மிளகு
மிளகு: (2022) இரா.முருகன் எழுதிய நாவல். இது ஒரு பல அடுக்கு வரலாற்றுப்புனைவு. வரலாற்றுச் சித்தரிப்புடன் அவ்வரலாறு பிந்தையகால நினைவுகளிலும், வரலாற்றெழுத்திலும், சாமானியர்களின் வாழ்க்கையிலும் எப்படியெல்லாம் ஆகிறது என்பதையும் கலந்து காலத்தாவல் உத்தி வழியாக எழுதப்பட்டது. பொயு பதினாறாம் நூற்றாண்டில் வடகர்நாடகத்தில் கெருசப்பா நாட்டை ஆட்சிசெய்த சென்னபைரா தேவியை மையமாக்கி இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
எழுத்து, வெளியீடு
இரா.முருகன் இந்நாவலை சொல்வனம் இணைய இதழில் 2021-2022ல் தொடராக எழுதினார். பின்னர் 2022ல் சீரோ டிகிரி பதிப்பகம் இதை நூலாக வெளியிட்டது.
பின்னணி
இந்நாவல் கெருசப்பா என்னும் நாட்டை ஆட்சி செய்த சென்னபைரா தேவி என்னும் அரசியின் கதையைச் சொல்கிறது. 54 ஆண்டுகள் ஆட்சி செய்த சென்னபைரா தேவி இந்திய அரசியரில் நீண்டகாலம் அரசுப்பொறுப்பில் இருந்தவர். கெருசப்பா உத்தரகன்னட பகுதியில் ஷாராவதி ஆற்றங்கரையில் அமைந்த சிறிய நாடு. விஜயநகர ஆதிக்கத்தில் இருந்த இந்நாடு அப்பேரரசின் வீட்சிக்குப்பின் அவர்களுக்குக் கீழே மகாமண்டலேஸ்வரர்கள் என்னும் பெயரில் இருந்த சிற்றரசர்களில் ஒருவரான சாளுவ வம்சத்து ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. 1550-ல் சென்னபைரா தேவி ஆட்சிக்கு வந்தார்.
சென்னபைரா தேவி மிளகு ஏற்றுமதியால் செல்வம் மிக்க ஆட்சியாளரானார். அந்த செல்வத்தால் அடைந்த படைபலத்தால் கோவாவிற்கு தெற்கே ஏறத்தாழ கோழிக்கோடு வரையிலான பகுதிகளை ஆட்சி செய்தார். அவருடைய கட்டுப்பாட்டில் பட்கல், ஹொன்னாவர், மிர்ஜான் போன்ற துறைமுகங்கள் இருந்தன. சென்னபைரா தேவி போர்ச்சுக்கல் வணிகர்களுடன் தொடர்ச்சியாகப் போரிட்டுக்கொண்டிருந்தார். 1559, 1570 ஆண்டுகளில் நடந்த போர்களில் அவர் போர்ச்சுக்கல் வணிகர்களை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவுடன் தோற்கடித்தார். சென்னபைரா தேவியை மிளகுராணி (Raina de Pimenta) என்று ஐரோப்பியப் பயணிகள் அழைத்தனர்.
கதைச்சுருக்கம்
கெருசப்பா என்னும் நாட்டை ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் மிளகுராணி சென்னபைரா தேவி முதியவள். அவளை வீழ்த்தி மிளகு ஆதிக்கத்தை கையிலெடுக்க போர்ச்சுக்கல் கிழக்கிந்தியக் கம்பெனி முயல்கிறது. அதற்கு உள்ளூர் ஆட்சியாளர்கள் துணைநிற்கிறார்கள். அரசி சென்னபைரா தேவி முதுமையால் சற்று சலிப்புண்டிருக்கிறாள். அவளுடைய வரலாற்றை சமகால அரசியல்தொனிகள் கொண்ட கலந்த நடையில் ஆசிரியர் கூறிச்செல்கிறார். நாவல் அந்த வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்து பரமன் என்னும் காலந்தாவும் கதாபாத்திரம் வழியாக வெவ்வேறு வரலாறுகளில் தாவித்தாவி வந்து வரலாறு மீதான நினைவுகள், விமர்சனங்கள், பகடிகள் என விரிகிறது. சமணத்துக்கும் சைவத்துக்கும் அரசியல் காரணங்களுக்காக பூசல் உருவாக்கப்படுவது, குளத்திலிருந்து வினாயகர் தோன்றுவது போன்று சமகால நிகழ்வுகளின் முன்வடிவங்கள் அந்த வரலாற்றுக் காலகட்டத்தில் நிகழ்வதாக நாவல் சித்தரிக்கிறது.
இது சீரான கதையோட்டம் இல்லாத நாவல். மிளகுராணியின் வீழ்ச்சி என்னும் வரலாற்றுக்கதையை வெவ்வேறு பிந்தைய காலகட்ட நிகழ்வுகள் எவ்வாறு ஊடுருவி ஒரு வலைப்பின்னலாக வரலாற்றை உருவாக்குகின்றன என்று இந்நாவல் காட்டுகிறது.
நடை
’மிர்ஜான் கோட்டையின் கொத்தளங்களில் இருந்து நடுராத்திரிக்கு அப்புறம் பத்து நாழிகை கழிந்தது என்று அறிவிக்கும் முரசு சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது. கோல்கொண்டா கோட்டையில் நேரத்தை அறிவிக்க பீரங்கி முழங்குவார்கள். உடைந்து சிதறிப்போன பாரசீக வம்சமான பாமனி சுல்தான்களின் பழக்கம் அது. பீரங்கியோ, முரசோ, இந்த பஞ்ச பஞ்ச உஷத் காலமான காலை நான்கு மணிக்கு மிர்ஜான் நகரில் யாரும் அதை லட்சியம் செய்யப் போவதில்லை. அவரவர்கள் வீட்டில் துணையை அணைத்தபடி, அருமைக் குழந்தைகளை ஆரத் தழுவி துயில் கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் தலையணையாவது அருகே இருக்கும். இந்தப் பொழுதில் உறக்கமும், மிச்சம் இணை விழைதலும், பாசமும் ஓங்கியாடும் மனங்கள் எத்தனை. உறக்கம் பிடிக்காத உடல்கள் எத்தனை. சென்னாவுக்குத் தெரியும். சாதாரண மனுஷியாக அவள் நிறைய ஏங்கியிருக்கிறாள். அனுபவிக்கக் காத்திருந்திருக்கிறாள். விழைந்தது கிடைக்கப் பெற்றிருக்கிறாள். அந்த இன்பத்தைத் துறந்து தொடர்ந்து பயணப்பட்டிருக்கிறாள்’ (அத்தியாயம் ஒன்று).
துணைப்படைப்புகள்
தமிழில் ஏறத்தாழ இதே காலகட்டத்தைச் சித்தரிக்கும் நாவல் சாண்டில்யன் எழுதிய சாகசப்புனைவான ஜலதீபம். அதில் இறுதியில் காதரைன் என்னும் பெண்ணின் காதலனாக வரும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைத்தலைவன் மிளகுராணியின் நண்பர் என்று குறிப்பிடப்படுகிறார்
இலக்கிய இடம்
மிளகு ஒரு சரித்திர நாவல். மிளகு time space continuum குறித்த ஒரு அறிவியல் நாவல் என்று இரா முருகன் சொல்கிறார். இந்நாவல் வரலாற்றை ஒரு மாபெரும் அபத்தவெளியாக பகடியுடன் சித்தரிக்கிறது. வரலாறு காலமாற்றத்தில் அடையும் திரிபுகள், சாமானியர்களின் பார்வையில் அடையும் மாற்றங்கள் வழியாக வரலாறென்பதே ஒருவகை கேலிப்புனைவுதான் என்னும் பார்வையை முன்வைக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கதையடுக்குகள் வழியாக வரலாற்றை தானும் புனைந்து விளையாடும் வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.
’இந்நாவல் சமகாலத்தில் இருந்து பின்னகர்ந்து வரலாற்றுக்குச் செல்கிறது. கெட்டகனவு போல வரலாற்றின் எந்தப் பகுதியிலும் நுழைந்துவிடுகிறது. ஏனென்றால் அப்படித்தான் வரலாறு நம்மை வந்தடைகிறது’ என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறார். ‘மிளகுராணி ஆண்ட கெருசப்பாவை பிடித்த நாயக்கர் அரசு அவர்களிடமிருந்து பிடித்த போச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்கள் என மாறி மாறி இன்று அடையாளம் இல்லாமல் கிடப்பதை நாவல் பதிவு செய்கிறது. இன்று அதை தொடுவதன் மூலம் மொத்த வரலாற்றையும் நாவல் விரித்து காட்டுகிறது.’ என்று காளிப்ரஸாத் மதிப்பிடுகிறார்.
உசாத்துணை
- இரா முருகனின் மிளகு, காணொளி
- மிளகு, உரை காளிப்ரஸாத்
- மிளகு காளிப்ரஸாத் மதிப்புரை
- மிளகு தமிழில் இதுவரை வெளிவராதவகை நாவல் இரா முருகன்
- மிளகு பற்றி ஜெயமோகன்
- மிளகு முன்னுரை, இரா முருகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:10 IST