சேரன்மாதேவி குருகுல தனிப்பந்தி பிரச்சினை
சேரன்மாதேவி குருகுல தனிப்பந்தி பிரச்சினை (1924) சேரன்மாதேவியில் வ.வே.சுப்ரமணிய ஐயர் நடத்திய தமிழ்நாடு ஆசிரமம் என்னும் குருகுலக் கல்வி நிலையத்தில் பிராமண மாணவர்களுக்கு மட்டும் தனிப்பந்தியில் உணவு அளிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சிக்குள் வரதராஜுலு நாயுடு, ஈ.வெ.ராமசாமிப் பெரியார் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய பிரச்சினை. இதன் விளைவாக காங்கிரஸ் பிளவுண்டு வரதராஜுலு நாயிடு தலைமையில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் வெளியேறினார். பின்னர் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் உருவாக இது வழிவகுத்தது.
நிகழ்வுகள்
1923-ல் வ.வே. சுப்ரமணிய ஐயர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தமிழ் குருகுலம், பாரத்வாஜ அசிரமம் ஆகிய அமைப்புகளை தொடங்கினார். இந்த அமைப்புகள் 1924-ல் சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டன. சேரன்மாதேவி ஆசிரமத்தில் மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியங்களையும் கற்பிப்பதுடன் கைத்தொழிலும் கற்பிக்கப்பட்டது. இக்குருகுலத்தில் எல்லா சாதி மாணவர்களும் பயின்றார்கள். ஐயரின் மகன் வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தியும் பிற மாணவர்களும் இணைந்து ஒன்றாக அமர்ந்து உணவுண்டார்கள். ஆனால் இரு பிராமண மாணவர்களுக்குத் தனியாக அங்கே உணவு பரிமாறப்பட்டது. வாவில்லா குடும்பம் என்ற பிரபலமான வைதிக குடும்பத்தின் இரு மாணவர்கள் அவர்கள். ஆசிரமத்துக்கு நிதியுதவி செய்தவர்கள். ஆசாரம் கெட்டுப்போகலாகாது என்று அந்தக் குடும்பத்தினர் இட்ட நிபந்தனையை ஏற்றுத்தான் வ.வே.சு.அய்யர் அவர்களை சேர்த்துக்கொண்டார். அதற்கேற்ப அவர்களை மட்டும் தனியாக உணவருந்தச் செய்தார். ஆனால் அக்குருகுலத்தை நடத்த காங்கிரஸ் கட்சி நிதியுதவி செய்தது. இச்சூழலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருடைய மகன் சுந்தரம் சேர்மாதேவி ஆசிரமத்தில் இரு பிராமண மாணவர்களுக்குத் தனிப் பந்தி போடப்படுவதாகத் தெரிவித்தார். அச்செய்தி வெளியானபோது அது காங்கிரஸில் இருந்த பிராமணரல்லாதவர்களிடம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. வ.வே.சுப்ரமணிய ஐயரின் மீது அரசியல் சார்ந்த எதிர்ப்பு கொண்டிருந்தவர்களும், காங்கிரஸிலிருந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தவர்களும் இதை பயன்படுத்திக்கொண்டனர். ஈ.வே.ராமசாமிப் பெரியார் மிகக்கடுமையாக எதிர்த்தார்.
பின்புலம்
அன்றைய காங்கிரஸில் இருந்த இருபெரும் குழுக்களுமே பிராமணத்தலைமை கொண்டவை- சத்தியமூர்த்தி குழு, சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் குழு. இரண்டுக்கும் எதிராக உருவாகிவந்தவர்கள் பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்றவர்கள். காங்கிரஸின் முன்னோடித் தலைவர்கள் பிராமணர்களாக இருந்தாலும் 1920-களுக்குப்பின் காங்கிரஸுக்குள் பிராமணரல்லாத உயர்சாதியினர் பெருமளவுக்கு வந்து உறுப்பினர் எண்ணிக்கையில் அவர்கள் பெரும்பான்மை ஆகியிருந்தனர். அது தலைமையில் பிரதிபலிக்கவில்லை. இப்பிரச்சினை மோதல்சூழலை உருவாக்கியது
வரதராஜுலுநாயுடுவின் சீடரும் தனக்கெனத் தனி செல்வாக்கு கொண்டவருமான ஈ.வெ.ராமசாமிப் பெரியார் காங்கிரஸ் கட்சியின் செயலராகக் காசோலையில் கையெழுத்திடும் இடத்தில் இருந்தார். வ.வே.சுப்ரமணிய ஐயர் காங்கிரஸ் கட்சி ஆசிரமத்துக்கு ஒதுக்கிய பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கான காசோலையை வாங்க வந்தபோது காங்கிரஸ் கமிட்டியின் எல்லா நிபந்தனைகளையும் ஐயரின் ஆசிரமம் நிறைவேற்றுகிறதா எனத் தன்னிடம் ஐயர் வாக்குமூலம் கொடுத்தால் காசோலையில் கையெழுத்திடுவதாக ஈ.வெ.ராமசாமி பெரியார் சொன்னார். ஈ.வெ.ராவை அலட்சியம் செய்து கூட்டுச்செயலாளாரிடம் ஐயாயிரம் ரூபாய்க்குக் காசோலையை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
நான்குநாள் கழித்து இந்தத் தகவல் ஈ.வெராமசாமிப் பெரியாருக்குத் தெரிய வந்தது. அந்த அலட்சியத்தால் சீண்டப்பட்ட ஈ.வெ.ரா மிச்சத் தொகையைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்துவிட்டார். வ.வெ.சு.ஐயருக்கும் ஈ.வெ.ராவுக்கும் கடுமையான பூசல் ஏற்பட்டுவிட்டது. ஐயர் ஈ.வெ.ராவை சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக காங்கிரஸ் மாகாணக் கமிட்டிக் கூட்டம் டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் இல்லத்தில் நடந்தபோது ஈ.வெ.ராவிடம் உள்ள பூசலைப்பற்றி சொல்லாமல் தனக்கு மிச்ச ஐயாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று புகார் சொன்னார். ராஜன் உடனே ஈ.வெ.ராவைக் கூட்டத்திலேயே கடிந்து பேசினார். கோபம்கொண்ட ஈ.வெ.ரா,வ.வே.சு.ஐயர் கட்சியின் செயலராகிய தன்னை மதிக்கவில்லை, தன்னிடம் அறிக்கை அளிக்கவில்லை என்று கூறி ஐயாயிரம் ரூபாய்க்குக் கையெழுத்துப் போட முடியாது என்று மறுத்தார். கூட்டத்தில் சிலர் ஈ.வெ.ரா வயதில் மூத்த அய்யரை எதிர்த்துத் துடுக்காகப் பேசுவதாக சொன்னார்கள். அவ்வண்ணம் குற்றம் சாட்டியவர்களில் ஈ.வெ.ராவின் நெருக்கமான நண்பராகிய கோவை அய்யாமுத்து முன்னணியில் இருந்தார். ஈ.வெ.ரா வ.வே.சு.ஐயர் தன்னிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றார். வ.வெ.சு.ஐயர் ஈ.வெ.ராவிடம் எந்த வருத்தமும் தெரிவிக்காமல் எழுந்து சென்றார். கட்சி ஈ.வெ.ராவைக் கண்டித்தது. வேறு செயலர் கையெழுத்துப் போடட்டும், நான் போடமாட்டேன் என்று ஈ.வெ.ரா கறாராகச் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் எல்லா பிராமணர்களும் ஒரே தரப்பாகக் கூடிவிட்டதாக வரதராஜுலு நாயுடு கருதினார். அதை அங்கே அவர் கோபத்துடன் சொல்ல டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் வகுப்புவாதப்பேச்சு பேசுவதாக கண்டித்தார். கூட்டம் முடிந்ததும் பிராமணரல்லாதவர்களும் பிராமணர்களும் தனித்தனியாகப்பிரிந்து கடுமையாகப் பேசிக்கொண்டார்கள். ஈ.வெ.ரா கையெழுத்து போடாததனால் வ.வெ.சு.ஐயருக்குக் கடைசிவரை மீதிப் பணம் கொடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து திருச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வெ.ரா காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சேவையைப் பாராட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தேர்தல் நடந்த அதே மாநாட்டில் வ.வே.சு.ஐயர் ஈ.வெ.ரா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். ஈ.வெ.ராவின் நண்பரான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அது சாதிய மனநிலையின் வெளிப்பாடு என்றும், பிராமணர் கூட்டாகச் சேர்ந்து அதைச் செய்கிறார்கள் என்றும் அந்த மாநாட்டில் குற்றம்சாட்டிப் பேசினார். வ.வே.சு.ஐயரின் தீர்மானம் தோல்வி அடைந்தது. இது தொண்டர் மட்டத்தில் பிராமணர்களைவிட பிராமணரல்லாதாரின் எண்ணிக்கை அதிகரித்து அதிகாரச்சமநிலை மாறியமைக்கான திட்டவட்டமான ஆதாரமாக இருந்தது. இச்சூழ்நிலை பிராமணர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக தெரிந்தது.
வ.வே.சு.ஐயரிடம் பாரத்வாஜ ஆசிரமத்தில் தனிப்பந்தி போடப்படுவதைப் பற்றி ஈ.வே.ராமசாமி பெரியார் போன்றவர்கள் காங்கிரஸ் கமிட்டியில் குற்றம்சாட்டியபோது அவர் குருகுலத்தில் அவ்வாறு பேதம் இல்லை என்றும், ஆனால் இரு மாணவர்கள் மட்டும் தனியாக உண்பதாகவும், அவர்களுக்கு அந்தச் சுதந்திரம் உண்டு என்றும் சொன்னார். அதை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த சி.ராஜகோபாலாச்சாரியாரும் வ.வே.சு.ஐயரை கண்டித்தார். வைக்கம் போராட்டத்திற்கு வந்த காந்தியிடம் இந்தப் பூசல் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் இதை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் பிளவுபடலாகாது என்றும், உணவு போன்றவற்றில் கட்டாயநடைமுறை பயனற்றது மனமாற்றமே தீர்வு என்றும் சொன்னார். அதை வரதராஜுலு நாயுடு தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இச்செய்திகளை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் பின்னாளில் பதிவுசெய்து, இதில் வ.வே.சு ஐயர் தனிப்பட்ட முறையில் சாதிப்பார்வை கொண்டிருக்கவில்லை என்று சொல்கிறார்.
காங்கிரஸின் நிதியைக் காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவேரா முற்றாக நிறுத்திவிட்ட நிலையில் பள்ளியை நடத்துவதற்காக ஐயர் தனிப்பட்டமுறையில் மக்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்தார். காங்கிரஸ் தலைவர்கள் அதை ஆதரித்து இதழ்களில் எழுதினர். திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும், வரதராஜுலு நாயுடுவும்கூட அதை ஆதரித்தனர். கொதிப்படைந்த ஈ.வெ.ரா நாயுடுவைக் கண்டித்து பிராமணச்சதிக்கு நாயுடு விலை போய்விட்டார் என்றார். வரதராஜுலு நாயுடு திரு.வி.கவை ஈ.வெ.ராவிடம் தூதனுப்பினார். அவர்களுக்கிடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. இந்தத் தருணத்தில் ஒற்றுமையாக இருந்து வ.வே.சு.ஐயரையும் அவருக்குப்பின்னால் உள்ள பிராமண அதிகாரத்தையும் தோற்கடிப்பது என முடிவெடுத்தார்கள். ஈ.வெ.ரா, வரதராஜுலு நாயுடு ஆகியோர் வ.வே.சு.ஐயர் பிராமண சாதிபேதத்தைப் பரப்புவதாகவும் ஆகவே பிராமணரல்லாதார் அவருக்கு நிதியுதவி செய்யவேண்டாம் என்றும் இதழ்களில் எழுதினார்கள்.வ.வே.சு .ஐயரின் ஆசிரமத்தில் பிராமணரல்லாதார் கொடுமைக்குள்ளாவதாகவும் பிரார்த்தனை உட்பட அனைத்திலுமே சாதிபேதம் காட்டப்படுவதாகவும் பேசப்பட்டது. இந்த விவாதத்தில் சுதேசமித்திரன் இதழ் வ.வே.சு.ஐயருக்கு மறைமுகமான ஆதரவு அளித்தது என்றும் தமிழ்நாடு, நவசக்தி, குமரன் போன்ற இதழ்கள் அனைத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தன என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
விவாதம் உருவானபோது வ.வே.சு.ஐயர் குருகுலப் பொறுப்பில் இருந்து விலகி அதை மகாதேவ ஐயர் என்பவரிடம் ஒப்படைத்தார். அதற்கு அவருக்கு உரிமையில்லை, குருகுலம் காங்கிரசின் சொத்து என அவருடைய எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். குருகுலத்தை காங்கிரஸ் மேலிடம் டி.எஸ்.எஸ்.ராஜனிடம் ஒப்படைத்தது. பின்னர் அது ஹரிஜன சேவா சங்கத்திற்கு அளிக்கப்பட்டு இறுதியா சித்பவானந்தரின் ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்புக்குச் சென்றது.
விளைவுகள்
பாரத்வாஜ ஆசிரமத்தில் தனிப்பந்தி போடப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க காங்கிரஸில் இருந்த பிராமணரல்லாதாரைக் கொந்தளிக்கச் செய்தது. ஆனால் வ.வே.சு.ஐயர் அதற்கு பொதுவிளக்கம் அளிக்காமல் அலட்சியம் செய்தார். காந்தி உட்படப் பலர் விளக்கம் கோரியும்கூட தான் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனால் பதிலளிக்க முடியாது என்ற நிலையை வ.வே.சு. ஐயர் எடுத்தார். பாரத்வாஜ ஆசிரமத்தில் எல்லா சாதிமதத்தினரும் இருந்தனர், அவரவர் மத வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதையெல்லாம் வ.வே.சு.ஐயர் விளக்க முயலவில்லை. தன்னைப்பற்றி அனைவருக்கும் தெரியும் என்று அவர் நினைத்தார். அவர் ஈ.வே.ராமசாமிப் பெரியாரின் தரப்புக்கு பதில் சொல்லவில்லையென்றாலும் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் இனி ஆசிரமத்தில் எவருக்கும் தனிப்பந்தி போடமுடியாது என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதேசமயம் அந்த மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கவுமில்லை. அவர்கள் குடும்பத்திற்கு தான் அளித்த வாக்குறுதி பற்றிப் பேசவுமில்லை.
பின்னர் ஈவேரா காங்கிரஸில் இருந்து வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தையும், தொடர்ந்து திராவிடர் கழகத்தையும் ஆரம்பிப்பதற்கான தூண்டுதல் நிகழ்ச்சி இது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமான இடம் வகிப்பது. இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே ஐயர் தன் மாணவர்களுடன் பாபநாசம் அருவியில் குளிக்கச்சென்று வெள்ளத்தில் சிக்கிய மகளைக் காப்பாற்றுவதற்காக முயன்று மரணம் அடைந்தார். பிரச்சினை அங்கே முடிந்தாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சார்ந்து மீண்டும் பிராமணர் -பிராமணரல்லாதார் பிரிவினை மேலோங்கி, காங்கிரஸில் இருந்து ஈ.வெ.ரா வெளியேறினார்.
பிற்கால அரசியல்
வ.வே.சு.ஐயர் சாதிய நோக்கு கொண்டவர் அல்ல. அவர் நடத்திய பாலபாரதி இதழில் தீண்டாமை மற்றும் சாதிப்பாகுபாட்டுக்கு எதிராக கடுமையாக எழுதிவந்தார். ஆனால் தமிழக அரசியலில் 1928-ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கும் வகுப்புவாரி ஒதுக்கீடு அரசாணை (Communal G.O) யை வெளியிடப்பட்டு அதன் விளைவாக பிராமணர், பிராமணரல்லாதோர் அரசியல் வலுப்பெற்றபோது வ.வே.சு.ஐயரின் பாரத்வாஜ ஆசிரம விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டது. வ.வே.சு.ஐயர் சாதிவெறியராக முத்திரைகுத்தப்பட்டார்.
இப்பிரச்சினை நடந்துகொண்டிருக்கையிலேயே இது வ.வே.சு.ஐயர் செய்துகொண்ட சிறு சமரசம் என்றும், அதை அவர் செய்திருக்கக்கூடாது என்றும் விமர்சனம் செய்தவர்கள் அன்றைய காங்கிரஸில் இருந்த பிராமணர் - பிராமணரல்லாதார் உட்பூசல்களால் இது பெரிதாக்கப்படுகிறது என்றும், காங்கிரஸை உடைத்து பிராமணரல்லாதோர் இயக்கம் ஒன்றை உருவாக்கும் நோக்கமும், ஜஸ்டிஸ் கட்சியின் மறைமுக ஆதரவும் இதற்கு இருந்தது என்றும் பதிவு செய்திருக்கிறார்கள். அ.மாதவையா, பரலி சு.நெல்லையப்பர், டி.எஸ்.சொக்கலிங்கம், ராய. சொக்கலிங்கம் செட்டியார் ஆகியோர் இவ்வாறு எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1925-ல் வ.வே.சு.ஐயரை மிகக்கடுமையாக தாக்கிய திரு.வி.கல்யாணசுந்தரனார் கூட 1945-ல் குமரி மலர் இதழில் எழுதிய கட்டுரையில் வ.வே.சு.ஐயர் சூழ்நிலைக் கைதியாகச் சிக்கிக்கொண்டவர் என எழுதினார்.
1925-ல் வ.வே.சுப்ரமணிய ஐயரின் மறைவின் போது ஈ.வெ.ராமசாமிப் பெரியார் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் வ.வே.சுப்ரமணிய ஐயர் சாதிநோக்குக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருடைய குருகுலத்தில் நிகழ்ந்தவற்றைக் கொண்டு அவரை மதிப்பிட முடியாது என்றும் கூறியிருந்தாலும் ஐயர் மேல் அந்த அடையாளமே நீடித்தது. "சாதி மத பேதம் கடந்த பெரியார் ஆவர் நம் ஐயர். மக்கள் யாவரும் நிகரெனும் கொள்கையுடைவரவர். சமூக வாழ்க்கையை குலைத்து பெருங்கேடு விளைவித்து வரும் கொடிய வழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும் என்ற சீரிய எண்ணம் உடையவர். …இதுகாலை நடந்துவரும் குருகுலப்போர் இவரது சமூகக் கொள்கைகளின் மேல் மக்களுக்குள் ஒருவித ஐயத்தை உருவாக்கி விட்டதென்றாலும் அவ்வையப்பாட்டுக்குச் சிறிதும் ஆதாரமில்லை. உடனுண்ணலையும் வேறு சாதியார் இல்லங்களில் உணவெடுத்தலையும் இவர் கைக்கொண்டிருந்தார் என உண்மையை யாமறிவோம்" என ஈ.வெ.ரா எழுதினார்.
ஆனால் பின்னர் திராவிடர் கழகம் மற்றும் அதன் ஆதரவாளர்களான பிரச்சாரகர்கள் வ.வே.சுப்ரமணிய ஐயர் வைதிகவெறியர், சாதிவெறி மிக்க ஆசாரவாதி என தொடர்ந்து பல நூல்களில் எழுதியும் பேசியும் நிறுவினர்.
ஆய்வுகள்
பழ. அதியமான், சுப்பு, மீனா, பெ.சு.மணி ஆகியோர் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் பற்றி ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார்கள். பழ. அதியமானின் நூல் திராவிடர் கழக ஆதரவு அரசியல் நிலைபாட்டுடன் எழுதப்பட்டது. சுப்பு எழுதிய ’திராவிட மாயை’ பிராமணர்களின் கோணத்தில் எழுதப்பட்டது. 2011 'உயிர் எழுத்து’ இதழில் மீனா எழுதி வெளிவந்துள்ள ’வ.வே.சு- ஒற்றை வரலாறுகளுக்கு இடையே உருப்பெறும் பன்முகம்’ என்ற கட்டுரை அவருடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதி. அது கல்வித்துறை முறைமையின்படி எல்லா தரப்புகளையும் சீராக முன்வைக்கிறது. பெ.சு.மணி எழுதிய வ.வே.சு.ஐயர் என்னும் நூல்[1] அன்று பேசப்பட்ட எல்லா தரப்புகளையும் முன்வைத்து பொதுப்புரிதலை உருவாக்க உதவி செய்கிறது.
உசாத்துணை
- சேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் பழ அதியமான்
- சேரன்மாதேவி குருகுலம் | காலச்சுவடு | Kaalasuvadu | tamil weekly supplements
- https://keetru.com/index.php/2009-10-07-10-39-24/10-sp-2பழ அதியமான்-26
- வ.வே.சு. ஐயரின் குருகுலத்துக்கு எதிராக நடந்தது போராட்டமா? விவாதமா? விவரிக்கும் பெரியார் ஈவெரா | VVS Iyer's Cheranmahadevi Gurukulam and Periyar EVR - Tamil Oneindia
- போகப் போகத் தெரியும் - 23 - தமிழ்ஹிந்து
- எமதுள்ளம் சுடர் விடுக - 26: ஒரு இயக்கத்தின் தொடக்கம்! | எமதுள்ளம் சுடர் விடுக - 26: ஒரு இயக்கத்தின் தொடக்கம்! - hindutamil.in
- சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் - வரலாற்றுச் சுவடுகள் | பெரியார்புக்ஸ்.இன்
- வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும் | எழுத்தாளர் ஜெயமோகன்
- வ. வே. சு. ஐயர் - விக்கிமூலம்
- தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்- Dinamani
- Manian – சிலிகான் ஷெல்ஃப்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:18 IST