under review

திருச்சி பாரதன்

From Tamil Wiki
திருச்சி பாரதன் (ர. தங்கவேலன்)
எழுத்தாளர் திருச்சி பாரதன்
எழுத்தாளன் இதழில் திருச்சி பாரதனின் கவிதை
ஜெ. ஜெயலலிதாவுடன் திருச்சி பாரதன்
’அப்பாவின் ஆசை’ நாடக வெற்றி விழா

திருச்சி பாரதன் (ர. தங்கவேலன்; செப்டம்பர் 30, 1934-நவம்பர் 26, 2008) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர். சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ர. தங்கவேலன் என்னும் இயற்பெயர் கொண்ட திருச்சி பாரதன், செப்டம்பர் 30, 1934 அன்று, திருச்சியில், கோ. ரங்கசாமி-காமாட்சி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வி இறுதி வகுப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

திருச்சி பாரதன், திருச்சி வெல்லமண்டியில் சில மாதங்கள் கணக்கராகப் பணிபுரிந்தார் பிறகு, திருச்சி ‘தினத்தந்தி’ இதழில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: கிருஷ்ணம்மாள்.

இலக்கிய வாழ்க்கை

திருச்சி பாரதனின், ‘பூனை பிழைத்தது' என்னும் தலைப்பிலான முதல் படைப்பு 1946-ல் பாலர் மலரில் வெளியானது. தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘டமாரம்’, ‘டிங்டாங்’ போன்ற சிறார் இதழ்களில் பல படைப்புகள் வெளியாகின. அழ.வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு தானும் அது போன்ற ஒரு பாடலை எழுதினார். அது வள்ளியப்பா ஆசிரியராக இருந்த ‘பூஞ்சோலை’ இதழில் வெளியானது. ‘பூஞ்சோலை’ இதழில் தொடர்ந்து பாரதனின் படைப்புகள் வெளியாகின.

ர. தங்கவேலன் என்ற தனது இயற்பெயரில் எழுதி வந்தவர், பின் கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் படைப்புகள் மீது கொண்ட ஈர்ப்பால், ‘கு.சா.கி. தாசன்’ என்ற புனை பெயரில் எழுதினார். பிற்காலத்தில் இவரைச் சந்தித்த கு.சா. கிருஷ்ணமூர்த்தி, ’யாருக்கும் தாசனாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை’ என்று கூறி, ‘திருச்சி பாரதன்’ என்ற பெயரில் எழுதப் பணித்தார். ர. தங்கவேலன் ‘பாரதன் ஆனார். அப்பெயரிலேயே இறுதிவரை இயங்கினார்.

திருச்சி பாரதனின் படைப்புகள் ஜிங்லி, கண்ணன், ரத்னபாலா, எழுத்தாளன், முல்லைச்சரம், கல்கண்டு போன்ற இதழ்களில் வெளியாகின. வானொலியிலும் கதை, கவிதை, நாடகம், உரைச் சித்திரம் எனப் பங்களித்தார். திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட இவரது ‘புதையல்’ என்ற கதைப் பாடல், 27 வாரங்கள் தொடர்ந்து திருச்சி வானொலியில் ஒலிபரப்பப்பானது.

தொடக்கக் கல்வி இயக்ககம், தேசியக் கரும்பலகைத் திட்டத்தின் கீழ், இவரது ‘பூந்தோட்டம்’ என்னும் தலைப்பிலான குழந்தை இலக்கிய பாடல் நூலை 6000 பிரதிகள் வாங்கி தொடக்கப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது.

திருச்சி பாரதன், கதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், பாடல்கள் என 75 நூல்கள் எழுதினார். முருகன் மீது திருச்சி பாரதன் எழுதிய ‘குகன் கீதாஞ்சலி’, ’கந்தன் காவியம்’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பல மாணவர்கள் இவரது படைப்புகளை ஆராய்ந்து எம்.பில் பட்டம் பெற்றனர். டாக்டர் பூவண்ணன், திருச்சி பாரதனை அழ. வள்ளியப்பா தலைமையிலான குழந்தைக் கவிஞர் பரம்பரையைச் சேர்ந்த நான்காவது கவிஞராகக் குறிப்பிட்டுள்ளார்.

இதழியல்

திருச்சி பாரதன், எழுத்தின் மீதான ஆர்வத்தில், பனிரெண்டு வயதில் ‘பாலபாரதம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழை நடத்தினார். நண்பரான ஐ. சண்முகநாதனும் (எழுத்தாளர் நாதன்) அந்த இதழில் பங்களித்தார்.

நாடகம்

1965-ம் ஆண்டு, திருச்சிபாரதன் எழுதிய ‘அப்பாவின் ஆசை’ என்ற சிறார்களுக்கான நாடகம், டி.கே.ஷண்முகம் கலைக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தில் சிறுவர்களில் ஒருவராக நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த நாடகம் 1970-ல் நூலாக வெளிவந்தது.

திருச்சி பாரதன் எழுதி திருவரங்கம் ரேவதி முத்துசாமி, சிறார்களைக் கொண்டு இயக்கிய ‘கந்தன் காவியம்’ நாட்டிய நாடகம் 700 முறைக்கு மேல் அரங்கேறியது.

குக நானூறு இசைப்பாடல் நிகழ்வில் கிருபானந்த வாரியார், சீர்காழி கோவிந்த ராஜனுடன்

இசை

திருச்சி பாரதன், சிறார் பாடல்கள் மட்டுமல்லாமல், தமிழிசை, பக்தியிசைப் பாடல்களும் புனைந்துள்ளார். திருமாலுக்குத் திருப்பாவை போல முருகனுக்காக ‘முருகுப்பாவை’ என்ற நூலையும், ‘குகநானூறு’, ‘சுகநானூறு ’, ‘குகன் கீதாஞ்சலி’ போன்ற நூல்களையும் எழுதினார். இவரது பாடல்களை திருபுவனம் ஜி.ஆத்மநாதன், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் பாடினர்.

திரைப் பாடல்

திருச்சி பாரதன், திரைப்பாடல் ஆசிரியராகச் செயல்பட்டார். கீழ்காணும் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

  • கந்தர் அலங்காரம்
  • தோடி ராகம்
  • மேல் நாட்டு மருமகள்
  • ராக பந்தங்கள்

பொறுப்புகள்

  • சென்னை குழந்தை எழுத்தாளர் சங்க திருச்சி மாவட்டப் பிரதிநிதி
  • திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளர்
  • சென்னைத் தமிழ் கவிஞர் மன்றத்தில் செயற்குழு உறுப்பினர்
  • திருவையாறு தமிழிசை மன்றத் துணைத் தலைவர்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விருது
முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனிடமிருந்து கலைமாமணி விருது

விருதுகள்

  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசும், நினைவுக் கேடயமும் - ‘குகநானூறு’ நூலுக்காக
  • புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆலயத்தின் சாந்தானந்த சுவாமிகள் அளித்த ‘கவிஞர் திலகம்’ பட்டம்.
  • சென்னை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கிய ’முத்தமிழ் வித்தகர்' பட்டம்.
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய வள்ளியப்பா இலக்கிய விருது
  • இயற்றமிழ் மாமணி
  • கவிமாமணி
  • தெய்வீகக் கவிமணி
  • இசைப் பாவரசு
  • சாதனைக் கவிஞர்
  • கவித் தென்றல்
  • இசைச் சிற்பி
  • நாடகப் பாவலர்
  • கந்தன் காவியக் கலை அரசு

மறைவு

திருச்சி பாரதன், நவம்பர் 26, 2008-ல் காலமானார்.

அன்பு பாலம் - திருச்சி பாரதன் பவள விழாச் சிறப்பிதழ்

ஆவணம்

பாலம் கலியாணசுந்தரத்தின் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் ‘அன்பு பாலம்’ இதழ், 2009-ல் , திருச்சி பாரதனின் பவள விழா ஆண்டையொட்டி, சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது.

இலக்கிய இடம்

சிறார் இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் திருச்சி பாரதன். இவரது இசைப் பாடல்களும், நாடகங்களும் சிறார் இலகியத்துக்கு வளம் சேர்த்தன. அழ. வள்ளியப்பா, பூவண்ணன், பூதலூர் முத்து போன்ற சிறார் இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் இடம் பெறத் தக்கவராக மதிப்பிடப்படுகிறார் திருச்சி பாரதன்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • இருபது அம்சத் திட்டக் கதைகள்
  • ரஷியாவுக்குப் போகிறேன்
  • வெண்புறாக்கள்
  • அப்பாவின் ஆசை
  • குறிஞ்சிபாபு
  • அழியா ஓவியம்
  • அண்ணாவழியில்... (நெடுங்கதைகள்)
கவிதை/இசைப் பாடல்கள்
  • அழகு நிலா
  • பாலர் பூங்கா
  • பூந்தோட்டம்
  • வள்ளுவர் வழியில்
  • இசைத்தென்றல்
  • செந்தமிழ்ச் சோலையிலே
  • தமிழிசை அமுதம்
  • தமிழ் நாற்பது
  • குகநானூறு
  • சுகநானூறு
  • குகனாயிரம்
  • அய்யப்பன் அருளிசை
  • அன்னை மீனாட்சி
  • ஆறுபத்து வீடுடைய அழகன்
  • ஆனைமுகன் அலங்காரம்
  • ஓம் சக்தியே
  • கண்ணனின் தேவகானம்
  • காற்றினிலே வரும் கீதம்
  • குன்றக்குடிக் குமரன்
  • சண்மதச் சோலையிலே
  • சிந்தையில் வாழும் ஸ்கந்தகிரி
  • சிவபெருமான் இசை அமுதம்
  • தண்டாயுதபாணி வழிநடைப்பாடல்கள்
  • திருமால் இசைமாலை
  • தையல் நாயகி வழிநடைப்பாடல்கள்
  • பழனிக்கு வாருங்கள்
  • பார்வதிபாலன் பாமாலை
  • புவனேஸ்வரி தாயே
  • புவனேஸ்வரி புகழ் அருவி
  • ஸ்கந்தகிரி வேலன் பாமாலை
  • போற்றி சூழ் புனிதன்
  • மாரியம்மன் துதி
  • முருகா போற்றி
  • முருகுப் பாவை
  • வயலூர் அறுபது
  • வயலூர் வள்ளல்
  • உத்தமன் முத்து (நெடுங்கவிதை)
  • குழந்தைப் பாடல்கள் (நெடுங்கவிதை)
நாவல்
  • அனாதைப் பொன்னன்
  • துப்பறியும் குப்பு
  • துப்பறியும் சுந்தர்
  • போர் முடிந்தது
  • உமா உன்னை மறப்பதா? (நெடுங்கதை)
நாடகம்
  • அப்பாவின் ஆசை
  • பலாப்பழம்
  • அமர காவியம்
  • இலட்சியத்தை நோக்கி
  • கந்தன் காவியம்
  • நாடகம் பலவிதம்
  • பூம்புகார் கலைச்செல்வி (கவிதை நாடகம்)
  • மண், பெண், பொன் (தத்துவ நாடகம்)
  • இராமாயணம்
  • ஓம்சக்தி (சக்திலீலை)
  • கோகிலா ஒரு காவியம்
  • கோகுலத்துக் கண்ணன்
  • சிவகாமியின் சபதம்
  • சுதந்திரச் சுடர் (நேரு வரலாறு)
  • பாவேந்தர்
  • ஒருகாற் சிலம்பு நியாயம் கேட்கிறது (சிலப்பதிகாரம்)
கட்டுரை நூல்கள்
  • பெருமை கொள்வாய் தமிழா
  • தினத்தந்தி வரலாறு
பிற படைப்புகள்
  • இயேசு இசைக்காவியம்
  • மீண்டும் ஒரு மகான் (பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)
  • திருக்குறள் இசைப்பாடல்கள்
  • குகன் கீதாஞ்சலி
  • காலங்களை வெல்பவர் கலைஞர்

உசாத்துணை


✅Finalised Page