under review

ராணி வாராந்தரி

From Tamil Wiki
ராணி 1986
ராணி 1970
ராணி

ராணி வாராந்தரி (1962) தமிழில் வெளிவரும் வார இதழ். தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படுகிறது.

தொடக்கம்

ராணி வாராந்தரி தினத்தந்தி குழுமத்தின் வார இதழ். சி.பா.ஆதித்தனார் 1942-ல் தமிழன் என்னும் வார இதழை நடத்தினார். தினத்தந்தி குழுமத்தில் இருந்து ஒரு வார இதழைத் தொடங்கும் நோக்கம் அவருக்கு இருந்தது. அதை தன் மகன் சிவந்தி ஆதித்தனிடம் 1962-ல் கூறினார். அந்த வாரஇதழ் பெண்கள் விரும்பிப் படிப்பதாக இருக்கவேண்டுமென விரும்பினார். ஆங்கில இதழ்களில் Woman என்னும் இதழ் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. அதைப்போல ஓர் இதழ் என திட்டமிட்டு பெண்மணி என பெயரிட திட்டமிட்டனர். ஆனால் அப்பெயரில் ஏற்கனவே ஓர் இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. ஆகவே இரண்டாமிடத்தில் விற்றுக்கொண்டிருந்த Princess என்ற இதழின் பெயரை எடுத்தாளலாம் என முடிவெடுத்தனர். இளவரசி என்னும் பெயர் பரவலாக அறியப்படாதது. அரசி என்னும் பெயர் அரிசி என ஒலிக்கும். ஆகவே ராணி என்னும் பெயர் தேர்வுசெய்யப்பட்டது.ராணி என்பது பரவலாக தென்னகத்தில் பெண்களுக்கு இடப்படும் பெயரும்கூட. சி.பா.ஆதித்தனாரின் அண்ணன் தையல்பாக ஆதித்தனார் வாராந்தரி என்னும் ஒரு இதழை திருநெல்வேலியில் இருந்து நடத்திவந்தார். அதை நினைவூட்டும் விதமாக வாராந்தரி என்று சேர்க்கப்பட்டது. ராணி வாராந்தரி என இதழின் பெயர் அமைந்தது.

ராணி முதல் இதழில் இருந்தே அ.மா.சாமி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்டு பலருக்கும் அளிக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. அக்கருத்துக்களின் அடிப்படையில் வடிவமும் உள்ளடக்கமும் மாற்றப்பட்டன. மே 13, 1962-ல் ராணி வாராந்தரி முதல் இதழ் வெளியாகியது.

வடிவம்

ராணி இதழ் 27x21 செண்டிமீட்டர் அளவில் தமிழன் வடிவத்தில் வெளிவந்தது. அட்டையுடன் சேர்த்து 32- பக்கங்கள். அட்டையும் சாதாரணமான தாளில், வண்ணங்கள் இல்லாமல் அச்சிடப்பட்டது. அட்டையில் குடும்ப வார வெளியீடு என அச்சிடப்பட்டிருந்தது, சிவப்புச் செவ்வகத்துக்குள் ராணி என அச்சிடப்பட்டிருக்கும். மேலே வாராந்தரி என சிறிய எழுத்துக்கள். ஒவ்வொரு பக்கமும் மூன்று பத்திகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் இதழ் அட்டையில் நடிகை சரோஜாதேவியின் படம் இடம்பெற்றிருந்தது. ராணி பெரும்பாலும் நடிகைகளின் புகைப்படங்களையே அட்டைப்படங்களாக வெளியிட்டது. ஆனால் வண்ணத்திலோ உயர்தர தாளிலோ அட்டை அச்சிடப்படவில்லை. ராணி தன் வாசகர்கள் என கருதியது கீழ்நடுத்தர குடும்பங்களை. ஆகவே விலை மிகக்குறைவாக வைக்கப்பட்டது 1962-ல் ராணி இதழின் விலை 13 பைசா.

உள்ளடக்கம்

ராணி குரங்கு குசலா (கேலிச்சித்திரம்), அல்லி பதில்கள் ஆகியவை வழக்கமான பகுதிகளும், தொடர்கதைகளும் கொண்டது. நடுப்பக்கம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. அதில் தொடர்கதையும் படக்கதையும் இடம்பெற்றது. பெண்களுக்கான இரண்டு பக்கங்கள் தனியாக ஒதுக்கப்பட்டிருந்தன. ராணி இதழில் அதன் ஆசிரியர் அ.மா.சாமி குரும்பூர் குப்புசாமி, கும்பகோணம் குண்டுமணி, அமுதா கணேசன் போன்ற பல பெயர்களில் எழுதினார். கண்ணதாசன், அகிலன், சாண்டில்யன், சுஜாதா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் ராணி வாராந்தரியில் எழுதினர். ராணி இதழ் மிக எளிமையான நடையில், ஆரம்பப் பள்ளி மட்டுமே படித்திருக்கும் வாசகர்கள், குறிப்பாக வாசகிகளுக்காக வெளியிடப்பட்டது. எந்த எழுத்தாளர் எழுதினாலும் நடை அதற்கேற்ப ஆசிரியர்களால் மாற்றியமைக்கப்பட்டது.

ராணி இதழுக்கென்றே எழுதி பின்னர் புகழடைந்த எழுத்தாளர்களும் இருந்தனர். ரமணி சந்திரன் ராணியில் எழுதி பின்னர் பெண்களுக்குரிய எழுத்தாளராக புகழ்அடைந்தார். நாஞ்சில் பி.டி.சாமி ராணி இதழில் ஏராளமான பேய்க்கதைகளை எழுதினார். பேய்க்கதை மன்னன் என்னும் அடைமொழியுடன் தன்னை முன்வைத்தார்.

விற்பனை

தமிழ் வார இதழ்களில் ராணி வினியோகத்தில் ஒரு புதுமையைக் கடைப்பிட்த்தது. சிற்றூர்களில்கூட மளிகைக்கடைகளில் ராணி விற்கப்பட்டது. ஆகவே விற்பனையில் பெரிய புரட்சியை உருவாக்கியது.

ராணி விற்பனை

ராணி வாராந்தரி 1986-ல் இந்தியாவின் வட்டாரமொழி வார இதழ்களில் இரண்டாமிடத்தில் ஆறுலட்சம் பிரதிகளுடன் இருந்தது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:18 IST