தொ. பரமசிவன்

From Tamil Wiki
தொ. பரமசிவன் (2018)

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 - 2020) தமிழறிஞர், திராவிடப் பண்பாடு ஆய்வாளர் மற்றும் மானிடவியல் ஆய்வாளர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் ஓய்வு பெற்று தன் இறுதி நாட்களை பாளையங்கோட்டையில் கழித்து வந்தார்.

”தொ ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் பண்பாடு, மானுடவியல், மொழியியல், நாட்டார் வழக்காறு, வரலாறு என பன்முகத் தலைப்புகளில் செயல்பட்டு வந்தார். கல்வெட்டுகள், இலக்கியங்கள் மூலமாக மட்டுமே வரலாற்றுத் தொன்மங்கள் பற்றிப் பேசப்பட்டு வந்த சூழலை மாற்றி, அடித்தட்டு மக்களின் வாழ்வியல், அவர்களின் பழக்க வழக்கங்கள், நாட்டார் வழக்காற்றியல் கதையாடல்கள் மூலமாகத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்தார்.

பிறப்பு, கல்வி & குடும்பம்

தொ.பரமசிவன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையின் தெற்கு கடைவீதியில் 1950-ல் பிறந்தார். சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட, தனது தாயால் வளர்க்கப்பட்டார். பள்ளிப் படிப்பை நெல்லையில் முடித்த பின், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அதன் பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பயின்றார்.

அவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும் மாசானமணி என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

அழகர் கோவில்.webp

ஆய்வுகள்

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் முன்னோடியான நா. வானமாமலை, தமிழறிஞர் சி.சு.மணி ஆகியோரின் கருத்துகளால் கவரப்பட்டு தமிழ் இலக்கியச் சூழலுக்குள் வந்தார். பின்னர், தனது முனைவர் பட்டத்துக்காக அழகர் கோயில் குறித்து ஆய்வு செய்தார். அழகர் கோயிலைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று மக்களின் பண்பாட்டு அசைவுகளுடன் கூடிய ஆய்வை சமர்ப்பித்தார். அதே அய்வுக்கட்டுரை நூலாக வெளியானது. சுமார் 30 ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்த இந்த நூலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மறு வெளியிடு செய்தது.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். எளிமையான மொழியின் வழியே கலாச்சாரத்தின் நுண் அரசியலைப் புரியவைத்தவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

பேராசிரியர்

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் மூட்டா ஆசிரியர் சங்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

அதன் பின்னர், மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். தனது ஆழமான கருத்துகளால் மாணவர்களுக்குத் தமிழின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஏராளமான மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியிருக்கிறார்.

அதன் பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1998 முதல் 2008 வரை தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு மையத்தின் பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

கடவுள் இருந்தால் நல்லது

”கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இருந்தால் நல்லது என்று சொல்கிறேன்” என்பது அவருடைய பிரபலமான வாசகம். பின்னாளில், நடிகர் & இயக்குநர் கமல்ஹாசன் தனது தசாவதாரம் (2008) திரைப்படத்தில் இந்த வசனத்தை பயன்படுத்தியதில் மிகவும் பிரபலமடைந்தது[1].

நூல்கள்

அறியப்படாத தமிழகம்

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.

பண்பாட்டு அசைவுகள்

‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளுடன், மேலும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர் வகைகளும் இவற்றினூடான மனித அசைவுகளும் பன்முகத்தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒன்றை கண்டுபிடிப்பதும், பொருளிழந்துவிட்டது என்று நாம் நோக்கும் ஒரு சொல் \ தொடர் \ பழமொழி இதிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.பரமசிவனின் கருத்துப் புலப்பாட்டு முறை.

அழகர் கோயில்

கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராளமான கோயில், ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் தம்முடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை. 'அழகர் கோயில்' நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளை கேள்விகேட்கக்கூடியது.

இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லாமல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படையில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத் தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சாதிகள் இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய்கின்றது. நூலின் மைய இழைக்கு அரணாகவும் இடைப்பிறவரலாகவும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கின்றன.

சித்திரைத் திருவிழா குறித்து பழைய மரபுக் கதைகளும் நம்பிக்கைகளும் மிக விரிவாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய செய்திகளும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. கதைப்பாடல்கள். நம்பிக்கைகள், கருப்பசாமியின் வைணவத் தொன்மையுடைய தோற்றம் குறித்தும் தொ.பரமசிவன் ஆய்வு செய்துள்ளார்.

ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல.. ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நூல் ஒரு சான்று.

தெய்வம் என்பதோர்

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன.

பரண்

சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒன்று மனம் அல்லது ஆன்மா. இக்கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவை தான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு 'அனாத்மவாதம்’ என்ற ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடியாது என்பதுதான் அதன் வாதம்.

சமயங்களின் அரசியல்

உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார் தொ.பரமசிவன்.

இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்காமல் கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு.

இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு.

தொ.பரமசிவன் நேர்காணல்கள்

கல்விப்புலக் கோட்பாடுகளின் உரையாடல் மரபிலான ஒரு முறையியலையும் திராவிடவியப் பார்வையையும் தமக்கென வகுத்துக் கொண்டவர் தொ. பரமசிவன். அம்முறையும் பார்வையும் கொண்டு சங்க காலத்திற்கு முந்தைய சமூகத்திலிருந்து சமகால அரசியல் வரை அவரால் விளக்க முடிந்தது. .

அவரை மேலும் அறிந்துகொள்ளவும், அவ்வப்போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள் இந்த நேர்காணல்கள். நாட்டார் தெய்வங்கள் - பெருந்தெய்வங்கள், சாத்திரங்கள் சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், பண்பாடு இழையோடும் அன்றாட நடைமுறைகள், கலை, இலக்கியம், கல்வி, சாதியம், திராவிடக் கருத்தியல், ஆளுமைகள் என அனைத்தையும் பற்றிய பார்வைகள் இயல்பான உரையாடலில் வெளிப்படுவதை இந்நேர்காணல்களில் காணலாம்.

விடுபூக்கள்

திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்தவர் தொ. பரமசிவன். அவரது தொடர் பயணத்தில் இன்னும் கவனம் பெறாத சிலவற்றை இத்தொகுப்பு முன்வைத்து நகர்கின்றது. சிதம்பரம் கோயிலிலை பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராஜராஜ சோழனை இன்னும் கொண்டாடுவதேன்? என்ற நுட்பமான பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடையளிக்கின்றது.

உரைகல்

உ.வே.சாமிநாதையர் அவர்களின் சங்க இலக்கிய மீள் கண்டுபிடிப்பே வைதீகத்துக்கு மாற்றான ஒரு பெரும் பண்பாடு தென்னிதியாவில் பிறந்து வளர்ந்த வரலாற்று உன்மையினைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துக் காட்டியது. அதுவே தமிழ்த் தேசிய இன அடையாளத்தைக் கண்டது. திராவிட இயக்கத்தார்க்கும் முற்போக்கு இயக்கத்தார்க்கும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான திசையினையும் காட்டியது என்று இந்நூலில் தொ.பரமசிவன் மதிப்பிடுவது கவனத்துக்குரியது.

இந்து தேசியம்

தொ. பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?, இந்து தேசியம், சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம்; ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து தேசியம்’ எனும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரையும் இதில் இடம் பெற்றுள்ளது.

மானுடவாசிப்பு

அறிவின் துருத்தல்களற்ற வினாக்களும், அகந்தைகளற்ற விவரிப்புகளுமாக, நெளிந்தோடும் ஆறெனச் செல்கிறது நூல்.

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு

இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது.

பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இட ரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது.

மஞ்சள் மகிமை

மரபும் புதுமையும்

இதுவே சனநாயகம்

வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் என சாதாரண நிகழ்வுகள் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். இம்முறையில் புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. இத்தொகுப்பு சமயமும் வழிபாடும், உறவும் முறையும், ஆளுமைகள், மதிப்புரைகள், ஆய்வுப்பார்வை போன்ற அவரது கட்டுரைகளை வகைக்குள் அடக்க முயன்றிருக்கிறது.

செவ்வி

தமிழாராய்ச்சியின் வளர்ச்சி

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 24.08.2000 அன்று நிகழ்ந்த அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கலந்து கொண்டு தொ.ப. அவர்கள் ஆற்றிய உரை இந்நூலாக வெளியானது. மொழி இலக்கியத் தளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சமகாலம் வரை நிகழ்ந்த ஆய்வுப்போக்குகள் பற்றியும் தமிழறிஞர்கள் பற்றியும் இந்நூல் பதிவுசெய்கிறது.

மதிப்பீடு

”அவர் ஒரு கோயிலின் கட்டமைப்பைப் பார்த்தாலே அதன் வயதைச் சொல்வார். கோயிலின் இயல்பையும், அதில் இருக்கக்கூடிய தெய்வத்தையும் கண்டுபிடிக்கும் நுணுக்கமும் அவருக்கு இருந்தது. அவர் ஒரு என்சைக்ளோபீடியா” என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் குறிப்பிட்டுள்ளார்[2].

தொ.பரமசிவன் அவர்களின் மாணவரான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் "தொ. பரமசிவன் அவர்கள் எனக்கு தமிழ் ஆசிரியராகக் கிடைத்த கொடையால் மட்டுமே இப்போது வரையிலும் எனக்குத் தமிழ் மீது ஆர்வம் குறையாமல் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்[3].

நடிகர் கமல்ஹாசன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு வருவது வழக்கம்[1]. இன்று வரை அழகர் கோவில் பற்றிய இவரது நூல்கள் தமிழ் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகின்றன.

மறைவு

நாட்டார் தெய்வங்கள் பண்பாட்டு ஆய்வுக்காக சுமார் ஒரு லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் கால்நடையாகவே பயணம் மேற்கொண்ட தொ. பரமசிவன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி திடீர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவரை, அவரது வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு வென்டிலேட்டர் இல்லாததால் ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனையில் அவருகு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். [2]

கால தாமதமாக வந்ததால் திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியாரிய சிந்தனையாளராகத் திகழ்ந்த தொ.பரமசிவன், பெரியார் நினைவு நாளிலேயே மறைந்தார்.

அறியப்படாத தமிழகம் - அட்டை.jpg

படைப்புகள்

  • அழகர் கோயில்
  • அறியப்படாத தமிழகம்
  • இந்து தேசியம்
  • தெய்வங்களும் சமூக மரபுகளும்
  • தெய்வம் என்பதோர்
  • நாள் மலர்கள் தொ. பரமசிவன்
  • நீராட்டும் ஆறாட்டும்
  • பண்பாட்டு அசைவுகள்
  • விடுபூக்கள்
  • பாளையங்கோட்டை
  • மரபும் புதுமையும்
  • தொ. பரமசிவன் நேர்காணல்கள்
  • இதுவே ஜனநாயகம்
  • மஞ்சள் மகிழை
  • மானுட வாசிப்பு
  • பரண்
  • சமயங்களின் அரசியல்
  • சமயம் அல்லது உரையாடல்
  • செவ்வி
  • உறைகல்
  • நான் ஹிந்து அல்ல நீங்கள்?

நாட்டுடைமை

தொ. பரமசிவன் அவர்களின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது[4]. காலச்சுவடு, நற்றிணை, எதிர் வெளியீடு, லியோ புக்ஸ், ரிதம் வெளியீடு, பாரதி புத்தகாலயம், செண்பகா போன்று நிறைய பதிப்பகங்கள் அவரது நூல்களை வெளியிட்டிருக்கின்றன.

அடிக்குறிப்புகள்

உசாத்துணை