under review

உலகநீதி

From Tamil Wiki
உலகநீதி உரை ( ந.மு. வேங்கடசாமி நாட்டார்)

உலகநீதி (16-ம் நூற்றாண்டு) தமிழ் நீதி நூல். உலக நாதர் இயற்றியது. ஆரம்பப்பள்ளி கல்வியில் சிறுவர்கள் பாடும் பள்ளிப்பாடலாக இன்றளவும் புழக்கத்தில் உள்ளது.

நூல் பற்றி

உலகநீதி என்ற நீதிநூல் உலகநாதர் என்ற புலவரால் எழுதப்பட்டுள்ளது. பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின் ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது. விளக்க உரையின்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய பாடல் வரிகளை பள்ளிச் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார் உலகநாதர். ஒலி நயத்தோடு பாடவும், எளிதில் மனதில் இருத்தவும் கூடிய வரிகளைக் கொண்ட பாடல்களாக உள்ளதால் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இரு இறைவணக்க வரிகளுடன் துவங்கி பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களும் தொடர்கின்றன. ஒவ்வொரு விருத்தப்பாவும் எட்டு வரிகள் என்ற வீதத்தில் நூற்றிநான்கு வரிகளையும், பிள்ளையாரிடம் இந்த உலகநீதிபுராணத்தைப் பாட அருள் பெற வேண்டி வணங்கும் இரு காப்பு வரிகளுடன் சேர்த்து முழுப் படைப்பும் நூற்றி ஆறு வரிகளை கொண்டது. பதினொன்றாவது பாடலும், பதின்மூன்றாவது பாடலும் அமைப்பில் சற்றே மாறுபட்டவை. பதினொன்றாம் பாடல் முழுவதும் கோர்வையாக ஒருகருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல். எனவே வரிக்கு வரி ஒரு நீதியை குறிக்கும் பொதுவான முறையில் இருந்து பதினொன்றாவது பாடல் மாறுபட்டுள்ளது.

உலகநீதி பாடல் வரிகள், தான் கூறும் அறிவுரைகளை எதிர்மறையாகக் கூறுகிறது. உலகநாதர் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் முயற்சியாக, எச்சரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அறிவுரைகளாகக் கொள்ளலாம்.

பாடல் நடை

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே

உசாத்துணை


✅Finalised Page