under review

தமிழ் கலைக்களஞ்சியம்

From Tamil Wiki
கலைக்களஞ்சியம்
தூரன்
டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார்
கலைக்களஞ்சியம். ஆ.இரா வேங்கடாசலபதி

தமிழ்க் கலைக்களஞ்சியம் (1948 -1968 ) தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமும் இதுதான். டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்தபோது பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து வெளியிட்டார்

முன்னோடி நூல்கள்

இந்திய மொழிகளில் மரபான முறையில் அமைந்த கலைக்களஞ்சியங்களும் அகராதிக்களும் உள்ளன. அகராதிகளும் சிறிய கலைக்களஞ்சியங்களும் நிகண்டுக்கள் எனப்பட்டன. கோசம் (தொகைநூல்) என்னும் பெயருடைய சிறு கலைக்களஞ்சியங்கள் வெவ்வேறு துறைகள் சார்ந்து உருவாக்கப்பட்டிருந்தன. எல்லா தலைப்புகளையும் உள்ளடக்கியதும் ஆங்கில கலைக்களஞ்சிய முறைப்படி அகரவரிசையில் அமைந்ததுமான தமிழின் முதல் கலைக்களஞ்சியம் என்று கூறத்தக்கது அபிதான கோசம். 1902ல் ஈழத்து தமிழறிஞரான மானிப்பாய் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை இதை உருவாக்கினார். தொடர்ந்து ஆ.சிங்காரவேலு முதலியார் உருவாக்கிய அபிதான சிந்தாமணி இன்னும் விரிவான கலைக்களஞ்சியமாக வெளிவந்தது.

என்சைக்ளோப் பீடியா பிரிட்டானிகா போல அறிவியல், பண்பாடு, கலை, வரலாறு என அத்தனை பேசுபொருட்களையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு கலைக்களஞ்சியம் தமிழுக்கு தேவை என்று உணர்ந்து உருவாக்கப்பட்டது பெரியசாமித் தூரன் ஆசிரியராக தொகுத்த தமிழ் கலைக்களஞ்சியம். இதுவே தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளிலும் இதுவே முதலில் வெளிவந்த கலைக்களஞ்சியம்

தொடக்கம்

கலைக்களஞ்சியக் குழு

1944-ல் கோவையில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பெரியசாமித் தூரன் தமிழில் ஓரு கலைக்களஞ்சியம் உருவாக்கவேண்டும் என்னும் விருப்பத்தை காங்கிரஸ் தலைவர்ம் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரிடம் கூறினார்.ஆர். சண்முகசுந்தரம் ஒருங்கிணைக்க ஜி.டி.நாயுடு ஆதரவுடன் நடந்த இலக்கிய மாநாடு இது.

1947-ல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றபோது அப்போது தங்குதுரி பிரகாசம் மற்றும் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் (1946 -1949) கல்வி அமைச்சராகப் பணியாற்றிய அவினாசிலிங்கம் செட்டியார் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை விரிவான முன்மொழிவாக வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்). தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் ஏற்கனவே தூரனுக்கு அணுக்கமானவர். அவர் நிறுவிய ராமகிருஷ்ணா கல்விநிலையங்களில் தூரன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவினாசிலிங்கம் செட்டியார் அந்த மாநாட்டிலேயே ஒரு கலைக்களஞ்சியப் பணியை தொடங்கும் செய்தியை அறிவித்தார். 1946-ல் அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியில் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை பரப்பவும், அறிவியலை தமிழில் கற்பிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. கலைக்களஞ்சியம் உருவாக்க ஒரு துணையமைப்பு உருவாக்கப்பட்டு கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் பெரியசாமித் தூரன் நியமிக்கப்பட்டார்.

நிதி

கலைக்களஞ்சியப் பணிக்கு ரூ 14 இலட்சம் செலவு மதிப்பிடப்ப்பட்டு அரசு நிதியுடன் தனியார் நன்கொடைகளும் திரட்டப்பட்டன. முதல் திட்டமதிப்பான பத்துலட்சத்தில் ஐந்து இலட்சத்தை ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் வீதம் தருவதாக சென்னை அரசாங்கமும், மூன்று இலட்சத்தினை ஆண்டொன்றுக்கு எழுபத்தைந்தாயிரம் வீதம் நான்காண்டுகளில் தருவதாக மத்திய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டன. திருப்பதி தேவஸ்தானம் ஐம்பதினாயிரமும் வழங்க ஒத்துக்கொண்டது. அன்றிருந்த புரவலர்களிடமும் நிதி திரட்டப்பட்டது. அழகப்பச் செட்டியார், எம்.ஏ.முத்தையா செட்டியார், தருமபுரம் ஆதீனம், டி.ஏ.ராமலிங்கச் செட்டியார், கருமுத்து தியாகராஜச் செட்டியார், ட்ரோஜன் அண்ணாமலைச் செட்டியார், கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி, திருவாவடுதுறை ஆதீனம், நா.ம.ரா.சுப்பராமன் ஆகியோர் நிதியளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தேசப்பிரிவினைக் கலவரங்களை ஒட்டிய நிதிநெருக்கடிகளால் மையஅரசு வாக்களித்த பணம் வந்துசேரவில்லை. அவினாசிலிங்கம் செட்டியார் தொடர் கடிதங்கள் வழியாக நிதியை திரட்டினார்.

தொகுப்பு

கலைக்களஞ்சியம் முதல்பக்கம்

பெரியசாமித் துரன் கலைக்களஞ்சியத்தின் பொறுப்பாசிரியர். துணைப்பொறுப்பாசிரியர் பொ.திரிகூடசுந்தரம். இதன் ஆசிரியர் குழு முதலில் பொ. திரிகூடசுந்தரத்தை துணையாசிரியராகக் கொண்டே இயங்கத் தொடங்கியது. குழு இயங்கத் தொடங்கிய பத்து மாதங்களுக்குப் பின்னர் பெ. தூரன் அதன் தலைமை ஆசிரியர் என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பெரியசாமித் தூரன் ஒருங்கிணைப்பாளராகவும் ஆசிரியராகவும் அமைந்து பல்வேறு துறைசார் அறிஞர்களிடம் கட்டுரைகள் பெற்று தொகுத்தார். முதல் தொகுதி 1954-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன.1963ல் ஒன்பதாவது தொகுதியும் இணைப்புத் தொகுதியான பத்தாவது தொகுதி 1968 லும் வெளிவந்தது

ஏறத்தாழ 1,200 கட்டுரையாளர்கள் பங்களித்தனர். உயிரியல், இயற்பியல், வேதியல், மருத்துவம், வேளாண்மை, பொருளியல், நுண்கலை முதலான ஒவ்வொரு அறிவுத் துறைக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தலைப்புகள் தெரிவு செய்யப்பட்டன. அறிவியல் கட்டுரைகளுக்கு தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன.

 • நிர்வாகக் குழுக்கள் 5, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 74
 • பொருட்பட்டியல் அமைப்புக் குழுக்கள் 21, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 132
 • ஆய்வுக்குழுக்கள் 27, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 66
 • கலைச்சொற் குழு 1, உறுப்பினர்கள் எண்ணிக்கை 40

கலைக்களஞ்சிய பதிப்பாசிரியர் குழு

அலுவலர் குழு
 • ம.ப.பெரியசாமித் தூரன்
 • பொ.திரிகூடசுந்தரம்
 • ப.மு.சோமசுந்தரன்
 • பூ.அ.பாஷ்யம் ஐயங்கார்
 • ஜ.இராஜு முதலியார்
 • நா.கி.நாகராஜன்
 • ந.சுப்ரமணியம்
 • பு.மு.ரத்னசபாபதி முதலியார்
 • கு.மதுரை முதலியார்
 • சிறுவை மோகனசுந்தரன்
 • கீ.ச.கணபதி

கலைக்களஞ்சியத்தின் அமைப்பு

கலைக்களஞ்சியம் 7,500 பக்கங்களும் 15000 கலைச்சொற்களும் கொண்டது.

தொகுதி 1 - 1954-ம் ஆண்டு - 742 பக்கங்கள்
தொகுதி 2 - 1955-ம் ஆண்டு - 760 பக்கங்கள்
தொகுதி 3 - 1956-ம் ஆண்டு - 756 பக்கங்கள்
தொகுதி 4 - 1956-ம் ஆண்டு - 778 பக்கங்கள்
தொகுதி 5 - 1958-ம் ஆண்டு - 750 பக்கங்கள்
தொகுதி 6 - 1959-ம் ஆண்டு - 770 பக்கங்கள்
தொகுதி 7 - 1960-ம் ஆண்டு - 754 பக்கங்கள்
தொகுதி 8 - 1961-ம் ஆண்டு - 758 பக்கங்கள்
தொகுதி 9 - 1963-ம் ஆண்டு - 751 பக்கங்கள்
தொகுதி 10- 1968-ம் ஆண்டு - 560 பக்கங்கள்

குழந்தைகள் கலைக்களஞ்சியம்

1963-ல் பொதுக் கலைக்களஞ்சியப் பணி முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார் தூரன். அந்த வேலை ஏழு ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வெளிவந்தன.

பாராட்டுக்கள், விருதுகள்

 • 1963ல் பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் வந்தபோது அப்போதைய முதலமைச்சர் கு.காமராஜ் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.
 • 1968 இந்திய குடியரசுத் தலைவர் பத்ம பூஷன் விருது வழங்கி தூரனை கௌரவித்தார்.

தொடர்ச்சிகள்

கலைக்களஞ்சியங்கள் அறிவியக்க வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ச்சியாக புதுப்பிக்கப் படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டியவை. தமிழில் அறுபதுகளுக்குப்பின்னர் நவீன இலக்கியம், அறிவியல்தமிழ், இதழியல் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி உருவானது. தமிழ்வழிக் கல்வி பட்டப்படிப்பு வரை கொண்டுசெல்லப்பட்டமையால் எல்லா துறைகளிலும் புதிய கலைச்சொற்கள் உருவாயின. ஆனால் அதற்கேற்ப பின்னர் இக்கலைக்களஞ்சியம் புதுப்பிக்கப்படவில்லை. மாறாக வேறுபெயர்களில் புதிய கலைக்களஞ்சியத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவை எவையும் உரியமுறையில் முழுமைப்படுத்தப்படவோ, அறிவியமுறைப்படி சீரான ஆசிரியநெறியுடன் உருவாக்கப்படவோ இல்லை. வெவ்வேறு கல்வியாளர்கள் வெவ்வேறு தரநிலைகளில் எழுதிய, மேற்பார்வையும் மறுதொகுப்பும் செய்யப்படாத கட்டுரைக்குவியல்களாகவே அவை அமைந்தன. ஆகவே தூரனின் கலைக்களஞ்சியமே இன்றும் தமிழின் ஒரே அதிகாரபூர்வ கலைக்களஞ்சியமாக நீடிக்கிறது.

பயன்கள்

தமிழில் அறிவியல்சார்ந்த கல்விக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்தது தமிழ்க்கலைக்களஞ்சியம். தமிழ்ப்பண்பாட்டுச் செய்திகளை ஓரிடத்தில் தொகுத்ததன் வழியாக தமிழ்ப்பண்பாடு குறித்த ஒரு பெருஞ்சித்திரத்தை வரலாற்றிலேயே முதல்முறையாக உருவாக்கியது. இக்கலைக்களஞ்சிய உருவாக்கத்தின்போது கலைச்சொல்லாக்கம் பற்றியும், அறிவியல்தமிழ் பற்றியும் நிகழ்ந்த விரிவான பொதுவிவாதங்கள் வழியாக தமிழில் வெவ்வேறு அறிவுச்செயல்பாடுகள் உருவாகி வந்தன. கலைக்களஞ்சியம் என்னும் சொல்லே இந்த விவாதம் வழியாக உருவானதே.

இக் கலைக்களஞ்சியத் தொகுதிகள் வரத்தொடங்கிய பின்னரே தமிழில் பொதுஅறிவுத் துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் இதையொட்டி எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் அடித்தளநூல் என்று இக்கலைக்களஞ்சியத்தைச் சொல்லலாம்.

நூல்கள்

தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டதை பற்றி இரு நூல்களில் எழுதப்பட்டுள்ளன

தமிழ்க்கலைக்களஞ்சியம் இணையத்தில்

தமிழ் கலைக்களஞ்சியம், தமிழ் இணையக் கல்விக்கழகம்

உசாத்துணை


✅Finalised Page