under review

மன்னர்மன்னன்

From Tamil Wiki
மன்னர்மன்னன்

மன்னர்மன்னன் (நவம்பர் 3, 1928 - ஜூலை 7, 2020) பாரதிதாசனின் மகன். கவிஞர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர். வானொலியில் பணியாற்றினார். சிற்றிதழ்கள் நடத்தியும் உரைகள் ஆற்றியும் பாரதிதாசனின் புகழை நிலைநிறுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தார்.

பிறப்பு, கல்வி

மன்னர்மன்னனின் இயற்பெயர் கோபதி. நவம்பர் 3, 1928-ல் பாரதிதாசன்-பழநியம்மா இணையருக்கு பிறந்தார். உடன்பிறந்தோர் சரசுவதி, வசந்தா, இரமணி. மன்னர்மன்னன் பிரெஞ்சுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

தனிவாழ்க்கை

மன்னர்மன்னன் சாவித்திரியை 1955-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவில் மணந்தார். கோவை அய்யாமுத்து திருமணத்தை நடத்திவைத்தார். மகன்கள்: செல்வம், தென்னவன், பாரதி , மகள்: அமுதவல்லி. 'மணிமொழி நூல்நிலையம்', 'மிதிவண்டிநிலையம் 'ஆகியவற்றை நடத்தினார்.1968-ல் புதுவை வானொலியில் எழுத்தாளர் பணியில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்றார்.

மன்னர்மன்னன் குழந்தையாக

அரசியல்

மன்னர் மன்னன் 1947-ல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரெஞ்சுப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அண்ணாத்துரை தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுவை மாநிலக் கிளையை 1949-ல் தோற்றுவித்த ஐவரில் மன்னர்மன்னனும் ஒருவர்.

1954-ல் இந்தியாவுடன் புதுவை மாநிலம் இணைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு புதுவையிலிருந்து வெளியேற நேர்ந்தது. 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 45 நாட்கள் சிறையில் இருந்தார்.

இதழியல்

1964-ல் பாரதிதாசன் மறைவுக்குப் பின் மன்னர்மன்னன் பல சிற்றிதழ்களை நடத்தினார்

இலக்கியவாழ்க்கை

மன்னர்மன்னன் இளைஞனாக

மன்னர் மன்னன் 1942-ல் 'முரசு’ என்னும் கையெழுத்து இதழை ' கவிஞர் தமிழ்ஒளியுடன் இணைந்து வெளியிட்டார். அவ்விதழில் அரசு எதிர்ப்புக் கருத்துக்கள் இருந்தமையால் இருவரையும் பிரெஞ்சு அரசு குற்றம் சாட்டியது. மன்னர்மன்னுக்கு 14 வயது என்பதால் தண்டனை கிடைக்கவில்லை. அதுமுதல் மன்னர்மன்னன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

புதுவை வானொலியில் பணியில் சேர்ந்தபின் மன்னர்மன்னன் வானொலி நாடகங்களை உருவாக்கினார்.

மன்னர்மன்னன் 16 நூல்கள் எழுதினார். மன்னர்மன்னனின் சிறுகதைகள் 'நெஞ்சக் கதவுகள்' என்னும் தொகுப்பாக வெளியிடப்பட்டது. 'பாவேந்தரின் இலக்கியப் பாங்கு' என்னும் நூல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது. 'நிமிரும் நினைவுகள்' என்ற பெயரில் மன்னர்மன்னன் பலவாண்டுகளாக இலக்கிய ஏடுகளில் எழுதிவந்த புதுவை வரலாற்றுக் கட்டுரைகள் இவரின் பவள விழா வெளியீடாக வெளிவந்துள்ளது.

மன்னர்மன்னன் புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் கருத்து உரைஞராகப் (Consultant) பணியாற்றினார்.

மன்னர்மன்னன்
பாரதிதாசன் படைப்புகள் குறித்த பணிகள்

மன்னர்மன்னன் வாழ்நாள் முழுக்க பாரதிதாசனின் புகழ்பரப்பும் பணிகளைச் செய்துவந்தார். பாரதிதாசனின் வாழ்க்கைவரலாறான 'கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல்’ என்ற நூலை எழுதினார். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பாவேந்தரின் கவிதைகள் ஆங்கில ஆக்கம் பெற்று வெளிவர உதவினார். பாரதிதாசனைப்பற்றி அவர் எழுதிய நூல்கள்:

  • கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல்
  • பாவேந்தர் இலக்கியப் பாங்கு
  • பாவேந்தர் படைப்புப் பாங்கு
  • பாவேந்தர் உள்ளம்
  • பாட்டுப் பறவைகள் (பாரதி பாரதிதாசன் உறவு பற்றி)

விருதுகள்

  • புதுவை அரசின் கலைமாமணி விருது (1998)
  • தமிழ்மாமணி விருது (2001)
  • திரு.வி.க. விருது (1999)

மறைவு

ஜூலை 07, 2020-ல் மன்னர்மன்னன் புதுச்சேரியில் மறைந்தார்

உசாத்துணை


✅Finalised Page