under review

மீ.ப.சோமு

From Tamil Wiki
மீ.ப.சோமு
மீ ப சோமு
மீ.ப.சோமு கல்கி அஞ்சலி
மீ.ப.சோமு, டி.கே.சி
சித்தர் இலக்கியம்-

மீ.ப.சோமு (ஜூன் 17, 1921 - ஜனவரி 15, 1999) தமிழ் எழுத்தாளர். நாவல்களும் சிறுகதைகளும் மரபுக்கவிதைகளும் எழுதியவர். பண்ணிசை ஆராய்ச்சியாளர். இதழாளர். வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

மீ.ப.சோமு (மீ.ப.சோமசுந்தரம்) திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ஜூன் 17, 1921-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசையியல் தமிழில் வித்வான் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

மீ.ப.சோமு திருச்சி வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியில் சேர்ந்தார். திருச்சியில் ஏ.எஸ்.ராகவனுடன் இணைந்து திருச்சி எழுத்தாளர் சங்கத்தை நிறுவி மாநாடுகளை நடத்தினார். அகில இந்திய வானொலியில் 40 ஆண்டு காலம் பணியாற்றிய சோமு தென் மாநிலங்களுக்கான தலைமை அமைப்பாளர், பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.மீ.ப.சோமு 1981-ல் பணி ஓய்வுபெற்றார்.

சோமு, டிகேசியுடன்

மீ.ப.சோமு 1940-ல் மணம் புரிந்துகொண்டார். தன் மகளுக்கு டி.கே.சிதம்பரநாத முதலியார், ராஜாஜி, கல்கி நினைவாக சிதம்பரராஜ நந்தினி என பெயரிட்டார்.

இதழியல்

மீ.ப.சோமு எழுத்தாளர் கல்கி மறைந்த பின் 'கல்கி’ இதழின் ஆசிரியராக 1954 முதல் 1956 வரை இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

மீ.ப.சோமு நண்பன் என்ற மாத இதழைத் தொடங்கி 1958 முதல் 1960 வரை இரண்டு ஆண்டுகள் நடத்தினார்.

ஆன்மிகம்

சிக்கனம்பாறை ஆசிரமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தரிடம் ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றார். தொடர்ந்து அவற்றைப் பயிற்சி செய்து வந்த மீ.ப.சோமு பலருக்கு மந்திர உபதேசம் அளித்திருக்கிறார். சித்தர் இலக்கியம் பற்றி மீ.ப.சோமு எழுதிய கட்டுரைகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மூன்று தொகுதிகளாக வெளியிட்டது.

தமிழிசை இயக்கம்

சோமு தொடர்கதை, கல்கி

மீ.ப.சோமு தமிழிசை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பண்ணிசை ஆராய்ச்சியில் இறுதிவரை ஈடுபட்டிருந்தார். அகில இந்திய வானொலியின் பண்ணிசை ஒருங்கிணைப்பாளராகவும் ஓய்வுக்குப்பின் தமிழகப் பண் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ இயக்குநராகவும் பணியாற்றினார். ஏராளமான தமிழிசைப்பாடல்களை எழுதியிருக்கிறார்.அவை இன்றும் மேடையில் பாடப்படுகின்றன.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

மீ.ப.சோமு நெல்லையில் படிக்கும்போதே டி.கே.சிதம்பரநாத முதலியார் திருநெல்வேலியில் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக் கூடுகையில் பங்கெடுத்தார். அங்கே கல்கி, ராஜாஜி ஆகியோர் அறிமுகமானார்கள். மீ.ப.சோமுவின் முதல் கதை 1937-ல் இவருடைய 16 வயதில் ஆனந்த விகடன் இதழில் வெளியானது. இவர் எழுதிய கவிதைக்கு ஆனந்தவிகடன் பரிசும் பாரதி பதக்கமும் கிடைத்தது.

கவிதை

மீ.ப.சோமு தொடர்ந்து மரபுக்கவிதைகளை எழுதத்தொடங்கினார். குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை', 'திருக்குற்றாலப் பாட்டு ஆகிய மரபுஇலக்கியப் படைப்புகள் டி.கே.சிதம்பரநாத முதலியார், அ.சீனிவாசராகவன் ஆகியோரால் பாராட்டப்பட்டன. முதல் கவிதை தொகுதி இளவேனில் 1946-ல் வெளிவந்தது. தமிழக அரசின் சிறந்த கவிதைநூலுக்கான பரிசை அது பெற்றது. தொடர்ந்து தாரகை', 'பொருநைக் கரையில்', 'வெண்ணிலா ஆகிய தொகுதிகள் வெளிவந்தன. மீ.ப.சோமு நாமக்கல் கவிஞர் மரபு எனப்படும் பாரதிக்குப் பிந்தைய கவிதை மரபுடன் அடையாளப்படுத்தப்படுபவர். நேரடியான எளியமொழி, சந்தம், எளிய யாப்பு கொண்ட கவிதைகள் இவை.

இலக்கியக் குழு

மீ.ப.சோமு திருநெல்வேலியை மையமாக்கித் திகழ்ந்த ஓர் இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர். நீதிபதி மகாராஜன், அ.சீனிவாசராகவன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், மு. அருணாசலம் ஆகியோர் அதில் இருந்தனர். மீ.ப.சோமு ராஜாஜியுடன் இணைந்து திருமூலரின் திருமந்திரப் பாடல்களுக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் உரை எழுதினார். புதுமைப்பித்தனுக்கு நண்பராக விளங்கிய மீ.ப.சோமுவுக்கு புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள் நூல்வடிவம் கொண்டிருக்கின்றன. புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மீ.ப.சோமு நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்புக்காக தொகுத்து நூலாக்கினார். எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் நெருக்கம் கொண்டிருந்த மீ.ப.சோமு கலைக்களஞ்சியப் பணிகளிலும் பங்கெடுத்தார்.

பயணக்கட்டுரை

மீ.ப.சோமு விகடன்,கல்கி இதழ்களில் மரபுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக்கட்டுரைகள் எழுதினார். சே.ப. நரசிம்மலு நாயுடு, ஏ.கே.செட்டியார், சோமலே (சோமசுந்தரம் லெட்சுமணன்), ஆகியோருடன் சோமுவும் தமிழ் பயண இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். மீ.ப.சோமு 1962-ல் தன் பயண இலக்கிய நூலான அக்கரைச்சீமையில் நூலுக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.

புனைகதை

மீ.ப.சோமு நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார்.சோமுவின் புகழ்பெற்ற நாவல் 'ரவிச்சந்திரிகா'

சொற்பொழிவு

மீ.ப. சோமு மிகச்சிறந்த சொற்பொழிவாளராக அறியப்பட்டவர். வானொலியிலும் ஏராளமான உரைகளை ஆற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஆற்றிய உரைகள் வானொலித் தொகுப்புகளாக உள்ளன. தமிழ்ச் சிற்றிலக்கியங்கள், கம்பராமாயணம், தமிழிசை இயக்கம் ஆகியவை பற்றி உரையாற்றினார்.

மறைவு

மீ.ப.சோமசுந்தரம் தனது 78-வது வயதில் ஜனவரி 15, 1999-ல் மறைந்தார்.

இலக்கிய இடம்

மரபுவழிப்பட்ட விழுமியங்களை, பொதுவாசகர்களுக்காக முன்வைத்து எழுதப்பட்டவை மீ.ப.சோமுவின் புனைவுப் படைப்புகள். இவற்றிலுள்ள புனைவுத்தன்மையும் மரபு சார்ந்தது. அவற்றின் உரைநடை மட்டுமே நவீனத்தன்மை கொண்டது. நவீன இலக்கியத்திற்கும் பொதுவாசிப்புக்குரிய எழுத்துக்கும் தேவையான புதுமை அம்சம் இல்லாதவை மீ.ப.சோமுவின் கதைகள். எளிமையான சீரான மொழிநடையும், மேலோட்டமான சித்தரிப்புத்தன்மையும் கொண்டவை. மீ.ப.சோமுவின் கவிதைகள் எளிமையான நடையும் சந்தமும் கொண்டவை, கவிதைக்குரிய புதுமையம்சம் இல்லாதவை. ஆகவே புனைகதையாசிரியராகவும், கவிஞராகவும் மீ.ப.சோமு விமர்சகர்களால் கருத்தில்கொள்ளப்படவில்லை

மீ.ப.சோமுவின் கொடை என்பது அவருடைய தமிழிசைப்பாடல்கள் மற்றும் சித்தரிலக்கியத்தின் மீதான ஆய்வு ஆகியவற்றுக்காகவே. சித்தர்பாடல்களின் மறைஞான உள்ளடக்கத்தை பல்வேறு நாட்டாரியல், சிற்பவியல், வழிபாட்டுமுறைக்கூறுகளுடன் இணைத்து அவர் பொருள்கொள்ள முயன்றது பிற்கால ஆய்வாளர்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

விருதுகள், பட்டங்கள்

 • சாகித்ய அகாடமி விருது - 1962 (அக்கரைச்சீமையிலே)
 • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு
 • தமிழக அரசு விருது - 1946 (இளவேனில்)
 • இசைப்பேரறிஞர் விருது - 1980, தமிழ் இசைச் சங்கம், சென்னை

நூல்கள்

கவிதை
 • இளவேனில்
 • குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை
 • திருக்குற்றாலப் பாட்டு
 • தாரகை
 • பொருநைக் கரையில்
 • வெண்ணிலா
சிறுகதை
 • கேளாத கானம்
 • உதய குமாரி
 • மஞ்சள் ரோஜா
 • மனை மங்களம்
 • கல்லறை மோகினி
 • திருப்புகழ் சாமியார்
 • ஐம்பொன் மெட்டி
 • வீதிக்கதவு
நாவல்
 • ரவிச்சந்திரிகா
 • கடல் கண்ட கனவு
 • நந்தவனம்
 • வெண்ணிலவுப் பெண்ணரசி
 • எந்தையும் தாயும்
கட்டுரை
 • கார்த்திகேயனி
 • ஐந்தருவி
 • பிள்ளையார் சாட்சி
 • நீங்காத நினைவுகள்
 • சித்தர் இலக்கியம் (3 பகுதிகள்)[1]
 • நமது செல்வம்
 • அக்கரைச் சீமையில் ஆறு மாதங்கள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page