நாஞ்சில் பி.டி.சாமி
நாஞ்சில் பி. டி. சாமி (1930-செப்டெம்பர் 12, 2004) பி.டி.சாமி. தமிழ் எழுத்தாளர்,இதழாளர். பேய்க்கதைகள் மற்றும் திகில்கதைகள் எழுதுவதில் புகழ்பெற்றிருந்தார். பொதுவாசிப்புக்கான ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தார். தமிழக அரசின் 'கலைமாமணி' விருதைப் பெற்றார்.
பிறப்பு, கல்வி
நாகர்கோயில் அருகே மறவன்குடியிருப்பு என்னும் ஊரில் 1930-ல் பி.டி.சாமி பிறந்தார். முழுப்பெயர் பி.தங்கசாமி நாடார். பள்ளியிறுதி வரை பயின்றார்
தனிவாழ்க்கை
பி.டி.சாமி நாகர்கோயில் கோட்டாறில் தையல்கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தினத்தந்தியின் முகவரும் செய்தியாளருமாக ஆனார். தினத்தந்தியில் இருந்து வெளியேறிய பின்னர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தார். தன் படைப்புகளைத் தானே வெளியிட பதிப்பகம் ஒன்றையும் நடத்தினார். பி.டி.சாமியின் மனைவி இலட்சுமி. தங்கம், சித்ரா என இரண்டு மகள்கள்.
எழுத்துவாழ்க்கை
தினத்தந்தியில் செய்திகள் எழுதிக்கொண்டிருந்த பி.டி.சாமி நாகர்கோயிலில் வெளிவந்துகொண்டிருந்த சிறிய இதழ்களில் நாஞ்சில் .பி.டி.சாமி என்னும் பெயரில் பேய்க்கதைகள் எழுதினார். சிறிய சந்தைப்பதிப்புகளாக இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை வெளியிட்டார். தினத்தந்தி ராணி வாராந்தரி இதழைத் தொடங்கியபோது அதில் கதைகளை எழுதத்தொடங்கினார். விரைவிலேயே அவருடைய பேய்க்கதைகள் எளியவாசகர்கள் நடுவே புகழ்பெற்றன. அவருடைய பேய்க்கதைகள் எளிமையான சொற்களும், ஓரிரு வார்த்தைகள் மட்டும் கொண்ட சொற்றொடர்களும், சுருக்கமான விவரணைகளும் கொண்டவை. அடிப்படைக் கல்வி கற்ற வாசகர்கள் வாசிக்கத்தக்கவை. பெரும்பாலான கதைகளில் நடமாடும் எலும்புக்கூடு, சூனியக்காரக் கிழவி ஆகிய கதாபாத்திரங்கள் வரும். அவருடைய கதைகளில் 'மெழுகுமாளிகை' அவருக்கு பெரும்புகழை ஈட்டித்தந்தது. 1990 வரை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய நாவல்கள் பொதுவாக நூறு பக்கங்களுக்குள் அமைந்தவை. 2000 நாவல்கள் வரை எழுதியிருக்கிறார். 500-க்குமேல் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். 1990-ல் மூளைக்கட்டி நோய் வந்தபின் எழுதுவதை குறைத்துக்கொண்டார்.
வெளியீட்டாளர்
பி.டி.சாமி தொடக்கம் முதலே 'தங்கம் பிரசுரம்' போன்ற பல பெயர்களில் தன் நாவல்களை வெளியிட்டு வந்தார். அவை வழக்கமான புத்தக விற்பனைக் கடைகள் வழியாக விற்கப்படவில்லை. மலிவுவிலை நூல்களாக அச்சிடப்பட்டு சந்தைப்பதிப்புகளாக வெளியிடப்பட்டு சிறுவியாபாரிகளால் விற்கப்பட்டன. பி.டி.சாமி பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு 1981-ல் 'மீனா காமிக்ஸ்' என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி தன் கதைகளை படக்கதைகளாக வெளியிட்டார்.
திரைவாழ்க்கை
1970 முதல் சென்னையில் வெவ்வேறு திரைப்படங்களின் கதைவிவாதங்களில் பி.டிசாமி பங்கெடுத்தார். ஜெய்சங்கர் நடித்து ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1975-ல் வெளிவந்த 'ஹோட்டல் சொர்க்கம்' படத்திற்கு கதைவசனம் எழுதினார். படம் வெற்றிபெறவே தொடர்ந்து எட்டு படங்களுக்கு கதைவசனம் எழுதினார். நாஞ்சில் துரை இயக்கத்தில் 1977-ல் வெளிவந்த 'புனித அந்தோனியார்' என்னும் படத்திற்கு கதை,வசனம் எழுதியதுடன் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து 1979-ல் 'பாடும் பச்சைக்கிளி' என்றபடத்தைத் தானே தயாரித்து இயக்கினார். கதை வசனமும் தானே எழுதினார். அப்படம் வெளிவராமல் போகவே தான் ஈட்டிய பணத்தை முழுமையாகவே இழந்தார்.
விருதுகள்
நாஞ்சில் பி.டி.சாமி 2003-ல் எழுத்துப்பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
மறைவு
செப்டெம்பர் 12,2004-ல் பி.டி.சாமி மறைந்தார்.
இலக்கிய இடம்
நாஞ்சில் பி.டி.சாமி பெரும்பாலும் சந்தைப்பதிப்புகள் அல்லது குஜிலிப் பதிப்புகள் எனப்படும் மலிவுவிலை நூல்களை எழுதியவர். அடிப்படைக் கல்வி மட்டும் கொண்டவர்கள், சிறார் அவருடைய வாசகர்கள். இலக்கிய வாசிப்புக்கும் , இதழ்கள் மற்றும் நூல்கள் சார்ந்த பொதுவாசிப்புக்கும் அடியில் இருக்கும் அந்த உலகில் பி.டி.சாமி முதன்மையான எழுத்தாளர். அவருடைய பேய்க்கதைகள் விரிவான சமூகஉளவியல் ஆய்வுக்குரியவை. அவை சமூகத்தில் மாறிவரும் தொன்மக்கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன.
பி.டி.சாமியின் பேயுலகம் பெரும்பாலும் ஐரோப்பியத்தன்மை கொண்டது. ஆவிகள், ஆவிபாதித்த இடங்கள், ஆவிகளை உணரும் ஓஜா பலகைகள், ஊடு மந்திரவித்தைகள், ஆவிகளுடன் பேசும் தொடர்பாளர்கள் போன்றவற்றை அவர் ஆங்கில நாவல்களில் இருந்தே எடுத்துக்கொண்டார். ஐரோப்பிய பேய்க்கதைகளில் இருந்து எடுத்தாண்ட சூனியக்காரக் கிழவி, நடமாடும் எலும்புக்கூடுகள் போன்றவை அவர் கதைகளில் மிகுதியாகக் காணப்பட்டன.
அவை ஒரு தெளிவான பாகுபாட்டை உருவாக்குகின்றன. இந்தியாவில் மிக அஞ்சப்படும் பல அமானுஷ்ய சக்திகளுக்கு நாட்டார் தெய்வங்கள் என்னும் அடையாளம் உண்டு. உதாரணம் சுடலைமாடன், முனியப்பசாமி போன்றவை. பலி மற்றும் கொடைச்சடங்குகள் வழியாக அவற்றை அமைதியடையச்செய்யவும், அருள்பெறவும் முடியும். அவற்றை தெய்வங்கள் என கொண்டால், அச்சம் மட்டுமே அளிக்கும் கொடிய பேய்க்கதைகளுக்கு பலவகையான கொடிய பேய்கள் தேவை. முற்றிலும் தீங்கு மட்டுமே கொண்ட பேய்கள். ஆகவே அவற்றை பி.டி.சாமி ஐரோப்பிய பேய்க்கதைகளில் இருந்து எடுத்துக்கொண்டார்.
நூல்கள்
- கறுப்புப்பூனை
- பீதிவெள்ளம்
- மெழுகுமாளிகை
- மோகினி இல்லம்
- ரத்தச்சுவடு
- ஒரு பெண்ணின் கதை
- இரு மலர்கள்
- முள்ளும் மலரும்
- பெண் என்றால் பெண்
- துணையோடு வா
- வாழ்வே வா
- தெய்வத்துள் தெய்வம்
- அலையோரம்
- மின்மினி
- கறுப்புப்பிசாசு
- கண்மணி நீ
- ரத்த அழைப்பிதழ்
- பேய் விலாஸ்
- கிரிக்கெட் அழகி படுகொலை
- கார்த்திகா
- மூன்றுநிமிட வெறி
- பழிவாங்க பத்துநிமிடம்
- பேயன் மனைவி
- இவள் ஒரு கோஸ்ட்
- அபாய அனிதா
- அந்த ஆவிக்கு தலை இல்லை
- ரத்தப்பிசாசு ராதிகா
- பத்ரகாளி மர்மம்
- நுழையக்கூடாத அறை
- ஏழுபூட்டுகள் போட்ட கதவு
- நைலான் ரிப்பன்
- ஈரம் இல்லாத புடவை
- ஹாஸ்டல் பயங்கரம்
- பேய்பிடிப்பவள்
- துரோக ஆவி
- கொலை மார்க்கெட்
- பேய் எஸ்டேட்
- பேயடைந்த சத்திரம்
- பகலில் ஒரு பயங்கரம்
- மயக்கும் கொலைகாரி
- பெட்ரூம் வெறியன்
- சொட்டு ரத்தம்
- விஷ ஊசி
உசாத்துணை
- பேய் கதை மன்னன் பி.டி.சாமி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web
- பேனா மூலம் பேய்களைப் பிடித்தவர்! | பேனா மூலம் பேய்களைப் பிடித்தவர்! - தமிழ் ஹிந்து - ஜூன் 2014
- நாகரத்தினம் கிருஷ்ணா-பி.டி.சாமி பற்றி/
- Advertisements in Comic Books – A Walk Down Memory Lane ~ Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:45 IST