under review

மமங் தாய்

From Tamil Wiki

To read the article in English: Mamang Dai. ‎

மமங் தாய்
சாகித்ய அக்காதமி விருது
பத்மஸ்ரீ
கருங்குன்றம்
மமங் தய் விஷ்ணுபுரம் விழா 2022

மமங் தாய் (Mamang Dai) (பிப்ரவரி 23, 1957) (மமங் தய்) அருணாச்சலப்பிரதேசத்து கவிஞர், நாவலாசிரியர். மமங் தாயின் தாய்மொழி ஆதி என்னும் பழங்குடி மொழி. ஆங்கில மொழியில் எழுதுகிறார்.

பிறப்பு, கல்வி

அருணாச்சல பிரதேசத்தில், கிழக்கு சியாங் மாவட்டத்தில், பாஸிகாட் (Pasighat) என்னும் ஊரில், ஆதி என்கிற பழங்குடி இனத்தில் மாடின் தாய் - ஓடின் தாய் இணையருக்கு பிப்ரவரி 23,1957 அன்று பிறந்தவர் மமங் தாய்.

மமங் தாய் மேகாலயாவில் ஷில்லாங் நகரில் பைன் மௌண்ட் பள்ளியில் பயின்றார். அஸ்ஸாமின் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மமங் தாய் 1979-ல் இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்வானார். அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அவரே . ஆனால் இதழியல் மற்றும் இலக்கிய ஆர்வத்தால் உடனடியாக அந்தப் பணியைத் துறந்தார்.

ஊடகவியல்

மமங் தாய் இலக்கிய ஆர்வத்தால் குடிமைப்பணியைத் துறந்தார். டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ், செண்டினெல் ஆகிய இதழ்களில் இதழாளராகப் பணியாற்றினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் செய்தியாளராகவும், வானொலி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்

அமைப்புப்பணிகள், பதவிகள்

  • சர்வதேச இயற்கை நிதி (Worldwide Fund for Nature, WWF) ஆதரவில் கிழக்கு இமயமலைப் பகுதியின் பல்லுயிர்த்தளங்களை அடையாளம் கண்டு பேணும் பணியில் ஈடுபட்டார்.
  • டோன்யி போலோ ( Donyi- Polo Mission) அமைப்பின் சார்பாக கேட்டல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கல்விப்பணிகளில் ஈடுபட்டார்.
  • இடாநகர் இதழாளர் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்
  • அருணாச்சலப்பிரதேச இதழாளர் சங்கத்தின் (Arunachal Pradesh Union of Working Journalists (APUW)) தலைவராக இருந்தார்
  • மமங் தாய் 2011-ல் அருணாச்சலப்பிரதேச மாநில பொதுத்தேர்வுக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். (Arunachal Pradesh state public service commission)
  • அருணாச்சலப்பிரதேச இலக்கியக் கழகத்தின் ( Arunachal Pradesh Literary Society) செயலர்
  • வடகிழக்கு எழுத்தாளர் கழக உறுப்பினர் (North East Writers’ Forum)
  • சங்கீத நாடக அக்காடமியின் பொதுக்குழு உறுப்பினராகப் பங்காற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

மமங் தாய் அருணாச்சலப்பிரதேசத்தின் இலக்கிய முகமாக அறியப்படுகிறார்.

கவிதை

மமங் தாய் மென்மையான கற்பனாவாதக் கவிதைகள் எழுதத்தொடங்கி பின்னர் யதார்த்தவாத நோக்கில் சிறுகதைகளும், நாவல்களும் எழுதினார். 2004-ல் வெளிவந்த 'ஆற்றங்கரைக் கவிதைகள்' (River Poems) அவருக்கு இலக்கிய இடம் தேடித்தந்தது. ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

நாவல்

மமங் தாயின் முதல் நாவல் 'பென்சாமின் தொன்மங்கள்' (The Legends of Pensam) 2006-ல் வெளிவந்தது. தொடர்ந்து 'முட்டாள் க்யூபிட்' (Stupid Cupid) (2008), 'கரிய குன்று' (The Black Hill ) (2014) , 'தப்பிச்செல்லும் நிலம்' (Escaping the Land ) (2021)ஆகிய நாவல்கள் வெளிவந்தன.

கட்டுரைகள்

மமங் தாய் அருணாச்சலப் பிரதேசத்தின் பண்பாட்டை உலகப்பார்வைக்குக் கொண்டுசென்றவராகக் கருதப்படுகிறார். அவருடைய முதல் நூல் ’அருணாச்சலப் பிரதேசம் -மறைந்திருக்கும் நிலம்’ ( Arunachal Pradesh: The Hidden Land ) 2003 ல் வெளிவந்தது. 'மலை அறுவடை - அருணாச்சலப்பிரதேசத்தின் உணவு' ( Mountain harvest : The Food of Arunachal) 2004 ல் வெளிவந்தது

நாட்டாரியல்

மமங் தாய் எழுதிய 'வானரசி' (The Sky Queen) 'ஒரு நிலவுப்பொழுதில்' ( Once Upon a Moontime) ஆகியவை அருணாச்சல நாட்டுப்புறக் கதைகளின் ஓவியச்சித்தரிப்பு நூல்கள்.

மமங் தாய் மறைந்து வரும் பழங்குடி கலாச்சாரத்தைப் பற்றி தேசிய, சர்வதேச மேடைகளில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து பேசிவருகிறார்.

அழகியல்

“உலகின் முணுமுணுப்புக்களைச் சுமந்து செல்லும் பத்தாயிரம் தூதுவர்களுள் நானும் ஒருத்தி” என்று தன் படைப்புகளைப் பற்றி பேசும்போது மமங் தாய் சொல்கிறார்.

காடுகளும், மலைகளும் ஆறுகளும் சூழ்ந்த அவருடைய நிலத்தின் பிரதிபலிப்பாகவே அவருடைய படைப்புகளைக் காணலாம். காடுகளின் மரங்கள் நிலம் ஆகியவை எப்படி மர்மம், தொன்மம் மற்றும் பல நூற்றாண்டுகள் நினைவைத் தன்னுள் கொண்டிருக்குமோ அதைப் போலவே அவருடைய எழுத்துக்களும் ஒரு அடர்த்தியான தன்மை கொண்டவை. அவருடைய எழுத்துக்களில் மேலோட்டமாகக் காணும் அழகியலுக்குள் மண்ணின் முக்கிய அரசியலையும் கால மாற்றங்களையும் காண முடியும்.

அவருடைய எழுத்துக்கள் எத்தனை எளியவையாக தென்படுகின்றனவோ அத்தனை ஆழமானவையும் கூட. அந்தப் படிமங்கள் தொடர்ந்து மனதில் நின்று எளிய முடிவுகளுக்கு வருவதைத் தடுப்பவை. இயற்கை சூழ்ந்த இடத்திலிருந்து வந்தாலும் அந்த அழகியலில் மட்டும் சிக்கிக்கொள்ளாத எழுத்துக்கள். தன்னுடைய மக்களை ‘ஊழைத்தேடும் பயணிகள்' என்று கூறுகிறார். பழங்குடிகளின் மறந்துபோன கடந்த காலங்களும், திசையற்று இருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பதற்றமும் அவருடைய படைப்புலகம் நமக்கு தொடர்ந்து உணர்த்துபவை.

தமிழில்

மமங் தாய் டிசம்பர் 18, 2022 அன்று கோவையில் நடந்த 2022-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் கலந்துகொண்டார். அவருடைய கவிதைகள் அதையொட்டி தமிழாக்கம் செய்யப்பட்டன.

மமங் தாய் எழுதிய The Black Hill (2014) என்னும் நாவல் சாகித்ய அக்காதமி வெளியீடாக கருங்குன்றம் என்ற பெயரில் 2016ல் வெளிவந்தது. (தமிழாக்கம் கண்ணையன் தட்சணாமூர்த்தி )

விருதுகள்

  • ‘அருணாச்சல பிரதேசம்: மறைந்திருக்கும் நிலம்' என்ற அவருடைய புத்தகத்திற்கு வெர்ரியர் எல்வின் விருது (2003)
  • பத்மஶ்ரீ விருது (2011)
  • ‘கருங்குன்றம் (the black hill) என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது (2017)
  • கருங்குன்றம் நாவல் மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது (கண்ணையன் தட்சிணாமூர்த்தி) 2024

நூல்கள்

கட்டுரை
  • Arunachal Pradesh: The Hidden Land (2003)
  • Mountain harvest : The Food of Arunachal (2004
நாட்டாரியல்
  • The Sky Queen (2003)
  • Once Upon a Moontime (2003)
நாவல்
  • The Legends of Pensam (2006)
  • Stupid Cupid (2008)
  • The Black Hill (2014)
  • Escaping the Land (2021)
கவிதை
  • River Poems (2004)
  • The Balm of Time (2008)
  • Hambreelmai's Loom (2014)
  • Midsummer Survival Lyrics (2014)
மொழியாக்கம்
  • கருங்குன்றம் (தமிழாக்கம் கண்ணையன் தட்சணாமூர்த்தி, 2016 ) The Black Hill

உசாத்துணை


✅Finalised Page