மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன் (பிறப்பு: மார்ச் 15, 1968) தமிழில் எழுதிவரும் முதன்மையான நவீனக்கவிஞர்களில் ஒருவர். பாடலாசிரியர், கட்டுரையாளர், இதழாளர், பதிப்பாளர், அரசியல்வாதி. உயிர்மை இதழின் நிறுவனர். உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனர்.
பிறப்பு, கல்வி
மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் அப்துல் ஹமீது. மனுஷ்யபுத்திரன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் கதீஜா பீவி, ஷேக் முகமது இணையருக்கு மார்ச் 15, 1968-ல் பிறந்தார்.
மனுஷ்யபுத்திரன் துவரங்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வழியாகப் பொருளியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் நெல்லையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் மற்றும் வரலாற்றில் இரு முதுகலைப்பட்டங்களைப் பெற்றார்.
தனிவாழ்க்கை
மனுஷ்யபுத்திரன் சென்னையில் வசிக்கிறார். மணமாகாதவர். கவிஞர் சல்மா மனுஷ்ய புத்திரனின் சகோதரி (தந்தையின் சகோதரர் மகள்).
இதழியல்
மனுஷ்யபுத்திரன் இதழியலில் இரண்டு காலகட்டங்களிலாக பங்களிப்பாற்றினார்
காலச்சுவடு
மனுஷ்யபுத்திரன் 1997ல் பாளையங்கோட்டை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இதழியல் மாணவராகப் பயின்றபோது பல்கலை சார்பில் இலக்கிய இதழ்களை வெளியிட்டார். அவை அவற்றின் இலக்கியத்தரத்தால் கல்விச்சூழலுக்கு வெளியே கவனிக்கப்பட்டன.அதன்பின் சுந்தர ராமசாமி 1988ல் தொடங்கி பின்னர் நிறுத்திவிட்ட காலச்சுவடு இலக்கிய இதழை அவர் மகன் கண்ணன் சுந்தரத்துடன் இணைந்து 1994 ல் தொடங்கினார். அதன் ஆசிரியர்குழுவில் பணியாற்றினார்.
உயிர்மை
மனுஷ்யபுத்திரன் 2002-ல் குறுகிய காலம் இணைய இதழ்களில் பணியாற்றிய பின்னர் 2003 ஆகஸ்டில் உயிர்மை இலக்கிய இதழை தொடங்கினார். உயிர்மை தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவருகிறது.
பதிப்பகம்
மனுஷ்யபுத்திரன் உயிர்மை பதிப்பகத்தை 2003 ல் தொடங்கினார். தமிழில் முதன்மையான இதழ்களில் ஒன்றாக உயிர்மை கருதப்படுகிறது.
அரசியல் வாழ்க்கை
மனுஷ்யபுத்திரன் மார்க்ஸியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். இடதுசாரி இதழான மனஓசை இதழில் எழுதத் தொடங்கினார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சமூகசீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார்.
மனுஷ்யபுத்திரன் 2015-ல் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் செய்தித்தொடர்பாளராக உள்ளார். தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
பொறுப்புகள்
மனுஷ்யபுத்திரன் திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளராகவும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். தமிழக அரசு நியமித்துள்ள சமூநீதி கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
மனுஷ்யபுத்திரன் கவிஞர், அரசியல் விமர்சகர் என்னும் இரு நிலைகளில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார் . 53 கவிதைத் தொகுப்புகளும், 14 கட்டுரைத் தொகுப்புகளும், 1 நாவலும் வெளிவந்துள்ளன
கவிதைகள்
மனுஷ்யபுத்திரன் என்ற பெயரை 'மனுஷ்யபுத்திரனு தலைசாய்க்கான் மண்ணில் இடமில்லா' என்ற மலையாளப் பாடலில் இருந்து எடுத்துக்கொண்டார். அது ஏசுவைக் குறிக்கும் சொல். அதை சாமானிய மனிதன் என்னும் பொருளில் பயன்படுத்தினார்.
தொடக்கம்
மனுஷ்யபுத்திரன் தன் பதினைந்து வயதிலிருந்தே கவிதைகள் எழுதி வருகிறார். தொடக்ககாலக் கவிதைகள் கல்கண்டு முதலிய இதழ்களில் வெளிவந்தன. அவை மணிமேகலைப் பிரசுரத்தால் 1983-ல் 'மனுஷ்யபுத்திரன் கவிதைகள்' என்னும் தொகுப்பாக வெளியிடப்பட்டன.
மனஓசை காலகட்டம்
இடதுசாரி அரசியல் ஈடுபாடு உருவான பிறகு மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் மனஓசை இதழிலும் பிற இடதுசாரி இதழ்களிலும் வெளிவந்தன. இக்காலகட்ட கவிதைகள் 'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' என்னும் தொகுதியாக வெளிவந்தன. எழுத்தாளர் சுஜாதா மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை அடையாளம் கண்டு அவற்றை கவனப்படுத்தினார்.
படிமவியல்
1997 முதல் மனுஷ்யபுத்திரன் சுந்தர ராமசாமி யின் தொடர்புக்குச் சென்றார். அவருடைய இலக்கியப் பார்வையில் சுந்தர ராமசாமியின் செல்வாக்கு உருவானது. காலச்சுவடு இதழை சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் சுந்தரத்துடன் இணைந்து மீண்டும் தொடங்கி அதில் நிறைய எழுதினார். அவர் கவிதைகளில் இருத்தலியல் பார்வையும், படிமவியல் சார்ந்த அழகியலும் உருவாயின.
செயல்பாட்டுவாதம்
மனுஷ்யபுத்திரன் திராவிட முன்னேற்றக் கழக அரசியலில் ஈடுபட்ட பிறகு அவருடைய கவிதைகள் மேலும் நேரடித்தன்மைகொண்டவையாக ஆயின. இக்காலகட்ட கவிதைகளை செயற்பாட்டுக்களம் சார்ந்தவை என வரையறுக்கலாம். சமகால அரசியல்- சமூகவியல் பிரச்சினைகளுக்கான உடனடி எதிர்வினைகளான கவிதைகளை எழுதத் தொடங்கினார். மனுஷ்யபுத்திரன் எழுதிய அரசி அவ்வகையில் முன்னுதாரணமான கவிதை. அதேயளவுக்கு மானுட உறவுகளின் தீவிர உணர்வுநிலைகளை பேசும் கவிதைகளையும் எழுதினார்.
இந்தக் காலகட்டத்தில் மனுஷ்யபுத்திரன் எண்ணிக்கையிலும் நிறைய கவிதைகளை எழுதினார். நீள்கவிதைகள், கவிதைப்புனைவுகள் என அவை வகைமைகளிலும் வேறுபட்டவை. நவீனக்கவிதையின் வழக்கமான எல்லைக்கு அப்பாற்பட்ட புதிய படிமங்களும் உருவகங்களும் இக்காலக் கவிதைகளில் பயின்று வருகின்றன.
தமிழ் நவீன இலக்கியத்தில் மிக அதிகமான கவிதைகளை எழுதியவராக மனுஷ்யபுத்திரன் அறியப்படுகிறார். தமிழிலக்கியச் சூழலில் வெளிவந்த மிகப்பெரிய கவிதைத் தொகுதி அவருடைய 'மிஸ் யூ.... இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது' என்னும் தொகுப்பு. அடுத்த தலைமுறைக் கவிஞர்களிலும் மனுஷ்யபுத்திரனின் செல்வாக்கு முதன்மையானது.
அரசியல் கட்டுரைகள்
மனுஷ்யபுத்திரன் காலச்சுவடு, உயிர்மை, நக்கீரன், குமுதம் உள்ளிட்ட பல இதழ்களில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் சமூக ஆய்வுக்குறிப்புகளும் எழுதியுள்ளார். அவை தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
இலக்கிய இடம்
மனுஷ்யபுத்திரன் தமிழிலக்கியச் சூழலில் மூன்று வகைகளில் முதன்மையான பங்களிப்பை ஆற்றியவர். கவிஞர், இலக்கியச் செயல்பாட்டாளர், அரசியல் செயல்பாட்டாளர் என்னும் வகைகளில் அவருடைய இடத்தை வரையறை செய்யலாம்.
தமிழின் நவீனக்கவிதைகளில் எழுச்சிவாதம் அல்லது கற்பனாவாத அம்சம் கொண்ட கவிதைகளின் ஓர் அலையை தொடங்கிவைத்த முதன்மையான கவிஞர்களில் ஒருவர் மனுஷ்யபுத்திரன். தீவிரமான உணர்வுநிலைகள் நேரடியாக வெளிப்படும் கவிதைகள் அவை. படிமங்களை பயன்படுத்துவதில் நவீனக்கவிதையில் எஸ்ரா பவுண்ட் மற்றும் டி.எச்.எலியட் முன்வைத்த படிமவியல் சார்ந்த அழகியலை கொண்டவர். நேரடியான கூறுமுறையில் பாப்லோ நெரூதா, பெர்டோல்ட் பிரெக்ட் போன்றவர்களின் அழகியலைக் கொண்டவர். இவ்விரு அழகியல் மரபுகளுடன் தமிழில் நா. சுகுமாரன் மற்றும் மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தன் ஆகியோரின் செல்வாக்கும் அவரிடமுண்டு. தனிமனித அகக்கொந்தளிப்புகளை எழுதுவதுடன், தீவிரமான அரசியல் சமூகப்பிரச்சினைகளையும் விவாதிக்கும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதை உலகில் இருந்து பொதுவாசகர்களிடம் அதிகமாகச் சென்றுசேர்ந்த படைப்புகள்.
ஓர் இலக்கியச் செயல்பாட்டாளராக தமிழ் நவீன இலக்கியத்தை முன்னெடுத்ததில் பெரும் பங்களிப்பு ஆற்றியவர் மனுஷ்யபுத்திரன். காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்களின் வழியாக பல படைப்பாளிகளை அறிமுகம் செய்தார். பல படைப்பாளிகள் பரவலாக வாசகர்களிடம் வெளிப்பட வாய்ப்பமைத்தார். பதிப்பாளராக முதன்மையான தமிழ் நூல்களை வெளிக்கொணர்ந்தார். இலக்கிய உரைகளை ஆற்றியும், இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும் தொடர்ச்சியாக இலக்கியப் பங்களிப்பை ஆற்றிவருகிறார். தமிழக அரசின் நூலகத்துறையின் பொறுப்பை ஏற்றபின் மாணவர்களுக்கான இலக்கியப் பயிற்சி வகுப்புகளை மிக விரிவாக ஒருங்கிணைத்து வருகிறார்.
தமிழ் நவீன இலக்கியவாதிகளில் தொடர்ச்சியான அரசியல் செயல்பாடு கொண்டவர் மனுஷ்யபுத்திரன். தொடக்கத்தில் மார்க்ஸிய அரசியல் சார்ந்தும் பின்னர் திராவிட இயக்க அரசியல் சார்ந்தும் அரசியல் விமர்சனக் கருத்துக்களை எழுதி வருகிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகப் பண்புகளை முன்வைக்கும் கூரிய கட்டுரைகளை எழுதி வருவதுடன் ஊடகநிகழ்வுகளிலும் பங்கெடுக்கிறார்.
விருதுகள்
- 2002-ல் இளம் படைப்பாளிகளுக்கான தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது.
- 2003-ல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய 'இலக்கியச் சிற்பி' விருது பெற்றார்.
- 2004-ல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் 'தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான' விருது பெற்றார்.
- 2010, 2011 - தமிழகத்தின் பத்து செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தல் - இந்தியா டூடே
- 2011-ல் அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்பிற்கு கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது வழங்கப்பட்டது.
- 2011-ல் அதீதத்தின் ருசி ஆனந்த விகடனின் சிறந்த கவிதைத் தொகுப்பு விருது
- 2013-ல் பெரியார் விருது, திராவிடர் கழகம்
- 2015-ல் இயல் செல்வம் விருது, முத்தமிழ் பேரவை
- 2015-ல் கலைஞர் விருது, திராவிடர் முன்னேற்றக் கழகம்
- 2016-ல் ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது வழங்கியது.
- 2021-ல் 'தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது', தமிழக அரசு
- 2022-ல் புரட்சி கவிஞர் பாரதிதாசன் விருது, பகுத்தறிவாளர் கழகம்
- 2023-ல் அன்றில் வாழ்நாள் சாதனையாளர் விருது, அன்றில் இலக்கியச் சுற்றம்
- 2024-ல் தமிழ் இலக்கிய செம்மல் விருது, பாவை விருதுகள் '24
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்புகள்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
- என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
- இடமும் இருப்பும் (1998)
- நீராலானது (2001)
- மணலின் கதை(2005)
- கடவுளுடன் பிரார்த்தித்தல்(2006)
- அதீதத்தின் ருசி (2009)
- இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
- பசித்த பொழுது (2011)
- அருந்தப்படாத கோப்பை (2012)
- சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
- அந்நிய நிலத்தில் பெண் (2014)
- ஊழியின் தினங்கள் (2016)
- புலரியின் முத்தங்கள் (2016)
- இருளில் நகரும் யானை (2016)
- தித்திக்காதே (2016)
- பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் (2017)
- நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம் (2017)
- கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள் (2018)
- மாநகர பயங்கரவாதி (2018)
- எழுந்து வா தலைவா (2018)
- ஒரு நாளில் உனது பருவங்கள் (2019)
- தீண்டி விலகிய கணம் (2019)
- மர்ம முத்தம் (2019)
- இரவுக்குக் கைகள் இல்லை (2019)
- சிநேகிதியின் காதலர்கள் (2019)
- வைரல் யானை (2019)
- தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)(2019)
- மெளனப்பனி (2019)
- வாதையின் கதை (2019)
- யௌவனத்தில் அமரும் கிளி (2019)
- அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது (2021)
- அலெக்ஸா... நீ என்னைக் காதலிக்கிறாயா? (2021)
- வசந்தம் வராத வருடம் (2021)
- மிஸ் யூ.... இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது (2022)
- இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன (2022)
- அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா? (2022)
- அப்புறம் பேசறேன்.. (2022)
- அன்புக்காகவும் கடவுளுக்காகவும் (2022)
- காதல் கதைகளும் அவமானத்தின் கதைகளும் (2022)
- எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன் (2022)
- முதல் சந்திப்பின் முதல் முத்தம் (2022)
- மழைக்கால காதலும் குளிர்காலக் காமமும் (2022)
- என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி (2022)
- நீயே என் கடைசிப் பெண்ணாக இரு (2022)
- என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி (2022)
- சித்திரமே.. சித்திரமே... பேசக்கூடாதா (2022)
- உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் (2022)
- உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா? (2023)
- காதலின் நூறு சம்பவங்கள் (2024)
- பிரிவின் நூறு சம்பவங்கள் (2024)
- நாளை என்பது உன்னைக் காணும் நாள் (2024)
நாவல்கள்
- தாராவின் காதலர்கள் (2022)
கட்டுரைத் தொகுப்புகள்
- காத்திருந்த வேளையில் (2003)
- எப்போதும் வாழும் கோடை (2003)
- என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009)
- டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன(2012)
- தோன்ற மறுத்த தெய்வம் (2012)
- எதிர் குரல் பாகம் 1 (2012)
- இந்தியர்களின் போலி மனசாட்சி (2012)
- நிழல்கள் நடந்த பாதை (2013)
- குற்றமும் அரசியலும் (2013)
- கைவிட்ட கொலைக்கடவுள் (2013)
- நிகழ்களோடு பேசுவோம் (2014)
- சொல்கிறேன் அதனால் இருக்கிறேன் (2017)
- நரகத்திற்கு போகும் பாதை (2017)
- திராவிடத்தால் வாழ்ந்தோம் (2017)
- எழுந்து வா தலைவா
- மாநகர பயங்கரவாதி
- காந்தியுடன் இரவு விருந்துக்குச் செல்கிறேன்
- எதிர் குரல் பாகம் 2 (இந்தியர்களின் போலி மனச்சாட்சி - 2023)
மொழியாக்கம்
ஆங்கிலம்
- Kisses at daybreak - R. Abilash Chandran
- Crazy Night (multiple translators)
இணைப்புகள்
- உயிர்மை வலைதளம்
- உயிர்மை பதிப்பகம்: வலைதளம்
- உயிர்மை: மனுஷ்ய புத்திரன்: வலைதளம்
- குறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்: ஆனந்தவிகடன் நேர்காணல்
- மனுஷ்ய புத்திரன் - இரவுக்கு கைகள் இல்லை | பெருந்தேவி உரை
- கடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு: ஜெயமோகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Nov-2023, 18:47:10 IST
