under review

எம்.சிவசுப்ரமணியம்

From Tamil Wiki

To read the article in English: M. Sivasubramaniam. ‎

எம்.சிவசுப்ரமணியம்

எம். சிவசுப்ரமணியம் (எம்.எஸ்) (1929 - டிசம்பர் 3, 2017) மொழிபெயர்ப்பாளர், பிரதி மேம்படுத்துநர். ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் இருந்து இலக்கியப் படைப்புகளையும் சமூகவியல் படைப்புக்களையும் மொழியாக்கம் செய்தவர். தமிழில் எழுத்தாளர்களின் படைப்புகளை செம்மை நோக்கி சீர்ப்படுத்தும் பணியைச் செய்தவர்.

பிறப்பு, கல்வி

குமரி மாவட்டம் திருப்பதிச்சாரத்தில் 1929-ல் எம்.சிவசுப்ரமணியம் பிறந்தார். இவருடைய தம்பிதான் புகழ்பெற்ற எழுத்தாளரான மா.அரங்கநாதன்.

தனிவாழ்க்கை

பள்ளிப்படிப்பை நாகர்கோயில் எஸ்.எல்.பி பள்ளியில் முடித்தபின் 1947-ல் அப்போதைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் நிதித்துறை ஊழியரானார். பின்னர் தமிழக அரசில் பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி 1987-ல் ஓய்வு பெற்றார்.

எம்.சிவசுப்ரமணியம்

இலக்கிய வாழ்க்கை

எம்.எஸ். திருவனந்தபுரத்தில் பணியாற்றும்போது நீல பத்மநாபன், ஆ.மாதவன், நகுலன் ஆகியோருடன் நட்புகொண்டார். 1950 முதல் சுந்தர ராமசாமியின் நண்பராகி இறுதிவரை அன்றாடம் சந்திக்கும் அணுக்கமான தோழராக விளங்கினார். காலச்சுவடு இதழ் மற்றும் பிரசுரங்களில் நண்பராக தொடர்ந்து உடனிருந்தார். காலச்சுவடின் ஆலோசகராக தன் இறுதி வரை பணியாற்றினார்.

மொழியாக்கம்

எம்.சிவசுப்ரமணியம், நீல பத்மநாபன், ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன்

எம்.சிவசுப்ரமணியம் தமிழுக்கு ஆங்கிலத்தில் இருந்தும் மலையாளத்தில் இருந்தும் மொழியாக்கங்களைச் செய்தார். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நாவல் 'கிழவனும் கடலும்,' அர்ஜெண்டின எழுத்தாளர் சோரொண்டினோவின் சிறுகதைகளான 'ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை' கேரள பழங்குடித்தலைவர் ஜானுவின் வாழ்க்கைவரலாறான 'ஜானு' ஆகியவை காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளன. மலையாள எழுத்தாளர் சகரியாவின் சிறுகதைகள் 'சகரியா கதைகள்' என்ற பேரிலும், பொதுவான ஆங்கில கதைகள் 'அமைதியான மாலைப்பொழுதில்' என்ற தலைப்பிலும் யுனைட்டர் ரைட்டர்ஸ் [தமிழினி] பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பிரதி மேம்படுத்துதல்

எம்.சிவசுப்ரமணியம் நவீன இலக்கிய படைப்புகள் பலவற்றுக்கும் பிழை திருத்துபவராகவும் மொழியை செப்பனிடுபவராகவும் வெளியே தெரியாமல் உழைத்துள்ளார். நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி முதலிய முதல் தலைமுறை , நாஞ்சில்நாடன் தோப்பில் முகமது மீரான் போன்ற இரண்டாம் தலைமுறை, ஜெயமோகன் போன்ற மூன்றாம் தலைமுறை, சல்மா போன்ற நான்காம் தலைமுறை படைப்பாளிகளின் படைப்புகளை செப்பனிட்டுள்ளார்.

எண்பது ஆண்டு நிறைவு விழாவும் நூல் வெளியீடும்

மறைவு

எம்.எஸ் நாகர்கோயிலில் டிசம்பர் 3, 2017 அன்று காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page