under review

மா.அரங்கநாதன்

From Tamil Wiki
மா.அரங்கநாதன்

மா. அரங்கநாதன் (நவம்பர் 03, 1932 - ஏப்ரல் 16, 2017) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். குமரிமாவட்ட பின்புலத்தில் கதைகளை எழுதினார். சென்னையில் வாழ்ந்தார். முதிய வயதில் எழுதவந்தவர் தமிழுக்கு புதியவகை கதைகளை அளித்தமையால் விமர்சக ஏற்பைப் பெற்றார்

பிறப்பு

மா.அரங்கநாதன் நாகர்கோயில் அருகே திருப்பதிச்சாரம் (திருவண்பரிசாரம்) என்னும் ஊரில் நவம்பர் 03,1932-ல் பிறந்தார். அரங்கநாதனின் மூத்தசகோதரர் எம்.எஸ். என்னும் எம்.சிவசுப்ரமணியம்

இலக்கிய வாழ்க்கை

பள்ளியில் படிக்கையில் கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் எழுதிய அழகிய நம்பியுடன் ஐந்தாண்டுக்கால நட்பு இருந்தது. பள்ளிநாளில் கல்கண்டில் கோபுவின் கதை என்ற தலைப்பில் முதல் கதையை எழுதினார். பதினெட்டாம் வயதில் முதல் இலக்கியப்படைப்பு பிரசண்ட விகடனில் வெளியாயிற்று. முதலில் அக்கதையை கலைமகளுக்கு அனுப்பி அது திரும்பி வந்தமையால் பிரசண்ட விகடனுக்கு அனுப்பி வைத்திருந்தார். 1952-ல் சென்னை மாநகராட்சியில் எழுத்தராக வேலை கிடைத்து சென்னை சென்றார். சென்னையில் இருக்கையில் சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் தொடர்பு இருந்தது.

மா.அரங்கநாதன்

மா.அரங்கநாதன் அதிகமாக எழுதவில்லை. பணி ஓய்வு பெறும் காலகட்டத்தில் ஒய். எம்.ஸி.ஏ. பட்டிமன்ற செயலாளர் திரு. பக்தவத்சலம் கோரிக்கைக்கு ஏற்ப கவிதைகள் பற்றி சில கட்டுரைகளை எழுதி அவையில் படித்தார், அக்கட்டுரைகள் 'பொருளின் பொருள் கவிதை' என்ற நூல் வடிவம் பெற்றன. அந்நூலுக்கு கிடைத்த ஆதரவால் தொடர்ந்து சிறுகதைகளும் ஒரு நாவலும் எழுதினார்.

இதழியல்

மா.அரங்கநாதன் தன் மகன் வழக்குரைஞர் மகாதேவனின் உதவியுடன் முன்றில் என்னும் சிற்றிதழை நடத்தினார். 1988 முதல் 1996 வரை 19 இதழ்கள் வெளிவந்தன

முன்றில்

மறைவு

மா.அரங்கநாதன் ஏப்ரல் 16, 2017-ல் காலமானார்

நினைவுநூல்கள், ஆவணப்படங்கள்

 • மா.அரங்கநாதன்: நவீனமான எழுத்துக்கலையின் மேதமை’. முப்பது எழுத்தாளர்களின் அவதானிப்புகள் - 2012
 • இன்மை – அனுபூதி – இலக்கியம்’ - எஸ்.சண்முகம் நிகழ்த்திய நேர்காணல். 2012
 • மா.அரங்கநாதன் பற்றி ரவி சுப்ரமணியன் ’மா.அரங்கநாதனும் சில கவிதைகளும்’[1] என்னும் ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் 2012
 • அரங்கநாதனின் மறைவுக்குப் பின் (ஏப்ரல் 16, 2017), அவரது மகன் மகாதேவன் அவர் நினைவாக, 'அரங்கநாதன் இலக்கிய விருது’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவரது நினைவு நாளில் இரண்டு படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது.

இலக்கிய இடம்

மா.அரங்கநாதன் தமிழில் 1980-களில் கதைசொல்லுதலில் புதியவடிவங்கள் சோதனை செய்யப்பட்டபோது முழுக்க முழுக்க தமிழகப் பண்பாடு சார்ந்த புதியவகை கதைசொல்லும் முறையுடன் அறிமுகமானார். புதுமைப்பித்தனின் சாயல்கொண்ட மெல்லிய கேலி ஓடும் நடை, சைவசித்தாந்தம் சார்ந்த உட்குறிப்புகள், மிகுகற்பனையை இயல்பாகச் சொல்லிச் செல்லும் கதையமைப்பு ஆகியவற்றால் விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றார். ’இவரது கதைகளில் சைவ சமய நூல்கள் பற்றியும் திருக்குறள் பற்றியும் குறிப்புகள் இடம்பெறுகின்றன. திருவள்ளுவர், சேக்கிழார், மெய்கண்டார் வருகிறார்கள். இன்றைய வாழ்வியக்கத்தைப் பன்னெடுங்காலத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார். நிகழ் வாழ்வின் மாயத்தன்மைகளும் புதிர்களும் தொன்மமாகத் தொடரும் ஞானக்கீற்றில் துலங்குகின்றன’ என்று விமர்சகர் சி.மோகன் குறிப்பிடுகிறார்[2].

மா.அரங்கநாதன் மலர்

நூல்கள்

கட்டுரை
 • பொருளின் பொருள் கவிதை
 • மா.அரங்கநாதன் கட்டுரைகள்
 • கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன்
சிறுகதை
 • வீடு பேறு
 • காடன் மலை
 • சிராப் பள்ளி
 • ஞானக் கூத்து
 • மா.அரங்கநாதன் கதைகள்
 • முத்துக்கறுப்பன் எண்பது
நாவல்
 • பறளியாற்று மாந்தர்
 • காளியூட்டு
மொழியாக்கம்

மா.அரங்கநாதனின் 86 சிறுகதைளை சாந்தி சிவராமன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page