under review

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்

From Tamil Wiki
ராதாகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராதாகிருஷ்ணன் (பெயர் பட்டியல்)

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் (சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணன், Sarvepalli Radhakrishnan) (செப்டம்பர் 5, 1888- ஏப்ரல் 17, 1975) தத்துவ அறிஞர், கல்வியாளர், சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர், இந்தியாவின் சோவியத் நாட்டுக்கான இரண்டாவது தூதர். 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவராகவும், சமய ஒப்பீட்டய்வாளராகவும் மதிப்பிடப்படுகிறார். நவவேதாந்தத்தின் இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான ஆளுமை. இந்திய தத்துவ மரபை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி. காசி ஹிந்துப் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக இருந்தார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மதங்கள் மற்றும் அற விழுமியங்களுக்கான ஸ்பால்டிங் இருக்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெம்பிள்டன் விருது, பாரத் ரத்னா உட்பட பல தேசிய, சர்வதேச உயரிய விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ராதாகிருஷ்ணன் திருத்தணியில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சர்வபள்ளி வீராஸ்வாமி-சீதம்மாள் இணையருக்கு செப்டம்பர் 5, 1888-ல் பிறந்தார். அவரது குடும்பத்தின் பூர்விகம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சர்வப்பள்ளி. பெற்றோர் இட்ட பெயர் ராதாகிருஷ்ணையா.

திருத்தணி கே.வீ. உயர்நிலைப்பள்ளி, திருப்பதி ஹெர்மென்ஸ்பெர்க் இவாஞ்செலிகல் லூதரன் பள்ளி மற்றும் வாலாஜப்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் தன் பள்ளிக்கல்வியை முடித்தார். குடும்பத்தில் வறுமை நிலவியபோதும், கல்வியின் எல்லா நிலைகளிலும் அவருக்கு உபகாரச் சம்பளம் கிடத்தது.

ராதாகிருஷ்ணன் வேலூர் ஊரிசு கல்லூரியில்(Voorhees College) எஃப்.ஏ (F.A) படிப்பை 16- வயதில் முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். அவரது உறவினர் ஒருவர் படித்த பாட புத்தகங்கள் இலவசமாகக் கிடைத்ததால் தத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.

ராதாகிருஷ்ணன் தனது இளங்கலைப் பட்டப்படிப்பின் ஆய்வுக்கட்டுரையை வேதாந்த அமைப்பில் நெறிமுறைகளுக்கு இடமில்லை என்ற குற்றச்சாட்டிற்கான எதிர்வினையாக 'வேதாந்தத்தின் அறநெறிகள் மற்றும் அதன் மீபொருண்மை குறித்த முன்முடிவுகள்' (The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions) என்ற தலைப்பில் எழுதினார். இக்கட்டுரை ரெவ. வில்லியம் மேஸ்டன், டாக்டர் ஆல்பிரட் போன்ற பேராசிரியர்களின் பாராட்டைப் பெற்றது.

ராதாகிருஷ்ணனின் கிறிஸ்தவக் கல்லூரியின் பேராசிரியர் ஹாக்(Hogg) மற்றும் பிற ஆசிரியர்களின் விமர்சனம் இந்து பண்பாட்டைப்பற்றிய தன் நம்பிக்கையை உலுக்கியதாகவும் இந்து மதத்தை ஆய்வு செய்து அதில் உயிர்ப்புடன் இருக்கும் அம்சங்களைத் தேடத் தூண்டியதாகவும் குறிப்பிடுகிறார். இத்தேடல் இந்திய தத்துவம் மற்றும் மதம் பற்றிய விமர்சன ஆய்வுக்கு இட்டுச் சென்றது. அதே சமயம் ஹாக்கை ராதாகிருஷ்ணன் இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த கிறிஸ்தவ சிந்தனையாளர்களில் ஒருவராகவும் கருதினார்.

தனி வாழ்க்கை

ராதாகிருஷ்ணனுக்கு மே 1903-ல் தனது 16-ஆவது வயதில் 10 வயதான சிவகாமுவுடன் திருமணம் நடந்தது. மகன்: சர்வப்பள்ளி கோபால், மகள்கள்: பத்மாவதி, ருக்மணி, சுசீலா, சுந்தரி, சகுந்தலா. சர்வபள்ளி கோபால் வரலாற்றாசிரியராக இருந்தார். ராதாகிருஷ்ணனின் பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் கல்வித்துறை, பொதுக் கொள்கை, மருத்துவம், சட்டம், வங்கியியல், வணிகம், வெளியீடு எனப் பலதுறைகளில் புகழ்பெற்றனர்.

கல்விப்பணிகள்

ஏப்ரல் 1909 -ல், ராதாகிருஷ்ணன் சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவவியல் துறை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1918-ல், மைசூர் பல்கலைக்கழகத்ததின் மகாராஜா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியேற்றார். அப்போது தி குவெஸ்ட் (The Quest), ஜர்னல் ஆஃப் ஃபிலாசபி(Journal of Philosophy) மற்றும் இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எதிக்ஸ் (International Journal of Ethics) போன்ற புகழ்பெற்ற இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். அக்காலத்தில் அவரது முதல் நூல் 'The philosophy of Ravindranath Tagore' வெளிவந்தது. தாகூரின் தத்துவமே 'இந்திய ஆன்மாவின் உண்மையான வெளிப்பாடு என்று அவர் நம்பினார். இரண்டாவது புத்தகம் 'The Reign of Religion in Contemporary Philosophy'(சமகால தத்துவத்தில் மதத்தின் ஆதிக்கம்) 1920 -ல் வெளிவந்தது.

1921-ல் ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மனவியல் மற்றும் அறத்துறையின் ஜார்ஜ் அரசர் இருக்கைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். (King George V Chair of Mental and Moral Science). ஜூன் 1926-ல் பிரிட்டிஷ் பேரரசின் பல்கலைக்கழகங்களுக்கான மாநாட்டிலும் (Congress of the Universities of the British Empire ), செப்டம்பர் 1926-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசத் தத்துவ மாநாட்டிலும் ( International Congress of Philosophy at Harvard) கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

ஹிபர்ட் அறக்கட்டளை சொற்பொழிவுகள்

ராதாகிருஷ்ணன் ஹிபர்ட் அறக்கட்டளையின் 1929-க்கான ஹிபர்ட் பேருரை(Hibbert Lectures)[1] வழங்குவதற்காக அழைக்கப்பட்டார். வாழ்வின் லட்சியங்களைப்பற்றி அவர் அங்கு ஆற்றிய உரை 'An Idealist View of Life' என்ற நூலாக வெளிவந்தது. அவரது ஆங்கிலப் புலமையும், கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவப் புலத்தில் அவருக்கிருந்த தேர்ச்சியும், அறிவும் பரவலான பாராட்டைப் பெற்றன.

1929-ல் மான்செஸ்டர் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராகப் பணியேற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு சமயவியல் ஒப்பீட்டாய்வு குறித்து விரிவுரைகள் ஆற்றினார். கல்விப்பணிகளுக்காக, ஜூன் 1931-ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 'சர்' பட்டம் அளித்தார். இந்திய விடுதகைக்குப் பிறகு 'சர்' பட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து 'டாக்டர்' என்ற தனது கல்விப் பட்டத்தாலேயே அறியப்பட விரும்பினார்.

1931 முதல் 1936 வரை விசாகப்பட்டினம் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.

1936-ல் ராதாகிருஷ்ணன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மதங்கள் மற்றும் அற விழுமியங்களுக்கான ஸ்பால்டிங் இருக்கைக்காகத் (Spalding Professor of Eastern Religion and Ethics at the University of Oxford) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆல் சோல்ஸ் கல்லூரியின்(All Souls College) ஆய்வுநல்கைக்காகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1939-ல் பண்டித மதன் மோகன் மாளவியாவின் அழைப்பின்பேரில் அவருக்குப் பின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1948 வரை பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

மாவோசே துங்குடன் ராதாகிருஷ்ணன்
பாரத ரத்னா விருது

ராதாகிருஷ்ணன் 1928-ல் ஆந்திர மகாசபையில் கலந்து கொண்டு மெட்ராஸ் மகாணத்தின் கொடை மாவட்டங்கள்( Ceded Districts, நிஜாமால் 1800-ல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளிக்கப்பட்ட கடப்பா, கர்நூல், பெலாரி, அனந்தபூர் மாவட்டங்கள்) பிரதேசத்துக்கு 'ராயலசீமா' என மறுபெயரிடும் யோசனைக்கு ஆதரவளித்தார்.

1931- உலக நாடுகள் சங்கத்தில் அறிவுசார் ஒத்துழைப்புக் கமிட்டிக்கு உறுப்பினராகத்(League of Nations Committee for Intellectual Cooperation) தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்குலகம் அவரை இந்தியவியலிலும், தத்துவங்களில் நிபுணராகவும், சமகால சமூக உருவாக்கத்தில் கீழைத்தேயங்களின் பங்கை எடுத்துரைத்தவராகவும் அங்கீகரித்தது.

1947-ல் இந்திய விடுதலைக்குப்பின் ராதாகிருஷ்ணன் யுனெஸ்கோவில் (1946-52) இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார்.

ராதாகிருஷ்ணன் 1949 முதல் 1952 வரை சோவியத் யூனியனுக்கான இந்தியத் தூதராக இருந்தார். ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் நட்பையும், நன்மதிப்பையும் பெற்றார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஸ்டாலினின் ஆதரவைப் பெற்றதில் ராதாகிருஷ்ணனின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ராதாகிருஷ்ணன் இந்திய அரசியலமைப்புச் சபைக்குத் (Constitutional assembly)தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தில் பங்காற்றினார். இந்திய அரசின் மதச்சார்பற்ற பார்வைக்கு எதிரானது என்பதால், மதக்கல்வியோ, மத போதனைகளோ வழங்கும் அரசு நிறுவனங்களுக்கு எதிராகப் பேசினார். அரசு பாரபட்சமின்றி வெவ்வேறு மதங்களுக்கு ஒரே வகையான முக்கியத்துவம் அளிக்கக் கடமைப்பட்டதாக வலியுறுத்தினார்.

ராதாகிருஷ்ணன் 1952-ல் இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்து வருடங்கள் அப்பதவியில் இருந்தார். 1957-ல் சீனாவுக்கு அரசு முறைப் பயண்மாகச் சென்று மாவோ-சே துங்கைச் சந்தித்தார். 1962-ல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1962-1967).

தத்துவம்

ராதாகிருஷ்ணன் நவவேதாந்தத்தை முன்னிறுத்தியவர். நவவேதாந்தத்தின் இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான ஆளுமை. ரவீந்திரநாத் தாகூரின் உள்ளுணர்வு மற்றும் அழகியல் கோட்பாடுகளால் ராதாகிருஷ்ணன் ஈர்க்கப்பட்டார். ராதாகிருஷ்ணனின் தத்துவம், மதம் சார்ந்த அறிதலியலில் தாகூரின் உள்ளுணர்வு மற்றும் அழகியல் கோட்பாடுகளின் தாக்கம் இருந்தது. ராதாகிருஷ்ணன் இந்து மதத்தின்மீது மேற்குலகம் கொண்டிருந்த சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கெதிராக வாதாடினார். அதேசமயம் கிழக்கு, மேற்கு தத்துவச் சிந்தனைகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தார்.

ராதாகிருஷ்ணன் இந்திய தத்துவத்தை மேலைநாட்டுச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டும், மேலைநாட்டுக் கலைச்சொற்களைப் பயன்படுத்தியும் உலகுதழுவிய வாசகர்களுக்காக எழுதினார். 'இந்தியஞானம்', 'கீதை உரை' ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை. ராதாகிருஷ்ணனின் நூல்கள் இந்தியக் கல்விப்புலத்தில் தத்துவக்கல்விக்கான அடிப்படை நூல்களாக அமைந்தன.

ராதாகிருஷ்ணன் இந்து மெய்யியல் மரபின் மையம் வேதாந்தமே என வாதிட்டார். நவீன ஐரோப்பிய தத்துவப் பரப்பில் வைத்து வேதாந்தத்தை வரையறை செய்தார். அவரது மீபொருண்மை அத்வைத வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சமகாலத்திற்கேற்ப அதை மறுபரிசீலனை செய்யவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சங்கரரின் மாயை பற்றிய கருத்தை மறுவிளக்கம் செய்தார். உலக வாழ்வே மாயை என்பதற்கு மாற்றாக உலக வாழ்வையே முழுமுதல் உண்மை எனக் கருதும் நிலையையே மாயை என வரையறுத்தார்.

ராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம் ஆன்மீகவயமானது என்று கருதினார். ஆன்மீக நோக்கு தான் இந்திய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்திய மனத்தின் உறுதியான ஆன்மீக சிந்தனையே அதன் பண்பாட்டையும், தத்துவத்தையும் வழிப்படுத்துகிறது. ஜீவான்ம, பரமான்ம ஐக்கியத்திற்கான சிந்தனைகளும், முயற்சிகளுமே ஆன்மீக நோக்குகளின் செயல்பாட்டு வெற்றிக்குக் காரணம். அந்தராத்மா (உள்ளுணர்வு)வின் குரலாக இந்தியச் சிந்தனை இருப்பும், வளர்ச்சியும் அடைந்துள்ளது. . மனத்தைவிட ஆழ்ந்த ஒருண்மை 'ஆன்மா' . இதைப் பகுத்தறிவினாலோ, தர்க்கங்களாலோ அறிய முடியாது. உள்ளுணர்வினால்தான் உணர முடியும். கிழக்கின் தத்துவப் புலம் உள்ளுணர்வு, அனுபவம், மற்றும் ஆன்மீக சோதனையில் மையம் கொண்டது, மேற்குலகத் தத்துவப் புலம் விஞ்ஞானம், பகுத்தறிவு மற்றும் தர்க்கத்தை மையமாகக் கொணகொண்டது என்ற தன் கருத்தை முன்வைத்தார்.

இந்திய தத்துவம்(பகுதி 1, 2)

ராதாகிருஷ்ணனின் இந்திய தத்துவம் தொகுதி ரிக்வேதத்திலிருந்து ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் வரையிலான இந்தியத் தத்துவத்தின் வரலாற்றையும், அதன் தொடர்ச்சியான வளர்ச்சியையும், பல்வேறு தத்துவஞானிகளையும் ஒரே தத்துவ நீரோட்டத்தின் பின்புலத்தில் விளக்குகிறது. பகுதி 1 இந்திய தத்துவத்திற்கான பொதுவான அறிமுகத்துடன், ரிக்வேதம் முதல் பௌத்தம் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இதில் உபநிடதங்கள் மற்றும் பகவத் கீதையின் இறையியல் ஆகியவை அடங்கும்.

இரண்டாம் பகுதி இந்திய ஞான மரபின் ஆறு தத்துவ தரிசனங்களை உள்ளடக்கியது.

An Idealistic view of life

ராதாகிருஷ்ணனின் தலைசிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூலில் மதம் மற்றும் மதத்திற்கு மாற்றாக விஞ்ஞானம் என்ற நவீன அறிவுசார் கருதுகோள், மதத்திற்கு மாற்று தேடும் முயற்சிகள் பற்றி ஆராய்கிறார். வேதாந்தத்தையும் மனிதனின் உயர்ந்த லட்சியமாக சத்-சித்-ஆனந்தம் என்னும் நிலையையும் முன்வைக்கிறார். இந்த நூல் மானுட வாழ்வே மெய்மையை உணர்வதற்கான பயணம் என்பதை முன்வைத்து, ஆன்மீக உணர்வின் முக்கியத்துவத்தையும் லட்சியவாத மதிப்பீடுகளுக்கான தேடலையும் வலியுறுத்துகிறது. உண்மையான வாழ்க்கை அறமும் அறிவும் சார்ந்த உயர்ந்த நோக்கங்களுடன், மெய்மையுடன் தொடர்புடையதாக அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது.

Eastern religion and western thought

இந்த நூல் இந்திய தத்துவ மற்றும் மத மரபுகளுக்கும் மேற்கத்திய நாட்டு தத்துவ மரபுகளுக்குமான உறவையும் அவை பரஸ்பரம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராய்கிறது. கிரேக்க தத்துவம், அலெக்ஸாண்ட்ரிய யூத மதம், கிறிஸ்தவ ஞானவாதம் மற்றும் நியோ-பிளாட்டோனிசம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் இந்திய மாயவாதத்தின் பங்களிப்பைக் குறிப்பிடுகிறார். கீழை மரபைக்குறித்த புரிதல் மேற்கின் ஆன்மீக, தத்துவ வளர்ச்சியைப் பற்றிய நுண் அவதானிப்புகளை வழங்கக்கூடும் என்று வாதிடுகிறார்.

The Principal Upanishads

இந்த நூலில் 18 முக்கிய உபநிடதங்களின் ஆங்கில மொழியாக்கத்துடன் குறிப்புரைகள், வேத மரபில் உபநிடதங்களின் இடம், சமகாலத்தில் அவற்றின் பொருண்மை, ஆன்ம விடுதலைக்கும் வாழ்வைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் உபநிடதங்கள் வழிகாட்டியாக அமையும் தன்மை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

விருதுகள், சிறப்புகள்

  • பிரிட்டிஷ் அரசின் 'சர்' பட்டம் (Knight Bachelor) (1931)
  • பிரிட்டிஷ் அகாதெமியின் ஆய்வுநல்கை(fellowship)
  • சர்வதேச தத்துவக் கழகத்தின் (Institut International de Philosophie, Paris) நிரந்தர உறுப்பினர்
  • கலை, பண்பாட்டுத்துறைப் பங்களிப்புக்கான கதே பதக்கம் (Goethe Plaque of the City of Frankfurt)
  • ஜெர்மனியின் கலாசாரப் புரிந்துணர்வுக்கான அமைதிப் பரிசு (The Peace Prize of the German Book Trade)
  • பாரத ரத்னா விருது(1952)
  • இந்திய சாகித்ய அகாதெமியின் ஆய்வுநல்கை (1968)
  • ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ராதாகிருஷ்ணன் பெயரால் உதவித்தொகை(Radhakrishnan Chevening Scholarships)
  • மெக்ஸிக அரசின் அயல்நாட்டவர்க்கான மிக உயர்ந்த விருது(The Mexican Order of the Aztec Eagle )
  • ஜெர்மனி(பிரஷ்யா) அரசின் தனி மனித சாதனைக்கான மிக உயர்ந்த விருது(Pour le Mérite)
  • காமன்வெல்த் நாடுகளுக்கான Order of Merit விருது
  • இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு 11 முறையும், அமைதிக்கான நோபல் பரிசுக்காக 1 முறையும் ராதாகிருஷ்ணன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
  • டெம்பிள்டன் பரிசு (1975) [2].உடல்நிலை காரணமாக அவர் சார்பாக இந்தியத் தூதுவர் பி.கே. நேரு அவர் சார்பில் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

மதிப்பீடு

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த கல்வியாளராகவும் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மதம் மற்றும் தத்துவப்புலத்தின் ஒப்பீட்டாய்வாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். ராதாகிருஷ்ணன் நவீன ஐரோப்பிய தத்துவப் பரப்பில் வைத்து வேதாந்தத்தை வரையறை செய்தார். வேதாந்தத்தை இந்துமதத்தின் உலகைப் பற்றிய கண்ணோட்டமாக மேற்குலகில் நிலைநிறுத்தினார். இந்திய தத்துவ மரபுகளின் ஒத்திசைவையும் அறம் சார்ந்த தன்மையையும் நிலைநிறுத்தினார். இந்து மரபைப்பற்றிய அவரது விளக்கங்களும், அவர் மனித வாழ்வின் லட்சியமாக முன்னிறுத்திய ஆன்மீக அனுபவம், உள்ளுணர்வு ஆகிய கருதுகோள்கள்களும் மேற்கத்திய உலகம் இந்து மதத்தை எளிதாக அணுக வகை செய்தன. ப்ளெட்டோ கனவு கண்ட தத்துவ ஞானியும் அரசனுமான லட்சிய நாயகன் (the philosopher-king of whom Plato dreamed) என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அவரைச் சிறப்பித்தது. மேற்கத்திய தத்துவ மற்றும் இலக்கிய மரபுகள் குறித்த அவரது விரிவான அறிவின் மூலம் இந்திய, மேலைத் தத்துவங்களுக்கிடையே பாலமாக அமைந்தன அவரது நூல்கள்.

ராதாகிருஷ்ணனின் நூல்கள் இந்தியக் கல்விப்புலத்தில் தத்துவக்கல்விக்கான அடிப்படை நூல்களாக அமைந்தன. ராதாகிருஷ்ணன் நவவேதாந்தத்தை முன்னிறுத்தியவர். நவவேதாந்தத்தின் இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான ஆளுமை.

ராதாகிருஷ்ணனின் இறப்பிற்கு சில காலம் முன் மதம் , நல்லிணக்கம் மற்றும் ஆன்மிக ஆய்வுக்காக வழங்கப்படும், நோபல் பரிசுக்கு இணையான டெம்பிள்டன் விருதைப் பெற்றார்[3]. விருதுத்தொகை முழுவதையும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக அளித்தார். டெம்பிள்டன் தன் பரிசளிப்பு உரையில் "ராதாகிருஷ்ணன் முன்வைக்கும் நித்தியமான மெய்மையுடனான உறவு நவீன இந்து மதத்திற்கும் உலகின் பிற மதங்களுக்கும் அவரது மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கலாம். நாம் ஒவ்வொருவரும் மெய்மையை மையமாகக் கொண்டிருப்பதன் மூலம் நமது தனிப்பட்ட நம்பிக்கைகளில் வளர முடியும். உண்மையில், டாக்டர் ராதாகிருஷ்ணனின் உலகளாவிய, முழு மானிடத்திற்கும் பொதுவான தன்மை ஈடு இணையற்றது" எனக் குறிப்பிட்டார்.

ராதாகிருஷ்ணன் சோவியத் யூனியனுக்கான இந்தியத் தூதராகவும், உலக நாடுகள் சங்கம், யுனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங்களில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் செயலாற்றினார். ஸ்டாலின் போன்ற உலகத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

விவாதங்கள்

ராதாகிருஷ்ணன் முன்வைத்த இந்திய தத்துவம் ஆன்மிகவயமானது, அது மனிதனின் ஆன்ம மீட்சியை மட்டும் நோக்கமாகக் கொண்டது என்னும் கருதுகோள் இந்திய மரபில் பன்னெடுங்காலமாக நிலவி வந்த பொருள்முதல்வாத சிந்தனைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. மார்க்சிய அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய தன் 'இந்திய தத்துவவியலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்' என்ற நூலில் இந்திய ஞானமரபில் இருந்த பொருள்முதல்வாதப் போக்குகளைச் சுட்டி ராதாகிருஷ்ணனின் ஆன்மவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். எம்.என். ராய் ராதாகிருஷ்ணன் முன்வைத்த' உள்ளுணர்வு' மற்றும் ஆன்மீக அனுபவம் என்பதற்கு மாற்றாக தர்க்கமும், அறிவியல்பூர்வமான சிந்தனையையும் முன்வைத்தார். இந்திய மரபை ராதாகிருஷ்ணன் காலம்காலமாகத் தொடரும் ஆன்மீக ஞானமாகக் கண்டபோது ராய் மரபு சமூக, வரலாற்றுக் காரணங்களால் உருப்பெருவதாகக் கருதினார்.

ராதாகிருஷ்ணன் 'ப்ரஸ்தானத்ரயம்' என்னும் உபநிடதம், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை மதநூலாக வரையறுத்தார். மதநூல்கள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலைநிற்பவை, ஆராய்ச்சிக்கு உரியவையல்ல. பகவத்கீதை தத்துவநூலாக ஏற்றும் மறுத்தும் விளக்கியும் விவாதிக்கப்படவேண்டிய நூல் என்று ராதாகிருஷ்ணனின் நிலைப்பாட்டுக்கு நடராஜகுருவின் மறுப்பை ஜெயமோகன் குறிப்பிடுகிறார்[4].

மறைவு

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 17, 1975 அன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

நினைவேந்தல்
  • இந்திய அரசு 1967, 1989 இரு ஆண்டுகளிலும் அவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது.
  • சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் இந்தியாவில் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நூல்கள்

  • The Philosophy of Rabindranath Tagore (1918), Macmillan, London, 276 pages
  • Indian Philosophy (1923) Vol. 1, 738 pages. (1927) Vol. 2, 807 pages. Oxford: Oxford University Press (1st edition).
  • The Hindu View of Life (1927), London: Allen & Unwin. 92 pages
  • Indian Religious Thought (2016), Orient Paperbacks, ISBN 978-81-222042-4-7
  • Religion, Science and Culture (2010), Orient Paperbacks, ISBN 978-81-222001-2-6
  • An Idealist View of Life (1929), 351 pages
  • Kalki, or the Future of Civilization (1929), 96 pages
  • Gautama the Buddha (London: Milford, 1938); 1st India ed., 1945.
  • Eastern Religions and Western Thought (1939), Oxford University Press, 396 pages
  • Religion and Society (1947), George Allen and Unwin Ltd., London, 242 pages
  • The Bhagavad gītā: with an introductory essay, Sanskrit text, English translation and notes (1948), 388 pages
  • The Dhammapada (1950), 194 pages, Oxford University Press
  • The Principal Upanishads (1953), 958 pages, HarperCollins Publishers Limited
  • Recovery of Faith (1956), 205 pages
  • A Source Book in Indian Philosophy (1957), 683 pages, Princeton University Press, with Charles A. Moore as co-editor.
  • The Brahma Sutra: The Philosophy of Spiritual Life. London: George Allen & Unwin Ltd., 1959, 606 pages.
  • Religion, Science & Culture (1968), 121 pages

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. he Hibbert Lectures are an annual series of non-sectarian lectures on theological issues. They are sponsored by the Hibbert Trust, which was founded in 1847 by the Unitarian Robert Hibbert with a goal to uphold "the unfettered exercise of private judgement in matters of religion."
  2. பிரபஞ்சம் குறித்த ஆழமான கேள்விகளையும், அதில் மனிதகுலத்தின் இடத்தையும் நோக்கத்தையும் குறித்த அறிவுபூர்வமான ஆய்வுக்கு வழங்கப்படும் பரிசு
  3. Address by Mr. John M. Templeton, April 21,1975
  4. நாராயணகுரு என்னும் இயக்கம்-ஜெயமோகன்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:47:11 IST