under review

கிருஷ்ணன் நம்பி

From Tamil Wiki
கிருஷ்ண என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருஷ்ண (பெயர் பட்டியல்)
நம்பி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நம்பி (பெயர் பட்டியல்)

To read the article in English: Krishnan Nambi. ‎

கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (ஜூலை 24, 1932 - ஜூன் 16, 1976), தமிழில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். குழந்தைகளுக்கான இலக்கியங்களை எழுதியவர். மென்மையும் கேலியும் நிறைந்த நடை கொண்டவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். குழந்தைகளின் மன உலகை நுட்பமாகக் கட்டமைத்த கதைகளை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

கிருஷ்ணன் நம்பியின் இயற்பெயர் அழகிய நம்பி. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள அழகியபாண்டிபுரம் எனும் சிற்றூரில் ஜூலை 24, 1932-ல் கிருஷ்ணய்யர் - கமலாட்சி அம்மாள் இணையருக்கு கிருஷ்ணன் நம்பி பிறந்தார். கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர்; இரண்டு சகோதரிகள்.

அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை 1939-ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை ஆரம்பித்தார். கிருஷ்ணன் நம்பிக்கு எட்டு வயது இருக்கும்போது, 1940-ம் ஆண்டு நாகர்கோவிலுக்கு குடும்பம் மாறியது. நாகர்கோவிலில் எட்டாவதிலும், பள்ளி இறுதி வகுப்பிலும் முதல் முறை தேறாமல் மீண்டும் எழுதி வெற்றிபெற்றார். பின்பு நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற இயலாததால் படிப்பு முடிவுக்கு வந்தது.

தனிவாழ்க்கை

பள்ளிப்படிப்பை நிறுத்தியபின் கிருஷ்ணன் நம்பி தந்தையின் உர வியாபாரத்தை கவனித்தார். ஆகஸ்ட் 20, 1958-ல் காங்கிரஸ் தியாகி கொடுமுடி ராஜகோபாலன் சிபாரிசில் நம்பிக்கு `நவசக்தி’யில் பிழை திருத்துநர் வேலை கிடைத்தது. சென்னையில் அவரது உடல் நிலை மோசமாகிக்கொண்டே வந்ததால் வேலையை விட்டு ஊர் திரும்பினார். சிறிது காலம் விவசாயம் செய்தார். அவரது தந்தை நோயுற்றபோது வியாபாரத்தை நம்பியே கவனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. நாகர்கோயிலில் வியாபாரம் சரியாக நடக்காததனால் குடும்பத்துடன் 1963-ம் ஆண்டின் பிற்பகுதியில் பூதப்பாண்டிக்குச் சென்று அங்கே கடையை தொடங்கினார். அவரது தந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகவே பூர்வீகமான அழகியபாண்டியபுரம் சென்றார்.

கிருஷ்ணன் நம்பிக்கு ஜெயலட்சுமி உடன் திருமணம் ஆயிற்று. கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். முரளிகிருஷ்ணன், ரகுராமன் (1986-ல்இறந்துவிட்டார்) சீனிவாசன், கமலி, சீதா. .

இலக்கிய வாழ்க்கை

கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பியின் இலக்கியப் பிரவேசம், 1948-ம் ஆண்டில் வை.கோவிந்தனின் `சக்தி' பத்திரிகையில் `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று. அப்போது நம்பிக்கு 16 வயது, பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). கிருஷ்ணன் நம்பியின் ஆரம்பகாலப் படைப்புகள் கம்யூனிஸ்ட்டுகளான தொ.மு.சி.ரகுநாதன், வ.விஜயபாஸ்கரன் ஆகியோர் நடத்திய இலக்கிய இதழ்களான `சாந்தி', `சரஸ்வதி'யில் வெளியாகின. தொடர்ந்து `தாமரை’ `கலைமகள்', `சதங்கை', `ஆனந்த விகடன்', `கணையாழி', `தீபம்' போன்ற பல இதழ்களிலும் எழுதினார்.

கிருஷ்ணன் நம்பி (நன்றி விகடன்.காம்)

கிருஷ்ணன் நம்பி 1950-ம் ஆண்டு கலைமகள் நிறுவனத்தின் பத்திரிகையான `கண்ணன்’ இதழில் குழந்தைப் பாடல்களை `சசிதேவன்’ என்கிற பெயரில் எழுதினார். அவரது ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் குழந்தைப் பாடல்களாகவே இருந்தன. அச்சில் வெளிவந்த கிருஷ்ணன் நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’. விஜயபாஸ்கரன் தொடங்கிய `சரஸ்வதி’ இதழில் ஆகஸ்ட்,1951 சுதந்திர தின இதழில் இக்கதை வெளியானது. கிருஷ்ணன் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகளை `சரஸ்வதி’ இதழில் எழுதியுள்ளார்.

தமிழ்ப் புத்தகாலயம் 1965-ம் ஆண்டு கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து அழ. வள்ளியப்பாவின் முன்னுரையுடன் `யானை என்ன யானை?’ புத்தகத்தை கொண்டு வந்தது.

கிருஷ்ணன் நம்பி `நீலக்கடல்’கதையை தனது 18-வது வயதில் துவங்கி 28 வயதில் முடித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கதை 1961-ம் ஆண்டில், 'சரஸ்வதி’ இதழில் வெளிவந்தது. "நம்பியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை இந்தக் கதை'" என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப்பின் 1995-ம் ஆண்டு ஸ்நேகா பதிப்பகம் `காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள கதைகளை தொகுத்து 19 கதைகளடங்கிய `கிருஷ்ணன் நம்பி கதைகள்’ புத்தகத்தை கொண்டு வந்தது.

கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையேயான 25 வருட நட்பு, சுந்தர ராமசாமி கொண்டுவந்த `புதுமைப்பித்தன் நினைவு மலரை’ ஒட்டி ஏற்பட்டது. இருவரும் இரட்டையர்களாக அறியப்பட்டனர். சுந்தர ராமசாமி கிருஷ்ணன் நம்பி பற்றி ஒரு நினைவுநூலை எழுதியிருக்கிறார்.

மறைவு

1974-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக கிருஷ்ணன் நம்பியின் இடது கால் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது, மேலும் ஒன்றரை ஆண்டுகள் உயிருடன் இருந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜூன் 16, 1976 அன்று காலையில் தனது 44-ஆவது வயதில் நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவமனையில் காலமானார்.

இலக்கிய இடம்

"அழகிய பிதற்றல்களால் லௌகீக வாழ்க்கையைப் பாழடித்துக்கொண்ட கற்பனைப் பேர்வழிகளில் நானும் ஒருவன். ஆனால், இதில் எனக்கு தன்னிரக்கம் எதுவும் கிடையாது" என்று தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டவர் கிருஷ்ணன் நம்பி. சுந்தர ராமசாமி அவருடைய இலக்கிய வாழ்வை 'பாதியில் முறிந்த பயணம்’ என்கிறார்.இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் கிருஷ்ணன் நம்பி ஈடுபட்டிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், கட்டுரைகள், இலக்கியக் குறிப்புகள், முன்னுரைகள், கடிதங்கள் என. கிருஷ்ணன் நம்பியின் பலம் தோற்றுக் கொண்டு இருக்கும் மனிதர்களின் மனப் போராட்டத்தை சித்தரிப்பது. அவருடைய சிறந்த கதைகள் எல்லாவற்றிலும் இது வெளிப்படுகிறது, கிருஷ்ணன் நம்பியின் கதை உலகம் பற்றாக்குறை உலகம். அதில் சந்தோஷமாக இருப்பவர்கள் குறைவு . நம்பியின் இரண்டாவது பலம் குழந்தைகளை சித்தரிப்பது. குழந்தைகளின் புத்துணர்ச்சியூட்டும் தன்மை, குரூரம் இரண்டையும் கொண்டு வருவது என்று விமர்சகர் ஆர்.வி குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணன் நம்பியின் நெருங்கிய சகாவாக 1952-ம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை இருந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள `இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி நல்ல அறிமுகத்தை எழுதியுள்ளார். "தன்னைப் பாராட்டிக்கொள்வதைவிடவும் தன் மீதான விமர்சனத்தை விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்கு தனி உற்சாகம் இருந்தது. இடைவெளி விடாமல் எழுதக்கூடிய பழக்கம் அவரிடம் இல்லை. நினைத்து நினைத்துத் தள்ளிப்போட்டு ஒருநாள் எழுதக்கூடியவர். ஆகவே, மிகக் குறைவாகத்தான் அவரால் எழுத முடிந்தது. நன்றாக எழுத வேண்டும் என்ற ஆசைதான் சதா அவரைத் தூண்டிக்கொண்டிருந்தது" என்று சுந்தர ராமசாமி சொல்கிறார். "தன் சிறுகதைகளில் நல்ல தரத்தை எட்டியவர் அவருடைய முற்போக்குச் சிந்தனையால் அந்தத் தரத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு தரத்தை அவரால் எட்ட முடியாமல்போனது" என்று க.நா.சு எழுதியிருக்கிறார். கிருஷ்ணன் நம்பியின் 'தங்க ஒரு' தமிழில் எழுதப்பட்ட முதல் மாய யதார்த்தப் படைப்பு என்று கருதப்படுகிறது.

நூல் பட்டியல்

கிருஷ்ணன் நம்பி
கட்டுரைகள்
  • நாட்டுப்பாடல்கள் - கட்டுரை - 1948
குழந்தை இலக்கியம்
  • யானை என்ன யானை?’ குழந்தைப்பாடல்கள் - 1965
சிறுகதைகள்
  • காலைமுதல் சிறுகதைத்தொகுப்பு
  • நீலக்கடல் சிறுகதைத்தொகுப்பு - 1961
  • மருமகள் வாக்கு சிறுகதை- 1974
  • கிருஷ்ணன் நம்பி கதைகள் - 1995 - ஸ்நேகா பதிப்பகம் (`காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலும் உள்ள 19 கதைகள் அடங்கியது)
முழுத்தொகுதி
  • கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் -2009- ராஜமார்த்தாண்டன் (தொகுப்பாசிரியர்) - காலச்சுவடு பதிப்பகம்
வாழ்க்கை வரலாறு,நினைவுகள்
  • கிருஷ்ணன் நம்பி - நினைவோடை(2003)

உசாத்துணை

  1. கிருஷ்ணன் நம்பி, அழியாச்சுடர்கள்
  2. கிருஷ்ணன் நம்பி... ஏழை எளியவர்களைப் பற்றி அக்கறையுடன் எழுதியவர்! கதைசொல்லிகளின் கதை-ச. தமிழ்செல்வன், விகடன் ஏப்ரல் 13, 2018
  3. பழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு நிவேதிதா
  4. சிலிகால் ஷெல்ஃப் ஆர்வி



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:14 IST