under review

இரா.முருகன்

From Tamil Wiki

To read the article in English: Era Murukan. ‎

இரா.முருகன்
இரா முருகன்
இரா முருகன் மகனுடன்
இரா முருகன், நீல பத்மநாபன், கமல்ஹாசன்
இரா.முருகன் நடிகராக
இரா முருகன் பேரனுடன்

இரா.முருகன் (பிறப்பு:1953) :நவீனத் தமிழ் எழுத்தாளர். நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் என தமிழ் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாகப் பங்காற்றி வருகிறார். 1977 முதல் தீவிரமாக இயங்கும் இரா.முருகன் கவிதையிலிருந்து சிறுகதை, குறுநாவல் வழியே நாவலுக்கு வந்தவர். மேடை நாடக ஆக்கம், திரைக்கதை உரையாடல் ஆக்கம் என்றும் பங்களித்துள்ளார். மாய யதார்த்த பாணியில் பகடியுடன் கூடிய புனைகதைகளை எழுதுபவர்.

இரா.முருகன் பயண-வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய, வெகுஜனப் பத்திரிகை பத்திகள், தமிழில் தொழில்நுட்ப அறிமுகம், மேலாண்மை அறிமுகம், இஸ்லாமிய வங்கியியல் அறிமுகம் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நாவல், சிறுகதை, கவிதை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். ஆங்கிலத்திலும் கவிதைகள், பத்திகள் எழுதி வருகிறார்.

பிறப்பு,கல்வி

இரா.முருகன், 1953-ல் சிவகங்கையில் நா.சீ.இராமசாமி - மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். சிவகங்கை அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியும், புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக்கல்லூரியில் கல்லூரிப் படிப்பும் முடித்தார்.

தனிவாழ்க்கை

இரா.முருகன் வங்கியில் கிளை அதிகாரியாக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அங்கிருந்து வங்கி கணினித்துறையில் அடுத்த பதினைந்து வருடம் கணினி மென்பொருள் வடிவமைத்து உருவாக்கும் தொழில்நுட்ப வங்கியாளராக(techno banker) தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வந்தார். பிறகு தனியார் தகவல் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனப் பணிக்குக்கு மாறினார். வங்கித் தொழில்நுட்பவியல், திட்ட மேலாண்மைத் துறைகளில் பொது மேலாளராக இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து, அமெரிக்காவில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.

1982–ல் திருமணம், மனைவி கிரிஜா. மகள் ஐஸ்வர்யா மற்றும் மகன் அஸ்வின் முருகன். அஸ்வின் முருகன் இந்திய கிரிக்கெட் அணி வீரர். இரா.முருகனின் மனைவி கிரிஜா டிசம்பர் 2020-ல் ரத்தப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இலக்கியவாழ்க்கை

இரா.முருகனின் முதல் படைப்பு தெரு என்கிற கவிதை. 1978-ல் கணையாழியில் வெளியானது. 2022-ம் ஆண்டு வரை நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் என 39 புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

இரா.முருகனின் பத்து நாவல்களும், பதினோரு சிறுகதைத் தொகுதிகளும், மூன்று குறுநாவல் தொகுதிகளும், இரண்டு கணினியியல் நூல்களும், பயணநூல் மற்றும் இரு இலக்கியக் கட்டுரைத் தொகுதிகளும், மலையாள நாவல் மொழிபெயர்ப்பாக ஒரு தமிழ் நூலும் (பீரங்கிப் பாடல்கள்) அச்சில் வெளியாகியுள்ளன. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்ய அகாதமி கோரியபடி எழுத்தாளர் சுஜாதா பற்றி எழுதிய நூலும் வெளியாகியுள்ளது. இவை தவிர, தனி மின் நூல்களாக பதினைந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, காஃப்கா, குந்தர் கிராஸ், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், பிரைமோ லெவி, வைக்கம் முகமது பஷீர், கவிஞர் மீரா ஆகியோரைத் தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். தனது மாய எதார்த்த புனைவுகளுக்கு தமிழில் புதுமைப்பித்தன் மற்றும் பாரதியார் ஆகியோரை ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார்.

கவிதைகள்

இரா.முருகன் கணையாழியில் கவிதைகள் எழுதியவராக கவனத்துக்கு வந்தார். பகடியும் நுண்சித்தரிப்பும் கொண்ட அவருடைய கவிதைகளில் ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்’ என்னும் படைப்பு கணையாழியில் 1986ல் வெளிவந்தது. எழுத்தாளர் சுஜாதா அதைப் பாராட்டி முருகனை இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். 2000 த்தில் சிநேகா பிரசுர வெளியீடாக ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்’ என்னும் பெயரில் இரா.முருகனின் கவிதைகள் நூலாக வெளிவந்தன.

சிறுகதைகள்

இரா.முருகன் தொடக்கத்தில் யதார்த்தச் சித்திரங்களை நேரடியான பகடியுடன் வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார். பின்னர் அவருடைய அழகியலில் மாய யதார்த்தம் இடம்பெற்றது. கேரளத்தின் பாலக்காட்டு பின்னணி கொண்ட ஆதம்பூர், விஷ்ணுபுரம் போன்ற ஊர்களை புனைவாகத் தன் கதைகளில் எழுதினார். ஆதம்பூர்க்காரர்கள் என்னும் சிறுகதைத் தொகுதி கவனம் பெற்ற ஒன்று.

நாவல்கள்

இரா.முருகனின் மாயயதார்த்த அழகியல் கொண்ட நாவல்களில் ’அரசூர் நாவல்கள்’ என்றழைக்கப்படுகின்ற தொடர் நாவல்கள். 1850 – 1960 காலகட்டத்தில் நிகழும், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் வேர்விட்டுப் பரவிய ஒரு குடும்பத்தின் புனைவு கலந்த நான்கு நாவல்கள் – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்னும் நான்கு படைப்புகள்.

2022-ல் வெளியான மிளகு நாவலிலும் அரசூர் வம்சம் நாவல் தொடரின் கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றனர். இந்த வரிசையின் முதல் நாவலான அரசூர் வம்சம் நாவல் Ghosts of Arasur என ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. (பார்க்க அரசூர் நாவல்கள்)

ராமோஜியம் நாவல் இரா.முருகனின் அங்கதமும் , அன்றாட வாழ்க்கையில் சிக்கியிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பரிவுகலந்த பார்வையில் அணுகும் நோக்கும் வெளிப்படுவது (பார்க்க ராமோஜியம்)

2022-ல் வெளியான மிளகு நாவல் பதினாறாம் நூற்றாண்டில் கெருஸொப்பா (கர்நாடகத்தின் ஒரு பகுதி) நாட்டை ஆண்ட சென்னபைராதேவியையும், போர்ச்சுகல் நாட்டுடனான மிளகு வர்த்தகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. நாம் அறிந்த, அடுக்கப்பட்ட, சீரான தர்க்க ஒழுங்கும் காலவரிசையும் கொண்ட வரலாற்றை பல்வேறு சாமானியர்கள், சரித்திர புருஷர்கள் வழியாகக் கலைத்து விரித்து வெவ்வேறு வண்ணத் துண்டுச் சித்திரங்களாகக் காட்டும் இந்நாவல் வெவ்வேறு நூற்றாண்டுகளின் பேச்சு, எழுத்து மொழிகள் கலந்து வரும் மொழி நடையைக் கொண்டது. (பார்க்க மிளகு )

தகவல்தொழில்நுட்ப உலகம்

இரா.முருகன் எழுதிய தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த புனைவுகள் அந்தத் துறை சார்ந்த தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிப் படைப்புகளாக விளங்குகின்றன .1990 முதல் இரா.முருகன் எழுதிய சிலிக்கான் வாசலிலும் லாசரஸ் நாற்பது, இளைப்பாறுதல் போன்ற கதைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடுத்தர அல்லது இளைய நிலைகளில் பணிபுரிபவர்கள் பேசுபொருளாக உள்ளனர். முதல் இரண்டும் இந்தியா டுடே தமிழ் இதழிலும், இளைப்பாறுதல் இலக்கியப் பத்திரிகையான உயிர்மையிலும் வந்தன. விடுமுறை தராத உழைப்பை பகடியுடன் விளக்கும் 24X7 என்கிற கதையை ஆனந்த விகடன் தொகுப்புக்காக எழுதினார்.

இரா.முருகன் மூன்றுவிரல் என்கிற தகவல் தொழில் நுட்பத்துறை குறித்த அவரது முதல் நாவலை 2002-ல் எழுதினார்.நவீன தகவல்தொழில்நுட்பத் துறை சார்ந்த வாழ்க்கையில் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கைக்கான நேரச் சமநிலை (work-life balance) மற்றும் உளநிலைகளைப்பற்றி சரியான சித்தரிப்பை தருவது தன் நோக்கமாக இருந்தது என்று அவர் அதுகுறித்த உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

மொழியாக்கம்

இரா.முருகன் மலையாளத்தில் இருந்து கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார். என்.எஸ்.மாதவனின் ‘லண்டன் பத்தேரியிலே லுத்தீனியகள்’ என்னும் நாவலை ‘பீரங்கிப்பாடல்கள்’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தார்.

பொது

இரா.முருகன் தகவல்தொழில்நுட்ப அறிமுகம், வங்கியியல் அறிமுகம் சார்ந்த நூல்களை எழுதியிருக்கிறார். லண்டன் வாழ்க்கையின் குறிப்புகளையும், பயணக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்

திரைப்படம்

இரா.முருகன் திரைப்படத்துறையில் வசனம் எழுதியிருக்கிறார்

  • உன்னைப் போல் ஒருவன்’ (2009)
  • பில்லா 2 (2011)

இரா முருகன் அவர் எழுதிய ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘ரெட்டைத் தெரு’ (2010) குறும்படத்தில் நடிகராகவும் திரையில் தோன்றியிருக்கிறார்.

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை ஆண்டிறுதி விருது, கதா விருது, பாரதி பல்கலைகலைக் கழக விருது போன்றவை பெற்றவர் இரா.முருகன்.
  • அரசூர் வம்சம் நாவலின் ஆங்கிலப் பதிப்பான தி கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர்(Ghosts of Arasur), இந்திய புக்கர் விருது என்று சிறப்பிக்கப்படும் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது.
  • 2019-ம் ஆண்டில் 'பீரங்கிப் பாடல்கள்’ நூலுக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (மலையாளத்திலிருந்து தமிழ்) கனடா நாட்டின் 'இலக்கியத் தோட்டம்’ அமைப்பால் இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2019-ல், மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவுப் பரிசு, மலையாளம் – தமிழ் இலக்கியப் பரிமாற்றத்துக்காக இவருக்கு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது இரா முருகனுக்கு வழங்கப்பட்டது.

நடை, அழகியல்

இரா.முருகன் எழுத வந்த காலகட்டத்தில் சுஜாதாவின் எள்ளல் கலந்த தாவிச்செல்லும் நடையை அணுக்கமாகப் பின்பற்றினார். கேரளத்தில் பணியாற்றியமையால் மலையாளம் கற்றுக்கொண்டு வாசிக்க தொடங்கிவிட்ட பின் கேரள எல்லையில் உள்ள ஊர்களை கற்பனையாக புனைந்து அங்கே மலையாளப் பண்பாட்டுக்கூறுகளை கலந்து தனக்குரிய ஒரு புனைவுலகை உருவாக்கத் தொடங்கினார். கேரள வரலாறு, ஆலயச் சடங்குகள் ஆகியவற்றையும் கலந்து அந்த உலகின் விரிவை அதிகரித்தார். பகடியும் நுண்விமர்சனமும் கலந்த அந்தச் சித்தரிப்புகள் இரா.முருகனுக்கென ஓர் உலகை உருவாக்கின. பின்னர் அதில் மாயயதார்த்த எழுத்துமுறையை சேர்த்துக்கொண்டார். அரசூர் வம்சம் முதலிய நாவல்களில் அந்த எழுத்துமுறை வலுப்பட்டது. இறுதியாக மிளகு நாவலில் விரிவான வரலாற்றுச் சித்திரத்தையும் இணைத்துக்கொண்டார். வாழ்க்கையின் சாராம்சம் என்பது ஒரு வகை அபத்தமாகவே வெளிப்படுகிறது என்பது இரா.முருகனின் புனைவுலகில் வெளிப்படும் பார்வை. அதை அன்றாடவாழ்க்கையில் இருந்து ஒட்டுமொத்த வரலாற்றுக்கும் நீட்டிக்கொள்ள இந்த அழகியல் பரிணாமம் அவருக்கு உதவியது.

இலக்கிய இடம்

இரா.முருகன் சிறுகதைகளில் வடிவம் மற்றும் நடையில் இயல்பான பரிசோதனைகளை மேற்கொண்டார். நுணுக்கமான மாய எதார்த்தம் வழியாக வரலாற்றை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து அடுக்கி விளையாடும் அரசூர் வம்சம், விஸ்வரூபம் நாவல்கள் வழியாக அவர் தன் தனிமொழியையும் தனிநோக்கையும் தமிழிலக்கியத்தில் நிறுவிக்கொண்டார்.

'பொருளற்ற வாழ்க்கைப்பிரவாகமாக, எல்லா தருணங்களிலும் உரிய அபத்தங்களுடன் நிகழும் வரலாற்றை முருகன் அவருடைய கதைகளினூடாகச் சித்தரிக்கிறார். தமிழிலக்கியத்தின் தனிச்சுவைகளில் ஒன்று அது' என்று என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். தொன்மங்களும் முன்னோர்களும் யதார்த்ததில் எவ்வாறு பொருள் கொள்கின்றன என்பதை சித்தரிப்பதில் இவருடைய இடம் முக்கியமானது என்று எழுத்தாளர் ஆத்மார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

படைப்புகள்

நாவல்கள்
  • மூன்று விரல் (நாவல் - கணினித் துறை பற்றிய முதல் தமிழ் நாவல்) இரண்டு வெளியீடுகள்
  • அரசூர் வம்சம்
  • விஸ்வரூபம்
  • அச்சுதம் கேசவம்
  • வாழ்ந்து போதீரே
  • நெம்பர் 40, ரெட்டைத் தெரு (தன் வரலாற்றுப் புனைவு)
  • தியூப்ளே வீதி (தன் வரலாற்றுப் புனைவு)
  • 1975
  • ராமோஜியம்
  • மிளகு
  • தினை அல்லது சஞ்சீவனி
சிறுகதைத் தொகுப்புகள்
  • தேர்
  • ஆதம்பூர்க்காரர்கள்
  • சிலிக்கன் வாசல்
  • முதல் ஆட்டம்
  • ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்
  • மந்திரவாதியும் தபால் அட்டைகளும்
  • சைக்கிள் முனி
  • இரா.முருகன் சிறுகதைகள் (செம்பதிப்பு - 108 சிறுகதைகள் அடங்கியது)
  • நண்டு மரம்
  • முத்தான பத்து கதைகள்
  • Polymorph (ஆங்கில சிறுகதைத் தொகுப்பு)
குறுநாவல்கள்
  • தகவல்காரர்
  • பகல் பத்து ராப்பத்து
  • இரா.முருகன் குறுநாவல்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
  • கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - இந்திய அரசின் என்.சி.ஈ.ஆர்.டி பரிசு பெற்றது)
  • ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் (கவிதைத் தொகுதி - வாசுதேவன் நினைவுப் பரிசு)
  • கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - ராஜாராமனுடன் சேர்ந்து எழுதியது - வரதாச்சாரி விருது)
  • ராயர் காப்பி கிளப்
  • லண்டன் டயரி
  • ப்ராஜக்ட் எம் (பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய முதல் தமிழ் நூல்)
  • வேம்பநாட்டுக் காயல்
  • ஏதோ ஒரு பக்கம்: 23 கட்டுரைகளும் 3 நேர் காணல்களும்
  • சற்றே நகுக - கட்டுரைகள்
  • டிஜிட்டல் கேண்டீன் - கட்டுரைகள்
  • வங்கி மைனஸ் வட்டி: இஸ்லாமிய வங்கியியல் – கட்டுரைகள்
  • இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை - சுஜாதா (சாகித்ய அகாதமி)
பிற வகைகள்
  • சாவடி – நாடகம்
  • இரா.முருகன் வெண்பாக்கள் – இரு தொகுதிகள்
  • புதுக் கவிதைகள்
  • இரா.முருகன் சிறுகதைகள் (ஒலிப் புத்தகம் - ஆடீயோ புக்)
  • நடையானந்தா கவிதைகள்
  • Talespin (ஆங்கில நகைச்சுவை பதிவுகள், தொகுப்பு)
  • Temple sans history (கவிதைத் தொகுப்பு)
மொழிபெயர்ப்புகள்
  • பீரங்கிப் பாடல்கள் (நாவல் - மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • Ghosts of Arasur (novel - translation of 'Arasur vamsam')

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:46 IST