பெண்ணால் கொல்லப்படுவார்கள் என சாபமிட்டாள். அந்தச் சாபஹ்தால் உடல் மெலிந்த அவர்கள் சிவனை நினைத்து தவம் செய்தனர். சிவன் தோன்றி அவர்கள் கோரியபடி அவர்களின் ரத்தம் ஐந்து வண்ணங்களாக ஆகி மக்களின் தோள்களை அலங்கரிக்கும் என்று அருளினார்.

தேவலர் சகர நாட்டின் தலைநகரான ஆமேதநகரை அரசாட்சி செய்து கொண்டு ஆடைகள் நெய்து அனைவருக்கும் அளித்து சிவபெருமான் இட்ட கட்டளைகளை நிறைவேற்றினார்

குலவரலாறு தொன்மம்

தேவலர் தன் சந்ததியரும் தொடர்ந்து ஆடைகள் தயாரிப்பதற்கான நுலுக்காக திருமாலிடம் வேண்ட திருமாலும் மானி, அபிமானி என்னும் இருப்பெண்களை உலகத்திற்கு அனுப்பி அவர்களை பருத்தி செடியாக முளைக்கும்படி செய்தார்.தேவலர் தன் தலைமுறையில் வந்தவர்களுக்கு மகனாக மீதியுள்ள ஆறு பிறப்புகள் பிறப்பெடுத்து ஆமேதநகரை ஆட்சிசெய்து சிவபெருமான் இட்ட கட்டளைகளை அனைத்தும் நிறைவு செய்தார்.

தேவலர் . 18--ம் தலைமுறையில் தேவதாசமையனாக பிறப்பெடுத்தார். ஶ்ரீசெளடேஸ்வரி அம்மனை கோவிலில் எழுந்தருள செய்வதற்காக, விரதம் இருந்து வழிபட்டார். சௌடநாயகியோடு சிவபெருமானும் இராமலிங்கராக வந்து கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிப்பதாக வரத்தை பெற்றார். பின் ஆமேத நகரில் கோயில் கட்டினார் (இராமலிங்க நாதன் எனத் திருநாமம் சூட்டி ) இராமலிங்கசௌடேஸ்வரியை பக்தியுடன் வழிபட்டு கயிலை அடைந்தார்.

பின் வந்த தலைமுறைகளில் காளசேன மன்னனுக்கு மக்கட்பேறு இல்லை. பல நாட்டு மன்னரின் மகள்கள் 10,000- பேரை மணந்தான் யாருக்கும் மக்கட்பேறு இல்லை. கவுதம முனிவரின் உதவியால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார் அதில் அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை உண்டு 10 ஆயிரம் மனைவிகளும் 10 ஆயிரம் மக்களை பெற்றனர்

பத்தாயிரம் மக்களும் 700 முனிவர்களால் சிவசிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் பெயர்கள் 700 கோத்ரங்களாக ஆயின. 10 ஆயிரம் மக்களும் 10ஆயிரம் குலங்களாக ஆகி தங்கள் குலங்களை பெருக்கினர் .காளசேன மன்னன் இந்த 10ஆயிரம் பேரில் மூத்தவனான ரூபசேனமன்னனுக்கு முடிசூட்டி ஆட்சியை ஒப்படைத்தான் .இவர் வழியில் வந்த ஏகோராமன் என்னும் விருபாட்சன் சமுககட்டுப்பாடுகளையும் ஒழுக்க நியதிகளையும் வகுத்தான். சமுக கட்டுபாட்டுக்காக சிம்மாசன பீடாதிபதிகளையும், ஆசாரசீலம், தெய்வவழிபாடு முதலியன ஒழுங்காக நடைபெறப் பீடாதிபதிகளையும் நியமித்தான். இந்த அமைப்புகளின் வழி, நெறி முறைகளைத் தேவாங்ககுல மக்கள் இன்று வரை பின்பற்றி வருகின்றனர்.

உரைநடை வடிவங்கள்

தேவாங்க புராணத்தை பிற்காலத்தில் உரைநடை நூல் வடிவில் இயற்றியவர் வித்வான் க.பழனிச்சாமி. முதன் முதலில் வெளியிட்ட பெருமை திருப்பூர் திரு.வி.எஸ்.நடராஜ் அவர்களையேச் சாரும். 1971-ம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.இந்நூலுக்கு குமாரபாளையம் தொழிலதிபர் திரு.ஜே.ஜே.கே.அங்கப்ப செட்டியார் அணிந்துரை எழுதியுள்ளார்.கோவை கம்மவார் அச்சகத்தில் இருந்து இந்நூல் விரோதி கிருது ஆண்டு சித்திரைத் திங்களில் வெளியிடப்பட்டது. இந்த நூலைக் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்தவர் ஜலகண்டாபுரம் தேவாங்க குல குரு ஓம்ஸ்ரீசாம்பலிங்க மூரத்தி சுவாமிகள்.மொழி பெயர்ப்பில் அவருக்குத் துணை நின்ற அவர்தம் குமாரர் ஸ்ரீவித்யாசாகர மூர்த்தி. தெலுங்கு மொழிபெயர்ப்பை செய்தவர் படைவேடு குருநாதர் சென்னா ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் செய்து உதவினார். இந்நூல் முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட ஆண்டு 1971.

பிறமொழியாக்கங்கள்
  • தேவாங்க புராணம் -பாப்ரியா
  • தேவாங்க புராணம் - கி.நாகராஜன்

உசாத்துணை


✅Finalised Page