under review

கா. நமச்சிவாய முதலியார்

From Tamil Wiki
கா.நமச்சிவாய முதலியார்
நமச்சிவாய முதலியார்

கா. நமச்சிவாய முதலியார் ( பிப்ரவரி 20, 1876 - மார்ச் 13, 1936) தமிழ் புலவர், தமிழறிஞர் மற்றும் பேராசிரியர். தமிழில் பாடநூல்கள் உருவாகவும் தமிழ்வழிக் கல்வி நிலைகொள்ளவும் முயற்சி எடுத்த முன்னோடி.

பிறப்பு, கல்வி

கா. நமச்சிவாய முதலியார், வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி முதலியார் - அகிலாண்டவல்லி இணையருக்கு பிப்ரவரி 20, 1876 அன்று பிறந்தார். தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கா. நமச்சிவாய முதலியார் தொடக்கக் கல்வியை கற்றார்.

கா. நமச்சிவாய முதலியார் சென்னைக்கு குடியேறியபின் தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மாணாக்கராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

தனிவாழ்க்கை

கா.நமச்சிவாய முதலியார் தனது பதினாறாவது வயதில் சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார்.

கா. நமச்சிவாய முதலியார் 1906-ம் ஆண்டு சுந்தரம் அம்மையாரை மணந்துகொண்டார். இவர்களுக்கு தணிகைவேல், தணிகைமணி, பட்டம்மாள், மங்கையர்க்கரசி நான்கு பிள்ளைகள்.

கா. நமச்சிவாய முதலியார், திருத்தணிகை முருகன் பக்தர். மாதந்தோறும் கிருத்திகையன்று திருத்தணிகை சென்று தணிகைவேலனை வழிபடும் வழக்கம் கொண்டவர் என்று குறிப்பிடப்படுகிறது.

கா.நமச்சிவாயர் பெரும் செல்வந்தர் என்று கி. ஆ. பெ. விசுவநாதம் குறிப்பிடுகிறார். சென்னை சாந்தோம் கடற்கரையில் கடலகம் என்ற மாளிகையும் உதகையில் குறிஞ்சியகம் என்னும் மாளிகையும் அவருக்கு இருந்தன. அங்கே தமிழ்ப்புலவர்களை உபசரித்துவந்தார்.

கல்விப்பணி

தொல்காப்பியம் (இளம்பூரணம்)
ஆசிரியர்பணி

நமச்சிவாய முதலியார் 1895-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர், ராயபுரத்தில் இருந்த நார்த்விக் மகளிர் பாடசாலையிலும், சிங்கிலர் கல்லூரியிலும் தமிழாசிரியராக பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

கா. நமச்சிவாய முதலியார், 1914-ம் ஆண்டில் பெண்களுக்கென ராணி மேரிக் கல்லூரி தொடங்கப்பட்டபோது அங்கு தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். 1917-ல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க் குழுவில் தலைமைத் தேர்வாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பண்டிதர் ஈ.வி. அனந்தராம ஐயர் இறந்ததை அடுத்து அவரது இடத்திற்கு கா. நமச்சிவாய முதலியார் நியமிக்கப்பட்டு, 1920 முதல் 1934 வரை பணியாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன், நீதிபதி அழகிரிசாமி, முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் எஸ்.ராமசாமி ஆகியோர் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் .

அரசுப் பணி

கா. நமச்சிவாய முதலியாரை 1917-ம் ஆண்டில் தமிழ்க் கழகத்தின் தலைமைத் தேர்வாளராக அன்றைய ஆங்கிலேய அரசு நியமித்தது. 1918-ம் ஆண்டில் தமிழ்க்கல்வி அரசாங்க சங்கத்தில் உறுப்பினர் பதவியை ஏற்றார். 1920-ல் அச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934-ம் ஆண்டுவரை கா. நமச்சிவாய முதலியார் இப்பதவியில் தொடர்ந்தார்.

கா. நமச்சிவாய முதலியார் 'தமிழ் வித்துவான்’ தேர்வை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன், வடமொழி பயில்வோருக்கு மட்டுமே பல்கலைக்கழகத் தேர்வு இருந்து வந்தது. பள்ளிகளில் கூடுதல் தமிழாசிரியர்கள் அமர்த்தப்படவும், அவர்களுக்கு பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கிடைக்கவும் முயற்சி எடுத்தார்.

அமைப்புப்பணிகள்

  • 17.1.1935-ல் திருவள்ளுவர் திருநாள் கழகம் தொடங்கப்பட்டது. கா.நமச்சிவாயர் அதன் முதல் தலைவராக இருந்தார்.
  • 1935-ம் ஆண்டு சென்னை பண்டித சங்கத்தின் தலைவராக இருந்தார்.
  • 1934 தை முதல் நாள் பொங்கல் நாள் அன்று பொங்கலை தமிழர்திருநாளாகக் கொண்டாடவேண்டும் என அழைப்பு விடுத்து கொண்டாட ஆரம்பித்தார்.
  • திருவள்ளுவர் ஆண்டு கணக்கை முதன்மைப்படுத்தினார்.
  • தமிழாசிரியர் நலனுக்காக 'தமிழ்ப் புலவர் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

அரசியல்

கா.நமச்சிவாய முதலியார் ஜஸ்டிஸ் கட்சியுடனும் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடனும் அணுக்கம் கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ்ப் பாடநூல்கள்
தமிழ் பாடநூல்

1905 வரை மாணவர்கள் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க கா. நமச்சிவாய முதலியார் தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். முதல்வகுப்பு முதல் எல்லா வகுப்புகளுக்கும் உரிய தமிழ்ப்பாடநூல்களை எழுதி வெளியிட்டார். ஏறத்தாழ நூறு பாடநூல்களை வெளியிட்டதாக குறிப்பிடப்படுகிறது. அன்றைய எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ., ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன.

நாடக நூல்கள்

கா. நமச்சிவாய முதலியார், பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன் என்ற தலைப்புகளில் நாடக நூல்களை எழுதியுள்ளார். நாடகமஞ்சரி என்ற பெயரில் இவர் எழுதிய பத்து நாடகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

உரைகள்
நாடகமஞ்சரி

கா. நமச்சிவாய முதலியார் 'வாக்கிய இலக்கணம்' என்னும் சிறார்களுக்கான நூலையும் எழுதினார். ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். "நன்னூல் காண்டிகை' என்னும் இலக்கண நூலுக்கும் உரை எழுதினார்

"தமிழ்க்கடல்' என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி, தணிகை புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல், கல்லாடம் முதலான நூல்களைப் பதிப்பித்தார்.

மொழிபெயர்ப்பு
தன் முயற்சி

சாமுவேல் ஸமையல்ஸ் என்பவர் எழுதிய சுயமுன்னேற்ற நூலை 'தன் முயற்சி' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இதழியல்

கா. நமச்சிவாய முதலியார், "நல்லாசிரியன்' என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றை, பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். 'ஜனவிநோதினி' என்ற மாத இதழில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

விவாதங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பள்ளிப்பாட நூல்கள் அரசால் வெளியிடப்படவில்லை. பள்ளிகளில் ஆங்கிலேயர் எழுதிய நூல்களே பாடமாக இருந்தன கா. நமச்சிவாய முதலியார் எழுதிய பாட நூல்களைப் பல பள்ளிகள் விரும்பிப் பயன்படுத்த ஆரம்பித்தன.

ஏற்கனவே தமிழ்ப்பாடநூல்கள் எழுதி வருமானம் பெற்ற ஆங்கிலேயர், கா. நமச்சிவாய முதலியார் எழுதிய பாடநூல்களை ’பாடநூல் குழு’ ஏற்காதபடிச் செய்ய நெருக்கடி தந்தார். ஆனால் பாடநூல் குழு நமச்சிவாயரின் நூல்களை ஒப்புக்கொண்டது. அந்த ஆங்கிலேயர், கா. நமச்சிவாய முதலியார் பணிபுரிந்த புனித பவுல் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி தந்து நமச்சிவாயரை பள்ளியிலிருந்து வேலைநீக்கம் செய்யச் சொன்னார். அதைத் தொடர்ந்து, பள்ளிநிர்வாகம் அடுத்த கல்வியாண்டிலிருந்து கா. நமச்சிவாய முதலியாரின் பணி தேவையில்லை என்று அவருக்கு அறிவித்தது. இச்செய்தி மாணவர்களுக்கு எட்டவே மாணவர்கள் தாமாகவே வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகமும் தொடர்ந்து பணியாற்ற கா. நமச்சிவாய முதலியாருக்கு ஆணை வழங்கியது.

மறைவு

மார்ச் 13, 1936-ல் மறைந்தார்.

நினைவுகள்

  • கா. நமச்சிவாய முதலியாரின் நினைவேந்தல் கூட்டம் மார்ச் 29, 1936-ல் நடைபெற்றது. திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தலைமை தாங்கினார்.
  • ஜூன் 4,1936-ல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கழகம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.
  • மார்ச் 20, 1937-ல் சென்னைப் பல்கலைக்கழக மன்றத்தில் கா. நமச்சிவாய முதலியாரின் படம் திறந்து வைக்கப்பட்டது.
  • சென்னை மாநிலக் கல்லூரியில் இவரின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

கா.நமச்சிவாய முதலியார் தமிழ்வழிக் கல்வி தமிழகத்தில் உருவாக முன்முயற்சி எடுத்தவர். தமிழ்ப்பாடநூல்களை எழுதியும், கல்லூரிப்படிப்புக்குரிய துணைநூல்களை எழுதியும் தமிழ்க்கல்வியை பரப்பியவர்.

நூல்கள்

எழுதிய நூல்கள்
  • கீசகன் - நாடகம்
  • பிருதிவிராஜன் - நாடகம்
  • தேசிங்குராஜன்
  • ஜனகன்
  • கண்ணப்பன்
உரையெழுதிப் பதிப்பித்த நூல்கள்
  • ஆத்திச்சூடி
  • வாக்குண்டாம்
  • நல்வழி
  • தொல்காப்பியம் (இளம்பூரணம்)
  • தணிகைப் புராணம்
  • தஞ்சைவாணன் கோவை
  • இறையனார் களவியல்
இறையனார் களவியல்

உசாத்துணை


✅Finalised Page