under review

குத்தூசி குருசாமி

From Tamil Wiki
குத்தூசி குருசாமி
சா. குருசாமி
குருசாமி பெற்றோர்
குத்தூசி குருசாமி
குத்தூசி குருசாமி

குத்தூசி குருசாமி (சா. குருசாமி; சாமிநாதன் குருசாமி) (ஏப்ரல் 23, 1906 - அக்டோபர் 11, 1965) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். திராவிட இயக்கம் சார்ந்து இயங்கினார். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் நடத்தி வந்த ‘ரிவோல்ட்’ மற்றும் ‘விடுதலை’ இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். மத்திய திராவிடர் கழகத் தலைவராகப் பணிபுரிந்தார். பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவன அறங்காவலராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

சா. குருசாமி என்னும் இயற்பெயரை உடைய குத்தூசி குருசாமி, ஏப்ரல் 23, 1906 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவிக்கரம்பையில், கு. சாமிநாத முதலியார்-குப்பு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சௌந்தரவல்லி, சுப்புரத்தினம் ஆகிய தங்கையர்.

பெற்றோர்

சாமிநாத முதலியார் குருவிக்கரம்பையின் கணக்குப்பிள்ளையாக பணியாற்றினார். அவருடைய முதல் மனைவி ஒரு மகளை ஈன்ற பின் மறைந்தார். சோழவளத்தான் ஊரைச்சேர்ந்த குப்பு அம்மாளை 1903ல் மணம்புரிந்துகொண்டார். சாமிநாத முதலியார் சைவ அறிஞர். குருவிக்கரம்பை சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட பாலையானந்த சுவாமிகள் என்னும் துறவியின் மாணாக்கர். குருவிக்கரம்பையில் ஒரு சைவ மடம் 1912ல் இவரால் நிறுவப்பட்டது.

கல்வி

குருசாமி 1911ல் குருவிக்கரம்பை தொடக்கப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். அங்கே அவருக்கு தாச்சியப்ப வாத்தியார் என்பவர் ஆசிரியராக இருந்தார். குருசாமியின் தந்தை 1915 ல் நாகப்பட்டினத்திற்கு இடம்பெயர்ந்தார். அவ்வாண்டே அவர் நோயுற்று மறைந்தார். சாமிநாத முதலியாரின் தங்கை மங்களம் உதவியுடன் குருசாமியின் அன்னை திருவாரூரில் குடியேறினார். கணவரை இழந்தவரான மங்களம் அம்மையார் குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். குருசாமியின் அன்னை 1920ல் மறைந்தார்.

குருசாமி திருவாரூரில் பயில்கையில் கம்பராமாயண அறிஞரான என்கண் வெங்கடாசல முதலியாரின் மாணவராக ஆகி கம்பராமாயண பாடல்களை இசையுடன் பாடக்கற்றார்.திருவாரூரில் பயில்கையில் குருசாமியுடன் மலேசியாவின் தமிழியக்கத் தலைவரான கோ. சாரங்கபாணி உடன் பயின்றார். பள்ளிக்காலம் முதலே குருசாமி பூப்பந்தாட்ட வீரராக விளங்கினார்.

1923 முதல் திருச்சி தேசியக் கல்லூரியில் இண்டர்மீடியட் பயின்றார். இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.

குருசாமி - குஞ்சிதம் இணையர் பட்டமளிப்பு

தனி வாழ்க்கை

குருசாமி, சென்னை செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு எழுத்தராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகள் காவல் துறை அலுவலகத்திலும், ஆய்வாளர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 1935-ல், உதவி பஞ்சாயத்து அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். 16 ஆண்டுகள் அரசுப் பணியாற்றிய இவர் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பு ஏற்கும் பொருட்டுப் பணியிலிருந்து விலகினார்.

இசை வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த திருவாரூர் டி.சுப்ரமணிய பிள்ளை என்னும் வயலின் கலைஞரின் மகள் குஞ்சிதத்தை 8 டிசம்பர் 1929 ல் ஈ.வெ.ரா. பெரியார் மாளிகையில் மணம் செய்து கொண்டார். தமிழகத்தில் நிகழ்ந்த முதல் கலப்புத் திருமணமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இந்த திருமணத்திற்கு ஈ.வெ.ரா- நாகம்மையார் இருவரும் தங்கள் சார்பில் திருமண அழைப்பிதழ் வெளியிட்டார்கள். குருசாமி ரிவோல்ட் இதழின் துணையாசிரியர் என அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

மகள்: கு.கு. ரஷ்யா. மகன்: கு.கு. கௌதமன். குழந்தைகளின் பெயருக்கு முன்னால் தன் தந்தையின் முதல் எழுத்தைச் (initial) சூட்டுவதை எதிர்த்து, தாயின் முதல் எழுத்தையும் உடன் போடவேண்டும் என்று வலியுறுத்தி, தனது பிள்ளைகளின் பெயர்களில் - கு.கு. ரஷ்யா (குஞ்சிதம் குருசாமி ரஷ்யா), கு.கு. கௌதமன் (குஞ்சிதம் குருசாமி கௌதமன்) - என்று அதனைச் செயல்படுத்தினார்.

அரசியல்

இடதுசாரி அரசியல்

குருசாமி திருச்சியில் படிக்கையில் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபாடு கொண்டார்.சிங்காரவேலர் 1923-ல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, இந்தியாவி லேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார்

திராவிடர் கழகம்

பூவாளூர் பொன்னப்பனார் என்பவரால் ஈர்க்கப்பட்டு குருசாமி ஈ.வெ. ராமசாமி பெரியாரின் குடியரசு இதழின் வாசகராக ஆனார். சேரன்மாதேவி குருகுல தனிப்பந்தி பிரச்சினை சார்ந்து நிகழ்ந்த விவாதங்களால் ஈர்க்கப்பட்டு பெரியாரின் ஆதரவாளராக ஆனார். பெரியார் திராவிடர் கழகம் அமைப்பை தொடங்கியபோது அதன் ஆதரவாளராக மாறினார். 1927 மேமாதம் பூவாளூர் பொன்னப்பனாருடன் சென்று ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்தார். அதன் பின் மறைவு வரை பெரியாரின் ஆதரவாளராகவே திகழ்ந்தார். 3 ஆகஸ்ட் 1928 முதல் ஈரோடு மற்றும் கொங்கு பகுதிகளில் ஈ.வெ.ராவின் பகுத்தறிவுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் ’ராமாயண எதிர்ப்புச் சுற்றுப்பயணம்’ நடத்தினார். அது அவருடைய முதல் பிரச்சாரப் பயணம். இராமாயண எதிர்ப்பு கதா காலட்சேபம் என்னும் வடிவில் அது அமைந்திருந்தது.

சொ. முருகப்பா, சாமி சிதம்பரனார், மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார், கோவை அய்யாமுத்து ஆகியோருடன் இணைந்து திராவிடர் கழகத்தில் செயல்பட்டார்.1929-ம் ஆண்டு மே 25-ல், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார். அம்மாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் 1928 ஜூன் மாதம் ஈ.வெ.ராவின் கருத்துக்களை மறுத்து தன் நவசக்தி இதழில் தொடர்முடங்கல் என்னும் பகுதியில் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக 1928 ஜூலையி குடியரசு இதழில் ‘நவசக்தியின் தடுமாற்றம்’ என்னும் தொடர் கட்டுரையை எழுதினார். குருசாமியின் நையாண்டி கலந்த நடையின் தோற்றம் இந்தக் கட்டுரைகள் வழியாகவே நிகழ்ந்தது. குத்தூசி என்னும் புனைபெயரை அப்போது சூட்டிக்கொண்டார்.

1952 முதல் 1960 வரை திராவிடர் கழகம் மேற்கொண்ட பல போராட்டங்களில் குருசாமி கலந்து கொண்டார். 13 முறைகள் சிறைத் தண்டனை பெற்றார்.

தனி பகுத்தறிவு இயக்கம்

குருசாமி ஈ.வெ.ரா.வுடன் கருத்து முரண்பட்டார். அவ்வாறு முரண்பட்டவர்கள், 1963 மே 19 அன்று தி.பொ. வேதாசலனார் தலைமையில் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினர். அதன் செயலாளராக குருசாமி செயல்பட்டார். சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்துவதற்காக 1965-ம் ஆண்டு ஜூலை 11 அன்று கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்கத்தின் ஆறாவது மாநில மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தினார்.

குடி அரசு இதழ்

இதழியல்

ஈ.வெ.ரா.வின் சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட குருசாமி, ஈ.வெ.ரா.வைச் சந்தித்து தன்னை அவ்வியக்கத்தில் இணைத்துக் கொண்டார். அரசுப் பணியாற்றிக் கொண்டே இதழாளராகச் செயல்பட்டார்.

குடி அரசு

குருசாமி, ‘குடியரசு’ இதழில் சுயமரியாதைச் சிந்தனைகளையும், சீர்திருத்தக் கருத்துகளையும், பகுத்தறிவையும் முன்னிறுத்தும் பல கட்டுரைகளை எழுதினார்.

ரிவோல்ட் ஆங்கில இதழ்
Revolt (ரிவோல்ட்)

ஈ.வெ.ராமசாமி, சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ஆங்கிலத்தில் Revolt என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார் ஈ.வெ.ரா.வும், எஸ். ராமநாதனும் அதற்கு ஆசிரியராக இருந்தனர். குருசாமி, துணை ஆசிரியராகச் செயல்பட்டார் என்றாலும், இதழின் முழுப் பொறுப்பையும் குருசாமியே கவனித்தார். ஆங்கிலத்தில் காத்திரமான கருத்துக்களைக் கொண்ட பல கட்டுரைகளை எழுதினார்.

புதுவைமுரசு இதழ்
புதுவை முரசு

ரிவோல்ட் இதழ் நின்று போனதால், குருசாமி, ‘புதுவை முரசு’ இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதில் புனை பெயர்களில் பல கட்டுரைகளை எழுதினார். பல தலையங்கங்களை எழுதினார். பாரதிதாசனை புதுவை முரசில் தொடர்ந்து எழுத வைத்தார். புதுவை முரசில் சில சிறுகதைகளையும், கட்டுரைகளையும் பாரதிதாசன் எழுதினார்.

விடுதலை

குருசாமி, 1946-ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து விலகி ஈ.வெ.ரா. பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ‘பலசரக்கு மூட்டை’ என்ற தலைப்பில், ‘குத்தூசி’ என்ற புனை பெயரில் இதழ்தோறும் சமூகச் சீர்த்திருத்தம் மற்றும் தீவிர அரசிய கருத்துக்கள் கொண்ட பல கட்டுரைகளை எழுதினார். அதனால் ‘குத்தூசி குருசாமி’ என்று அழைக்கப்பட்டார்.

பெரியார் அறிக்கைகள், தலையங்கங்கள் ஆகியவற்றோடு நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தலையங்கக் கட்டுரைகளையும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ‘குத்தூசி’க் கட்டுரைகளையும் எழுதினார். ‘குத்தூசி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 1948-ல் நூலாக வெளிவந்தன.

தான் பணியாற்றிய இதழ்களில் குத்தூசி , சி.ஐ டி, கிறுக்கன், மவுண்ட்ரோடு, குகு, சம்மட்டி, சிவப்பழம், தமிழ்மகன், தராசு, கிறுக்கன், பென்சில், மதுரைவீரன், விடாக்கண்டன், ஸ்பெக்டேட்டர், ப்ளெய்ன் ஸ்பீக்கர், எஸ்ஜி போன்ற பல புனை பெயர்களில் எழுதினார்.

விடுதலை இதழில் 16 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், குருசாமி எழுதிய தலையங்கம், நிர்வாகிகளில் ஒருவரால் நிறுத்தப்பட்டது. பெரியாருக்கு அது குறித்துத் தெரிவித்தும் அவர் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், குருசாமி, விடுதலையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.

குத்தூசி இதழ்
குத்தூசி

குருசாமி, 1962-ம் ஆண்டு அக்டோபரில் ‘குத்தூசி’ என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார். சுயமரியாதைக் கொள்கை சார்ந்த கட்டுரைகளை அவ்விதழில் எழுதினார். பலரை எழுதச் செய்தார். அரசியல், சமூக சீர்த்திருத்தக் கட்டுரைகளோடு வரலாறு, இலக்கியம், மொழி ஆய்வு, மருத்துவம் தொடர்பான கட்டுரைகளும் குத்தூசி இதழில் இடம்பெற்றன.

அறிவுப் பாதை இதழ்
அறிவுப்பாதை

‘குத்தூசி’ மாத இதழாக இருந்த காரணத்தால் புதிதாகத் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை விளக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க, குருசாமி, ‘அறிவுப்பாதை’ என்கிற புதிய வார இதழை 1964 மே தினத்தன்று தொடங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

சிறுகதைகள்

குத்தூசி குருசாமி ‘புதுவை முரசு’, குத்தூசி’ போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன.

நாடகம்

‘இரண்யன் அல்லது இணையற்ற வீரன்' என்ற பாரதிதாசன் எழுதிய நாடகத்தில், குருசாமி, இரண்யனாக நடித்தார். சென்னை உள்படப் பல இடங்களில் அதனை மேடையேற்றினார்.

மொழியாக்கம்

குத்தூசி குருசாமி தன் இதழ்களில் ஏராளமான நாத்திக, சமூகசீர்திருத்த கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்ற நூலை குத்தூசி குருசாமி மொழியாக்கம் செய்தார்.

பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுப்பு

அமைப்புப் பணிகள்

எழுத்துச் சீர்திருத்தம்

குத்தூசி குருசாமி, 1935-ல், தான் பணியாற்றிய இதழ்களில் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். (குருசாமியின் மறைவுக்குப் பின் 1978-ல் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அரசு அதனை நடைமுறைப்படுத்தியது)

பதிப்புப்பணி

பாரதிதாசனால் எழுதப்பட்ட பல்வேறு இதழ்களில் இடம் பெற்றிருந்த கவிதைகளைத் தொகுத்து 1938-ல், பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

பெரியார் வாழ்க்கை வரலாறு

ஈ.வெ.ரா. பெரியார் பற்றிய குறிப்புகளை ஒன்று திரட்டி சாமி சிதம்பரனாரைக் கொண்டு நூலாக்கம் செய்கின்ற பணியில் குத்தூசி குருசாமி ஈடுபட்டார். சாமி சிதம்பரனார் நூலின் பணி முழுமையாக நிறைவு செய்யப்படுவதற்கு முன்னரே வேறு பணிக்குச் சென்றுவிட்டதால், அந்த நூலை முடிக்கும் பொறுப்பையும், அதனை வெளியிடும் பொறுப்பையும் குத்தூசி குருசாமி ஏற்றுக் கொண்டார். அதன்படி ‘தமிழர் தலைவர்’ என்னும் நூல் வெளிவந்தது.

பொறுப்புகள்

  • மத்திய திராவிடர்கழகத் தலைவர்
  • பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவன அறங்காவலர்
  • சுயமரியாதை இயக்கச் செயலாளர்

பதிப்பு

குருசாமி, தன் நூல்களை வெளியிடுவதற்காக தமிழ் நூல் நிலையம் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்துத் தன் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார்.

மறைவு

சா. குருசாமி, அக்டோபர் 11, 1965 அன்று மாரடைப்பால் காலமானார். தன் இறப்பிற்கு முன்னால் மரணசாசனம் [1] ஒன்றை எழுதினார்.

குத்தூசி குருசாமி - குருவிக்கரம்பை வேலு

நினைவு நூல்கள்

குத்துசாமி குருசாமியின் வாழ்க்கையை, குருவிக்கரம்பை வேலு ‘குத்துசாமி குருசாமி' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தினார். தமிழ் இணைய மின்னூலகத்தில் அந்த நூல் சேகரிக்கப்பட்டுள்ளது.

’குத்தூசி குருசாமியை மறந்தது ஏன்?' என்ற தலைப்பில் கழஞ்சூர் செல்வராசு கட்டுரை நூல் ஒன்றை எழுதினார்.

வரலாற்று இடம்

சா. குருசாமி சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பொதுவுடைமை, ஆணாதிக்க எதிர்ப்பு, திராவிடம் என பல்வேறு சித்தாந்தங்களுக்காகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்கச் சிந்தனைகளோடு பொதுவுடைமைக் கொள்கைகளிலும் ஈடுபாட்டோடு இருந்தார். பிற்காலத்தில் சோஷலிசக் கொள்கைகளையும் ஆதரித்து இதழ்களில் எழுதினார். தான் கொண்ட கொள்கைகளுக்காக வாழ்நாள் இறுதிவரை சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். மரண சாசனம் எழுதிய குருசாமி, அது நாள் வரையிலான தன் வாழ்க்கையை அதில் மதிப்பிட்டிருந்தார்.

குருசாமி பற்றி, நெ.து. சுந்தரவடிவேலு, "தமது பொதுத் தொண்டையோ, செல்வாக்கையோ, உறவையோ தனக்கோ தன் குடும்பத்திற்கோ முதலாக்கிக் கொள்ளாத அப்பாவி மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரவச் செய்து வளர்க்கக் காரணமாக இருந்தவர்களுள் முன்னோடி இவரே” என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • பிச்சைக்காரி
நாடகம்
  • பன்னீர்செல்வம்
கட்டுரை நூல்
  • குத்தூசி கட்டுரைகள்
  • கட்டுரைக் கொத்து
தொகுப்பு நூல்
  • குத்தூசி இதழ் தொகுப்பு
மொழிபெயர்ப்பு
  • நான் ஏன் கிறித்தவன் அல்லன் (மூலம்: பெர்ட்ரண்டு ரசல்)
  • மரண சாசனம் (மூலம்: ஜீன் மெஸ்லியர்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page