வாண்டுமாமா
வி. கிருஷ்ணமூர்த்தி (வாண்டுமாமா) (ஏப்ரல் 21, 1925 - ஜூன் 12, 2014) சிறார் இலக்கிய எழுத்தாளர், ஓவியர். விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைப் பெயர்களில் குழந்தைகளுக்கும், கௌசிகன் எனும் புனைப்பெயரில் பெரியவர்களுக்கும் எழுதியவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
பிறப்பு, கல்வி
வாண்டுமாமா (வி. கிருஷ்ணமூர்த்தி) ஏப்ரல் 21, 1925 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார். இரண்டு வயதில் தந்தையை இழந்த கிருஷ்ணமூர்த்தி திருச்சியில் உள்ள தனது அத்தை வீட்டில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். வறுமையால் இவரின் கல்வி தடைப்பட்டது. பிறகு, 1944-ல் பள்ளி இறுதித் தேர்வை முடித்தார்.
குடும்பம்
வாண்டுமாமாவின் மனைவி சாந்தா. இவர்களுக்கு நான்கு பெண்கள், ஒரு ஆண் என ஐந்து குழந்தைகள்.
பள்ளிப்படிப்பை முடித்தபின் குட்வின் பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தில் சிறிது காலம் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
ஓவிய வாழ்க்கை
சிறுவயது முதலே சித்திரங்கள் வரைவதில் வாண்டுமாமாவுக்கு ஆர்வம் இருந்தது. பிரபல பத்திரிகைகளில் வரும் ஓவியங்களைப் பார்த்து அதேபோல வரைவார். பள்ளிக் காலத்தில் கரும்பலகையில் ஓவியங்களைத் தீட்டியுள்ளார். திருச்சியில் இருந்த பல நகைக் கடைகளுக்கு லேபிள்கள், விளம்பரப் படங்கள், வாசகங்கள் வரைந்து தரத் தொடங்கினார். தொடர்ந்து பாடப் புத்தகங்களுக்கு படம் போடும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல பதிப்பகங்களுக்கு அட்டைப் படம் தயாரிக்கவும், அதற்கு ஓவியம் வரையவும் வாய்ப்பு வந்தது. மீ.ப. சோமுவின் 'ஐந்தருவி', 'பிள்ளையார் சுழி' போன்ற புத்தகங்களின் அட்டைகளை வடிவமைத்தார். மாலியின் மூலம் ஆனந்த விகடனில் சேர்ந்தார். ஆனால் 'லெட்டரிங் ஆர்ட்டிஸ்ட்' வேலைகள் மட்டுமே அவருக்குத் தரப்பட்டதால் அங்கு பணியை தொடரவில்லை.
இதழியல் பணி
பள்ளியில் படிக்கும்போது வாண்டுமாமா எழுதிய 'குல்ருக்' என்ற சிறுகதை, கலைமகள் இதழில் வெளியானது. பாரதி என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். திருலோக சீதாராம் ஆசிரியராக இருந்த சிவாஜி இதழில் துணையாசிரியர் வேலை கிடைத்தது. அது, வாண்டுமாமாவின் பத்திரிகை வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. அச்சுக் கோர்ப்பது முதல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வரை சகல துறைகளிலும் நல்ல அனுபவம் பெற்றார். அதுவரை 'கௌசிகன்' என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தவருக்கு, ஓவியர் மாலி "வாண்டுமாமா" என்ற பெயரைச் சூட்டி சிறுவர்களுக்கு எழுதுமாறு தூண்டினார். 'சிவாஜி' இதழைத் தொடர்ந்து 'வானவில்' என்ற குழந்தைகள் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். 'மின்னல்' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் திகழ்ந்தார். சிறிதுகாலம் நண்பருடன் இணைந்து 'கிண்கிணி' என்ற சிறுவர் இதழை நடத்தினார். தொடர்ந்து அரு. ராமநாதனின் காதல், கலைமணி போன்ற இதழ்களிலும், ராஜா என்பவரின் 'சுதந்திரம்' இதழிலும் பணியாற்றினார். சுதந்திரம் இதழ் விரைவிலேயே நிறுத்தப்பட்டதால், திருச்சியில் உள்ள இ.ஆர். உயர்நிலைப்பள்ளியில் நூலகராகப் பணியில் சேர்ந்தார்.
வாண்டுமாமாவுக்கு கல்கி பத்திரிக்கையில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. முதலில் விற்பனைப் பிரிவில் பணியாற்றியவர், பின்னர் ஆசிரியர் குழுவில் இணைந்தார். 'பாப்பா மலர்' என்ற சிறுவர் பகுதியைத் திறம்பட நடத்தினார். அது 'கோகுலம்' என்ற சிறுவர் இதழைத் தொடங்க வழி வகுத்தது. இதைத் தொடர்ந்து, 23 ஆண்டுகள் கல்கி குழுமத்தில் பணியாற்றிய வாண்டுமாமா கதை, கட்டுரைகளுக்காக பல போட்டிகள் நடத்தி வாசக எழுத்தாளர்களை உருவாக்கினார். கோகுலம் பத்திரிக்கை நின்று போகவே, குங்குமம் இதழில் சேர்ந்தார். பின், எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான நா. பார்த்தசாரதியின் அழைப்பை ஏற்று "தினமணி கதிரில்" சேர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். தொடர்ந்து பத்திரிகைகளுக்குக் கதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதி வந்தார்.
1984-ல் பைகோ பிரசுரத்தால் தொடங்கப்பட்ட பூந்தளிர் இதழுக்கு வாண்டுமாமா ஆசிரியராக பொறுப்பேற்றார். பூந்தளிரில் பல படக்கதைகளை, நீதிக் கதைகளை, அறிவியல் தொழில் நுட்பங்களை, பொது அறிவுச் செய்திகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் எளிய தமிழில், அழகான படங்களுடன் கொடுத்தார். அவர் அடிப்படையில் ஓவியராகவும், இதழ் வடிவமைப்பாளராகவும் இருந்ததால் பல்வேறு புதுமைகளை அவரால் அதில் செய்ய முடிந்தது. அவர் பொறுப்பில் வெளிவந்த 'அமர்சித்திர கதைகள்' சிறுவர்களைக் கவர்ந்தது. வாண்டுமாமா, ஓவியர் செல்லம் கூட்டணியாக இணைந்து பல படைப்புகளைத் தந்தனர். வேட்டைக்கார வேம்பு, சுப்பாண்டி, கபீஷ், காளி போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கிய வாண்டுமாமா, தனது 77-ம் வயதில் உடல்நிலை காரணமாகப் பூந்தளிர் பத்திரிக்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.
இலக்கியவாழ்க்கை
சிறுவர் கதைகள்
வாண்டுமாமா 150-க்கும் மேலான குழந்தைகளுக்கான நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஓநாய்க் கோட்டை, மூன்று மந்திரவாதிகள், சிலையைத் தேடி, மர்ம மாளிகையில் பலே பாலு, சர்க்கஸ் சங்கர், கரடிக் கோட்டை, ரத்தினபுரி ரகசியம் போன்ற படக்கதைகள் குறிப்பிடத்தக்கவை. பச்சைப் புகை, புலிவளர்த்த பிள்ளை, மாஜிக் மாலினி, கரடி மனிதன், மந்திரக் குளம், மூன்று விரல்கள் போன்ற கதைகள் பெரியவர்களும் ரசிக்கத்தக்கவை.
பெரியவர்களுக்கான கதைகள்
கௌசிகன் என்ற பெயரில் இவர் எழுதிய 'வீணையின் நாதம்', 'அடிமையின் தியாகம்', 'அழகி', 'பண்பு தந்த பரிசு' போன்ற சிறுகதைகள் சிறப்பானவை. அது போல 'பாமினிப் பாவை', 'ஜூலேகா' போன்ற சரித்திர நாவல்களையும், 'சுழிக்காற்று', 'சந்திரனே சாட்சி', 'உயிர்ச் சிரிப்பு' போன்ற சமூக நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
அறிவியல் தகவல் நூல்கள்
அறிவியல் தகவல்களை சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர் எழுதிய நூல்களில் 'தோன்றியது எப்படி?'(நான்கு பாகங்கள்) 'மருத்துவம் பிறந்த கதை' (இரண்டு பாகங்கள்) 'அறிவியல் தகவல்கள்' (மூன்று பாகங்கள்) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மொழிபெயர்ப்பு
அயல்நாட்டு இலக்கியங்களைத் தமிழில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்பொருட்டு வாண்டுமாமா, அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பழந்தமிழ் இலக்கியம்
சதுரநீதி நூல்கள் என்ற பெயரில் பழந்தமிழ் இலக்கியங்களான மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகிய நூல்களைப் பற்றி எழுதியுள்ளார்.
விருதுகள்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்
- 'தோன்றியது எப்படி' (இரண்டு தொகுதிகள்) - 1976-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.
- 'மருத்துவம் பிறந்த கதை'- 1977-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.
- 'நமது உடலின் மர்மங்கள்' - 1999-ம் ஆண்டுக்கான மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசு.
- 'மருத்துவம் பிறந்த கதை'- 1977-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.
- 'பெண்சக்தி'- 2005-ம் ஆண்டுக்கான பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு.
- 'பரவசமூட்டும் பறவைகள்' - 2006-ம் ஆண்டுக்கான பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் சிறந்த நூல் பரிசு.
- 'இயற்கை அற்புதங்கள்' - 2008-ம் ஆண்டுக்கான இயற்பியல் வகைப்பாட்டில் சிறந்த நூல் பரிசு.
- 'அன்றும் இன்றும்'- 2010-ம் ஆண்டுக்கான பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் சிறந்த நூல் பரிசு.
இலக்கிய இடம்
சிறார் கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளைப் பற்றியும் குழந்தைகளைக் கவரும் வகையில் எழுதியவர் வாண்டுமாமா. ஓவியர் செல்லத்துடன் இணைந்து சித்திரக்கதை எனும் வடிவத்தை தமிழில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியவர். 'பலே பாலு', 'சமத்து சாரு' போன்ற பல்வேறு குணாதியசங்களைக் கொண்ட அவருடைய குழந்தைக் கதாபாத்திரங்கள் சிறார் உலகின் நிரந்தர மனிதர்களாகவே மாறினார்கள். 'கனவா, நிஜமா?', 'ஓநாய்க்கோட்டை' போன்ற அவரது கதைகள் குறிப்பிடத்தக்கவை. 'தோன்றியது எப்படி' (4 பாகங்கள்), 'மருத்துவம் பிறந்த கதை', 'நமது உடலின் மர்மங்கள்' ஆகியவை வாண்டுமாமா எழுதிய முக்கியமான அபுனைவு நூல்கள் என எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் குறிப்பிட்டுள்ளார்.
மறைவு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வாண்டுமாமா ஜூன் 12, 2014 அன்று தனது 89-ம் வயதில் மறைந்தார்.
நூல்கள்
- மூன்று விரல்கள்
- பைபிள் பாத்திரங்கள்
- அதிசய நாய்
- அழிந்த உலகம்
- நெருப்புக் கோட்டை
- நீலப்போர்வை
- மூன்று வீரர்கள்
- வரலாறு படைத்த வல்லுநர்கள்
- ஷீலாவைக் காணோம்
- கனவா நிஜமா
- அவள் எங்கே?
- வீர விஜயன்
- கழுகு மனிதன் ஜடாயு
- ரத்தினபுரி ரகசியம்
- தங்கச் சிலை
- மரகதச்சிலை
- சூரியக் குடும்பம்
- தோன்றியது எப்படி? (நான்கு பாகங்கள்)
- விண்வெளி வாழ்க்கை
- தெரிந்து கொள்ளுங்கள்
- இதையும் தெரிந்து கொள்ளுங்கள்
- இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்
- மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
- உலகத்தின் கதை
- உலோகங்களின் கதை
- மருத்துவம் பிறந்த கதை
- மூளைக்கு வேலை (இரண்டு பாகங்கள்)
- கதைக் களஞ்சியம்
- பல தேசத்துப் பண்பாட்டுக் கதைகள்
- அதிசயப் பிராணிகளின் அற்புதக் கதைகள்
- ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள்
- ஹோமரின் இலியத் - கிரேக்க புராணக் கதைகள்
- நிலாக்குதிரை
- புதையல் வேட்டை
- உலகம் சுற்றும் குழந்தைகள் (இரண்டு பாகங்கள்)
- மர்ம மனிதன்
- சி.ஐ.டி சிங்காரம்
- ஆடுவோமே! விளையாடுவோமே!
- மலைக்குகை மர்மம்
- குள்ளன் ஜக்கு
- மாய மோதிரம்
- மாயச் சுவர்
- தவளை இளவரசி
- அரசகுமாரி ஆயிஷா
- மந்திரச் சலங்கை
- துப்பறியும் புலிகள்
- கண்ணாடி மனிதன்
- தேதியும் சேதியும்
- பலே பாலுவும் பறக்கும் டிராயரும்
- மர்ம மாளிகையில் பலே பாலு
- விந்தை விநோதம் விசித்திரம்
- நீதிநெறி நூல்கள்
- ஔவையார் அருளிய ஆத்திசூடி விளக்கம்
- ஔவையார் அருளிய கொன்றை வேந்தன் விளக்கம்
- சதுரநீதி நூல்கள் (மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியவை பற்றி)
- புலி வளர்த்த பிள்ளை
- முன்னேற்றத்தின் முன்னோடிகள் (முதல் தொகுதி)
- நாய் வளர்ப்பு
- பூனை வளர்ப்பு
- மீன் வளர்ப்பு
- இயந்திரங்கள் இயங்குவது எப்படி?
- தகவல் புதையல் (இரண்டு பாகங்கள்)
- கடலோடிகள்
- சரித்திரச் சம்பவங்கள்
- நீங்களே செய்யலாம் (இரண்டு பாகங்கள்)
- நீங்களும் மந்திரவாதி ஆகலாம்
- க்விஸ் க்விஸ் க்விஸ் (இரண்டு பாகங்கள்)
- பச்சைப் புகை
- மான்கள்
- யானைகள்
- கானகத்தினுள்ளே குரங்குகள்
- கானகத்தினுள்ளே மான்கள்
- கானகத்தினுள்ளே விலங்குகள்
- குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் (இரண்டு பாகங்கள்)
- உலகின் பழங்குடி மக்கள்
- விளையாட்டு விநோதங்கள்
- சித்திரக் கதைகள் (இரண்டு பாகங்கள்)
- அதிசய நாய் ராஜாவின் சாகசங்கள்
- தப்பியோடியவர்கள்
- குழந்தைகளுக்கு பலதேசக் கதைகள் (ஐந்து பாகங்கள்)
- வரலாறு படைத்த வல்லுநர்கள்
- பாட்டி பாட்டி கதை சொல்லு
- தாத்தா தாத்தா கதை சொல்லு
- அம்மா அம்மா கதை சொல்லு
- அப்பா அப்பா கதை சொல்லு
- கதை கதையாம் காரணமாம்
- பெண் சக்தி
- கடல்களும் கண்டங்களும்
- நிலம் நீர் காற்று
- அன்றிலிருந்து இன்றுவரை (இரண்டு பாகங்கள்)
- தெரியுமா தெரியுமே
- வேடிக்கை விளையாட்டு விஞ்ஞானம்
- அறிவியல் தகவல்கள் (மூன்று பாகங்கள்)
- நமது உடலின் மர்மங்கள்
- முதலுதவி
- இயற்கை அற்புதங்கள்
- அன்றும் இன்றும்
- உலக அதிசயங்கள்
- பரவசமூட்டும் பறவைகள்
- வாண்டுமாமாவின் வரலாற்றுக் கதைகள்
- அழகி
- ஜுலேகா (இரண்டு பாகங்கள்)
- பாமினிப் பாவை
- அடிமையின் தியாகம்
- சுழிக்காற்று
- சந்திரனே சாட்சி
- மெழுகு மாளிகை
- புலிக்குகை
- ஒற்று உளவு சதி
- டாக்டர் ராதாகிருஷ்ணன்
- ராஜாஜி
- ஸ்ரீமத் பாகவதம்
- முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டாம் தொகுதி)
- யோகா
- எதிர்நீச்சல்
- மாயாவி இளவரசன்
- மேஜிக் மாலினி
- மாதர்குல திலகங்கள்
- பாரதப் பண்டிகைகள்
- அதிசயப் பேனா
- வயலின் வசந்தா
- நூறு கண் ராட்சதன் (சிறுகதைகள்)
உசாத்துணை
- 'வாண்டுமாமா' -அரவிந்தன் தமிழ் ஆன்லைன்-தென்றல், ஜனவரி 2011
- 'வாண்டுதேசத்தின் மாமன்னர்' - கிங் விஸ்வா, இந்து தமிழ் திசை, ஜூன் 2014
- வாண்டுமாமா நேர்காணல் - ஜூன் 2012 ஆனந்த விகடன். எழுத்தாளர் சமஸின் பதிவு; 27, ஜூன் 2012
- சிறுவர் இலக்கியத்தின் சிற்பி
- குழந்தைகளின் முதல் நண்பன் - வாண்டுமாமா
- தமிழ் காமிக்ஸ் உலகம் வாண்டுமாமா
- வாண்டுமாமா நாவல்கள் தமிழ் காமிக்ஸ் உலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jun-2023, 10:22:01 IST