காலச்சுவடு (இதழ்)
காலச்சுவடு (இதழ்) (1988) இலக்கியம், அரசியல், பண்பாடு சார்ந்த அச்சுஇதழ். எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆரம்பித்த இதழ். காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டு இருமாத இதழாக வெளிவந்து தற்போது மாத இதழாக வெளிவருகிறது. இதன் பதிப்பாளர்-ஆசிரியர் கண்ணன்.
வெளியீடு
முதல் காலகட்டம்
எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஜனவரி 1988-ல் காலச்சுவடு என்ற காலாண்டு இதழை ஆரம்பித்தார். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைசார்ந்த எழுத்துகளுக்கான களமாக சுந்தர ராமசாமி காலச்சுவடை முன்னிறுத்தினார். எட்டு இதழ்கள் வெளிவந்தது. 1992-ல் வெளியிடப்பட்ட ஆண்டுமலர் இறுதியாக வெளியான பின்னர் இதழ் நிறுத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது காலகட்டம்
சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் 1994-ல் வேறு வடிவத்துடனும் உள்ளடக்கத்துடனும் மீண்டும் காலச்சுவடு காலாண்டு இதழைத் தொடங்கினார். 2000-ல் காலச்சுவடு இதழ் இருமாத இதழாக வெளிவரத் தொடங்கியது. 2004 முதல் மாத இதழாகியது. படைப்பிலக்கியம் மொழி, சமூக வரலாறு, அரசியல், விவசாயம், சுற்றுச்சூழல், திரை, பண்பாடு ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்டதாக உள்ளது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம், பெண்ணியம், சமூக நீதி, கருத்துச் சுதந்திரம், இந்திய-தமிழ் தேசியம், மதவாதம், மதச்சார்பின்மை, கல்வி போன்ற பேசுபொருள்களில் தனிக்கவனம் கொண்டது.
உள்ளடக்கம்
- சிறுகதை, கவிதை, மற்றும் அரசியல், சினிமா, கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், பல்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்கள் வெளிவருகின்றன.
- ஆளுமைகள்: காந்தி, அம்பேத்கர், பெரியார், பாரதியார், உ.வே.சா. முதலான பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விரிவான பதிவுகளும் விவாதங்களும் காலச்சுவடில் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
- நேர்காணல்கள்: காலச்சுவடு இதழில் வெளிவந்த நேர்காணல்கள் பல்வேறு துறை சேர்ந்த ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தின. ராமச்சந்திர குஹா, நயன்ஜோத் லஹரி, சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம். கிருஷ்ணா, அசோகமித்திரன், அம்பை, எஸ். ராமகிருஷ்ணன் எனப் பல முக்கியமான ஆளுமைகளின் விரிவான நேர்காணல்களைக் காலச்சுவடு பதிவுசெய்துள்ளது.
- சிறப்புப் பகுதிகள்: மரண தண்டனை குறித்த சிறப்புப் பகுதி, தமிழ் வழிக் கல்வி, தமிழ்க் காதல், குஜராத் வன்முறை, மதச்சார்பின்மை, நதிநீர் இணைப்பு, பதிப்புச் சூழல் ஆகிய சிறப்புப் பகுதிகள் வழியாக விவாதத்திற்கான களத்தை காலச்சுவடு ஏற்படுத்தியது.
பங்களிப்பாளர்கள்
ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், மனுஷ்ய புத்திரன், பிரேம் - ரமேஷ், ஷங்கர்ராமசுப்பிரமணியன் போன்ற படைப்பாளிகளின் முக்கியமான சில படைப்புக்கள் காலச்சுவடில் வெளிவந்து பரவலான கவனம் பெற்றன.
ஜே.பி. சாணக்யா, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்த ராணி முதலான பல இளம் படைப்பாளிகள் தங்களைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் களமாகக் காலச்சுவடு செயல்பட்டது. இதைத் தவிர, தொ. பரமசிவன், மா. இலெ. தங்கப்பா, தியடோர் பாஸ்கரன் முதலான வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் காலச்சுவடில் பங்களித்தனர்.
இலக்கிய இடம்
தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்து, தலித்துகள், விளிம்பு நிலை மக்களின் படைப்புக்கள், அம்மக்களின் வாழ்வியல்-பண்பாட்டுக் கூறுகள், அது சார்ந்த விமர்சனப் பார்வைகள், ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருவது காலச்சுவடு இதழின் தனித்தன்மை.
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 09:44:56 IST