கி.வா. ஜகந்நாதன்
- ஜெகந்நாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜெகந்நாதன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Ki. Va. Jagannathan.
கி.வா. ஜகந்நாதன் ( கி.வா.ஜ.) (கி.வா.ஜகன்னாதன்) (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) தமிழறிஞர், இதழாளர், நாட்டாரியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர். உ.வே.சாமிநாதய்யரின் மாணவர். கலைமகள் இதழின் ஆசிரியர். திருக்குறள் ஆய்வுப்பதிப்பின் ஆசிரியர், தமிழ் நாட்டார் பாடல்களை திரட்டியவர், இலக்கியப்பேச்சாளர்.
பிறப்பு, கல்வி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் ஏப்ரல் 11, 1906 அன்று வாசுதேவ ஐயர்-பார்வதியம்மாள் இணையருக்கு பிறந்தார். சிறிது காலத்தில் குடும்பம் நாமக்கலுக்கு அடுத்த மோகனூருக்கு குடியேறியது. அங்கிருந்த திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். வாங்கல், குளித்தலை பள்ளிகளில் கல்வியை தொடர்ந்தார். உயர்நிலைக்கல்வியை முடிப்பதற்குள் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டமையால் படிப்பு தடைப்பட்டது. அதன் பின் தானாகவே நூல்களை படித்தார். மோகனூரில் இருந்த திலகர் நூலகத்தில் நாள் தோறும் சென்று படித்து வந்தார்.
தன் 22-ஆவது வயதில் காந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் கி.வா. ஜகந்நாதன் பேசியதைக்கேட்டு கிச்சு உடையார் என அழைக்கப்பட்ட சேந்தமங்கலம் சுயம்பிரகாச சுவாமிகள் இவரை அந்த ஊரிலேயே தங்கி பணியாற்றும்படி கூறினார். பஞ்சாயத்து அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றியபடியே, சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். ஆசிரமப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார். சுவாமிகள் வழியாக அறிமுகமான ட்ரோவர் என்னும் ஆங்கிலேயருக்கும் தமிழ் கற்பித்தார்.
அக்காலத்தில் சேந்தமங்கலத்திற்கு வந்திருந்த ஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் சுவாமிகளிடம் தமிழ் பயில விரும்பி விண்ணப்பித்தார். அவர் கி.வா. ஜகந்நாதனிடம் உ.வே.சாமிநாதய்யரிடம் சென்று தமிழ் பயிலும்படி ஆலோசனை சொன்னார். உ.வே. சாமிநாதய்யர் அப்போது சிதம்பரத்தில் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்தார். சிதம்பரம் சென்று தன் விருப்பத்தை உ.வே. சாமிநாதய்யரிடம் கி.வா. ஜகந்நாதன் தெரிவித்தார். உ.வே. சாமிநாதய்யர் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக செல்லவிருப்பதாகவும் தன்னுடன் வந்து உடனிருந்து தமிழ் பயிலும்படியும் கி.வா. ஜகந்நாதனிடம் சொன்னார். ஆசிரியருடன் கி.வா. ஜகந்நாதன் சென்னைக்குச் சென்று அவர் இல்லத்திலேயே தங்கினார். தமிழிலக்கியங்களை உ.வே. சாமிநாதய்யரிடம் பாடம் கேட்டார். அவருடைய பதிப்பு, ஆய்வுப்பணிகளுக்கு உதவினார்.
கி.வா.ஜகந்நாதன் மாநிலக் கல்லூரியில் புகழ்பெற்ற இலக்கிய அறிஞர் ரா.ஸ்ரீ.தேசிகனின் மாணவர். உ.வே. சாமிநாதய்யரின் வழிகாட்டலில் கி.வா. ஜகந்நாதன் தமிழ் புலவர் தேர்வெழுதி மாநிலத்திலேயே முதலிடம் பெற்று வென்றார். திருப்பனந்தாள் ஆதீனத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் வென்றார்.
தனிவாழ்க்கை
கி.வா.ஜகந்நாதன் 1932-ல் அலமேலுவை மணந்தார். சாமிநாதன், குமார நாதன், முருகன் என மூன்று மகன்கள்.
1932-ல் கலைமகள் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அப்பணியில் சேர்ந்து இறுதிக்காலம் வரை கலைமகள் ஆசிரியராக நீடித்தார்.
இலக்கியவாழ்க்கை
கி.வா. ஜகந்நாதன் தன் 14-ஆவது வயது முதல் செய்யுள்கள் எழுதத் தொடங்கினார். சிதம்பரம் நடராஜர் மேல் போற்றிப்பத்து என்னும் செய்யுள்கோவையை எழுதினார். அவருடைய முதல் படைப்பு அது. ஜோதி என்னும் புனைபெயரில் அவர் எழுதிய செய்யுள்கள் அக்காலத்தைய இலக்கிய இதழ்களான தமிழ்நாடு போன்றவற்றில் வெளியாகின. சுதந்திரப்போரால் கவரப்பட்டார். காந்திய ஈடுபாடும் கொண்டார். இறுதிநாள் வரை கதர் அணிந்துவந்தார்.
கவிதை
கி.வா.ஜகந்நாதன் நாமக்கல் கவிஞர் மரபு என அடையாளப்படுத்தப்படும் பாரதிக்கு பிந்தைய மரபுக்கவிஞர் வரிசையில் ஒருவர். மரபான சந்தமும் யாப்பும் கொண்ட கவிதைகளை எழுதினார். தொடக்கத்தில் அவர் தேசியப்போராட்ட ஆதரவுக்காக சுதந்திரதேவி திருப்பள்ளியெழுச்சி, சுதந்திரதேவி திருக்கோயில் போன்ற கவிதைகளை எழுதினார். பின்னர் கலைமகளில் ஏராளமான கவிதைகளை எழுதியிருக்கிறார்.
உ.வே. சாமிநாதய்யர் ஆய்வுகளில் உதவி
உ.வே. சாமிநாதய்யரின் ஆய்வுகளுக்கு உதவினார். உ.வே. சாமிநாதய்யர் அவருடைய தக்கயாகப் பரணி பதிப்பின் முன்னுரையில் 'இந்நூலை பரிசோதித்துப் பதிப்பித்து வரும் நாட்களில் உடனிருந்து எழுதுதல் ஆராய்தல் ஒப்புநோக்குதல் முதலிய உதவிகளை அன்போடு செய்தவர் மோகனூர் தமிழ்ப்பண்டிதர் கி.வா. ஜகந்நாதையரும் ஆவார்’ என்று குறிப்பிட்டிருந்தார். கலைமகளில் இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதினார்.
இறுதிக்காலத்தில் உ.வே. சாமிநாதய்யர் எழுதிய தன்வரலாற்று நூலான என் சரித்திரம், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், பதிப்பு அனுபவங்கள் ஆகியவற்றை எழுதவும் தொகுக்கவும் கி.வா. ஜகந்நாதன் உதவினார். என் சரித்திரம் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அது முற்றுப் பெறுவதற்குள் உ.வே. சாமிநாதய்யர் மறைந்தார். உ.வே. சாமிநாதய்யர் வைத்திருந்த குறிப்புகளின்படி எஞ்சியவற்றை கி.வா. ஜகந்நாதன் எழுதி முடித்து அந்நூலை பதிப்பித்தார். உ.வே. சாமிநாதய்யர் பற்றி என் ஆசிரியப்பிரான் என்னும் நூலை கி.வா. ஜகந்நாதன் எழுதினார்.
தமிழாய்வு
கி.வா. ஜகந்நாதன் திருக்குறள் உரைகள் அனைத்தையும் பாடபேதம் பார்த்து, பிழைநோக்கி திருக்குறள் விளக்கு என்னும் ஒரே நூலாக பதிப்பித்தார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பெரியபுராணம் போன்ற நூல்களுக்கு விளக்கவுரைகளும் அறிமுகங்களும் எழுதினார்.
நாட்டாரியல்
கி.வா. ஜகந்நாதன் தமிழில் நாட்டாரியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். இந்தியாவெங்கும் அலைந்து நாட்டாரிலக்கியத்தை சேகரித்த தேவேந்திர சத்யார்த்தி என்னும் ஆய்வாளரை சந்தித்தபின் அப்பணியை தானும் செய்ய கி.வா. ஜகந்நாதன் ஆர்வம் கொண்டார். தானும் ஊர் ஊராகச் சென்று நாட்டார் பாடல்கள், பழமொழிகள் ஆகியவற்றை சேகரித்து தொகுத்தார். தமிழில் நாட்டாரிலக்கியம் முறையாக தொகுக்கப்பட்டு அச்சில் வருவது முதல்முறையாக அவரினூடாகவே நிகழ்ந்தது. தன் தெய்வப்பாடல்கள் முன்னுரையில் ’பெரும்பாலும் பெண்களே இப்பாடல்களை பாடுகிறார்கள். நாம் பாடச்சொன்னால் பாடமாட்டார்கள். நாமே பாட ஆரம்பித்தால் நாணத்தைவிட்டு கூடவே பாடுவார்கள். இந்த தந்திரத்தை பயன்படுத்தித்தான் அவர்களிடமிருந்து இப்பாடல்களை வருவித்தேன்’ என்று கி.வா. ஜகந்நாதன் குறிப்பிடுகிறார்.
கி.வா. ஜகந்நாதன் நாட்டார் இலக்கியங்களை நாடோடி இலக்கியம் என்று குறிப்பிடுகிறார். அவை நிலையான ஊரோ இடமோ அற்றவை, செவிவழியாக பரவுபவை என்னும் பொருளில். செவ்விலக்கியங்கள் மேல் கவனம் குவிந்திருந்த தமிழ் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் மரபிலக்கிய அறிஞரான அவர் நாட்டாரியலில் ஈடுபட்டது ஓர் அரிய நிகழ்வு. செவ்விலக்கியத்திற்கு உ.வே. சாமிநாதய்யர் செய்ததை தமிழக நாட்டாரியலுக்கு கி.வா. ஜகந்நாதன் செய்தார். அவர் அவற்றை சேகரித்த காலமும் குறிப்பிடத்தக்கது. மரபான கல்வியும் கிராமவாழ்க்கையும் அழிந்து நவீனக்கல்வியும் நகரம் நோக்கிய இடப்பெயர்வும் தொடங்கிய சூழல் அது. அக்காலகட்டத்தில் அவர் முயற்சி எடுத்திருக்காவிடில் நாட்டாரியலில் ஒரு பகுதி அழிந்து விட்டிருக்க வாய்ப்புண்டு. நாடோடி இலக்கியம், தமிழக நாட்டுப்புறப் பாடல்கள், திருமணப்பாடல்கள், தெய்வப்பாடல்கள், தமிழகத்துப் பழமொழிகள் ஆகியவை அவருடைய முக்கியமான நூல்கள். இருபத்திரண்டாயிரம் தமிழ்ப் பழமொழிகளை கி.வா. ஜகந்நாதன் சேகரித்திருக்கிறார்.
இதழியல்
கி.வா. ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியர் பொறுப்பில் 1932 முதல் அவர் மறைவது வரை 53 ஆண்டுகள் இருந்தார். கலைமகளில் மணிக்கொடி எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினர். ஈழப்படைப்பாளி இலங்கையர்கோன் போன்றவர்களை கி.வா.ஜகந்நாதன் அறிமுகம் செய்தார். அகிலன், பி.வி.ஆர், ஆர்வி போன்ற அக்காலத்தைய எழுத்தாளர்கள் கலைமகளில்தான் அறிமுகமானார்கள். பின்னர் குடும்ப இதழாக கலைமகள் மாறியபோது ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். கலைமகள் பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசையையே உருவாக்கியது. இலக்கியப்படைப்பாளியாகிய அம்பை கூட கலைமகளில் அறிமுகமானவரே. தமிழிலக்கியத்திற்கு கலைமகளின் கொடை முதன்மையானது.கலைமகளில் விடையவன் என்னும் பேரில் அவர் எழுதிய பழந்தமிழிலக்கிய வினாவிடை நெடுங்காலம் தொடர்ந்து வந்தது.
விருதுகள்
- 1967-ல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சனப் படைப்பிற்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- வாகீச கலாநிதி, செந்தமிழ்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் பெற்றார்.
- 1982-ல் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு பெற்றார்.
நாட்டுடைமை
கி.வா.ஜவின் படைப்புகள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன[1].
மறைவு
கி.வா. ஜகந்நாதன் நவம்பர் 4, 1988 அன்று சென்னையில் காலமானார்.
நினைவகம், வாழ்க்கை வரலாறு
- கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா.ஜ. பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
- நா. நிர்மலா மோகன் எழுதிய கி.வா. ஜகந்நாதனின் வாழ்க்கை வரலாறு இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சாகித்ய அகாதெமியால் வெளியிடப்பட்டுள்ளது.
- நாம் அறிந்த கி.வா.ஜ என்னும் தொகுதி அனந்தன் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது (இணையநூலகம்)
நூல்கள்
கி.வா. ஜகந்நாதன் 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்
நாட்டாரியல்
- ஏற்றப் பாட்டுகள்
- நாடோடி இலக்கியம்
- தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
- தெய்வப்பாடல்கள்
- திருமணப்பாடல்கள்
- மலையருவி
இலக்கியம்
- அதிகமான் நெடுமான் அஞ்சி
- அப்பர் தேவார அமுது
- அபிராமி அந்தாதி
- அபிராமி அந்தாதி விளக்கம்
- அமுத இலக்கியக் கதைகள்
- அழியா அழகு
- அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
- இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
- இன்பமலை - சங்கநூற் காட்சிகள்
- எல்லாம் தமிழ்
- எழில் உதயம்
- ஏழு பெருவள்ளல்கள்
- ஒளிவளர் விளக்கு
- கன்னித் தமிழ்
- காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
- காவியமும் ஓவியமும்
- கோவூர் கிழார்
- சகல கலாவல்லி
- சங்கர ராசேந்திர சோழன் உலா
- சரணம் சரணம்
- சித்தி வேழம்
- தமிழ் நூல் அறிமுகம்
- தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
- தமிழ்க் காப்பியங்கள்
- தாமரைப் பொய்கை - சங்கநூற் காட்சிகள்
- திரட்டுப் பால்
- திரு அம்மானை
- திருக்குறள் விளக்கு
- திருக்கோலம்
- திருமுருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை- பொழிப்புரை
- திருவெம்பாவை
- தெய்வப் பாடல்கள்
- தேவாரம்-ஏழாம் திருமுறை
- புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
- பெரிய புராண விளக்கம் பகுதி-1
- பெரிய புராண விளக்கம் பகுதி-2
- பெரிய புராண விளக்கம் பகுதி-3
- பெரிய புராண விளக்கம் பகுதி-4
- பெரிய புராண விளக்கம் பகுதி-5
- பெரிய புராண விளக்கம் பகுதி-6
- பெரிய புராண விளக்கம் பகுதி-7
- பெரிய புராண விளக்கம் பகுதி-8
- பெரிய புராண விளக்கம் பகுதி-9
- பெரிய புராண விளக்கம் பகுதி-10
- பெரும் பெயர் முருகன்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- பாரி வேள்
- வாழும் தமிழ்
- விடையவன் விடைகள்
- மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
- மாலை பூண்ட மலர்
- முந்நீர் விழா
- முருகன் அந்தாதி
- முல்லை மணம்
- தமிழ்ப்பா மஞ்சரி
- குமண வள்ளல்
வாழ்க்கை வரலாறு
- என் ஆசிரியப்பிரான்
- தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாத ஐயர்)
பொது
- அநுபூதி விளக்கம்
- அறுந்த தந்தி
- அதிசயப் பெண்
- அன்பின் உருவம்
- அன்பு மாலை
- ஆத்ம ஜோதி
- ஆரம்ப அரசியல் நூல்
- ஆலைக்கரும்பு
- இருவிலங்கு
- இலங்கைக் காட்சிகள்
- உதயம்
- உள்ளம் குளிர்ந்தது
- ஒன்றே ஒன்று
- கஞ்சியிலும் இன்பம்
- கண்டறியாதன கண்டேன்
- கதிர்காம யாத்திரை
- கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
- கரிகால் வளவன்
- கலைச்செல்வி
- கலைஞன் தியாகம்
- கவி பாடலாம்
- கவிஞர் கதை
- கற்பக மலர்
- பிடியும் களிறும் - சங்கநூற் காட்சிகள்
- நாயன்மார் கதை
- கிழவியின் தந்திரம்
- குமரியின் மூக்குத்தி
- குழந்தை உலகம்
- குறிஞ்சித் தேன்
- கோயில் மணி
- சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ.
- சிலம்பு பிறந்த கதை
- சிற்றம்பலம் சுதந்திரமா!
- ஞான மாலை
- தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
- தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
- தமிழின் வெற்றி
- நாம் அறிந்த கி.வா.ஜ.
- நாயன்மார் கதை - முதல் பகுதி
- நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
- தனி வீடு
- தேன்பாகு
- நல்ல சேனாபதி
- நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
- நாலு பழங்கள்
- பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
- பல கதம்பம்
- பல்வகைப் பாடல்கள்
- பவள மல்லிகை
- பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
- பின்னு செஞ்சடை
- புகழ் மாலை
- புது டயரி
- புது மெருகு
- பேசாத நாள்
- பேசாத பேச்சு
- மூன்று தலைமுறை
- மேகமண்டலம்
- வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
- வாருங்கள் பார்க்கலாம்
- வாழ்க்கைச் சுழல்
- விளையும் பயிர்
- வீரர் உலகம்
உரைகள்
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
- கி.வா.ஜ. பேசுகிறார்
- கி.வா.ஜ.-வின் சிலேடைகள்
உசாத்துணை
- Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - கி.வா.ஜகந்நாதன்
- கி.வா.ஜகந்நாதன் 10 | கி.வா.ஜகன்னாதன் 10 - hindutamil.in
- கி.வா.ஜகந்நாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகம்
- கி.வா.ஜகந்நாதன் பேராசிரியர் பசுபதி பக்கங்கள்
- நாம் அறிந்த கி.வா.ஜ (இணையநூலகம்)
- கி.வா.ஜகந்நாதந் பெரியபுராண விளக்கம் இணையநூலகம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:10 IST