under review

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்

From Tamil Wiki
அ.வெ. கிருஷ்ணசாமி ரெட்டியார் (படம் நன்றி: அ.வெ.ர. கிருஷ்ணசாமி நூல்; கலைஞன் பதிப்பக வெளியீடு)

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் (அருணாசல வெங்கடாசலம் ரங்கசாமி கிருஷ்ணசாமி ரெட்டியார்;அ.வெ.ர.கி.; கண்ணன், தேவராய பூபதி; ரெட்டியார்) (ஜூலை 15, 1918-ஜூலை 17, 1989) எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், ஆன்மிகவாதி. எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து ஆதரித்தார். ஆன்மிக, சமூக நற்பணிகளை மேற்கொண்டார். பாரதியின் பாடல்கள் நாட்டுடைமை ஆவதற்கு உழைத்தார்.

பிறப்பு, கல்வி

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், ஜூலை 15, 1918-ல், இலங்கையில் உள்ள நனோபாவில், ரங்கசாமி ரெட்டியார் - கிருஷ்ணம்மாள் இணையருக்குப் பிறந்தார். தந்தை இலங்கையில் புசந்தனை என்ற தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளராகவும், மிளகுசேவை என்ற தோட்டத்தின் கங்காணியாகவும் (கண்காணிப்பாளர்) இருந்தார். தனது இரண்டாம் வயதில் தந்தையை இழந்தார். குடும்பம் தமிழகம் வந்தது. அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தின் திண்ணைப் பள்ளியில் பயின்றார். தொடக்கக் கல்வியை துறையூர் ஜமீன்தார் பள்ளியில் கற்றார். முசிறி போர்டு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார்.

தனி வாழ்க்கை

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், 1931-ல், தங்களது பூர்வீகச் சொத்துக்களை, தேயிலைத் தோட்டத்தைக் கவனித்துக் கொள்வதற்காக இலங்கை சென்றார். 1935-ல், கிருஷ்ணம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. மகன் சுபாஷ்சந்திரன். மனைவி கிருஷ்ணம்மாள் காலமானதால் ராஜாமணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் மகன் பிரசன்னம். இரண்டாவது மனைவி ராஜாமணியும் காலமானதால், மூன்றாவதாக ராஜம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கண்ணன், குமரேசன் என இரு மகன்கள்.

தனது சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்காக இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி வசித்த அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், இலங்கையில் உள்ள அனைத்துச் சொத்துக்களையும் விற்றுவிட்டு, 1941-ல், நிரந்தரமாகத் தமிழகத்தில் வந்து தங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியாரின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், தமிழை விரும்பிக் கற்றார். பள்ளி ஆசிரியர்கள் மூலம் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு பல பாடல்களை மனனம் செய்தார். பாரதியின் கவிதைகள் அவரை மிகவும் ஈர்த்தன. தினந்தோறும் பாரதியின் பாடல்களைப் பயில்வதைத் தனது வழக்கமாகக் கொண்டார்.

இதழியல் வாழ்க்கை

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், துறையூரில் வசித்த போது, கிராம ஊழியன் இதழை நடத்திவந்த பூர்ணம்பிள்ளையின் நட்பு ஏற்பட்டது. இதழியல் நுணுக்கங்களை அவரிடமிருந்து அறிந்துகொண்டார்.

கிராம ஊழியன்

கிராம ஊழியன் இதழை நடத்திவந்த பூர்ணம்பிள்ளை காலமானதால் இதழை நடத்தும் பொறுப்பை கிருஷ்ணசாமி ரெட்டியார் ஏற்றுக் கொண்டார். அவரும் கவிஞர் திருலோக சீதாராமும் இணைந்து அவ்விதழை நடத்தினர். அது காங்கிரஸ் இயக்கம் சார்பாக வெளிவந்துகொண்டிருந்தது. அதனை இலக்கிய இதழாக நடத்த விரும்பிய கிருஷ்ணசாமி ரெட்டியார், கு.ப. ராஜகோபாலனை அந்த இலக்கிய இதழின் ஆசிரியராக நியமனம் செய்தார். ஆகஸ்ட் 13, 1915 முதல் இலக்கிய இதழாக கிராம ஊழியன் வெளிவரத் தொடங்கியது. அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் வெளியீட்டாளராகவும், திருலோக சீதாராம் ஆசிரியராகவும், கு.ப.ராஜகோபாலன் கௌரவ ஆசிரியராகவும் செயல்பட்டனர். ந. பிச்சமூர்த்தி , கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன், கி.ரா. கோபாலன், தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், வல்லிக்கண்ணன் உள்ளிட்ட பலரது படைப்புகள் இவ்விதழில் வெளியாகி இலக்கியம் வளர்த்தன. தி. ஜானகிராமனின் முதல் புதினமான அமிர்தம் கிராம ஊழியனில் தான் தொடர் கதையாக வெளிவந்தது.

கு.ப.ரா.வின் மறைவிற்குப் பின் வல்லிக்கண்ணனின் உறுதுணையுடன் அவ்விதழை நடத்தினார் கிருஷ்ணசாமி ரெட்டியார்.

சிவாஜி

கிருஷ்ணசாமி ரெட்டியார், 1947-ம் ஆண்டு கிராம ஊழியன் இதழை நிறுத்திவிட்டு திருலோக சீதாராமுடன் இணைந்து சிவாஜி என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். சிவாஜி இதழ் 1968 வரை வார இதழாகவும், 1969 முதல் 1973 வரை மாத இதழாகவும் வெளி வந்தது. கௌசிகன் என்னும் வாண்டுமாமாவிற்காகவே சிவாஜி இதழில், சிவாஜி சிறுவர் மலர் என்ற பகுதியை ஆரம்பித்து அதற்கு அவரை ஆசிரியர் ஆக்கினார்.

எழுத்தாளன்

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், எழுத்தாளன் என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பாளர்

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், கண்ணன் அச்சகம் என்னும் அச்சகத்தையும்ம, புதுப்புனல் என்ற பதிப்பகத்தையும் நிறுவிப் பல நூல்களை வெளியிட்டார்.

அரசியல் வாழ்க்கை

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். ரெங்கநாதபுரம் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பணியாற்றினார். ப. ஜீவானந்தம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது துறையீரில் உள்ள தன் வீட்டில் ஆறு மாத காலம் ரகசியமாக அவரைத் தங்க வைத்தார். ராஜாஜி, காமராஜர் எனப் பலவேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார். காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்டு சொபொழிவாற்றினார்.

இலக்கியச் செயல்பாடுகள்

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், பாரதி நூற்றாண்டு விழாக் குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்தார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றைக் கண்காட்சியாக அவ்விழாவில் காட்சிப்படுத்தினார். தனியாரிடமிருந்து பாரதி பாடல்களின் உரிமையை அரசு பெறுவதற்காக டி.கே.எஸ் சகோதரர்களுடன் இணைந்து போராடினார். பாரதியின் பாடல்கள் நாட்டுடைமை ஆவதற்கு உழைத்தார்.

திருச்சியில் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் எழுத்தாளர் மாநாட்டை நடத்தினார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் எழுத்தாளர் சங்கங்கள் தோன்றக் காரணமானார். திருச்சி வானொலியின் சிந்தனைச் சுடர், அருள்வாக்கு போன்ற நிகழ்ச்சிகளில் சிந்தனையாளர்கள், அருளாளர்களின் கருத்துக்களைக் குறித்துச் சொற்பொழிவாற்றினார். கவிதை, நாடகம், விமர்சனம், இசைப் பாடல்கள் என பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார். பல்வேறு இலக்கியக் கூட்டங்களில், எழுத்தாளர் மாநாடுகளில், தமிழ்ச் சங்கக் கூட்டங்களில், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

ஆன்மிகம்

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், ஆலய விழா நிகழ்வுகளில் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு செயல்பட்டார். ஸ்ரீ ரங்கம் ராஜகோபுர நிர்மாணிப்புப் பணியில் ஈடுபட்டார். பல்வேறு ஆன்மிக நற்பணிகளை மேற்கொண்டார்.

அழகு வெள்ளம் என்ற தலைப்பில் இவர் பாடிய, ஆதிசங்கரரின் சௌந்தர்யலஹரி தமிழ் மொழிபெயர்ப்பு, திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோவிலிலும், சென்னை கச்சாளீஸ்வரர் ஆலயத்திலும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. சுப்ரமண்ய புஜங்கம் தமிழ் மொழிபெயர்ப்பு, திருச்செந்தூர் ஆலயத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டது.

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்- எம்.ஜி.ராமச்சந்திரன் (படம் நன்றி: அ.வெ.ர. கிருஷ்ணசாமி-கலைஞன் பதிப்பகம்)

பொறுப்புகள்

  • திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
  • அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர்
  • சாகித்ய அகாடமி உறுப்பினர்
  • சம்ஸ்கிருத சாகித்ய பரிஷத் உறுப்பினர்
  • தமிழ்நாடு இந்து சமய மன்ற துணைத்தலைவர்
  • கோவில்கள் திருப்பணிக் குழுத் தலைவர்
  • திருச்சி மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர்
  • தமிழ்நாடு ஆலயப் பாதுகாப்புக் குழுத் தலைவர்
  • திருச்சி மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்
  • ஆலயங்கள் திருப்பணிக்குழுத் தலைவர் (பல்வேறு ஆலயங்கள்)

விருதுகள்

  • காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியார் வழங்கிய கவிதாமணி பட்டம்.
  • சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் வழங்கிய உபய பாஷப்ரவீணா பட்டம்.
  • தருமபுரம் ஆதீனகர்த்தர் சண்முக தேசிக ஞானசம்பந்தர் வழங்கிய செந்தமிழ்க் கவிதைச் செம்மல் பட்டம்.
  • வாகீச பக்த ஜன சங்கம் வழங்கிய அருட்பணிச் செல்வர் பட்டம்
  • சாந்தானந்த சுவாமிகள் வழங்கிய தர்மரஷாமணி பட்டம்
  • உலகப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்

மறைவு

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் ஜூலை 17, 1989-ல் காலமானார்.

அ.வெ. கிருஷ்ணசாமி ரெட்டியார் வாழ்க்கை வரலாறு (படம் நன்றி: கலைஞன் பதிப்பகம்)

ஆவணம்

அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியாரின் வாழ்க்கையை முனைவர் பி. இன்னமுது எழுதியுள்ளார். இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையுடனும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடனும் இணைந்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வரலாற்று இடம்

எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் இவற்றோடு அரசியல்வாதி, இலக்கியவாதி, ஆன்மிகவாதி, சொற்பொழிவாளர் எனப் பல தளங்களில் செயல்பட்ட முன்னோடி அறிஞராக அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

தல வரலாறு
  • வயலூர் வரலாறு
  • மலைக்கோவில் வரலாறு
  • திருச்சி ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் தல வரலாறு
  • குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில் க்ஷேத்திர வரலாறு
  • வெக்காளி அம்மன் கோவில் தல வரலாறு
வாழ்க்கை வரலாறு
  • சேந்தமங்கலம் அவதார ஸ்ரீ கிருஷ்ணானந்த ப்ரம்மேந்திர சரஸ்வதி விஜயம்
  • புதுக்கோட்டை அதிஷ்டானமும் அவதூதர் மூவரும்
கட்டுரைத் தொகுப்பு
  • சித்த சாகரம்
  • தராசு
  • சிறப்புடன் வாழ்க
  • வாழ்க்கை எப்படி நடத்துவது?
  • எங்கிருந்தோ வந்தான் (பாரதி இயல் கட்டுரைகள்)
அரசியல்
  • பெடரல் அரசியல்
கவிதை நூல்
  • அஞ்சலி கவிதைகள்
  • தாயுமானவர் அந்தாதி
  • வயலூர் வள்ளல்
  • சபரிமலை ஐயப்பன் தோத்திரம்
மொழிபெயர்ப்புகள்
  • அழகு வெள்ளம் (சௌந்தர்ய லஹரி)
  • சிவானந்த வெள்ளம் (சிவானந்த லஹரி)
  • ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம்
  • கனகதாரா (பொன்மாரி) ஸ்தோத்திரம்
  • ஸ்ரீ ருத்ரம்
  • நவக்கிரக தோத்திரம்
  • ஸ்ரீமத் பகவத் கீதை
  • அருள் அமுது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jan-2023, 09:01:10 IST