நெ.து. சுந்தரவடிவேலு
நெ.து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு; அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருமுறை பதவி வகித்தார். தமிழ்நாடு அரசின் பொதுக்கல்வி இயக்குநராகவும், கல்வித்துறை ஆலோசகராகவும் பணியாற்றினார். இலவசக்கல்வி, இலவசச் சீருடைத்திட்டம், இலவச மதிய உணவுத்திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் காமராஜருக்கு உறுதுணையாகவும், திட்டங்கள் வெற்றி பெற முக்கியக் காரணமாகவும் திகழ்ந்தார். தமிழகத்தின் கல்விப் புரட்சியில் அவரது பணி குறிப்பிடத்தக்கது. கல்விப்பணிகளுக்காக இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்றார். சாகித்ய அகாதெமியில் உறுப்பினராக இருந்தார்.
பிறப்பு, கல்வி
நெ.து. சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள நெய்யாடுபாக்கத்தில் அக்டோபர் 12, 1912 அன்று துரைசாமி-சாரதாம்பாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இளைய சகோதரர்கள் நால்வர். நெய்யாடுபாக்கத்தில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பெற்றார்.
காஞ்சிபுரம் தேவல்ல இராமசாமி ஐயர் நடுநிலைப் பள்ளியிலும், யு.எஃப்.சி.எம் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். 1932-ல் மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் சிறப்பு (Honors) இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில் ஓ.வி. அளகேசன், சி. சுப்பிரமணியம், பெரியசாமித் தூரன் ஆகியோருடன் நட்பில் இருந்தார். கா. நமச்சிவாய முதலியார் அவரது ஆசிரியராக இருந்தார்.
மாணவர்களால் நடத்தப்பட்ட 'வனமலர்ச் சங்கம்' என்னும் சமுதாய சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து பங்காற்றினார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு அணுக்கமானவராக இருந்தார்.
தனிவாழ்க்கை
நெ.து. சுந்தரவடிவேலு பெரியாரின் நண்பர் வரதராஜுலு நடத்திய 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். டிசம்பர் 1934-ல் செங்கல்பட்டில் உதவிப் பஞ்சாயத்து அலுவலர் பணியில் சேர்ந்தார்.
நெ.து.சு பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த குத்தூசி குருசாமியின் உறவினர் காந்தம்மாளை சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார். காந்தம்மள் முதுகலைப்பட்டமும், ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர். ஆசிரியர், தலைமை ஆசிரியர், சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளை காந்தம்மாள் வகித்தார். இரு முறை சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இவர்களின் ஒரே மகன் திருவள்ளுவன் 1959-ல் தனது பத்தாவது வயதில் இறந்தார்.
கல்விப்பணிகள்
நெ.து. சுந்தரவடிவேலு 1937-ல், பொன்னேரியில் இளந்துணைப் பள்ளி ஆய்வாளராகப் பதவியேற்றார். 1938-ம் ஆண்டு கோவையில் இளம் துணைக் கல்வி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். வறுமையாலும் சாதியப் பாகுபாட்டாலும் பள்ளிக்கூடம் வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் வெற்றி கண்டார். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாது வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொண்ட பெற்றோரிடம் பேசி கல்வியின் அவசியத்தை உணர்த்தினார்.
1939-ம் ஆண்டு ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவியேற்றார். அதன்பின் சேலம் மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டர்.
1940-ல் சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றார். சென்னையில் சில இடங்களில் பொதுமக்கள் நன்கொடை மூலம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பொதுக்கல்வித்துறை துணை இயக்குனர்
நெ.து. சுந்தரவடிவேலு 1949-ல் தமிழ்நாட்டின் பொதுக்கல்வித்துறை துணை இயக்குனராகப் பதவியேற்றார். 1951-ல் ராஜாஜி முற்பகலில் கல்வி, பிற்பகலில் தந்தையின் தொழிலில் உதவி என்ற திட்டத்தை முன்வைத்தபோது அதற்கு பொதுக்கல்வி இயக்குனரிடம் தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தார். எனினும் அரசின் ஆணையை ஏற்று, தன் பணியைச் செய்து திட்டத்தின் சாதக அம்சங்களை எடுத்துரைத்தார்.
பொதுக்கல்வித்துறை இயக்குனர்
1953-ல் தமிழகப் பொதுக்கல்வித்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரைவிட பணியில் மூத்தவர்களும் ஆட்சிப்பணி அதிகாரிகளும் இருந்தபோதும் நெ.து.சு வின் நிர்வாகத் திறனை கருத்தில் கொண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவரை இப்பதவியில் நியமித்தார். 100 ஆண்டுகளுக்குப்பின் இப்பதவியை ஏற்ற முதல் தமிழர் நெ.து. சு.
- 1955-ல் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை வடிவமைத்தார். அத்திட்டம் மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
- 1955-ல் முதியோர் கல்விப் பட்டறையின் மூலம் வயது வந்தோர் கற்பதற்கான நூல்களை உருவாக்கினார்.
- இலவச மதிய உணவுத் திட்டம்-காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பள்ளியில் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை நெ.து.சு முன்வைத்தபோது செலவைக் கருதி மறுப்புகள் எழுந்தன. முதல்கட்டமாக 3000 ஊர்களில் ஊர்மக்களின் நிதி உதவியைக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் மன்னர் பள்ளியில் முதன்முறையாக மதிய உணவு அளிக்கும் நிகழ்வு நெ.து. சு தலைமையில் நடைபெற்றது. குறைந்த செலவில் மதிய உணவு அளிக்கும் திட்டம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டு, நவம்பர் 1,1957 முதல் பகல் உணவுத் திட்டம் அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாகியது. அத்திட்டத்தை நிறைவேற்றுவதில் காமராஜருக்கு உறுதுணையாகவும், திட்டம் வெற்றி பெற முக்கியக் காரணமாகவும் திகழ்ந்தார்.
- தமிழகத்தில் கட்டாய இலவசக்கல்வி, இலவசச் சீருடைத்திட்டம், செயல்படுத்தபடுவதற்கும் காமராஜருடன் இணைந்து பணியாற்றி அவை வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார்.
- சென்னைப் பல்கலைக்கழக பட்டதாரி ஆசிரியர் பயிற்சிக்காக தமிழ் கலைச்சொல்லாக்கக் குழுவின் செயலராக இருந்தார்
- ஐரோப்பாவின் சர்ச் ஸ்கூல் , கம்யூனிடி ஸ்கூல் போன்ற அமைப்புகளை நேரில் சென்று ஆராய்ந்து பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் ஊர்மக்களின் நன்கொடைகளைக் கொண்டு பள்ளிகளை சீரமைத்தும், பஞ்சாயத்துப் பள்ளிகளை திட்டத்தை ஏற்படுத்தினார்.. மாணவர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் ஓராசிரியர் பள்ளிகளை ஏற்படுத்தினார்.
பொதுநூலகத்துறை இயக்குனர்
சுந்தரவடிவேலு, 1954-ம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது பொது நூலக இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு ஏற்றார். தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார்.
வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டம்
1966-ல் மத்தியக் கல்வி அமைச்சகத்தில், இணைக் கல்வி ஆலோசகராகப் பணியேற்றார். உழவர்களுக்கான எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்த திட்டக்குழுவின் ஒப்புதல் பெற்றார். அப்போது தில்லி வந்த தமிழக முதலமைச்சர் அண்ணாத்துரையின் அழைப்பின்பேரில் தமிழகத்தில் வயது வந்தோர்க்கான எழுத்தறிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியை ஏற்றார். 1978-ல் மாநில முதியோர் கல்வி வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
நெ.து. சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருமுறை நியமிக்கப்பட்டார். (1969 முதல் 1972 வரை, 1973 முதல் 1975 வரை)
- அன்றைய முதல்வர் மு. கருணாநிதியின் அனுமதியுடன் புகுமுக வகுப்பில் இலவசக் கல்வியைக் கொண்டுவந்தார். உயர் கல்விக்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் அதிக இடங்களை ஒதுக்கினார்.
- சென்னையிலேயே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்துவதால் தொலைதூரங்களிலிருந்து வருவதில் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களை உணர்ந்து அந்தந்தக் கல்லூரிகளிலேயே பட்டங்களை வழங்கிக் கொள்ளலாம் என்று விதியை மாற்றினார்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக மாலைநேர வகுப்புகளைத் துவக்கினார்
- பல்கலைக்கழகங்களில் பூட்டிவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறந்தனவற்றை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டார். புகுமுக வகுப்பிலும் பட்டப்படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தார்.
- நீலகிரி மாவட்டத்தில் கல்லூரியின் தேவையை உணர்ந்து உதகை அரசினர் கலைக்கல்லூரியை உருவாக்கினார்.
- 1970-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பாரிஸில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்றார்.
- பல்கலைக்கழகங்களில் பூட்டிவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறந்தனவற்றை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
- புகுமுக வகுப்பிலும் பட்டப்படிப்பிலும் தமிழையும் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தார்.
இதழியல்
'அறிவு வழி' என்னும் மாத இதழின் சிறப்பாசிரியராகச் செயல்பட்டார்.
இலக்கியப் பணிகள்
சிறுவர்களுக்கான பதின்மூன்று நூல்களையும், வயது வந்தவர்களுக்காக முப்பதுக்கு மேற்பட்ட நூல்களையும் எழுதினார்.
சோவியத் ரஷ்யாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்தபோது தான் கண்டவற்றை 'அங்கும் இங்கும்' என்ற நூலாக எழுதினார். இந்திய சோவியத் நல்லுறவை வளர்ர்க்கும் முகமாக பல நூல்களை எழுதினார்.
இந்திய சோவியத் கலாசாரக் கழகத்தின்( Indo-Soviet Cultural Society -ISCUS) மாநிலக் குழுவின் தலைவராக 1972-ல் தேர்ந்தேடுக்கப்பட்டார். பல ஊர்களும் கூட்டங்களில் இந்திய சோவியத் நல்லுறவுக்காக உரைகள் ஆற்றினார். ISCUS இதழில் கட்டுரைகள் எழுதினார்.
பாரதி நூற்றாண்டு விழா சமயத்தில் பாரதி பாடல்களைப் பரப்பினார்
பெரியார் நூற்றாண்டு விழாவின்போது அவரது வாழ்க்கை வரலாற்றை வண்ணப் படங்களுடன் சிறுவர்களுக்கான நூலாக உருவாக்கல் மற்றும் 'பெரியாரின் புரட்சி மொழிகள்' நூல் தொகுப்பிற்கான குழுவின் துணைத் தலைவராக இருந்து நூலாக்கத்தின் பெரும் பங்காற்றினார்.
அவரது தன்வரலாற்று நூலான 'நினைவு அலைகள்' முதலில் 'சத்திய கங்கை' மாதமிருமுறை இதழில் தொடராக வந்து சாந்தா பதிப்பகத்தால் மூன்று பகுதிகளாக நூல் வடிவம் கண்டது
விருதுகள், பரிசுகள்
- பத்மஸ்ரீ விருது (1961)
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் (Dlitt) பட்டம்
- சோவியத் ரஷ்யாவின் நேரு விருது
- தமிழக அரசின் பயணக்கட்டுரைக்கான முதல் பரிசு('இலக்கியம் கொழிக்கும் சோவியத்' நூலுக்காக)
- சுந்தரவடிவேலு நினைவாக உத்தரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நெ. து. சுந்தரவடிவேலு அரசு உயர்நிலைப் பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மணிவிழா
அக்டோபர் 12, 1972 அன்று பெரியாரின் தலைமையில் அவரது மணிவிழா நடைபெற்றது)
மறைவு
நெ.து. சுந்தரவடிவேலு ஏப்ரல் 12, 1993 அன்று காலமானார்.
நினைவுகள், நூல்கள்
அக்டோபர் 12, 2012 அன்று நெ.து.சுந்தரவடிவேலுவின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அவரது நினைவாக 'நெ.து. சுந்தரவடிவேலு நினைவு விருது' இலக்கியப் பங்களிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு நெ.து. சுந்தரவடிவேலுவின் நூல்களை 2010-ல் நாட்டுடைமை ஆக்கியது.
வாழ்க்கை வரலாறு
நெ.து.சுந்தரவடிவேலு- ந.வேலுச்சாமி- சாகித்ய அக்காதமி வெளியீடு
கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு -பட்டத்தி மைந்தன்.
மதிப்பீடு
நெ.து. சுந்தரவடிவேலு விடுதலைக்குப் பின்பான காலகட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முதல்வர்களுடன். பணியாற்றியவர். திட்டவல்லுநர், நிர்வாகி என்னும் நிலைகளில் தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு முதன்மைப் பங்காற்றிய ஆளுமை
இலவச மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியான மதிய உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியில் மக்கள் திட்டமாகச் செயல்படுத்தினார். காமராஜர் ஆட்சியில் இலவச மதிய உணவுத் திட்டத்தின் வரைவை திட்டக் குழுவில் முன்வைத்து அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாக்கினார். இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். சில இடங்களில் இத் திட்டத்தை நெ.து.சு திட்டம் என்றே அழைத்தனர். கட்டாயக் கல்வி, இலவச சீருடத் திட்டம் ஆகியவற்றுக்குச் செயல் வடிவம் தந்தார். பஞ்சாயத்துப் பள்ளிகளையும், ஓராசிரியர் பள்ளிகளையும் ஏற்படுத்தி கிராமப்புறக் குழந்தைகள் பெருமளவில் கல்வி கற்க வகை செய்தார். பல்கலைக்கழக அளவிலும் பல புதிய முயற்சிகள் மேற்கொண்டார்."பொது மக்களால் எது செய்ய முடியும் என்று தெரிந்து அதை அவர்களிடம் சொல்லத் தெரிந்தவர்" என்று நெ.து.சுவை காமராஜர் பாராட்டினார்.
படைப்புகள்
- அடித்தா? அணைத்தா? நெ.து. சுந்தரவடிவேலு வெளியீடு, சென்னை. 1958; இலவசப் பதிப்பு.
- முதியோர் கல்வி முதல்நூல்; முதியோர் கல்வி இயக்ககம், சென்னை
- பூவும் கனியும், கலைக்கதிர் வெளியீடு, கோவை. முதற்பதிப்பு 26.1.1958, இரண்டாம் பதிப்பு 27.5.1959
- வள்ளுவன் வரிசை 1 : தம்பி நில், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 2 : நஞ்சுண்டவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 3 : சிலுவையில் மாண்டவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 4 : குண்டுக்கு இரையானவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 5 : மின்விளக்கு, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 6 : தங்கத் தாத்தா, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 7 : தோற்றும் வென்றவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 8 : வானொலி வழங்கியவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 9 : பாக்குவெட்டி, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 10: ஆறு, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 11: விளக்குப்பாவை, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 12: செஞ்சிலுவை தந்தவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- வள்ளுவன் வரிசை 13: ரேடியனம் கண்டவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
- உதிரிப்பூ, கலைக்கதிர் வெளியீடு, கோவை; 1960
- எண்ண அலைகள். முருகன் & கம்பெனி, சென்னை.
- வையம் வாழ்க, நெ.து. சுந்தரவடிவேலு வெளியீடு, சென்னை., 1962, இலவச பதிப்பு
- சுதந்திரம் காப்போம், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. மு.பதி. மே 1965
- அங்கும் இங்கும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.சென்னை. மு.பதி. சூன் 1968, இ.பதி.திச 1968, மூ.பதி.சூலை 1973, நா.பதி. ஆக 1982
- சிந்தனை மலர்கள், கலைக்கதிர் வெளியீடு, கோவை 1968
- எல்லோரும் வாழ்வோம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. 1970
- நான் கண்ட சோவியத் ஒன்றியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. மு.பதி. அக் 1971
- உலகத் தமிழ், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை. மு.பதி. சன 1972, இ.பதி.சூன் 1975, மூ.பதி. சூலை 1977
- சோவியத் மக்களோடு. வானதி பதிப்பகம் சென்னை. மு.பதி. அக் 1973
- வள்ளுவர் வாய்மொழி. வானதி பதிப்பகம். மு.பதி. அக் 1973, இ.பதி. சன 1977
- மேதை மேகநாதன், வானதி பதிப்பகம், சென்னை. 1974
- புதிய ஜெர்மனியில் வானதி பதிப்பகம், சென்னை 1974
- பிரிட்டனில், வானதி பதிப்பகம், சென்னை 1975
- தலைவருள் மாணிக்கம், தமிழ் நூல்நிலையம், சென்னை. 1975
- சோவியத் கல்விமுறை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. மு.பதி திச 1977
- வாழ்விக்க வந்த பாரதி,வானதி பதிப்பகம், சென்னை. மு.பதி. செப் 1978
- ஊருக்கு நல்லது, சுந்தரவடிவேலு, வானதி பதிப்பகம், சென்னை.
- நஞ்சு உண்டவர். கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம். 1979
- புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்ட் கோ, சென்னை 1979
- பெரியாரும் சமதர்மமும், புதுவாழ்வு பதிப்பகம்
- இலக்கியம் கொழிக்கும் சோவியத் ஒன்றியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- பயன்மிகு பத்தாண்டுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- நினைவில் நிற்பவர்கள். வானதி பதிப்பகம். 1982
- கல்வி வள்ளல் காமராசர், எமரால்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை. 1982
- நினைவு அலைகள் - மூன்று பாகங்கள், வானதி பதிப்பகம் 1983
- லெனின் வாழ்கிறார் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2009
- பெரியாரும் சமதர்மமும்
- சிங்காரவேலரும் பகுத்தறிவும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- பள்ளிச் சிறுவர்களுக்கு பயனுள்ள யோசனைகள், தாமரை 1992
- தியாகச் செம்மல் நால்வர், தாமரை,1992
- இந்திய சோவியத் தோழமை, இந்திய சோவியத் கலாச்சாரக் கழகம், சென்னை
- எல்லோரும் படிப்போம், தாகூர் கல்வி நிலையம்
- துலா முழுக்கு
- சுந்தர வடிவேலனாரின் மந்திர மணி மொழிகள்: ஆண்டு விழா 20-1-1961. அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி மாணவ-ஆசிரியர் சங்கம். 1961
ஆங்கிலம்
Harnessing Community Effort for Education: A New Experiment in Madras, Director of Public Instruction, Madras., 19
உசாத்துணை
- நினைவு அலைகள்-1 நெ.து.சுந்தரவடிவேலு
- நினைவு அலைகள்-2 நெ.து.சுந்தரவடிவேலு
- நினைவு அலைகள்-3 நெ.து.சுந்தரவடிவேலு
- காமராஜரின் 1954-1963: வழிகாட்டும் ஒரு தசாப்தம்-தமிழ்ஹிந்து!
- பிச்சை எழுத்தாவது பகலுணவு போடுவேன் - காமராசர், மூங்கில்காற்று
- எஸ். ராமகிருஷ்ணனுக்கு நெ.து. சுந்தரவடிவேலு விருது
- நெ.து.சுந்தர வடிவேலு- தினமணி கட்டுரை
- நெ து சுந்தர வடிவேலு - பொ.சங்கர்
- நெ.து.சுந்தர வடிவேலு அங்கும் இங்கும் மூலம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Sep-2023, 15:44:36 IST