under review

கி.ரா. கோபாலன்

From Tamil Wiki
கோபாலன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோபாலன் (பெயர் பட்டியல்)
கி.ரா. கோபாலன்

கி.ரா. கோபாலன் ( அக்டோபர் 10,1918- ஆகஸ்ட் 15,1957) எழுத்தாளர், இதழாளர், கவிஞர், ஓவியர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தவர். கல்கி இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

கி.ரா. கோபாலன், அக்டோபர் 10, 1918-ல், தஞ்சாவூரில் பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

1948-ல், லட்சுமி அம்மாளுடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் இவர்களுக்கு உண்டு.

கல்கி சிறுகதைப் போட்டி முதல் பரிசு

இலக்கிய வாழ்க்கை

கி.ரா. கோபாலன், பள்ளிப்பருவத்தில் கும்பகோணத்தில் ‘ஜெயமாருதி வாசகசாலை' என்பதன் பொறுப்பாளராகச் செயல்பட்டார். அது சார்பாக கையெழுத்து இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார். இதழுக்கான ஓவியங்களையும் அவரே வரைவார். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் முதல் சிறுகதை அந்தக் கையெழுத்துப் பிரதியில் தான் வெளியானது. கி.ரா. கோபாலன், அவ்வப்போது தனது வீட்டில் இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தார். எழுத்தாளர் தேவன், திருலோக சீதாராம் உள்ளிட்ட பலர் அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கி.ரா. கோபாலன், தஞ்சை கும்பகோணம் எழுத்தாளர்களான கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியோரது நட்பு வட்டத்தில் இருந்தார். வல்லிக்கண்ணன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இவருக்கு நண்பர்கள். அவர்கள் மூலம் இலக்கிய வாசிப்பு மேம்பட்டது.

கிராம ஊழியன், சிவாஜி போன்ற இதழ்களில் இவரது படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார் திருலோக சீதாராம். கல்கி இதழ் நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில், கி.ரா.கோபாலன் எழுதிய, ’ஏழ்மையின் பிம்பம்’ என்ற சிறுகதையைச் சிறந்த சிறுகதையாக கல்கி, ராஜாஜி, க.நா.சுப்ரமண்யம் அடங்கிய நடுவர் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். தொடர்ந்து கல்கியில் கதைகள், கட்டுரைகள், துணுக்குகளை எழுதி வந்தார். கி. ரா. கோபாலனின் சிறுகதைகள் பொன்னி உள்ளிட்ட சில இதழ்களிலும் வெளியாகின.

ராணி மாதவி - தொடர்கதை
காட்டூர் கண்ணன் கவிதை (படம் - நன்றி : பசுபதிவுகள்)
துதிக்கையார் (கி.ரா. கோபாலன்)

இதழியல் வாழ்க்கை

கி.ரா. கோபாலனை கல்கி கல்கிஇதழின் துணை ஆசிரியராக நியமித்தார். 'அபலை அஞ்சுகம்' என்னும் இவரது நாவல் வரவேற்பைப் பெற்றது. ’காட்டூர் கண்ணன்’, ‘கோணல்’, ‘துதிக்கையார்’ போன்ற புனை பெயர்களில் கவிதை, நகைச்சுவை மற்றும் அரசியல் கட்டுரைகளை எழுதினார். கல்கியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ தொடராக வந்துகொண்டிருக்கும்போதே மற்றொரு தொடராக கல்கியில் கி.ரா. கோபாலனின் ‘ராணி மாதவி’ தொடர் வெளியானது. ‘ராஜாளி மடம்’ போன்ற படைப்புகள் இவரது பெயர் சொல்லும் படைப்புகளாகத் திகழ்ந்தன.

சிவாஜி இதழில் இவர் எழுதிய கடித வகையிலான கதைகள் மற்றும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘கடிதம்’ என்ற பெயரிலேயே வெளிவந்தன.

திரைத்துறைப் பங்களிப்புகள்

கி.ரா. கோபாலனின் ‘அபலை அஞ்சுகம்’ நாவல், பின்னர் திரைப்படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் கி. ரா. கோபாலன். படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொள்ளுதல், வசன மேற்பார்வை என்று செயல்பட்டார். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார்.

இசைக் கலைஞர்கள் டி.வி. கோபாலகிருஷ்ணன், ஏ.டி. சுல்தான் உள்ளிட்ட பலர் கி.ரா. கோபாலனின் சாகித்யங்களைப் பாடியுள்ளனர். வானொலி இசை நிகழ்ச்சிகளில் கி.ரா. கோபாலன் எழுதிய சாகித்யங்கள் அதிகம் ஒலிபரப்பாகியுள்ளன.

பாடலுரிமை விவாதம்

”நித்திரையில் வந்து என் நெஞ்சில் இடங்கொண்ட..” என்ற, என்.சி. வசந்தகோகிலம் பாடிய புகழ்பெற்ற அக்காலத்து இசைத்தட்டுப் பாடலை எழுதியது கி.ரா. கோபாலன் தான்.

இது பற்றி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, “அவர் கவிதைகளும், தமிழிசைப் பாடல்களும் எழுதியிருக்கிறார். சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி. அவர் ‘ நித்திரையில் வந்து என் உளம் கவர்ந்தவன் யாரோடி, கண்ணன் என்றால் அவன் கையில் குழலில்லை, முருகன் என்றால் அவன் கையில் வேலில்லை’ என்ற ஒரு பாட்டு எழுதி , அக்காலத்தில் பிரபலமாக இருந்த என்.சி. வசந்தகோகிலத்திடம் காண்பித்தார். அவர் அதை இசைத்தட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். முன் பணமாக முப்பது ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் இசைத்தட்டு வெளி வந்த போது, சாகித்ய கர்த்தா சுத்தானந்த பாரதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது கி.ரா. கோபாலன் கோபமடந்து வசந்தகோகிலத்தின் கணவர் ‘சாச்சி’ என்று அழைக்கப்பட்ட சதாசிவத்திடம் முறையிட்டார். சாச்சி அதற்குப் பதில் கூறியதாக சொல்லப்படுவது: "இதோ பார், கி.ரா.கோபாலன் என்றால் யாருக்குத் தெரியும்? சுத்தானந்த பாரதி என்றால் எல்லாருக்கும் தெரியும். கூட ஒரு முப்பது ரூபாய் வாங்கிக் கொண்டு, பேசாமலிரு.கோர்ட்டுக்குப் போனால் ஆயிரக் கணக்கில் செலவாகும்".

அந்த இசைத்தட்டு ஆயிரக் கணக்கில் விற்றது. கோபாலனுக்குக் கிடைத்தது முப்பது ரூபாய்தான். சாச்சி கொடுக்கத் தயாராக இருந்த முப்பது ரூபாயை அவர் வாங்கிக் கொள்ளவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்[1] .

ஆவணம்

கி. ரா. கோபாலனின் ‘மாலவல்லியின் தியாகம்’ சென்னை நூலகத்திலும், ‘கடிதம்’ தொகுப்பு தமிழ் இணைய மின் நூலகத்திலும் சேகரிக்கப்பட்டுள்ளன.

மறைவு

கல்கியில் ‘மாலவல்லியின் தியாகம்’ என்ற தொடர்கதையை எழுதி வந்தார் கி. ரா. கோபாலன். வாசகர்களின் மிகுந்த வரவேற்புடன் வாரா வாரம் அத்தொடர் வெளிவந்த நிலையில், திடீர் உடல் நலக் குறைவால் ஆகஸ்ட் 15, 1957-ல், தனது 39-ம் வயதில், கி.ரா. கோபாலன் காலமானார். (கி.ரா. கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.)

இலக்கிய இடம்

கி.ரா. கோபாலன் சிறுகதைகள்
அபலை அஞ்சுகம்

கி.ரா. கோபாலன், பொதுவாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவர். இதழியல் அனுபவம் கொண்டவராதலால் கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, துணுக்கு என்று பல களங்களிலும் தனது பங்களிப்புகளைத் தந்தார். தமிழில் பொதுவாசிப்புக்குரிய இதழியல் எழுத்து உருவாகி வந்த காலகட்டத்தின் ஆளுமைகளில் ஒருவர்.

நூல்கள்

சிறுகதைகள்
  • கல்யாணி
  • பகையாளி மகன்
  • மூக்குப் பொட்டு
  • காதற்கடிதம்
  • சாண் வயிறு
  • தீப்பெட்டி
  • வில்வவனம் சுந்தரம்
  • மேனகையின் கணவன்
  • அதிர்ஷ்டசாலி
  • கருணை
  • ஒரு சூடு
  • கடிதம் (தொகுப்பு)
  • கதையும் கடவுளும் (தொகுப்பு)
  • கதை கேட்ட பேய் (தொகுப்பு)
நாவல்கள்
  • ராஜாளி மடம்
  • ராணி மாதவி
  • கந்தருவ வாழ்க்கை
  • வீணையடி நீ எனக்கு
  • அபலை அஞ்சுகம்
  • மாலவல்லியின் தியாகம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2023, 17:19:15 IST