பாரதிதாசன்
பாரதிதாசன் (கனகசுப்புரத்தினம், பாவேந்தர் பாரதிதாசன் ) (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா. பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். எழுச்சி மிக்க முற்போக்குக் கருத்து கொண்ட பாடல்களை எழுதியவர். 'பாவேந்தர்' என்றும் 'புரட்சிக் கவிஞர்' என்றும் அறியப்பட்டவர். பல இதழ்களை நடத்தினார். அவரது கவிதை மரபின் வழிவந்தவர்கள் என அறிவித்துக் கொண்ட கவிஞர்களின் வரிசை 'பாரதிதாசன் பரம்பரை'.
பிறப்பு,கல்வி
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். புதுவையில், ஏப்ரல் 29, 1891 அன்று பெரும் வணிகரான கனகசபை முதலியார் - லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையின் பெயரின் முதல் பாதியைத் தன் பெயரிடன் இணைத்துக்கொண்டு ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
கனகசுப்புரத்தினம் முதலில் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். தமிழ் இலக்கியம், இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர்ந்தார். சிறு வயதிலேயே பாடல்கள் எழுதினார். பாரதியாரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளிலேயே கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்று இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறு வயதிலிருந்தே பாரதியின் மீதும் அவர் படைப்புகள் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். வேணு (வல்லூறு) நாயக்கர் வீட்டுத் திருமண விழாவில் இவர் பாடிய பாரதியாரின் பாடல் அங்கு வந்திருந்த பாரதியாருக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தது. பாரதியாரைச் சந்தித்து அவருடன் நட்பு ஏற்பட்டபின் தன் பெயரை 'பாரதிதாசன் ' என மாற்றிக் கொண்டார்.
தனி வாழ்க்கை
பாரதிதாசன் 1919-ல் காரைக்கால் அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார். 1920-ல் பழநி அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். மகன் மன்னர்மன்னன். மகள்கள் சரஸ்வதி, வசந்தா, ரமணி.
அரசியல்
பாரதிதாசன் சுதந்திரப் போராட்டத்திலும், திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கதர் அணிந்தார், அதனைப் பற்றிப் பிரச்சாரம் செய்தார். கடனுக்குக் கதராடைகள் விற்றார். ‘கதர் ராட்டினப்பாட்டு‘ எழுதி, சொந்த செலவில் பதிப்பித்தார்.
ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்தபோது அவரைக் காவல் துறை அறியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். 1928-ம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்தார். கழகத்தின் கொள்கைகளைப் பரப்புவதில் முனைந்தார். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். நாட்டு விடுதலைக்குப் பின் 1954-ல் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காசுக்கடை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். 1960-ன் சட்டமன்றத் தேர்தலில் மண்ணடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டார்;வெற்றி பெறவில்லை.
இலக்கிய வாழ்க்கை
கவிதை
பாரதிதாசன் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபோது கவிதைகள் எழுதினார். படைப்புகளை இதழ்களில் வெளியிட அரசு அலுவலக விதிகள் தடையாக இருந்ததால் புதுவை கே.எஸ்.பாரதிதாசன் என்னும் பெயரில் இதழ்களில் எழுதினார். தேசோபகாரி, தேச சேவகன், ரூப்ளக்ஸ், தேச பக்தன், ஆனந்த போதினி, புதுவைக் கலைமகள், சுதேசமித்திரன், சுதந்திரன் போன்ற ஏடுகளுக்கும் பாரதிதாசன் என்னும் புனை பெயரிலேயே தம் படைப்புகளை அனுப்பி வைத்தார். பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி 1938-ல் வெளிவந்தது.
பாரதிதாசன் தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க காலத்தில் ஆத்திகராகவே இருந்தார். அவரது முதல் கவிதை எங்கெங்கு காணினும் சக்தியடா'. என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலைப் பாரதியார் தம் கைப்படவே எழுதி "ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது'' என்ற குறிப்பையும் இணைத்துச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார்'மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது', விநாயகர் காப்பு, விநாயகர் துதி, சிவபெருமான் துதி, உமை துதி, திருமால் துதி போன்ற வழிபாட்டுப் பாடல்கள் பாடினார்.1933-ல் திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் 'நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்' என்று பிரகடனம் செய்தார்.
இதுபற்றிப் பாரதிதாசன் குயில் இதழில் "நான் பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குக் காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது" என்று பெயர் மாற்றத்திற்குக் காரணம் கூறினார்.
பாரதிதாசனின் சமத்துவக் கொள்கைகளும், கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளும் அவரது படைப்புகளில் பிரதிபலித்தன. மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது கவிதைகள் எழுச்சி மிக்கவை. பாரதிதாசனின் படைப்புகளில் பெண் அறிவார்ந்தவளாகவும், சிந்தனைத்திறம் கொண்டவளாகவும் சித்தரிக்கப்பட்டாள். கைம்பெண் மறுமணம் அவரது சில படைப்புகளின் பேசு பொருளாக இருந்தது. கல்வியறிவும், அன்பும் இணைந்த குடும்பங்களே ஒரு சிறந்த சமுதாயத்தின் ஆதார சுருதி என்பதை 'குடும்ப விளக்கு', 'இருண்ட வீடு' ஆகிய இரு படைப்புகளும் வலியுறுத்துகின்றன. ’ பாரதிதாசனின் படைப்புலகில் பல காதல் கவிதைகளும் அடங்கும். ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை முழக்கமும், பெண் உரிமையும், பகுத்தறிவு, சமுதாயச் சிந்தனைகளும் அவரது காதல் கவிதைகளிலும், இயற்கை அழகைப்பாடும் கவிதைகளிலும் கூடப் பயின்று வந்தன.
அவரது படைப்புகளில் சில ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல. 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாதெமி’ விருது கிடைத்தது.
சிறுகதை
பாரதிதாசன் புதுவை முரசு, குயில், தமிழரசு, சினிமா உலகம், போர்வாள் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். இந்த இதழ்களில் எழுதிய 30 சிறுகதைகளின் தொகுப்பு 'ஏழைகள் சிரிக்கிறார்கள்' பூம்புகார் பிரசுரமாக வெளிவந்தது. 1931-32-ம் ஆண்டுகளில் 'புதுவை முரசு' வார இதழில் வெளிவந்த 13 சிறுகதைகளின் தொகுப்பு 'பாரதிதாசன் கதைகள்' 1955-ல் புதுவை ஞாயிறு நூற்பதிப்பக வெளியீடாக வந்தது. மூடப்பழக்க வழக்கங்களைச் சமுதாயத்திலிருந்து ஒழிக்க விரும்பி, நகைச்சுவையாக எழுதப்பட்டவையே அச்சிறுகதைகள்.
பாரதிதாசன் சில நெடுங்கதைகளையும் எழுதியுள்ளார். 'கெடுவான் கேடு நினைப்பான்' அல்லது 'வாரிவயலார் விருந்து' என்ற தலைப்பில் புதுவை முரசு இதழில் ஒரு நெடுங்கதையை எழுதினார். 'எல்லோரும் உறவினர்கள்' என்ற தலைப்பிலும் முற்றுப் பெறாத ஒரு தொடர்கதையைக் குயில் இதழில் எழுதினார்.
பாரதிதாசன் படைப்புகளின் மொழியாக்கங்கள்
- 1961-ல் கமில் சுவலபில் பாரதிதாசனின் கவிதைகளை செக் மொழியில் மொழியாக்கம் செய்தார்.
- 'கல்கண்டு' நாடகத்தை டி. டேவிட் பிரெஞ்சில் 'மொழியாக்கம் செய்தார்.
- 'பிசிராந்தையார்', 'கடல்மேற் குமிழிகள்' இரு நூல்களும் எல். கதலீஸ் என்பவரால் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டன
- '1997-ல் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் பாரதிதாசன் கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது.
புனைபெயர்கள்
பாரதிதாசன்
- கே.எஸ். பாரதிதாசன்
- புதுவை கே.எஸ்.ஆர்
- கே.எஸ்.ஆர்.
- நாடோடி
- வழிப்போக்கன்
- அடுத்த வீட்டுக்காரன்
- கே.எஸ்.
- சுயமரியாதைக்காரன்
- வெறுப்பன்
- கிறுக்கன்
- கிண்டற்காரன்
- அரசு
- கைகாட்டி
- கண்டெழுதுவோன்
- செய்தி அறிவிப்பாளர்
- உண்மை உரைப்போன்
- கே.ஆர்
- குயில் செய்தியாளர்.
இதழியல்
பாரதிதாசன் சுயமரியாதைக் கருத்துகளைப் பறைசாற்ற சிவப்பிரகாசம், நோயெல் என்ற நண்பர்களோடு சேர்ந்து 'புதுவை முரசு' என்ற இதழைத் தொடங்கினார். இவ்வேட்டில் பல புனைபெயர்களில் தலையங்கம், கவிதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆகியவற்றை எழுதினார். இந்த இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை காரணமாகக் கிறித்துவப் பாதிரிமார்கள் வழக்குத் தொடுத்தனர். இப்பத்திரிகைக்குச் சில காலம் குத்தூசி குருசாமியும் பூவாளூர் பொன்னம்பலனாரும் ஆசிரியராக இருந்தனர். அரசின் நெருக்கடிக்கு உள்ளாகி இவ்விதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.
பாரதிதாசன் பின்வரும் இதழ்களை நடத்தினார்
- புதுவைமுரசு (வார இதழ்) 1930 முதல் 1931
- ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் (மாதாந்தக் கவிதைப் பத்திரிக்கை 1935
- குயில் (புத்தகம்) 1946
- குயில் (ஒரு பெயர்ப்பன்னூல்) 1947
- குயில் (திங்கள் இதழ்) 1948
- குயில் (தினசரி) 1948
- குயில் (வார இதழ்) 1958 முதல் 1961
- குயில் (திங்களிருமுறை) 1962
நாடகம்
பாரதிதாசன் இளமையில் இருந்தே நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.பள்ளிக்காலத்தில் குசேல உபாக்யானம், பாதுகாபட்டாபிசேகம் முதலிய நாடகங்களின் பொறுப்பாளராகவும், தலைமை நடிகராகவும் இருந்தார். பெண் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
நாடக நூல்கள் பலவற்றை எழுதினார். 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்', 'நல்ல தீர்ப்பு'(பழந்தமிழ் கூத்தை அடிப்படையாகக் கொண்டது) , 'கற்கண்டு' (பொருந்தாத் திருமணம்), 'அமைதி'(ஊமை நாடகம்) 'சௌமியன்'(கொடுங்கோலாட்சி), 'படித்த பெண்கள்' (பெண் கல்வி), 'சேரதாண்டவம்' (ஆட்டன் அத்தி-ஆதிமந்திகதை), கழைக்கூத்தியின் காதல், 'பாரதிதாசன் நாடகங்கள்', பிசிராந்தையார், 'தலைமை கண்ட தேவர்' முதலிய 12 நாடக நூல்களை வெளியிட்டுள்ளார்.
1980-ம் ஆண்டு பூம்புகார் பிரசுரம் வெளியிட்ட 'கோயில் இரு கோணங்கள்' பாரதிதாசன் எழுதி இதுவரை வெளிவராத எட்டு நாடகங்களின் தொகுப்பு. இந்நாடகங்கள் குயில், முரசொலி போன்ற இதழ்களில் வெளிவந்தவை.
சங்க காலப் புலவர் பிசிராந்தையாரைப் பற்றிய 'பிசிராந்தையார்' நாடகம் 1970-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது.
திரைத்துறை
- பாலாமணி அல்லது பக்காத் திருடன், கவி காளமேகம், சுலோசனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி, ஆகிய திரைப்படங்களுக்குப் பாவேந்தர் திரைக்கதை, உரையாடல், பாடல்கள் எழுதியுள்ளார்.
- தாம் உரையாடல் எழுதிய 'வளையாபதி' என்ற திரைப்படத்தில், தம்மைக் கேட்காமல் சில வரிகளை மாற்றி விட்டார்கள் என்பதற்காக, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் நாற்பதாயிரம் ரூபாய்க்கு செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
- அக்டோபர் 14, 1960-ல் 'பாரதிதாசன் பிக்சர்ஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார். தாம் எழுதிய 'பாண்டியன் பரிசு' காப்பியத்தைத் திரைப்படமாக்க முயன்றார். அந்த முயற்சி தோல்வி கண்டது.
- 'மகாகவி பாரதியார்' என்ற தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க விரும்பி, திரைக்கதை – உரையாடல் எழுதி முடித்தார். தம்மிடம் பொருள் இல்லாததால், நிதி திரட்ட நினைத்தார். அந்த முயற்சி நிறைவேறவில்லை.
திரைப்படங்களில் இடம்பெற்ற சில பாரதிதாசன் பாடல்கள்
- துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ -ஓர் இரவு[1][2]
- தமிழுக்கும் அமுதென்று பேர்-பஞ்சவர்ணக்கிளி[3]
- சங்கே முழங்கு-கலங்கரை விளக்கம்[4]
- சித்திரச் சோலைகளே-நான் ஏன் பிறந்தேன்[5]
- வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதோ?- மணிமகுடம்[6]
விருதுகள், பரிசுகள்
- 'புரட்சி கவிஞர் பட்டம் - ஈ.வெ.ராமசாமி
- 'புரட்சிக்கவி' பட்டம் - அண்ணாத்துரை
- தங்கக் கிளி பரிசு-'ஊமை' நாடகத்துக்காக (1946)
- சாகித்ய அகாதெமி விருது(பிசிராந்தையார் நாடகத்துக்காக)(1970)
இலக்கிய இடம்
பாரதிதாசன் பாரதியாரைத் தொடர்ந்து தமிழ்க் கவிதையை பொது மக்களிடம் கொண்டு சென்றவர். அவரது எழுச்சி மிகுந்த, புரட்சியான கருத்துகளைக் கொண்ட பாடல்களுக்காகவே அறியப்பட்டார். விடுதலைப் போராட்ட காலத்திலும், அதன் பின் தேசத்தின் உருவாக்கத்தின்போதும் நிலவிய, தேவையாக இருந்த எழுச்சியையும், லட்சியவாதத்தையும் அவரது படைப்புகள் பிரதிபலித்தன. பெண்ணுரிமை, சாதி மறுப்பு, தொழிலாளர் உரிமைகள் போன்ற கருத்தாக்கங்களும், அவை பற்றிய விழிப்புணர்வும் வளர்ந்து வந்த காலத்தில் எளிமையும், வேகமும் கலந்த நேரிடையான நடையில் அக்கருத்துக்களை அவரது கவிதைகள் பேசின.
முற்போக்குக் கருத்துகளும், காதலும், இயற்கையும் அவரது படைப்புகளின் பேசுபொருள்கள். ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை முழக்கம், தமிழ், திராவிடம், சுயமரியாதைச் சிந்தனைகள் போன்றவை அவரது காதல் கவிதைகளிலும் இடம்பெற்றன. ‘தொடக்கத்தில் இறையுணர்வு கொண்டு துதிப்பாடல்களையும் பாடியுள்ள பாரதிதாசன், பின்னாட்களில் பெரியார் தொடர்பும் சுயமரியாதைச் சிந்தனை எழுச்சியும் பெற்ற பிறகு, தன் கவிதைகளில் முற்போக்கு அழகியல் கோட்பாட்டைக் கைக்கொண்டார். தமிழ் மொழி. தமிழ் இனம், சமய மறுப்பு, பெண்ணுரிமை, தொழிலாளர்கள் நலன் போன்றவை அவரது படைப்புகளின் பாடுபொருளாக அமைந்தன. சமகால சமூகப் பிரச்சினைகளையும், சமத்துவத்தையும் பேசிய அவரது சிறுகதைகள் பிரச்சாரத் தன்மை கொண்டிருந்தன.
பாரதிதாசனின் அழகியல் பழந்தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்டது. சங்க மரபின் அகம் - புறம் என்ற கட்டமைப்பில், திணைப் பண்பில் அவரது பல கவிதைகள் அமைந்தன. 'அழகின் சிரிப்பு' போன்ற படைப்புகள் இயற்கையின் அழகைப் பாடி அதன்மூலம் சில உண்மைகளைக் குறிப்பாகப் புலப்படுத்த முற்பட்டன.
மறைவு
பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.
நினைவேந்தல்
- ஏப்ரல் 21, 1965 அன்று புதுச்சேரி மாநகராட்சியினரால் பாவேந்தருக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.
- 1966-ல் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது மெரினா கடற்கரையில் பாவேந்தரின் திருவுருவச்சிலை மு. வரதராசனாரால் திறந்து வைக்கப்பட்டது.
- 1968-ல் புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது
- 1971-ல் புதுச்சேரி அரசால் பாவேந்தரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 95, பெருமாள் கோவில் தெரு, புதுச்சேரி-ல் உள்ள பாவேந்தரின் இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. அவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக்கூடம் அமைக்கப்பட்டன..
- டிசம்பர் 28, 1971-ல் பாவேந்தரின் தமிழ் வாழ்த்துப் பாடல் அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் இறைவாழ்த்துப் பாடலாகப் பாடவேண்டும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
- 1972-ல் ஏப்ரல் 29-ல் பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுச்சேரி துணைநிலை ஆளநரால் திறந்து வைக்கப்பட்டது.
- 1978-ல் தமிழக அரசால் பாவேந்தரின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடுவதென்றும் பாரதிதாசன் விருது ஆண்டுதோறும் ஏப்ரல் 29,30 ஆகிய நாள்களில் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- ஏப்ரல் 29, 1982-ல் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது
- 1986-ல் 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்' எனும் தலைப்பில் மன்னர் மன்னன் எழுதி வெளியிட்ட பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலிற்குத் தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது.
- ஆகஸ்ட் 26-27, 1990 அன்று புதுச்சேரி அரசால் பாவேந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. செப்டெம்பர் 1991-ல் மலேசியாவில் பாரதிதாசனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மே 1992-ல் பாரிசில் பாவேந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
- 1992-ல் தமிழக அரசு பாவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.
- 1994-ல் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களில் தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் அறக்கட்டளையை நிறுவியது
- 2001-ல் மத்திய அரசு பாரதிதாசன் நினைவாக அஞ்சல் தலையை அக்டோபர் 9, 2001 அன்று வெளியிட்டது.
- செப்டம்பர் 11, 2005-ல் புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத் துறையால் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், ஆய்வு மையம் குறித்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
பாடல்கள்
வலியோர்சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம் உடனே விழி தமிழா!
கலையேவளர்! தொழில்மேவிடு! கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை நிசநூல்மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமேபுரி சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம் எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதிஇலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர சறைவாய் முரசறைவாய்
குடும்ப விளக்கு
பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்.
அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி
விழுங்கினார் பிள்ளைகள்; “வேளையா யிற்றே!
.....
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?
அழகின் சிரிப்பு
தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னி லேஓர்
செழுங்கதிர் மாணிக்கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
மரகதத் திருமேனிக்கு
மங்காத பவழம் போர்த்து
வைத்தது வையங் காண!
புரட்சிக் கவி
.....நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ?
மூட நம்பிக்கை
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே (பெண் குழந்தை தாலாட்டு)
பேடி வழக்கங்கள் மூடத்தனம் - இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள் (மாந்தோப்பில் மணம்)
மானிடம் என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்னிரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும் (மானிட சக்தி)
மதமெனும் முள்ளுப் படர்ந்திருக்கும்
வழிக்கெல்லாம் பகுத்தறிவே துணை ஆகும் (தேனருவி)
படைப்புகள்
- மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு(1920)
- மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்(1925)
- மயிலம் சுப்பிரமணியர் துதியமுது(1926)
- தொண்டர் வழிநடைப் பாட்டு(1930)
- தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு(1930)
- சிறுவர் சிறுமியர் தேசியகீதம்(1930)
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்(1930)
- கதர் இராட்டினப்பாட்டு,(1930)
- சுயமரியாதைச் சுடர்(1931)
- புரட்சிக் கவி(1937)
- பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)(1938)
- எதிர்பாராத முத்தம்(1938)
- இரணியன் அல்லது இணையற்ற வீரன்(1939)
- குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி(1942)
- இசையமுது (முதலாம் தொகுதி)(1942)
- பாண்டியன் பரிசு(1943)
- நல்லதீர்ப்பு(1944)
- குடும்ப விளக்கு - 2-ம் பகுதி: விருந்தோம்பல்(1944)
- காதல் நினைவுகள்(1944)
- இருண்டவீடு(1944)
- அழகின் சிரிப்பு(1944)
- தமிழியக்கம்(1945)
- கற்கண்டு(1945)
- எது இசை?(1945)
- அமைதி(1946)
- செளமியன்(1947)
- கவிஞர் பேசுகிறார்(1947)
- முல்லைக்காடு(1948)
- பாரதிதாசன் ஆத்திசூடி(1948)
- திராவிடர் திருப்பாடல்(1948)
- குடும்ப விளக்கு - 3-ம் பகுதி: திருமணம்(1948)
- காதலா? கடமையா?(1948)
- கடற்மேற் குமிழிகள்(1948)
- இந்தி எதிர்ப்புப் பாடல்கள்(1948)
- அகத்தியன்விட்ட புதுக்கரடி(1948)
- பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)(1949)
- திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்(1949)
- தமிழச்சியின் கத்தி(1949)
- ஏற்றப் பாட்டு(1949)
- குடும்ப விளக்கு - 5-ம் பகுதி: முதியோர் காதல்(1950)
- குடும்ப விளக்கு - 4-ம் பகுதி: மக்கட்பேறு(1950)
- அமிழ்து எது?(1951)
- இசையமுது (இரண்டாம் தொகுதி)(1952)
- பொங்கல் வாழ்த்துக் குவியல்(1954)
- பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)(1955)
- தேனருவி(1956)
- தாயின் மேல் ஆணை(1958)
- இளைஞர் இலக்கியம்(1958)
- குறிஞ்சித்திட்டு(1959)
- மணிமேகலை வெண்பா(1962)
- கண்ணகி புரட்சிக் காப்பியம்(1962)
- பன்மணித்திரள்(1964)
பாரதிதாசனின் மரணத்துக்குப்பின் பதிப்பிக்கப்பட்டவை
- பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)(1977)
- குயில் பாடல்கள்(1977)
- காதல் பாடல்கள்(1977)
- வேங்கையே எழுக(1978)
- புகழ்மலர்கள்(1978)
- நாள் மலர்கள்(1978)
- தமிழுக்கு அமிழ்தென்று பேர்(1978)
- ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது(1978)
- வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?(1980)
- பாட்டுக்கு இலக்கணம்(1980)
- உலகம் உன் உயிர்(1994) (இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள்)
கட்டுரை
- சிரிக்கும் சிந்தனைகள்(1981)
- கேட்டலும் கிளத்தலும்(1981)
- மானுடம் போற்று(1984)
- பாரதிதாசன் திருக்குறள் உரை(1992)
- இலக்கியக் கோலங்கள்(1994)
- உலகுக்கோர் ஐந்தொழுக்கம்(1994) (தேர்ந்தெடுக்கப்பட்ட தலையங்கங்கள்)
- பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்(2012)(ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்)
சிறுகதை
- பாரதிதாசன் கதைகள்(1955)
- ஏழைகள் சிரிக்கிறார்கள்(1980)
- பாரதிதாசனின் புதினங்கள்(1992)
கடிதங்கள்
- பாரதிதாசன் கடிதங்கள்(2008)
நாடகங்கள்
- இரணியன் அல்லது இணையற்ற வீரன்(1939)
- நல்லதீர்ப்பு(1944)
- காதலா? கடமையா?(1948)
- கற்கண்டு (1944)
- அமைதி(1946)
- படித்த பெண்கள்(1948)
- சேரதாண்டவம்(1949)
- இன்பக்கடல்(1950)
- சத்திமுத்தப்புலவர்(1950)
- கழைக்கூத்தியின் காதல்(1951)
- பிசிராந்தையார்(1967)
- தலைமலை கண்ட தேவர்(1978)
- கோயில் இருகோணங்கள்(1980)
- குமரகுருபரர்(1992)
- பாரதிதாசனின் புதிய நாடகங்கள்(1994)
பாவேந்தம்
தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டலில் இளங்கணி பதிப்பகம் பாரதிதாசனின் அனைது படைப்புகளையும் 154 தலைப்புகளில் 7,854 பக்கங்களில் 25 தொகுதிகளில் தொகுத்து[7] 'பாவேந்தம்' என்ற தொகுதியாக வெளியிட்டது.
உசாத்துணை
- பாரதிதாசன், பாரதிதாசன் பல்கலைக்கழக வலைத்தளம்
- புரட்சிகவிஞர் பாரதிதாசன் - சி.பாலசுப்ரமணியன், தமிழ் இணைய கல்விக் கழகம்
- பாட்டாளிகளைப் பாடிய புலவன் - கீற்று இதழ் அக்டோபர் 2005
- மாய உலகம், பாரதிதாசன் பேசுகிறார், தமிழ் ஹிந்து
- பாரதிதாசனின் பொதுவுடைமைச் சிந்தனை
- பாவேந்தர் பாரதிதாசன் - பெருஞ்சித்திரனார், தமிழ் இணைய கல்விக் கழகம்
இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
- ↑ துன்பம் நேர்கையில்-ஓர் இரவு, யூடியூப் காணொளி
- ↑ துன்பம் நேர்கையில்-சஞ்சய் சுப்ரமணியம், யூடியூப் காணொளி
- ↑ தமிழுக்கும் அமுதென்று பேர்-பஞ்சவர்ணக்கிளி, யூடியூப் காணொளி
- ↑ சங்கே முழங்கு-கலங்கரை விளக்கம், யூடியூப் காணொளி
- ↑ சித்திரச் சோலைகளே-நான் ஏன் பிறந்தேன், யூடியூப் காணொளி
- ↑ வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா-யூடியூப் காணொளி?
- ↑ பாவேந்தம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:39:07 IST