under review

பொன்னியின் செல்வன் (நாவல்)

From Tamil Wiki

To read the article in English: Ponniyin Selvan (novel). ‎

பொன்னியின் செல்வன் (நாவல்)
நந்தினி ஓவியர் மணியம்
பொன்னியின் செல்வன் தொடர்கதைச் சித்தரிப்பு
பொன்னியின் செல்வன், கல்கி அட்டை

பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . 'பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது.

எழுத்தும் பதிப்பும்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் அக்டோபர் 29,1950 முதல் 1955-ம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. டிசம்பர் 5, 1954-ல் பொன்னியின் செல்வன் வானதி பதிப்பக வெளியீடாக நூல்வடிவம் கொண்டது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் ஏராளமான பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பொன்னியின் செல்வனுக்கு முன் சிவகாமியின் சபதம் நாவலும் அதற்கு முன் பார்த்திபன் கனவு நாவலும் கல்கியால் எழுதப்பட்டன.

ஓவியங்கள்

பொன்னியின் செல்வன் நாவலின் வெற்றிக்கு அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத்தக்க காரணங்களாக அமைந்தன. முதல்முறை வெளியானபோது கல்கியின் நண்பரான மணியம் ஓவியம் வரைந்தார். இந்தியச் சுவரோவிய முறையின் அழகியலை பின்பற்றி வரையப்பட்டவை மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியங்கள். கல்கி வார இதழில் ஐந்துமுறை ஓவியங்களுடன் தொடராக வந்தது..

  • 1950 - 1954 வரை மணியம் ஓவியம்.
  • 1968 - 1972 வரை வினு ஓவியம்.
  • 1978 - 1982 வரை மணியம் ஓவியம்.
  • 1998 - 2002 வரை பத்மவாசன் ஓவியம்.
  • 2014 முதல் வேதா ஓவியம்.

வரலாற்றுப் பின்னணி

பொன்னியின் செல்வன், பத்மவாசன் சித்தரிப்பு

எழுத்தாளர் கல்கி, K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும் T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை எழுதினார். இந்நாவல் நிகழும் காலம் பொ.யு. 957 முதல் 973 வரை ஆட்சி செய்த சுந்தரசோழரின் இறுதி ஆண்டுகள். இவர் அரிஞ்சய சோழருக்கும் அன்பில் பட்டயங்களில் பெயர் குறிப்பிடப்படும் அரசியான வைதும்பை நாட்டு கல்யாணிக்கும் பிறந்தவர். இவர் இரண்டாம் பராந்தக சோழர் என அழைக்கப்பட்டார். இவருடைய மகன் ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழர்கள் சேவூர் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனை தோற்கடித்து கொன்றார்கள் என லெய்டன் பட்டயங்கள், கரந்தை பட்டயங்கள், திருவாலங்காடு பட்டயங்களில் குறிப்பு உள்ளது. ஆதித்த கரிகாலன் 'வீரபாண்டியன் தலைகொண்ட’ என்னும் பெயர் பெற்றார். இப்போரில் பாண்டியர்களுக்கு ஈழ மன்னர் நான்காம் மகிந்தர் உதவி செய்தார் என இலங்கை வரலாற்று நூல் 'மகாவம்சம்' குறிப்பிடுகிறது.

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தியை உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது. ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றத்திற்காக அரசன் ஆணைப்படி வேதியர் சிலருக்கு திருவீரநாராயண சதுர்வேதிமங்கலச் சபை தண்டனை அளித்ததை ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர சோழருக்குப் பிறகு பதவியேற்ற மதுரந்தகன் முடிசூடிக்கொண்டபின்னர் உத்தமசோழன் என்னும் பெயருடன் பதினாறாண்டுகள் ஆட்சி செய்தான். அந்தப் பதினாறு ஆண்டுகளிலும் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதில் இருந்து உத்தமசோழனே கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அருள்மொழித் தேவர் என்னும் ராஜராஜசோழன் தன் சிறியதந்தை உத்தமசோழர் எனும் மதுராந்தகருக்கு அரசுப்பதவியை மனமுவந்து அளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இச்செய்திகளின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் புனையப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது.

  • புதுவெள்ளம்
  • சுழற்காற்று,
பொன்னியின் செல்வன் விளம்பரம்
  • கொலைவாள்
  • மணிமகுடம்
  • தியாக சிகரம்.

கதைச்சுருக்கம்

வாணர் குல வீரனான வல்லவரையன் வந்தியத்தேவன் சோழச்சக்கரவர்த்தி சுந்தரசோழனின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவரசன் ஆதித்த கரிகால சோழனிடமிருந்து தஞ்சையில் இருக்கும் சுந்தர சோழச் சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி குந்தவை பிராட்டியாருக்கும் ஓர் ஓலையை கொண்டு செல்கிறான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஒரு சதி நடப்பதைக் காண்கிறான். சோழ இளவரசராக பட்டம் கட்டப்பட்ட ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான மதுராந்தகச் சோழரைச் சோழ பேரரசுக்குச் சக்கரவர்த்தியாக்க அவர்கள் எண்ணுகிறார்கள் . சுந்தர சோழ சக்கரவர்த்தியின் நண்பரும், சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் போர்த்தளபதிகளாக இருந்து வந்த பழுவூர் சிற்றரசர் வம்சத்தை சேர்ந்தவருமான பெரிய பழுவேட்டரையர் இந்தச் சதியை ஒருங்கிணைக்கிறார். அதில் பல சிற்றரசர்களும் தளபதிகளும் பங்குகொள்கின்றனர்.

சோழநாட்டின் முந்தைய வரலாறு இது. சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர் சிவபக்தியில் மூழ்கி வாழ்ந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே அடுத்த அரியணைக்கு உரியவராகக் கண்டராதித்தர் ஆனார். ஆனால், அரியணையில் அமர விருப்பம் இல்லாததாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுத்ததாலும், போரில் அனுபவசாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரைச் சக்கரவர்த்தியாகினார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன் அவர் மகன் சுந்தர சோழர் அரசரானார். முறைப்படி கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை அது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும் அவரது மனைவியுமான செம்பியன் மாதேவியும் தங்கள் மகன் அரசனாக வேண்டாமென்றும் சிவபக்தன் ஆனால் போதும் என்றும் முடிவெடுத்திருந்ததும் மதுராந்தகருக்கு பதிலாக சுந்தர சோழர் அரசர் ஆக காரணங்களாக அமைந்தன.

வந்தியத்தேவனும் குந்தவையும் (மணியம்)
பொன்னியின் செல்வன் கல்கி விளம்பரம்

மதுராந்தகர் பெரியவராகி தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டபோது அதுவே முறை என எண்ணிய பெரிய பழுவேட்டரையர் அவருடைய அதிகார விருப்பை ஆதரிக்கிறார். மதுராந்தகரின் மனத்திலும் அரியணை ஆசையைத் தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளைய ராணி என அழைக்கப்படும் நந்தினி. முதியவரான பழுவேட்டரையரை மணந்து அவரை ஆட்டிப் படைக்கும் நந்தினி பாண்டியர்களால் அரசி என நினைக்கப்படுபவள். அவளுக்கு பின்னாலிருந்து பாண்டியர்களின் ஆபத்துதவிப் படையும் அதன் தலைவனான ரவிதாசனும் இயக்குகிறார்கள். பாண்டியர்களைப் போரில் தோற்கடித்து பாண்டிய அரசனை ஆதித்த கரிகாலன் கொன்றதனால் அதற்குப் பழிவாங்க அவர்கள் எண்ணுகிறார்கள்.

வந்தியத்தேவன் குந்தவையைச் சந்தித்து அவள் காதலுக்குரியவன் ஆகிறான். ஈழநாடு சென்று ஆதித்த கரிகாலனின் தம்பி அருள்மொழிவர்மனைச் சந்தித்து சதியைப் பற்றிச் சொல்கிறான். நாடு திரும்பும் அருள்மொழிவர்மன் கப்பல் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கி உயிர்தப்பி நாகை சூடாமணி விகாரத்தில் படுத்திருக்கிறான். செய்தி அறிந்து தஞ்சைக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் மர்மமாக கொல்லப்படுகிறான். அவனைக் கொன்றது எவர் என்னும் வினாவுடன் நீளும் நாவல் நந்தினிக்கும் ஆதித்தகரிகாலனுக்கும் இருந்த பழைய காதல், திடீரென்று காணாமலான நந்தினியை பாண்டியன் ஒளிந்திருக்கும் குகையில் அவன் மனைவியாக கண்ட ஆதித்த கரிகாலன் அவள் கண்ணெதிரே பாண்டியனை கொன்றது ஆகிய செய்திகளைச் சொல்கிறது.

வந்தியத்தேவன், (மணியம்)

நந்தினியின் பின்னணியும் அவளுக்கும் சுந்தர சோழருக்குமான உறவும் நாவலில் விரிகிறது. சேந்தன் அமுதன் என்னும் பூ கட்டும் இளைஞனுக்கும் பூங்குழலி என்னும் படகோட்டிக்கும் இடையேயான உறவு விவரிக்கப்படுகிறது. நாவல் பல முடிச்சுகளை அவிழ்த்துச் சென்று மதுராந்தகன் உண்மையில் கண்டராதித்தரின் மகன் அல்ல, சேந்தன் அமுதனே அந்த மகன் எனக் காட்டுகிறது. எதிரிகளை வென்று, சதிகளை அவிழ்த்து, நாட்டை உரிமை கொள்ளும் அருள்மொழிவர்மனே முடிசூட வேண்டுமென அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மன் குலமுறைப்படி மதுராந்தகனாகிய சேந்தன் அமுதனே அரசன் ஆகவேண்டும் என்று சொல்லி மணிமுடியை தியாகம் செய்கிறான். வந்தியத்தேவன் குந்தவையை மணக்கிறான். அருள்மொழிவர்மன் வானதியை மணக்கிறான் பின்னாளில் அருள்மொழிவர்மன், ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என நாவல் கூறிமுடிகிறது.

கதைமாந்தர்கள்

  • அருள்மொழிவர்மன் - ராஜராஜ சோழன்
  • வல்லவரையன் வந்தியத்தேவன் - ராஜராஜ சோழனின் நண்பன்
  • குந்தவை - அருள்மொழிவர்மனின் தமக்கை
  • நந்தினி - பழுவூர் இளைய ராணி, பெரிய பழுவேட்டரையரின் இளைய மனைவி
  • ஆதித்த கரிகாலன் - ராஜராஜ சோழனின் சகோதரர்
  • வானதி - கொடும்பாளூர் இளவரசி. ராஜராஜ சோழனின் முதல் மனைவி
  • ஆழ்வார்க்கடியான் - உளவு பார்ப்பவர். வீரவைணவர், அநிருத்த பிரம்மராயரின் பணியாள்.
  • மந்தாகினி - வாய்பேச இயலாமையால் ஊமைராணி என்றழைக்கப்படுபவர். ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழரின் காதலி
  • பெரிய பழுவேட்டரையர் - தஞ்சை கோட்டைத்தலைவர். அரசருக்கு அடுத்த இடத்தில் வலிமையான அதிகாரத்தில் இருப்பவர்
  • செம்பியன் மாதேவி - கண்டராதித்த சோழனின் மனைவி. உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை
  • சின்ன பழுவேட்டரையர் - பெரிய பழுவேட்டரையரின் தம்பி.
  • அநிருத்த பிரம்மராயர் - சுந்தரசோழரின் முதலமைச்சர், பின்னர் ராஜராஜ சோழனுக்கும் ஆசிரியர்.
  • பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி - சேனாதிபதி. கொடும்பாளூர் அரசர்
  • பூங்குழலி - ஓடக்காரப் பெண். உத்தம மதுராந்தக சோழரின் பிற்கால மனைவி
  • சேந்தன் அமுதன் - உத்தம மதுராந்தக சோழ தேவர்
  • போலி மதுராந்தகர் - பாண்டிய நாட்டு இளவல். அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்
  • ரவிதாசன் - பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுள் ஒருவர் (தளபதி)
  • கந்தமாறன் - சம்புவரையர் குலத்து இளவரசன்,வந்தியத் தேவனின் நண்பன்
  • மணிமேகலை - சம்புவரையர் குலத்து இளவரசி. கந்தமாறனின் தங்கை, வந்தியத்தேவனை விரும்பியவள்
  • பார்த்திபேந்திரன் - பல்லவ குலத்தவன். ஆதித்த கரிகாலனின் நண்பன்

இலக்கியச் செல்வாக்கு

பொன்னியின் செல்வன் அலெக்ஸாண்டர் டூமாவின் திரீ மஸ்கட்டீர்ஸ் ( The Three Musketeers ) நாவலின் வலுவான செல்வாக்கு கொண்ட படைப்பு. வந்தியத்தேவனில் டி ஆர்ட்டக்னான் ( D'Artagnan), நந்தினியில் மிலாடி டி விண்டர் ( Milady de Winter ) ஆகியோரின் சாயல் அழுத்தமாக உண்டு. ஆனால் நேரடித் தழுவலோ, இலக்கியத் திருட்டோ அல்ல. சோழர்களின் வரலாற்றுப் பின்னணியிலும், அக்கால பண்பாட்டுப் பின்னணியிலும் நாவலைத் தெளிவாகக் கட்டமைக்க ஆசிரியரால் இயன்றுள்ளது. இந்திய மொழிகளின் தொடக்ககால வரலாற்றுநாவலாசிரியர்கள் பெரும்பாலும் அனைவருமே அந்த புனைவுக்கட்டமைப்பை அலக்ஸாண்டர் டூமா, லிட்டன்பிரபு, புஷ்கின் மற்றும் வால்டர் ஸ்காட் ஆகியோரிடமிருந்தே எடுத்துக்கொண்டனர்.

இலக்கிய இடம்

பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயல் கொண்ட நாவல். மகாபாரதத்தில் பீஷ்மர் நியாயம், அறம் ஆகியவற்றுக்கும் மேலாக குலவரிசையை முன்வைப்பவர். அதே பார்வை கொண்ட பெரிய பழுவேட்டரையர் பீஷ்ம பிதாமகர் போலவே இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். யுதிஷ்டிரரின் குணச்சித்திரம் அருண்மொழி வர்மனுக்கு உள்ளது. (சிவகாமியின் சபதம் ராமாயணச் சாயல் கொண்டது) இந்த இதிகாசச்சாயம் இந்நாவலை தமிழ் மனங்களில் ஆழமாக நிலைநிறுத்துகிறது.

மிக இளமையிலேயே வாசிக்கத்தக்க எளிமையான மொழி கொண்ட நாவல். எதிர்மறைப் பண்புகள் அற்றதும் உயர்மனநிலைகளை உருவாக்குவதுமான படைப்பு. காமம் மிகை வன்முறை போன்றவை அற்றது. எனவே இறுதிவரை நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. கதாபாத்திரங்கள் சாகச நாவல்களுக்குரிய மிகை இல்லாமல் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வீரதீரச்செயல்கள், போர்கள் ஆகியவை மிகையாக காட்டப்படவில்லை. பெரும்பாலும் தனிமனித உணர்வுகள் மற்றும் அரண்மனைச் சதிகள் வழியாகவே கதை செல்கிறது. தமிழகத்தின் பொற்காலம் எனப்படும் காலகட்டத்தையும், அதன் தலைமை ஆளுமை எனப்படும் ராஜராஜ சோழனின் இளமையையும் காட்டுவதனால் முக்கியமான படைப்பாக ஆகிறது. இலக்கிய வகைமையில் வரலாற்றுக் கற்பனாவாதக் கதை என வரையறுக்கப்படுகிறது.

இலக்கியத் தொடர்ச்சிகள்

பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக ராஜராஜ சோழனை முன்வைத்து பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன.

  • விக்ரமன் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகி என்னும் நாவலை எழுதினார்.
  • அரு. ராமநாதன் "ராஜராஜ சோழன்" என்னும் நாடகத்தை எழுதினார்.
  • பாலகுமாரன் "உடையார்" என்னும் பெருநாவலை எழுதினார்.
  • சாண்டில்யன் எழுதிய மன்னன் மகள் ராஜேந்திர சோழனின் காலகட்டத்தைச் சித்தரிக்கிறது. அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரமாக வருகிறார்.
  • டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை மலர்சோலை மங்கை என்ற நாவலாக எழுதினார்.
  • எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ் பொன்னியின் செல்வ கதை முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வுகளை காவிரி மைந்தன் என்ற நாவலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது

மொழிபெயர்ப்பு

பொன்னியின் செல்வன் இதுவரை இந்திரா நீலமேகம், சி.வி. கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன், வரலொட்டி ரெங்கசாமி ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு சுருக்கமான மொழியாக்கங்களும் உள்ளன.

பிற வடிவங்கள்

வரைகலை நாவல்
  • பொன்னியின் செல்வன் நாவலை முழுக்க முழுக்க 1,200 வண்ணப்படங்களுடன் 2017-ல் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • ஓவியர் தங்கம் பொன்னியின் செல்வன் நாவலை 1,050 சித்திரங்களாக வரைந்து 10 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
நாடகத்தின் நுழைவு சீட்டு - மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு
நாடகத்தின் நுழைவு சீட்டு - மேஜிக் லாண்டர்ன் குழுவின் தயாரிப்பு
நாடகம்
  • பொன்னியின் செல்வன் நாவல் Magic Lantern குழுவினரால் 1999-ல் குமரவேல், பிரவீன் ஆகியோரால் நாடகமாக ஆக்கப்பட்டது.
  • பொன்னியின் செல்வன் நாவலை 20-ல் சென்னையை சேர்ந்த டி.வி.கே. கல்ச்சுரல் குழுவினர் மேடை நாடகமாக தயாரித்து அரங்கேற்றியுள்ளனர். எழுதி இயக்கியவர் மல்லிக்ராஜ்
திரைப்படம்
  • பொன்னியின் செல்வன் நாவலை திரைப்பட இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். அதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:32 IST