under review

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது

From Tamil Wiki
சுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது (1926) பாரதிதாசன் தொடக்க காலத்தில் எழுதிய துதி நூல். தென் மயிலம் எனப்படும் மயிலம் தலத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் மீது பாடப்பட்டது. அச்சில் வந்த பாரதிதாசனின் இரண்டாவது நூலாக அறியப்படுகிறது.

வெளியீடு

மயிலம் தலத்தின் தெய்வமான சுப்பிரமணியர், ஆண்டுதோறும் மாசிமகத்தன்று புதுச்சேரிக் கடற்கரைக்கு எழுந்தருளுவார். அப்போது நிகழும் மாசிமக விழாவின் பொருட்டு பாரதிதாசன் இயற்றிய பாடல்கள் அவராலும், பிறராலும் பாடப்பட்டும். அப்பாடல்களில் சில தொகுக்கப்பட்டு, ’மயிலம் சுப்பிரமணியர் துதியமுது’ என்ற தலைப்பில் சிறு நூலாக 1926-ல் வெளியானது.

நூல் அமைப்பு

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது நூலின் தொடக்கத்தில் புதுச்சேரி வாழ் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம் பெற்றது. தொடர்ந்து புதுச்சேரி மணக்குள் விநாயகர் மீதான திருப்புகழ் மெட்டில் அமைந்த வண்ணப் பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து சிவபெருமான், உமை, திருமால், சரஸ்வதி மீதான துதிப் பாடல்கள் இடம்பெற்றன. மயிலாசலம் எனப்படும் மயிலத்தைப் பற்றிய நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, மயில மலையின் சிறப்பத் தொடர்ந்து 655 வரிகளில் பாடல்கள் இடம்பெற்றன. இறுதியில் வாழ்த்துச் செய்யுள் இடம்பெற்றது. பாடல்களுக்கு அவற்றைப் பாட வேண்டிய மெட்டுகளும் குறிப்பிடப் பட்டுள்ளன.

உள்ளடக்கம்

மயிலம் சுப்பிரமணியர் துதியமுது நூலில் விநாயகர் பெருமை, பிற தெய்வங்களின் சிறப்புகள், முருகனின் அழகு, சிறப்பு, பெருமை ஆகியன இடம்பெற்றதோடு பாரத நாட்டின் விடுதலை வேண்டுதல், நெஞ்சுக்கு உறுதி கூறுதல், குமரனுக்குத் தூது விடுத்தல், வேலின் மகிமை, மயிலின் சிறப்பு ஆகியனவும் இடம்பெற்றன.

பாடல் நடை

மணக்குள் விநாயகர் துதி

உல குதி னமு னெழில் மல ரடி
உள மதி னினை குல தெனி லவர்
உறு வினை எவை களு மிலை யென இனிதாமால்
உமை யவள் தரு முதன் மக னுனை
உள மொழி மெய்க ளினி லடி யவன்
உவ கையொ டுதொ ழுகு வதை யினி மறவேனே

மலி யவல் பொரி யொடு பய றுகள்
மது நிகர் கனி வகை யனு தினம்
வரை யென நிறை யவு னது திரு வடிமேலே
மன மகி ழஇ டுவ னருள் ககு
மர னழ ஒரு கனி யைய ரனை
வல மிடு வதி லுணு மரி மகிழ் மருகோனே

மலை மத கரி இடர் புரி யுமொர்
மதி யிலி அசு ரனை ஒரு நொடி
மடி யவ மரர் துயர் களை யுமொர் அடல்வீரா
வரு புதை யலி னிதி யென மலை
வழி யரு வியெ னவெ னது கவி
வள மொடு புதி யன வென விரி புவிமேலே

பொலி தர அவை புகழ் பெற மிகு
புல வரெ வருமினி தென நனி
புவி யினர் உள மதி லொளி தர அருள்வாயே
புரை தவிர் தெரு வரி சையொ டமர்
புனி தமொ ழிய ரிவை யர்க ளுறை
புது வையி லமர் கய முக முறு பெருமாளே

வாழ்த்து

வாழ்க குகன் பாத மலர்வேல் மயில் சேவல்
சூழ்க நனியின்பம் தொல்புவிவான் - வீழ்கபுனல்
மல்கவளஞ் செந்நெல் வளர்க அறம் வேள்வி
வெல்கஇனி மைத்தமிழின் வீறு

மதிப்பீடு

பாரதிதாசன், பகுத்தறிவுக் கவிஞராக ஆவதற்கு முன்பு இறைப்பற்றாளராகவும், சமய, சடங்குகளில் நம்பிக்கை உள்ளவராகவும் இருந்தார். அக்காலத்தில் அவர் பல பக்திப் பாடல்களையும், துதிகளையும் இயற்றினார். அவற்றுள் ஒன்று, மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. பாரதிதாசன் தொடக்கக் காலத்தில் ஆன்மிக நாட்டம் உடையவராக இருந்தார் என்பது இத்தகைய பக்திப் பாடல்கள் மூலம் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:14:30 IST