திருலோக சீதாராம்
- சீதாராமன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீதாராமன் (பெயர் பட்டியல்)
திருலோக சீதாராம் (திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன்; ஏப்ரல் 1,1917- ஆகஸ்ட் 23, 1973) தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் . 'சிவாஜி’ என்ற இலக்கியச் சிற்றிதழை நீண்ட காலம் நடத்தியவர். பாரதி பாடல்களின் புகழைப் பரப்பியவர். பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு மகனைப் போல் இருந்து கடமையாற்றியவர்.
பிறப்பு, கல்வி
திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்னும் திருலோக சீதாராம், பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறையில், திருவையாறு லோகநாத ஐயர்-மீனாட்சி சுந்தரம்மாள் தம்பதியினருக்கு, ஏப்ரல் 1, 1917-ல் பிறந்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட குடும்பம். மூன்று வயதிலேயே தந்தையை இழந்தார் திருலோக சீதாராம். மாமா வீட்டில் தங்கி எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின் வேதம் கற்றுச் சிறிதுகாலம் புரோகிதர் தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. தொண்டைமான்துறையில் வாழ்ந்த அந்தகக்கவி ராமசாமி படையாச்சியிடம் முறையாகத் தமிழ் கற்றார்.இராமசாமிப் படையாச்சி சைவ சித்தாந்த, சைவத் திருமுறைகள், ராமாயணம் பாரதக் கதைகள் ஆகியவற்றை கதாகாலட்சேபம் செய்தவர், பார்வைக் குறைபாடு கொண்டவர். திருலோக சீதாராமன் இராமசாமி படையாச்சியிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
தனி வாழ்க்கை
திருலோக சீதாராம், தனது 19-ம் வயதில் 10 வயதான ராஜாமணியை மணந்தார். இவர்களுக்கு மதுரம், வசந்தா, இந்திரா என்ற மூன்று பெண்களும், பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற நான்கு மகன்களும் பிறந்தனர்.ராஜாமணி அம்மாள் 2007-ல் தன்னுடைய 81-வது வயதில் மறைந்தார்.
பாரதியின் பாடல்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட திருலோக சீதாராம், தம்மை பாரதியின் புத்திரனாகவே வரித்துக் கொண்டு வருடா வருடம் அவருக்கான நீத்தார் சடங்குகளைச் செய்தார். தாம் செல்லும் இடங்களிலெல்லாம் பாரதியின் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடி பாரதியின் புகழைப் பரப்பினார்.
அமைப்புப்பணிகள்
திருலோக சீதாராம் திருச்சியில் இவர் தேவசபை அசுரசபை என்ற கூடுகையை நடத்தினார். தேவ சபையில் வேதங்களை பற்றியும் உபநிடதங்கள் பற்றியும் திருலோக சீதாராம் விளக்கவுரை நிகழ்த்துவார். வரவேற்புரை நன்றியுரை இல்லை. இவர் பேசி முடித்தும் எல்லோரும் கலைந்து விட வேண்டும். அசுரசபை எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது. இவர் கேட்க மட்டுமே செய்வார். பழம்பெரும் நுல்களில் உள்ள உண்மைகளை, சிறப்புக்களை, உயர்வுகளை உலகுக்கு உரைப்பது அந்த அமைப்பின் நோக்கங்களில் ஒன்று. அதற்காக தமிழ்ச்சான்றோர்கள் பலரையும் அழைத்து வந்து சிறப்புரையாற்றச் செய்தார்.
இதழியல் வாழ்க்கை
திருலோக சீதாராம் தனது 18 வயதில் 'இந்திய வாலிபன்’ 'பால பாரதம்' என்ற இரு இதழ்களை தொடங்கி நடத்தினார் . அதன் பின் ஸ்ரீராம சடகோபன் என்பவர் நடத்தி வந்த 'தியாகி’ இதழின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். அவ்விதழில் 'மந்தஹாசன்’ என்ற புனைபெயரில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். அதனைத் தொடர்ந்து 1938-ல், விழுப்புரத்தில் 'பால பாரதம் என்னும் இதழைத் தொடங்கிச் சில மாதங்கள் நடத்தினார். தொடர்ந்து நகர தூதன், பேனா நண்பன், மறுமலர்ச்சி, நவசக்தி போன்ற இதழ்களில் பணியாற்றினார். பின் ஆற்காடு வட்டாரச் செய்திகளை வெளியிட்ட தமிழ் வார இதழான 'ஆற்காடு தூதன்’ என்ற இதழுக்குச் சில காலம் ஆசிரியராக இருந்தார்.
சிவாஜி இதழ்
திருலோக சீதாராமன் நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ’சிவாஜி’ இதழ் அவருக்கு தமிழிலக்கியத்தில் இடத்தை உருவாக்கியது. நவீனத்தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள் அதில் தொடர்ச்சியாக எழுதினர். 1935-ல் சிவஞானம்பிள்ளை இந்த சிறு பத்திரிக்கையைத் தொடங்கியிருந்தார். அப்போது திருலோக சீதாராமன் துறையூரிலிருந்து வந்த ’கிராம ஊழியன்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். 25 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த திருலோக சீதாராமனுக்கு 75 ரூபாய் தந்து ’சிவாஜி’க்கு ஆசிரியர் ஆக்கி திருச்சிக்கு வரவைத்தார் சிவஞானம்பிள்ளை. 1939-ல் சிவஞானம் பிள்ளை சிவாஜி உரிமையை திருலோக சீதாராமிடமே கொடுத்தார். அதுநாள் தொடங்கி 1968 வரை வார இதழாகவும், 1969 முதல் 1973 வரை மாத இதழாகவும் சிவாஜி வெளிவந்தது. அதன் பிறகும் அவர் நண்பர் தி.ந. ராமச்சந்திரன் ஆசிரியராக இருந்து 1980 வரை சிவாஜி வந்தது. ஜூலை 29, 1961 அன்று திருச்சி டவுன் ஹாலில் நடைபெற்ற ‘சிவாஜி’ வாரப் பத்திரிகை இதழின் வெள்ளி விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார் காமராஜர்.
கிராம ஊழியன்
கிராம ஊழியன் திருலோக சீதாராம் நடத்திய கிராம ஊழியன் இதழ் அவர் பொறுப்பேற்றபின்னர் இலக்கிய இதழாக வெளிவந்தது. மணிக்கொடி முன்னோடிகள் எழுதிய அவ்விதழ் இலக்கிய முக்கியத்துவம் உடையது
( பார்க்க கிராம ஊழியன் )
இலக்கியப் பணிகள்
திருலோக சீதாராம் மரபுக்கவிதைகளை எழுதியவர் என்னும் வகையிலும், இலக்கியக் கட்டுரைகள், பண்பாட்டுக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியவர் என்னும் வகையிலும், மொழிபெயர்ப்பாளர் என்னும் வகையிலும் பங்களிப்பாற்றியவர். கவிதைகளைப் படிப்பதை விட திருலோக சீதாராம் சொல்லிக் கேட்பதற்கு ரசிகர்கள் இருந்தனர்.
திருச்சி வானொலிக்கும் திருலோக சீதாராமனுக்கும் இருந்த பிணைப்பு முக்கியமானது. திருலோக சீதாராமின் ’கந்தருவகானம்’ இங்கு இசைக்கோர்வையாக்கப்பட்டது. இதன் மேல் ஈர்க்கப்பட்டு முற்போக்கு எழுத்தாளர் நாகலிங்கம் தன் பெயரை ’கந்தர்வன்’ என மாற்றிககொண்டார்.
1951-ல் பாரதிதாசனுக்கு மணிவிழா திருச்சியில் திட்டமிடப்பட்டதுபோது அதில் முக்கியப்பங்கு வகித்தார். தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், சிட்டி, ஜெயகாந்தன், டி.என். ராமச்சந்திரன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோர் இவரின் நண்பர்கள். வல்லிக்கண்ணன், ந. பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா, கி.வா.ஜ, அகிலன், ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, சுகி.சுப்பிரமணியன், வாலி ஆகியோர் இவரின் அச்சகத்திலும் வீட்டிலும் என ஒன்று கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கட்டுரைகள்
திருலோக சீதாராமின் 'இலக்கியப் படகு’ என்னும் நூல் 'சிவாஜி’ இதழில் இவர் எழுதிய முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு. விகடனில் திருலோக சீதாராம் எழுதிய பாரதி பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு "புதுயுகக் கவிஞர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. 1952-ல் ’உழைப்பின் உயர்வு’, ’அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு’ ஆகிய கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகின. பிறரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பான ’புதுத்தமிழ் கவிமலர்கள்’ என்ற நூலை வெளியிட்டார்.
கவிதைகள்
திருலோக சீதாராம் மரபுக்கவிதைகளை எழுதியவர். 'குருவிக்கூடு', 'உடையவர்' போன்ற நீள் கவிதைகளை திருலோக சீதாராம் எழுதியுள்ளார். 1967-ல் வெளியான 'கந்தருவ கானம்' கவிதைத் தொகுப்பு திருலோக சீதாராமுக்கு மிகவும் புகழை ஏற்படுத்தித் தந்த படைப்பு. அதன் பின் உதயம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.
மொழியாக்கம்
திருலோக சீதாராம் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலை 1957-ல் மொழிபெயர்ப்பு செய்தார். திருலோக சீதாராமின் காவியச்சாயல் கொண்ட நடையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு தமிழில் 1957-ல் வெளிவந்தது. பிறகு இதன் மலிவுப்பதிப்பை ராணிமுத்து நிறுவனம் வெளியிட்டது. தமிழினி பதிப்பகம் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளது. ’மனுதர்ம சாஸ்திரம்’ நூலையும் தமிழில் தந்துள்ளார். ருத்ர துளசிதாஸுடன் இணைந்து தெலுங்கு ஓரங்க நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பாரதி
திருலோக சீதாராமன் பாரதியின் வேதாந்த நோக்கை முக்கியமாகக் கருதினார். வ.ரா., பாரதிதாசன், ஜீவா ஆகியோரின் வரிசையில், பாரதியின் இலக்கிய இடத்தை கவித்துவ உச்சத்தை பாடி நிறுவினார். பாஞ்சாலி சபதத்தையும், குடும்ப விளக்கையும் (பாரதிதாசன்) கதாகாலட்சேபம் போல் செய்வார். பாஞ்சாலி சபதத்தின் எல்லாப் பாத்திரங்களாகவும் அவரே மாறி, குரலால் நடிப்பார். அதற்குப் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.
பதிப்புப்பணி
'கவிஞன் அச்சகம்’ என்ற ஓர் அச்சகத்தை நிறுவி அதன் மூலம் நல்ல பல நூல்களை வெளியிட்டார் திருலோக சீதாராம். ஆர்வமும் திறமையும் உள்ள இளையோரை ஊக்குவித்தார். கவிஞர் வாலியை கவிஞர் ச.து. சுப்ரமண்ய யோகியாரிடமும், கி.வா. ஜகந்நாதன் அவர்களிடமும் அறிமுகப்படுத்தியவர் திருலோகசீதாராம் தான். கிராமத்து இளைஞராக இருந்த சுரதாவின் கவித் திறமையை அடையாளம் கண்டு கொண்டு அவருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், வானொலியில் கவிதை படிக்கவும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.
சமூக, அரசியல் பணிகள்
தேசிய இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார் திருலோக சீதாராம். காமராஜர், அண்ணா, பாரதிதாசன், ஜி. டி. நாயுடு, அ.வெ. ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரன், எஸ்.எஸ். வாசன், கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட பலருக்கு நண்பராக இருந்தார். பெரியாரை அவர் நடத்திய எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேச அழைத்தார். 1952-ல் நடந்த தேர்தலில் ஶ்ரீரங்கத்திலும் துறையூரிலும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஜி.டி.நாயுடு, என்.எஸ்.கிருஷ்ணன், அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் போன்றவர்களின் உதவியுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாரதி பாடல்களை ஓங்கிப் பாடி உணர்ச்சியோடு பேசியபடி பிரசாரம் செய்தார். அறிவியலாளர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியிருக்கிறார்.
பாரதி குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு பூண்டிருந்தார் திருலோக சீதாராம். 1955-ல் தன் இறுதிக் காலத்தில் கடையத்தில் வசித்து வந்த செல்லம்மா பாரதி கஷ்டப்படுகிறார் என்பதை அறிந்து திருச்சிக்கு வரவழைத்து தாமே பராமரித்தார். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி திருலோக சீதாராமின் மடியிலேயே தலை வைத்து உயிர் நீத்தார். பாரதியின் பாடல்கள் அரசுடைமை ஆனதில் திருலோக சீதாராமிற்கும் மிக முக்கியப் பங்குண்டு.
பாரதிதாசனுக்குப் பொற்கிழி அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டவர் திருலோக சீதாராம். பல சமூக நற்பணிகளைச் செய்தவர்.
பாராட்டுக்கள்
பிறருக்கு உதவி செய்வதையே நோக்கமாகக் கொண்டு எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த திருலோக சீதாராமை "திருலோக சஞ்சாரி" என்று பாராட்டினார் கவியோகி சுத்தானந்த பாரதியார்.
திருலோக சீதாராம் எழுதிய கந்தர்வ கானம் கவிதைகளில் மயங்கியே ’நாகலிங்கம்’ என்ற தன் பெயரை ’கந்தர்வன்’ ஆகச்சூடினார் முற்போக்கு எழுத்தின் முன்னோடியான எழுத்தாளர் கந்தர்வன்." என்கிறார், விகடன் கட்டுரையில் கவிஞர் நந்தலாலா.
மறைவு
திருலோக சீதாராம், ஆகஸ்ட் 23, 1973 அன்று காலமானார்.
ஆவணம்
- எழுத்தாளர், கவிஞர் ரவிசுப்பிரமணியன், திருலோக சீதாராம் பற்றி, "திருலோகம் என்றொரு கவி ஆளுமை" என்னும் தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை புதுதில்லி தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. ’ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை’ இதனை தயாரித்துள்ளது. பாரதிதாசனின் பாடல், ஓவியர் மருது வரைந்த ஓவியங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. யூ ட்யூப் தளத்தில் அது காணக்கிடைக்கிறது.
- திருலோக சீதாராமின் வாழ்க்கை மற்றும் இலக்கிய, இதழியல் செயல்பாடுகள் பற்றி, 'சாகித்ய அகாதமி’யின் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல் வரிசைக்காக, இராஜாமணி, 'திருலோக சீதாராம்’ என்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
இலக்கிய இடம்
சிறந்த கவிஞராக, இதழாளராக, கவிஞர்களை, எழுத்தாளர்களை ஊக்குவிப்பவராகச் செயல்பட்டவர், திருலோக சீதாராம். "திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள்" என்று ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார். "திருலோக சீதாராமை பாரதியின் ஆவேசம் கொண்ட ஜீவன் முக்தர் என்று சொன்னால் அது மிகையாகாது" என்கிறார், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.
"தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வீட்டிலே தெலுங்கு பேசுகிற பலர் பெரும் பங்காற்றியுள்ளனர். ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் என்ற இரண்டு பெயர்கள் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டியவை. இந்த வரிசையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் திருலோக சீதாராம்" என்கிறார், க.நா. சுப்ரமண்யம்
நூல்கள்
- கந்தருவ கானம் (1967)
- உதயம் (கவிதைத் தொகுதி)
- புதுயுகக் கவிஞர் (பாரதி பற்றி)
- புதுத்தமிழ் கவிமலர்கள் (மற்றவர் கவிதைகள்)
- இலக்கியப்படகு (கட்டுரைகள்)
- உழைப்பின் உயர்வு (1952 ஜி.டி.நாயுடு பற்றிய நூல்)
- அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு (ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு)
மொழிபெயர்ப்புகள்
- சித்தார்த்தன் (1957)
- தெலுங்கு ஓரங்க நாடகங்கள்
- மனுதர்ம சாஸ்திரம்.
திருலோக சீதாராம் பற்றிய பிறரது நூல்கள்
- THE POETICAL WORKS OF TIRULOKA SITARAM WITH TRANSLATION AND NOTES - சேக்கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன்
- திருலோக சீதாராம், ராஜாமாணி, சாகித்ய அகாதமி வெளியீடு
உசாத்துணை
- தென்றல் இதழ் கட்டுரை
- திருலோக சீதாராம் ஆவணப்படம்: ரவி சுப்பிரமணியன்
- கவிஞர் திருலோக சீதாராம்: விகடன் கட்டுரை
- திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை-பாவண்ணன்: திண்ணை இணைய இதழ்
- திருலோக சீதாராம் ஆவணப்படம் –அஸ்வத்: ஜெயமோகன் தளம்
- திருலோக சீதாராம்: எஸ். ராமகிருஷ்ணன்
- திருலோக சீதாராம் எனும் பன்முக ஆளுமை: இந்து தமிழ் திசை
- திருலோக சீதாராம் என்றொரு கவிஆளுமை: தினமணி இதழ் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jul-2023, 19:34:00 IST