under review

தினத்தந்தி

From Tamil Wiki
தினத்தந்தி
தினத்தந்தி 1961

தினத்தந்தி (1942) தமிழ் நாளிதழ். தமிழ் நாளிதழ்களில் விற்பனையில் முதலிடம் பெற்றிருக்கிறது. எளியமொழியில் நேரடியாகச் செய்திகளை வெளியிடுவதில் முன்னோடியானது.

தொடக்கம்

தினத்தந்தி 1942
தினத்தந்தி

சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து மதுரை முரசு என்னும் வாரம் இருமுறை செய்தியிதழை 1942-ல் நடத்தினார். அது தடைசெய்யப்படவே தமிழன் என்னும் இதழை ஆகஸ்ட் 23, 1942-ல் நடத்தினார். அதை நடத்திக்கொண்டிருக்கையிலேயே தினத்தந்தி என்னும் நாளிதழை நடத்த அக்டோபர் 15, 1942-ல் பதிவுசெய்தார். தினத்தந்தி முதலில் தந்தி என்னும் பெயரில் வெளிவந்தது. பின்னர் தினத்தந்தி என பெயர் மாற்றம் பெற்றது. தினத்தந்தி இதழ்கள் முதலில் 500 பிரதிகள் அச்சிடப்பட்டன. ஓரிரு மாதங்களிலேயே எட்டாயிரம் பிரதிகள் அச்சிடும் நிலை உருவானது. மிகவிரைவாகவே தினத்தந்தி வெற்றிகரமான நாளிதழாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

தினத்தந்தி 1960 வரை
தினத்தந்தி 1960க்குப்பின்

தினத்தந்தியின் வெற்றிக்கு காரணங்கள்

தினத்தந்தியின் வெற்றிக்குக் காரணங்கள் என சில குறிப்பிடப்படுகின்றன:

  • 1942-ல் உலக அளவில் இரண்டாம் உலகப்போரும், இந்தியாவில் சுதந்திரப்போராட்டமும் உச்சம் கொண்டிருந்தன. இந்தியர்களில் ஏராளமானவர்களின் உறவினர்கள் போர் நிகழ்ந்த வெளிநாடுகளில் வாழ்ந்தனர். பலர் ராணுவத்தில் இருந்தனர். போர்க்காலமாகையால் விலைவாசிகளும் ஏறிக்கொண்டிருந்தன. ஆகவே இந்தியாவெங்கும் மக்கள் செய்திகளை வாசிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இந்திய செய்திச்சந்தையின் உச்சகட்ட காலமே அதுதான். அப்போதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட பெரும்பாலான நாளிதழ்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ந்தன. தினத்தந்தி அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது.
  • தினத்தந்திதான் தமிழக நாளிதழ்களில் சென்னைக்கு வெளியிலிருந்து வந்த முதல் நாளிதழ்.அக்காலத்தில் செய்திகள் தந்திவழியாகவே பரிமாறப்பட்டன. தந்திக்கான செலவை தினத்தந்தி மட்டுமே ஏற்கவேண்டும் என்பது கூடுதல் செலவாக இருந்தாலும் தமிழகத்தின் மையத்தில் மதுரை இருந்தமையால் மற்ற நாளிதழ்கள் சென்றடையாத தென்தமிழ்நாட்டுப்பகுதிகளுக்கு தினத்தந்தி விரைவில் சென்றடைந்தது. .
  • அதுவரை வந்த நாளிதழ்களிலிருந்து தினத்தந்தி மாறுபட்டிருந்தது. அன்றைய செய்திகளை மறுநாளே வெளியிடவேண்டும் என்னும் உறுதியை தினத்தந்தி கொண்டிருந்தது. தினத்தந்தி செய்திகளை வெளியிட்டு கூடவே மற்ற நாளிதழ்களில் இச்செய்தி நாளைதான் வெளிவரும் என்று பிரசுரிக்கும் வழக்கம் கொண்டிருந்தது.
  • தினத்தந்தி அக்காலத்து அச்சிதழ்களுக்கு மாற்றாக மிகக்குறைவான கட்டணத்தில் விளம்பரங்களை வெளியிட்டது. ஆகவே அதுவரை விளம்பரம் வெளியிடும் எண்ணமில்லாதிருந்த வணிகர்கள் பலர் விளம்பரங்கள் அளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். விளம்பரங்களின் கட்டணத்தை குறைத்து எண்ணிக்கையை பெருக்குவது தினத்தந்தி கடைப்பிடித்த வழியாக இருந்தது.
  • தினத்தந்தி ஒவ்வொரு ஊரிலும் முகவர் - செய்தியாளர் என இரு வேலைகளையும் செய்பவரை உருவாக்கியது. அவர் நாளிதழ் விற்பனையாளராகவும் பலசமயம் இருந்தார். ஆகவே மிகப்பரவலான உள்ளூர் செய்திகளை தினத்தந்தி வெளியிட்டது. மிகச்சிறிய ஊர்களில் இருந்தும் விளம்பரங்களைப் பெற்றது.
  • மற்ற நாளிதழ்களிலிருந்து மாறுபட்டு தினத்தந்தி செய்திகளுக்கு இணையாகவே கேளிக்கை விஷயங்களையும் வெளியிட்டது. சினிமாச்செய்திகள், நாடகச்செய்திகள், கருத்துப்படங்கள், கதைகள் வெளியிட்டது
  • அக்காலத்து இதழ்கள் வெளிப்படையான அரசியல்சார்பு கொண்டிருந்தன. தினத்தந்தி தொடக்கம் முதலே அப்படி வெளிப்படையான அரசியல் சார்பு கொண்டிருக்கவில்லை. சி.பா.ஆதித்தனாரின் அரசியல்சார்பையேகூட தினத்தந்தி பிரச்சாரம் செய்யவில்லை. நடுநிலை இதழாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது

தினத்தந்தியின் அமைப்பு

தினத்தந்தி ஆங்கில எளிய நாளிதழ்களின் பக்கவடிவமைப்பு முறையையும், செய்திகளை அமைக்கும் முறையையும் பின்பற்றியது. மிகப்பெரிய எழுத்துக்களில் தலைப்புகள் அமைந்தன. அவை கொட்டை எழுத்துத் தலைப்புகள் எனப்பட்டன. பல ஆச்சரியக்குறிகள் கொண்டவை. தலைப்புகள் வாசகர்களை ஈர்ப்பவையாக இருந்தன. தலைப்புக்களை முழுச்சொற்றொடர்களில் அமைக்கும் பழைய வழக்கத்துக்கு மாறாக உடைந்த தனிச்சொற்களில் தலைப்புகளை வைத்தது. பரபரப்பான தலைப்புகள் தினத்தந்தியின் சிறப்பியல்புகள்.

தினத்தந்தியின் செய்திகளுக்கு எளிமையான ஒரு மாறாவடிவம் உருவாக்கப்பட்டது. தலைப்புக்கு கீழே முதல்பத்தியிலேயே செய்தி சுருக்கமாக அளிக்கப்படும். அதன் பின் பல துணைத்தலைப்புகளுடன் செய்தியின் பின்னணியும் நிகழ்வுகளும் விளைவுகளும் விளக்கப்படும். தொடர்செய்தி என்றால் முந்தைய செய்தி சுருக்கமாக அளிக்கப்படும்.

தினத்தந்தியின் கூறுமுறை அந்நாளிதழை மிகப்பரவலாக வாசிக்கப்படும் இதழாக ஆக்கியது. செய்திகளை நிகழ்வுகளாக, கதைபோலச் சித்தரிப்பது அதன் கூறுமுறை. நிகழ்வில் கூறப்பட்ட பேச்சுகளைக்கூட கற்பனையாக எழுதுவது தினத்தந்தியின் வழக்கம். செய்திக்கு தேவையில்லை என்றாலும் நுணுக்கமான தகவல்களையும் தினத்தந்தி அளிப்பதுண்டு.

விபத்து, கொலை, பிணங்கள் போன்றவற்றின் படங்களை வெளியிடுவதில்லை என்று சில நாளிதழ்கள் நெறிகள் கொண்டிருந்தன. தினத்தந்தி அத்தகைய நிகழ்ச்சிகளை படங்களுடன் வெளியிட்டது. எதிர்மறைச் செய்திகளை மக்கள் வாசிக்க விரும்பும் உளவியலை அறிந்திருந்தது.

ஆனால் தினத்தந்தி 1942 முதலே சமூகமோதல்களை உருவாக்கும் செய்திகளை வெளியிடுவதில்லை. பெரும்பாலும் சாதி, மதங்களின் பெயர்களையோ அவை சார்ந்த விவரங்களையோ வெளியிடுவதில்லை. எந்த தரப்பையும் சீண்டாமலேயே தினத்தந்தி செய்தி வெளியிட்டு வருகிறது. சிறு எதிர்ப்பு எழுமென்றால்கூட தினத்தந்தி அச்செய்திக்காக வருத்தம் தெரிவித்துவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

தினத்தந்தியின் மொழி

தினத்தந்தி இதழின் மொழிநடை அதன் வெற்றிக்கு முதன்மைக்காரணம். சி.பா.ஆதித்தனாரின் தமிழ்மொழிக் கொடை எனவும் அது கருதப்படுகிறது .அக்காலத்தில் வெளிவந்த நாளிதழ்கள் முறையாக தமிழ்கற்றவர்களை ஆசிரியர்களாக ஆக்கின. தமிழில் 1850-கள் வரை பொதுவான உரைநடை என ஒன்று இல்லை. செய்தி உள்ளிட்ட அனைத்துமே செய்யுளில்தான் சொல்லப்பட்டன. செய்யுள்நடையே கற்றோருக்கு உகந்த மொழிநடையாக இருந்தது. பின்னர் உரைநடை உருவாகி வந்தபோதுகூட அது செய்யுளின் சாயலையே கொண்டிருந்தது. அத்துடன் அன்று நாளிதழ்களில் செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டனர். அவை ஆங்கிலச் சொற்றொடரமைப்பைக் கொண்டிருந்தன.

தினத்தந்தி மக்கள் பேசும் மொழிக்கு அணுக்கமான, மிகமிக எளிமையான மொழிநடையை உருவாக்கிக் கொண்டது. செய்திகளை மொழியாக்கம் செய்யாமல் அவற்றின் சாராம்சத்தை பேச்சுமொழிக்கு அணுக்கமான மொழிநடைக்கு மாற்றி எழுதுவது தினத்தந்தியின் வழக்கம். வெவ்வேறு நடை கொண்ட எழுத்தாளர்களை ஆசிரியர்குழுவில் அமர்த்துவதற்கு பதிலாக இதழாசிரியர்களை தேர்வுசெய்து தங்களுக்கு உரிய நடையை அவர்களுக்குக் கற்பித்து பயன்படுத்திக் கொண்டது. சி.பா.ஆதித்தனார் நாள்தாள் இதழாளர் கையேடு என ஒரு வழிகாட்டுநூல் எழுதியிருக்கிறார். அதுவே ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது

தினத்தந்தி நடையின் தனித்தன்மைகள்

  • புதிய சொற்களை தவிர்த்து நன்கு பழகிய குறைந்தபட்ச சொற்களுக்குள்ளேயே சொற்றொடர்களை அமைப்பது. ஐந்தாயிரம் சொற்களே தினத்தந்தியில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. சபைமரபு, இடக்கரடக்கல் போன்றவற்றுக்காக வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக, நெடுங்காலம் ’செத்தார்’ என்ற சொல்லே எல்லா சாவுகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.
  • சராசரியாக பத்து சொற்களுக்கு மிகாத சிறிய சொற்றொடர்களை பயன்படுத்துவது. தமிழ் மொழியின் அமைப்பு எழுவாயில் தொடங்கி பயனிலையில் முடியவேண்டும் என்பதனால் சிறிய சொற்றொடர்களே குழப்பமின்றி, இலக்கணப்பிழை இன்றி அமைபவை.
  • முழுச்சொற்றொடர்களையே தேவையானபோதெல்லாம் ஒரே வகையில் திரும்பத் திரும்ப பயன்படுத்துவது. தினத்தந்தியின் பல சொற்றொடர்கள் புகழ்பெற்றவை. (உதா: ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்)இது கல்வியறிவு குறைவானவர்கள் விரைந்து வாசிக்க உதவியது.
  • தனித்தமிழியக்கம் உச்சத்தில் இருந்தபோதுகூட தினத்தந்தி மக்கள் பேசும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்திக்கொண்டது.

பதிப்புகள்

1943-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தினத்தந்தியின் சென்னை பதிப்பு தொடங்கியது. 1948 வரை சென்னை மயிலாப்பூரில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்ட சென்னை பதிப்பு 1959-ல் அண்ணாசாலை (மவுண்ட்ரோடு) மாற்றப்பட்டு 1960 முதல் எழும்பூரில் சொந்த கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல்,திருப்பூர் புதுச்சேரி, பெங்களூர், மும்பை , துபாய், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து தினத்தந்தி பதிப்பிக்கப்படுகிறது.

எல்லா பதிப்புகளும் சேர்ந்து தினத்தந்தி 2015 கணக்கின்படி 1,714,743 (ஜனவரி 2016 முதல் ஜூன் 2016 வரை எடுத்த கணக்கின் சராசரி இது ) பிரதிகள் தினமும் விற்பனையாதாகவும், இந்தியாவில் அதிகம் விற்கும் பத்து நாளிதழ்களில் இடம்பெறும் ஒரே தமிழ் இதழ் தினத்தந்தி என்றும் சொல்லப் படுகிறது.[1]

தினத்தந்தி இணைப்பிதழ்கள்

தினத்தந்தி கீழ்க்கண்ட இணைப்பிதழ்களை வெளியிடுகிறது

  • ஞாயிறு மலர்,குடும்ப மலர் (ஞாயிறு)
  • மாணவர் ஸ்பெஷல், கம்ப்யூட்டர் ஜாலம், வேலைவாய்ப்புச் செய்திகள் (திங்கள்)
  • ஆன்மிகம் (செவ்வாய்)
  • வானவில் (புதன்)
  • சிறுவர் தங்கமலர், வெள்ளிமலர் (வெள்ளி)
  • இளைஞர் மலர், முத்துச்சரம், உங்கள் முகவரி (சனி)
  • தமிழ் மாதபலன்கள் ( மாதம் இரண்டாம் திங்கள்)கின்றது.

தினத்தந்தியின் தொடர்பகுதிகள்

  • கன்னித் தீவு - தொடர் கதை
  • சாணக்கியன் சொல்
  • ஆண்டியார் பாடுகிறார்
  • தினபலன்
  • மக்கள் மேடை
  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
  • தினம் ஒரு தகவல்
  • தெரிந்து கொள்ளுங்கள்
  • வெளிநாட்டு விநோதம்

கிளைவெளியீடுகள்

தினத்தந்தி நிறுவனம் வெளியிடும் இதழ்கள்

தினந்தந்தி விருதுகள்

தினத்தந்தி அதன் நிறுவனர் ஆதித்தனார் பெயரில் இலக்கியத்திற்கும் தமிழாய்வுக்கும் விருதுகள் வழங்கி வருகிறது (சி.பா.ஆதித்தனார் விருதுகள்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:12 IST