under review

ஜலதீபம்

From Tamil Wiki
ஜலதீபம்
ஜலதீபம் இரண்டாம் அத்தியாயம் குமுதம் ஓவியம் வர்ணம்
ஜலதீபம் முதல் அத்தியாயம் குமுதம், ஓவியம் வர்ணம்

ஜலதீபம் (1970-களின் முதல் பாதி) சாண்டில்யன் எழுதிய சரித்திர சாகச நாவல். மராட்டியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நிகழ்ந்த போரின் பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது

எழுத்து,வெளியீடு

சாண்டில்யன் இந்நாவலை குமுதம் வார இதழில் தொடராக வெளியிட்டார். பின்னர் வானதி பதிப்பகத்தால் நூல்வடிவாகியது.

வரலாற்றுப்பின்னணி

இந்நாவல் மகாராஷ்டிரத்தில் சிவாஜி நிறுவிய மராட்டிய அரசில் சிவாஜிக்குப் பின் நிகழும் அதிகாரப்போட்டியின் சூழலில் நிகழ்கிறது.சிவாஜியின் மகன் சம்பாஜி (1657 – 1689), சிவாஜிக்கும்– சாயிபாய்க்கும் பிறந்த மகன் ஆவார். ஒன்பது ஆண்டுகள் மராத்தியப் பேரரசை ஆண்ட இவர் பலவாறாக அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் டில்லி முகலாயர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசராக இவரது தம்பி ராஜாராம் பதவிக்கு வந்தார். அவருக்கு பின்னர் சம்பாஜியின் மகன் ஷாகுஜி பதவிக்கு வந்தார்.ராஜாராம் மறைந்த பின்னர் அவர் மனைவி தாராபாய்க்கும் சம்பாஜியின் மகன் ஷாகுவுக்கும் பதவிப்போட்டி நிகழ்ந்தது. பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் மராட்டியர்களை ஒருங்கிணைத்து ஷாகுவை அரசராக்கினார். மெய்யான ஆட்சியை தன் கையில் எடுத்துக்கொண்டு மராட்டியப் பேரரசை மீண்டும் வலுவாக்கினார். பேஷ்வாக்களின் ஆட்சிமுறை கிட்டத்தட்ட வெள்ளையர் ஆட்சிக் காலம்வரை நீடித்தது..

கதையின் நாயகர்களில் ஒருவரான கன்னோஜி ஆங்கரே ஜல்ஜீரா என்று அழைக்கப்பட்ட தீவில் இருந்துகொண்டு மராட்டிய கடற்பகுதிமேல் ஆதிக்கம் செலுத்திவந்தவர். ஆகஸ்ட் 1669-ல் பிறந்து ஜூலை 4, 1729-ல் மறைந்த கன்னோஜி ஆங்கரே மராட்டிய கடற்கரையில் இறுதிவரை வெல்லமுடியாத கடல்வீரராகத் திகழ்ந்தவர்.ஆகவே ஒரு மராட்டிய வீரநாயகராக கருதப்படுகிறார். அவர் முதலில் ஷாகுவை எதிர்த்தாலும் வெள்ளையருக்கு எதிரான மராட்டிய ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஷாகுவை ஏற்றுக்கொண்டார்.

கதைச்சுருக்கம்

கதைநாயகன் இதயச்சந்திரன் ஒரு கற்பனை கதாபாத்திரம். (இதயச்சந்திரன் என்ற பெயர் தமிழில் அன்றைய சூழலில் இல்லாத ஒன்று). தஞ்சையில் மராட்டிய மன்னர் ராஜாராமின் ரகசிய மனைவிக்கு பிறந்த வாரிசு ஒருவன் ஒரு மர்மவீரனால் கடத்தப்படுகிறான். அவனை கண்டுபிடித்து தரும்படி கோரி அவனை மராட்டிய நிலத்துக்கு அவள் அனுப்புகிறாள். அங்கே வரும் வழியில் கடல்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நீந்தி கரையணைந்து காயமுற்று கிடக்கும் இதயச்சந்திரனை மராட்டியக் கடல்கொள்ளையரும் படைத்தலைவருமான கன்னோஜி ஆங்கரேயின் மகள் மஞ்சு காப்பாற்றுகிறாள். மஞ்சுவிடம் காதல்கொள்ளும் இதயச்சந்திரன் கன்னோஜியின் படையில் சேர்ந்து தேர்ந்த கடல்வீரனாக ஆகிறான். அவனுடைய கப்பலின் பெயர்தான் ஜலதீபம்

கடல்வீரனாக இதயச்சந்திரனின் வாழ்வில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். பானுதேவி என்னும் மராட்டிய இளவரசி, காதரைன் என்னும் வெள்ளைக்காரப் பெண், எமிலி என்னும் மருத்துச்சி. பல கடல்போர்களில் வெள்ளையர்களை இதயச்சந்திரன் தோற்கடிக்கிறான். ஷாகு- தாராபாய் அதிகாரப்போட்டியில் இருபக்கமும் அலைக்கழிக்கப்படுகிறான். பேஷ்வா பாலாஜி விஸ்வநாத், பேஷ்வா பிங்களே ஆகியோர் இறுதியில் மராட்டிய ஒற்றுமையை உருவாக்குகிறார்கள். இறுதியில் தஞ்சை ரகசிய ராணி தோன்றி இதயச்சந்திரன் தன் மகனை தேடவேண்டாம் என்று சொல்கிறாள், நிம்கர் என்னும் ஒற்றன் வழியாக அவள் மகனை கடத்தியவர் பேஷ்வாதான் என தெரிகிறது. மராட்டிய ஆட்சியில் இன்னொரு அதிகாரப்போட்டியை அவள் விரும்பவில்லை என்கிறாள். இதயச்சந்திரன் ஊர்திரும்புகிறான்.

கதை மாந்தர்

 • இதயசந்திரன் -
 • கனோஜி ஆங்கரே
 • பிரும்மேந்திர சுவாமி
 • மஞ்சு
 • பாலாஜி விஸ்வநாத்
 • பேஷ்வா பிங்களே
 • எமிலி
 • நிம்கர்
 • பானுதேவி
 • காதரைன்
 • ஹர்கோவிந்த்
 • தஞ்சை இரகசிய ராணி
 • இராஜாராம்

இலக்கிய இடம்

மராட்டிய ஆட்சிக்காலப் பூசல்கள் இந்நாவலின் களம். ஆனால் நாவல் பெரும்பாலும் அதைவிட்டு கடல்கொள்ளையர் வாழ்க்கை, காமம் என்றே அலைவுறுகிறது. ஆங்கிலேயருக்கும் சித்திகளுக்கும் அபிசீனியர்களுக்கும் கடலில் நடந்த அதிகாரப்போட்டி மிகக்குறைவாகவே பேசப்படுகிறது. கடல்போர்ச் சித்தரிப்புகள் சில உள்ளன. ஆனால் பொதுவாக மிக தளர்வான வடிவிலேயே நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொதுச்சித்திரம் வாசகனுக்கு கிடைக்கும். பொதுவாசகர்களுக்குரிய எழுத்து.

உசாத்துணை