under review

சிங்காரவேலர்

From Tamil Wiki
Singaaravelar6.jpg
சிங்காரவேலர் பற்றி அண்ணாத்துரை
சிங்காரவேலர் சிலை,சென்னை
சிங்காரவேலர் சிலை புதுச்சேரி

சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 - பிப்ரவரி 11, 1946) எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியர், பொதுவுடைமைச் சிந்தனையாளர். தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

சிங்காரவேலர்

பிறப்பு, கல்வி

Singaaravelar.jpg

சிங்காரவேலர் சென்னை மைலாப்பூரில் பிப்ரவரி 18, 1860 அன்று வெங்கடாசலம் செட்டியார், வள்ளியம்மையார் இணையருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார். சிங்காரவேலரின் குடும்பத்தினர் சைவ சமயத்தவர்கள்.

சிங்காரவேலர் தன் ஆரம்பப் பள்ளியை திண்ணைப் பள்ளிக் கூடத்திலும், பின் இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.1881-ம் ஆண்டு மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1884-ல் எஃப்.ஏ. தேர்வில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்றார்.

சிங்காரவேலரின் குடும்பம் பர்மாவிலிருந்து அரிசியையும், தேக்கு மரத்தையும், கடல் வழியாகக் கொண்டு வந்து தமிழகத்தில் வணிகம் செய்தது. சிங்காரவேலரும் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டதால் அவரது கல்வி பாதியிலேயே நின்றது.

பின்னர் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1894-ல் இளங்கலைப் பட்டத்தையும் (பி.ஏ), 1907-ல் சட்டக்கல்லூரியில் பி.எல் பட்டத்தையும் பெற்றார். வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளையும் கற்றறிந்தார்.

தனி வாழ்க்கை

Singaaravelar2.jpg

நவம்பர், 1907-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இவர் அலுவலகம் பாரிஸ் கார்னர் சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் இருந்த ஜேக்கப் அண்டு கம்பெனியின் முதல் மாடியில் இருந்தது. 1889-ம் ஆண்டு அங்கம்மையைக் காதல் திருமணம் செய்துக் கொண்டார். அங்கம்மை 1920-ல் காலமானார்.

அரசியல் வாழ்க்கை

Singaaravelar1.jpg
காங்கிரஸ்

சிங்காரவேலர் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். 1917-ல் காங்கிரஸில் உறுப்பினரானார். தேச விடுதலைப் போராட்டங்களிலும் சமூக சேவைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1919-ல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது வழக்கறிஞர் பணியைத் துறந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தினார். 1922-ல் கயாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று முழுவிடுதலை பற்றிப் பேசினார்.

காங்கிரஸில் செல்வந்தர்களின் செல்வாக்கு கூடுவதாக சிங்காரவேலர் கருதினார். 1918 முதல் காங்கிரஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாக இருக்கவேண்டும் என எழுதினார். இந்து ஆங்கில நாளிதளில் 'An Open Letter to Mahatma Gandhi' என்னும் தொடர் கட்டுரையை எழுதினார். பின்னாளில் இக்கட்டுரைகள் ‘சுயராஜ்யம் யாருக்கு?’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தன.

1926-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். டிசம்பர் 1927-ல் சென்னையில் நடைபெற்ற 42-வது காங்கிரஸ் மாநாட்டில் 'முழுமையான சுதந்திரம்' கோரி தீர்மானம் கொண்டுவந்தார். சைமன் கமிஷன் புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

பௌத்தம்,தலித் இயக்கம்
Singaaravelar4.jpg

சிங்காரவேலரின் குடும்பம் சைவ சமயத்தைப் பின்பற்றிய போதும் இவர் பௌத்தம் மேல் ஈடுபாடு கொண்டார். சிங்காரவேலர் தன் இல்லத்திலேயே ’மகாபோதி சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் பௌத்த கொள்கைகளைப் பற்றிய கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் அயோத்திதாச பண்டிதர், இலட்சுமி நரசு நாயுடு (பச்சையப்பன் கல்லூரித் தத்துவப் பேராசிரியர்) போன்றோர் உரையாற்றினர். இந்நிகழ்வுகளை திரு.வி.க தன் 'வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1899-ல் புத்தரின் நினைவு ஆண்டைத் தன் இல்லத்தில் கொண்டாடினார். 1902-ல் லண்டனில் நடந்த உலக பௌத்தமத மாநாட்டில் பங்கேற்றார். ஆனால் விரைவிலேயே அயோத்திதாச பண்டிதர், லட்சுமிநரசு ஆகியோரின் பௌத்த இயக்கத்தில் இருந்து விலகி நாத்திகவாதம் நோக்கிச் சென்றார்.

இந்திய தொழிலாளர் விவசாயிகள் கட்சி

சிங்காரவேலர் மே 1, 1923-ல் இந்திய தொழிலாளர் விவசாயிகள் கட்சி(Labour kisan Party of Hindustan) என்னும் அமைப்பை எஸ்.ஆர்.டாங்கே , எம்.என்.ராய் ஆகியோருடன் இணைந்து தொடங்கினார். இந்தக் கட்சிதான் பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியாக ஆகியது.

மார்க்சியம்

1900-ம் ஆண்டு முதல் மார்க்சிய நூல்கள் அறிமுகமாயின. 1917-ல் நடந்த சோவியத் புரட்சி மார்க்சியம் மீது அவரது ஈர்ப்பை மேலும் தூண்டியது. பிரிட்டிஷ் ஆட்சியில் பொதுவுடைமை நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன. புதுச்சேரியின் உள்ள தன் உறவினர்களின் உதவியால் வெளிநாட்டிலிருந்து கப்பல் வழியாக நூல்களை சென்னைக்குக் கொண்டு வந்தார்.

1922-ல் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "Dear Comrades, உலக ========கம்யூனிஸ்டுகள் சார்பாக நான் இங்கு வந்துள்ளேன்."எனத் தொடங்கி பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் திரட்டுவது பற்றி பேசினார். அவ்வுரையில் பூரண விடுதலையைக் குறித்த தீர்மானத்தை முன்வைத்தார். அந்த உரையை எம்.என்.ராய் நடத்திய Vanguard of indian independence என்னும் இதழ் பாராட்டி எழுதியிருந்தது. 1920 முதல் மார்க்சியரான எம்.என். ராயுடன் கடிதத் தொடர்பில் இருந்தார்.

1925-ல் எம்.என்.ராய் முன்னெடுப்பில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தொடங்கப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.டிசம்பர் 26, 1925-ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் மாநாடு கான்பூரில் நடைபெற்றது. அதில் சிங்காரவேலர் பங்கெடுத்தார்.

கான்பூர் சதிவழக்கு

கான்பூரில் 1925-ல் நடைபெற்ற மாநாட்டில் இடம்பெற்ற பேச்சுக்களின் அடிப்படையில் கான்பூர் சதிவழக்கு என்னும் வழக்கை பிரிட்டிஷ் அரசு தொடுத்தது. அதில் பலர் கைதுசெய்யப்பட்டு சிறைசென்றனர். சிங்காரவேலர் கடுமையான டைபாயிடு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால் வழக்கில் சேர்க்கப்படவில்லை.

ராடிக்கல் ஹ்யூமனிஸ்டுக் கட்சி

எம்.என். ராய் 1936-ல் ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியை தொடங்கியபோது சிங்காரவேலரை சந்தித்து ஆதரவு கோரினார். சிங்காரவேலர் அதற்கு உடன்படவில்லை.

சுயமரியாதை இயக்கம்

சிங்காரவேலர் 1918-ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை தஞ்சையில் நடந்த மகாஜனசபை மாநாட்டில் சந்தித்தார். தொடர்ச்சியாக பெரியாருடன் உரையாடலில் இருந்தார். ஜனவரி 2, 1927 முதல் குடியரசு இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். டிசம்பர் 26, 1931-ல் சென்னை சுயமரியாதை இயக்க மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றினார். மே 1932-ல் சேலம் சுயமரியாதை இயக்க மாநாட்டைத் திறந்துவைத்து உரையாற்றினார்.

மார்ச் 15, 1933-ல் காஞ்சீபுரம் சுயமரியாதை இயக்க மாநாட்டை திறந்துவைத்து உரையாற்றினார். டிசம்பர் 1933-ல் சென்னை நாத்திக மாநாட்டில் தலைமையுரை ஆற்றினார். டிசம்பர் 26, 1936-ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமை ஏற்று உரையாற்றினார். ஜூன் 20, 1943-ல் சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார்.

தொழிற்சங்கப் பணிகள்

Singaaravelar3.jpg

1918-ல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், பி.பி.வாடியா ஆகியோருடன் இணைந்து தொடங்கினார். 'லேபர் கிஸான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்’ என்ற தொழிலாளர் கட்சியை 1923-ல் தொடங்கினார். அலுமினியத் தொழிலாளர் சங்கம், கழிவுநீர் அகற்றுவோர் சங்கம், துப்புரவுத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றிற்காகவும் பணியாற்றினார்.

ஜூன் 20, 1921-ல் சிங்காரவேலர் பி ஆண்ட் சி மில்லில் (பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில்) மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.தமிழகத்தில் நடந்த முதல் தொழிற்சங்க வேலைநிறுத்தம் என இது கருதப்படுகிறது. 1923-ல் இந்தியாவிலேயே முதல்முறையாக மே தினத்தை தொழிலாளர் நாளாகக் கொண்டாடினார்.

பிப்ரவரி 1927-ல் நடைபெற்ற கரக்பூர் ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்ததில் பங்கேற்றார். ஏப்ரல் 21, 1927 அன்று சென்னை பர்மா ஷெல் கம்பெனியின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் வழிகாட்டியாகச் செயல்பட்டார். ஜூலை 19, 1928 அன்று நாகப்பட்டினம், போத்தனூர் ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஒருங்கிணைத்தார். அதற்காக கைதாகி பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அவரை விடுதலைச் செய்யக்கோரி ஈ.வே.ராமசாமிப் பெரியார், சத்தியமூர்த்தி ஆகியோர் போராடினர். அவருக்காக புகழ்பெற்ற வழக்கறிஞர் நியூஜெண்ட் கிராண்ட் வாதிட்டார். தண்டனை குறைப்பு பெற்று ஜூலை 23, 1928 அன்று சிறையில் அடைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலையானார்.

சிங்காரவேலர் 1937 முதல் 1938 வரை டிராம்வே தொழிலாளர் சங்க தலைவராக பதவி வகித்தார்.

நகராண்மைக் கழகப் பணி

Singaaravelar5.jpg

சிங்காரவேலர் 1925-ம் ஆண்டு சென்னை நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரசின் சுயராஜ்ய கட்சி வேட்பாளராக நின்று யானை கவுனி வட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான மதன கோபால நாயுடுவை வென்றார். 1927-ல் நகராண்மைக் கழக உறுப்பினராக இருந்தார்.

கல்விப்பணிகள்

சிங்காரவேலர் டிசம்பர் 29, 1925-ல் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்தார். நவம்பர் 3, 1925-ல் சிங்காரவேலர் சென்னை நகராட்சியின் கல்விநிலைகுழுவின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். மார்ச் 26,1926-ல் நகராட்சிப் பள்ளிகளில் மதக்கல்வி, மதம் சார்ந்த பாடல்கள் இடம்பெறலாகாது என ஆணையிட்டார். சிங்காரவேலர் தனக்குச் சொந்தமான நிலத்தை 1930-ல் லேடிவெலிங்டன் கல்லூரி உருவாக்குவதற்கு அளித்தார்.

இதழியல்

சிங்காரவேலரின் கட்டுரை அயோத்திதாச பண்டிதர் வெளியிட்ட 'தமிழன்’ இதழில் வெளிவந்தது. ஆங்கிலக் கட்டுரைகள் இந்து ஆங்கில நாளிதழில் 1918-ம் ஆண்டு முதல் வெளிவந்தன.

1923-ல் மே தினத்தை முன்னிட்டு ஆங்கிலத்தில் 'Labour and Kissan Gazette’ (தொழிலாளி - விவசாயி இதழ்) என்ற மாத இதழையும், தமிழில் 'தொழிலாளன்’ என்ற மாத இதழையும் வெளியிட்டார். பின் 'தோழர்’ என்ற மாத இதழையும் தொடங்கினார். இவ்விதழ்களில் தொழிலாளி, விவசாயி உரிமை குறித்தும், முன்னேற்றம் குறித்தும், மக்கள் பிரச்சனையைக் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தினால் சில ஆண்டுகளில் அவ்விதழ் நின்றது.

இ.எல்.அய்யர் 1921 முதல் 1923 வரை நடத்தி வந்த ’சுதர்மா’ (Swadahrma) என்ற ஆங்கில மாத இதழிலும் தொழிலாளர் முன்னேற்றம் குறித்து எழுதினார். ஈ.வெ.ரா குடியரசு வார இதழை ஈரோட்டில் இருந்து மே 2, 1925 முதல் வெளியிட்டார். இவ்விதழிலேயே 1927 முதல் கட்டுரைகள் எழுதினார். குடியரசு தடை செய்யப்பட்ட பின் ஈ.வெ.ராவின் 'புரட்சி’, 'பகுத்தறிவு’ இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இவை தவிர 'சுதேசமித்திரன்’, 'சண்டமாருதம்’ இதழ்களிலும் எழுதினார்.

மே 1, 1935 அன்று 'புது உலகம்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். அறிவியல் செய்திகளை பரப்புவதற்காக இவ்விதழை நடத்தினார்.

மறைவு

பாரிச வாயு நோய் காரணமாக சிங்காரவேலர் தன் 86-ம் வயதில் பிப்ரவரி 11, 1946 அன்று இரவு இயற்கை எய்தினார்.

நினைவுச்சின்னங்கள்

 • புதுச்சேரி கடலூர் சாலையில் சிங்காரவேலருக்கு முழுச்சிலை அமைக்கப்படுள்ளது (பிப்ரவரி 18,1994)
 • புதுவை அரசு காரைக்காலில் சிங்காரவேலருக்குச் சிலை வைத்துள்ளது (பிப்ரவரி 18,2009)
 • மீனவர் வீட்டு வசதித் திட்டத்துக்கு தமிழக அரசு இவர் பெயரைச் சூட்டியுள்ளது.
 • சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 'சிங்கார வேலர் மாளிகை’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ளது (ஜூன் 11, 1998)
 • சிங்காரவேலருக்கு அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. (பிப்ரவரி 18, 2009)
 • சிங்காரவேலர் சிந்தனைக் கழக அறக்கட்டளை சொற்பொழிவு. சென்னை பல்கலைக்கழகம் (பிப்ரவரி 18, 2010)
 • சிங்காரவேலர் சிந்தனைக் கழக அறக்கட்டளை கடலூர் லாரன்ஸ் சாலையில் சிலை அமைத்துள்ளது.( பிப்ரவரி 26, 2011)
 • சென்னை இராயபுரத்தில் சிங்காரவேலர் மணிமண்டபமும், நினைவு நூலகமும் திறக்கப்பட்டது (செப்டெம்பர் 25, 2015)
நாட்டுடைமை

சிங்காரவேலரின் படைப்புகள் தமிழக அரசால் 2007-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

வாழ்க்கை வரலாறுகள்

 • சிங்காரவேலர் - பா.வீரமணி. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை
 • தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் -நாகை முருகேசன்
 • சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு -கே.முருகேசன் -சி.எஸ்.சுப்பிரமணியம்
 • ம.சிங்காரவேலர்- இந்தியாவின் முதல் மார்க்ஸிய அறிஞர். எஸ்.ராமகிருஷ்ணன்
 • சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்- சி.என்.அண்ணாத்துரை

வரலாற்று இடம்

தமிழகத்தில் நான்கு முதன்மையான அரசியல் இயக்கங்களிலும் முன்னோடியாக கருதப்படுபவர் சிங்காரவேலர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, தலித் பௌத்த இயக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றில் அவர் தொடக்ககால தலைவராகப் பங்களிப்பாற்றியவர். தொழிற்சங்க இயக்க முன்னோடி என்னும் வகையிலும் வரலாற்றில் இடம்பெறுகிறார்.

நூல்கள்

சிங்காரவேலர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நூல்கள்
 • சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 1 (1931 கற்பகம் கம்பெனி, சென்னை)
 • சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 2 (1932 சமதர்ம பிரசுராலயம், சென்னை)
 • தொழிலாளர் துயரமும் உலக நெருக்கடியும் (1932, சிறு வெளியீடு சமதர்ம் பிரசுராலயம்)
 • கடவுளும் பிரபஞ்சமும் (1932, சுயமரியாதை பிரசுராலயம், ஈரோடு)
 • மெய்ஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும் பாகம் 1 (1932, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு)
 • நாத்திகர் மாநாட்டின் தலைமையுரை (1932, சிறு வெளியீடு, குடியரசு பதிப்பகம், ஈரோடு)
 • சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 3 (1934, சமதர்ம பிரசுராலயம், சென்னை)
 • மெய்ஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும் பாகம் 2 (1934, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு)
 • மனித உற்பவம் (1934, சமதர்ம பிரசுராலயம், சென்னை)
 • சோசலிச மாநாட்டின் தலைமையுரை (1934, சிறு வெளியீடு, குடியரசு பதிப்பகம், ஈரோடு)
சிங்காரவேலர் மறைந்த பின் வெளிவந்தவை
 • தத்துவமும் வாழ்வும் (தொகுப்பு - டி.என். இராமச்சந்திரன், மே 1957, இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம்)
 • வாழ்வு உயர வழி (தொகுப்பு - டி.என். இராமச்சந்திரன், நவம்பர் 1957, இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம்)
 • விஞ்ஞானமும் வாழ்வும் (தொகுப்பு - டி.என். இராமச்சந்திரன்)
 • மூலதனம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1973, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • பொதுவுடைமை விளக்கம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1974, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • சிங்காரவேலர் சொற்பொழிவுகள் (கம்யுனிஸ்ட் கட்சியின் பொன்விழா வெளியீடு, தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • தத்துவஞான-விஞ்ஞானக் குறிப்புகள் (கம்யுனிஸ்ட் கட்சியின் பொன்விழா வெளியீடு, டிசம்பர்1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • அரசியல் நிலைமை (கம்யுனிஸ்ட் கட்சியின் பொன்விழா வெளியீடு, டிசம்பர்1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • வாழு - வாழவிடு (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், டிசம்பர்1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • சமூகம் - பொருளாதாரம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1985, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • சமூகம் - அரசியல் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1985, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
 • சமூகம் - சமயம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1985, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
தொகுப்புகள்
 • சிங்காரவேலர் கட்டுரைகள் (தொகுப்பு - கழஞ்சூர் செல்வராசு, 2001)
 • சிங்காரவேலர் கட்டுரைகள் (தொகுப்பு - பேரா. முத்து. குணசேகரன், 2002)
 • சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் - மூன்று தொகுதிகள் (2006, தொகுப்பு - பேராசிரியர் முத்து. குணசேகரன், பா.வீரமணி. தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை)
 • சிங்காரவேலர் (சிங்காரவேலர் கட்டுரைகளின் தொகுப்பு, பா.வீரமணி, 2007, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரா)
 • சிங்காரவேலரின் சிந்தனைப் பொழிவுகள் (சிங்காரவேலரின் எல்லாப் பேச்சுகளும் அடங்கிய முதல் தொகுப்பு - 2014, தொகுப்பு: பா.வீரமணி, அன்னை முத்தமிழ் பதிப்பகம், திருவான்மியூர், சென்னை)
 • சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள் (தொகுப்பு: பா.வீரமணி, 2015, சாகித்திய அகாதெமி, சென்னை)
சிங்காரவேலர் எழுதிய இதழ்கள்
தமிழ் இதழ்கள்
 • தமிழன்
 • குடியரசு
 • பகுத்தறிவு
 • புரட்சி
 • புதுவை முரசு
 • நவசக்தி
 • சுதேசமித்திரன்
 • தொழிலாளன்
 • தோழர்
 • புது உலகம்
 • வெற்றி முரசு
 • சமதர்மம்
 • சண்ட மாருதம்
ஆங்கில இதழ்கள்
 • The Hindu
 • Swadharma
 • Labour and Kissan Gazette
 • New India
 • Vanguard of Indian Independence
 • Mail
 • Sunday Observer

உசாத்துணை

 • இந்திய இலக்கிய சிற்பிகள் - சிங்காரவேலர் (பா. வீரமணி, சாகித்திய அகாதெமி)
 • சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை - பா.வீரமணி,
 • சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரை பயில்வோம் - சு.பொ.அகத்தியலிங்கம்,
 • ம.சிங்காரவேலர் இந்தியாவின் முதல் மார்க்சிய அறிஞர்- என்.ராமகிருஷ்ணன்

வெளி இணைப்புகள்✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:40 IST