பூந்தளிர்
பூந்தளிர், சிறார்களுக்கான மாதமிருமுறை இதழ். கேரளத்தில் ‘பூம்பாற்றா’ (வண்ணத்துப் பூச்சி) என்ற சிறார் இதழை நடத்தி வந்த எஸ்.வி. பை.அவர்களால் தமிழில் தொடங்கப்பட்டது. 1984 முதல் வெளியான இவ்விதழின் ஆசிரியர் வாண்டுமாமா. வண்ண இதழாக வெளிவந்த இம்மாத இதழ், சிறார்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இலங்கையிலிருந்தும் ‘பூந்தளிர்’ என்ற பெயரில் ஓர் இதழ் வெளியாகியுள்ளது.
பதிப்பு, வெளியீடு
பூந்தளிர், சிறார்களுக்கான மாதமிருமுறை இதழ். அக்டோபர் 1984 முதல் வெளிவந்தது. இதன் நிறுவனர் எஸ்.வி. பை . இவர், தனது பைகோ பிரசுரம் (Paicco) மூலம் கேரளாவில், ‘பூம்பாற்றா’ (வண்ணத்துப் பூச்சி) என்ற சிறார் இதழை நடத்தி வந்தார். தமிழிலும் அதே போன்ற இதழைத் தொடங்க விரும்பினார். வாண்டுமாமா அதற்கு உறுதுணையாக இருந்தார். பூந்தளிரின் ஆசிரியராக வாண்டுமாமா நியமனம் செய்யப்பட்டார்.
ஆரம்பகாலக்கட்டத்தில் ‘பூம்பாற்றா’ இதழின் தமிழாக்க படைப்புகள் பூந்தளிரில் அதிகம் வெளிவந்தன. சில மாதங்களுக்குப் பின் தமிழ் உலகம் சார்ந்த படைப்புகளும், ‘டிங்கிள்’ இதழின் மொழியாக்கப் படைப்புகளும் வெளியாகின. இதழின் விலை இரண்டு ரூபாய்.
சில காரணங்களால் சில ஆண்டுகளுக்குப் பின் ‘பூந்தளிர்’ இதழ் நின்று போனது. பின் இந்த இதழை பார்வதி பப்ளிகேஷன் நிறுவனத்தைச் சார்ந்த ஹரிராமன் வாங்கி நடத்தினார். வாண்டுமாமா ஆசிரியராகத் தொடர்ந்தார். பூந்தளிரில் வெளியான வாண்டுமாமாவின் காமிக்ஸ் தொடர்கதைகள் ‘பார்வதி சித்திரக் கதைகள்’ காமிக்ஸ் இதழில் வெளியாகின.
உள்ளடக்கம்
நகைச்சுவைக்கும், பொது அறிவு சார்ந்த செய்திகளுக்கும் முக்கியத்தும் அளித்து பூந்தளிர் வெளியானது. காகைக்காளி, கபீஷ், வேட்டைக்கார வேம்பு, தந்திரக்கார மந்திரி, சுப்பாண்டியின் சாகசங்கள் போன்ற தொடர்கள் வண்ணப்படங்களுடன் வெளியாகி சிறார்களைக் கவர்ந்தன. தன் மந்திர வாலின் உதவியால் எதிரிகளிடம் இருந்து வன விலங்குகளை காக்கும் கபீஷ் கதைகள் சிறுவர்களை மிகவும் ஈர்த்தன. அப்பாவி முதலை துப் துப், அதன் எதிரி நரி சமந்தகன் ஆகியோரின் சதிகளை காளி முறியடிப்பதுதான் காக்கைக்காளியின் கதை. வாண்டுமாமா, ஓவியர் செல்லத்துடன் இணைந்து மிகச் சிறப்பாக இதழை வடிவமைத்து வெளியிட்டார். படக்கதைகளுக்கு அதிகப் பக்கங்களை ஒதுக்கியது பூந்தளிர்.
பூந்தளிரில் ‘நல்வழி’, ‘ஆத்திச்சூடி’, ‘கொன்றைவேந்தன்’ போன்ற தமிழ் இலக்கியங்கள் எளிய விளக்கங்களுடன் தொடராக வெளிவந்தன. கிரேக்க புராணக் கதைகளின் மொழிப்பெயர்ப்பு வெளியானது. கதைகள் மட்டுமன்றி அறிவியல் உண்மைகள், உலக நடப்புகள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் பூந்தளிர் வெளியிட்டது. கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், ஓவியங்கள், விடுகதைகள் போன்ற சிறுவர்களின் படைப்புகள் 'உங்கள் பக்கம்' என்ற தலைப்பில் வெளிவந்தன. வாசகர்களின் அறிவு பூர்வமான கேள்விகளுக்கு 'நீங்கள் கேட்டவை' என்ற தலைப்பின் கீழ் பதில்கள் வெளியாகின.
'பூந்தளிர் அறிவுப் புதிர் போட்டி' என்ற பெயரில் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டது. இதைத் தவிர கிரிக்கெட் பந்து கண்டுபிடிக்கும்போட்டி, ஒட்டுப் படப்போட்டி, கதையின் முடிவை ஊகிக்கும் போட்டி, வித்தியாசங்களை கண்டறிதல், புள்ளிகளை இணைத்து உருவங்களை உருவாக்குதல், வழி கண்டுபிடித்தல், பூந்தளிர் புதிர்கள் எனப் பல வகை வகையான போட்டிகள் பூந்தளிரில் வெளியாகின. 'அதிர்ஷ்டக் குழந்தைகள்' என்ற தலைப்பில் சிறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகின. பரிசும் அளிக்கப்பட்டது.
இதழின் ஆசிரியர் வாண்டுமாமா கெளசிகன், மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி போன்ற புனை பெயர்களில் தொடர்கள், முல்லா கதைகள், அரேபியக் கதைகள், மொழி மாற்றுக் கதைகள், அயல்நாட்டு இலக்கியங்கள், அறிவியல், வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார். டிங்கிளில் வெளிவந்த காமிக்ஸ் படைப்புகள் வாண்டுமாமாவின் மொழிப்பெயர்ப்பில் பூந்தளிரில் வெளியாகின.
பங்களிப்பாளர்கள்
- டாக்டர் பூவண்ணன்
- பி.வி. கிரி
- திசை முத்து
- ஆர்.பி. சாரதி
- திருச்சி பாரதன்
- டாக்டர் என். ஸ்ரீதரன்
- கே. ராதாகிருஷ்ணன்
- பாபநாசம் குறள்பித்தன்
- இமயபாரதி
- கே. விஸ்வநாதன்
- சிற்பி சோமு
- குன்றக்குடியான்
- வித்வான் வி. துரைசாமி
- கா.பி. தங்கவேலன்
- தமிழ்முடி
- வண்ணை கணேசன்
- அழகனார்
- தளவை இளங்குமரன்
- புலேந்திரன்
- வானம்பாடி
- ரவி வர்மா
- சித்திரப்பிரியா
- அழகு பழனிச்சாமி
மற்றும் பலர்
ஓவியர்கள்
பூந்தளிர் இதழின் ஓவியங்களை செல்லம், உமாபதி, ராமு, சுதர்ஸன், விசு, உதய், பவித்ரா. கல்பனா, மணியம் செல்வன் ஆகியோர் வரைந்தனர். ‘செல்லம்’ பூந்தளிர் இதழின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்தார்.
பூந்தளிர் அமர் சித்ரக்கதை
1984-ல், ‘பைகோ நிறுவனத்தினர்’, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த அமர் சித்ரக் கதைகளுக்கான உரிமம் பெற்றுத் தமிழில் வெளியிட்டனர். அவை ‘பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள்’ என்னும் பெயரில் வெளிவந்தன. புராண, இதிகாசக் கதைகள் மூலம் பன்மொழிச் சிறார்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது ‘பூந்தளிர் அமர் சித்ரகதை’ இதழ்.
நிறுத்தம்
ஐந்து ஆண்டுகள் வெளிவந்த பூந்தளிர், தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக 1989-ல், மூன்று இதழ்கள் வெளியீட்டுடன் நின்று போனது.
இலக்கிய இடம்
அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா போன்ற சிறார் இதழ்களிடையே மிகுந்த புகழ் பெற்றிருந்த இதழ் பூந்தளிர். வெறும் கதைகளை மட்டும் வெளியிடும் பொழுது போக்கு இதழாக அல்லாமல் ஒரு அறிவூட்டும் இதழாக வெளிவந்தது. சித்திரங்களின் மூலம் கதை சொல்வதே குழந்தைகளை எளிதில் கவரும் என்பதை பூந்தளிர் நிரூபித்தது. சிறார்களிடையே கற்பனையையும், வாசிப்பு மற்றும் எழுத்தார்வத்தையும் தூண்டிய இதழாக ‘பூந்தளிர்’ மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- பூந்தளிர் கட்டுரை: காமிக்ஸ் பூக்கள்
- பூந்தளிர் இதழ்கள்
- பூந்தளிர் கதைகள்: இரவுக்கழுகு
- பூந்தளிர் அமர் சித்திரக்கதை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Aug-2023, 07:22:09 IST