under review

அ.மா.சாமி

From Tamil Wiki
அ.மா.சாமி
அ.மா.சாமி

To read the article in English: A.M. Samy. ‎


அ.மா.சாமி (மே 7, 1935 – அக்டோபர் 8, 2020) இதழாளர், இதழியல் ஆய்வாளர். தினத்தந்தி குழும வெளியீடான ராணி வார இதழின் ஆசிரியராக இருந்தார். அமுதா கணேசன், குரும்பூர் குப்புசாமி உட்பட பல பெயர்களில் எழுதினார். தமிழின் தொடக்ககால இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்து நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

அ.மா.சாமியின் இயற்பெயர் அருணாசலம் மாரிசாமி. ராமநாதபுரம் மாவட்டத்தில் கோப்பைநாயக்கன்பட்டியில் அருணாசல நாடாருக்குப் பிறந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் குரும்பூர். உயர்நிலைப் பள்ளி இறுதி வரை கல்வி பயின்றார். சொந்த முயற்சியில் தமிழ் இலக்கியங்களையும் நூல்களையும் கற்றார்.

தனிவாழ்க்கை

தினத்தந்தி திருச்சி பதிப்பில் 1955-ல் செய்தியாளராக இதழியல் வாழ்க்கையைத் தொடங்கிய அ.மா.சாமி விரைவில் சி.பா.ஆதித்தனாரின் கவனத்தை கவர்ந்தார். ஆதித்தனாரின் குடும்பத்திலேயே மணம் புரிந்துகொண்டார். அ.மா.சாமியின் மனைவி எழுத்தாளர் ரமணி சந்திரனின் தமக்கை. தினத்தந்தி குழுமத்தின் இதழியல் தன்னெறிகளின் படி அதன் ஆசிரியர்களின் தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. ஆகவே அ.மா.சாமி பற்றி மிகக்குறைவான செய்திகளே கிடைக்கின்றன.

இதழியல் வாழ்க்கை

தினத்தந்தி திருச்சி பதிப்பிற்காக நீதிமன்ற மற்றும் காவல்நிலையச் செய்திகளை அளித்துவந்த அ.மா.சாமி விழாக்கால விளம்பர இணைப்புகளில் கதைகளை எழுதினார். 1960-ல் தினத்தந்தி மறுவடிவம் எடுத்தபோது அதில் துணையாசிரியரானார். முடிவடையாத படக்கதையான கன்னித் தீவு அ.மா.சாமியால்தான் எழுதப்பட்டது. ராணி வாராந்தரி இதழ் 1962-ல் வெளியிடப்பட்டபோது அ.மா.சாமி அதன் ஆசிரியரானார். 44- ஆண்டுகள் ராணி வார இதழின் ஆசிரியராக இருந்தார். ராணி வார இதழ் தமிழிலேயே அதிகமாக விற்கும் வார இதழாக அவருடைய காலகட்டத்தில் மாற்றப்பட்டது. ராணி வார இதழை அவர் தனிநபராகவே நடத்தினார் என்று குறிப்பிடப்படுகிறது. ராணி வார இதழில் சோதிடம், அல்லி பதில்கள், குழந்தை இலக்கியம், பாட்டி வைத்தியம், பெண்களுக்கான பகுதிகள் ஆகிய அனைத்துமே அவரால்தான் எழுதப்பட்டன. மாரி என்ற பெயரில் கோட்டுச்சித்திரங்களும் வரைந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அ.மா.சாமி அமுதா கணேசன், கும்பகோணம் குண்டுமணி, குரும்பூர் குப்புசாமி போன்ற பலபெயர்களில் நாவல்களும் கதைகளும் எழுதினார். ராணி காமிக்ஸ் வெளியிட்ட படக்கதைகளுக்கு ஆங்கில மூலத்தைத் தழுவி வசனம் எழுதினார். காமிக்ஸ் கதைகளும் எழுதியிருக்கிறார். சென்னை வானொலிக்கு நாடகங்களும் எழுதினார்.

ஆய்வாளர்

அ.மா.சாமி தமிழ் இதழியலின் தொடக்ககாலத்தை ஆராய்ந்து ஆவணப்படுத்திய ஆய்வாளர் என்னும் முறையில் முன்னோடியாகக் கருதப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டு இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், இந்து சமய இதழ்கள், தமிழ் இஸ்லாமிய இதழ்கள், தமிழ் கிறிஸ்தவ இதழ்கள் என்று பல்வேறு தலைப்புகளில் தமிழ் இதழியல் வரலாற்றைப் பதிவுசெய்தார்.

மறைவு

அ.மா.சாமி அக்டோபர் 8, 2020-ல் மறைந்தார்.

விருதுகள்

  • பெரியார் விருது
  • சிறந்த இதழாளர் விருது (சென்னைப் பல்கலைக் கழகம்)

நூல்கள்

  • ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை (2014)
  • சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் (2013)
  • தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி (1987)
  • திராவிட இயக்க இதழ்கள்
  • நாம் தமிழர் இயக்கம்
  • வரலாறு படைத்த தினத்தந்தி
  • திருக்குறள் செம்பதிப்பு
  • தமிழ் இதழ்கள் வரலாறு
  • இந்திய விடுதலைப் போர் செந்தமிழ் தந்த சீர்
  • இந்து சமய இதழ்கள்
  • தமிழ் இசுலாமிய இதழ்கள்
  • தமிழ் கிறித்தவ இதழ்கள்
  • 19-ம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:36 IST