under review

தி.க.சிவசங்கரன்

From Tamil Wiki
Thi.ka.si.jpg
தி.க.சிவசங்கரன்
திகசி, வெங்கட் சாமிநாதன்

தி.க.சிவசங்கரன் (மார்ச் 30, 1925 - மார்ச் 25, 2014) தி.க.சி. இலக்கிய விமர்சகர், இதழாளர், முற்போக்கு இலக்கியப் பார்வை கொண்டவர். தாமரை இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

பிறப்பு, கல்வி

தி.க.சி என்றழைக்கப்படும் திருநெல்வேலி கணபதி. சிவசங்கரன் தன் தாய் வழிப் பாட்டி ஊரான நெல்லையை அடுத்த அரியநாதபுரத்தில் பிறந்தார். தந்தை கணபதியப்பன், தாயார் பார்வதியம்மாள். தாத்தாவின் பெயரான சிவசங்கரனே இவருக்கு இடப்பட்டது. தாத்தா சிவசங்கரன் பிள்ளை தொழில் செய்யும் பொருட்டு சிவலைப்பேரியில் இருந்து திருநெல்வேலியில் குடும்பத்துடன் குடியேறினார். சம்பந்தம் பிள்ளையின் தேங்காய் மண்டியில் வேலைக்குச் சேர்ந்து, பின் நெல்லையப்பர் கோவில் அறங்காவலராகவும், நீதிமன்ற நடுவர் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.தி.க.சி. ஐந்து வயதில் தந்தையையும், ஏழு வயதில் தாயையும் இழந்தார். தாத்தாவின் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தார்.

திருநெல்வேலியில் உள்ள மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளி நாட்களிலேயே பேச்சுப் போட்டி, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றார். இவரது தாயார் தீவிர புத்தக வாசிப்புக் கொண்டவராக இருந்ததால் இளமையிலேயே இவரது நாட்டம் புத்தகத்தின் பக்கம் திரும்பியது. பள்ளி நாட்களிலேயே திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆறுமுக நாவலர் நூலகம் அறிமுகமானது.

நெல்லை இந்துக் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். அங்கு கு. அருணாசலக் கவுண்டர், ஆ. முத்துசிவன் போன்ற ஆசிரியர்கள் இவரது தமிழார்வத்தைக் கண்டு பாரதி, பாரதிதாசன் படைப்புகள் பக்கம் இவரைத் திருப்பினர். அதேபோல் இவரது ஆங்கிலப் பேராசிரியரான அ.சீனிவாசராகவன் இவருக்கு பல நூல்களை அறிமுகப்படுத்தினார். அவர் வழியாகவே புதுமைப்பித்தனையும் ஒரு கல்லூரி நிகழ்வில் அறிமுகம் செய்துக் கொண்டார்.

தனி வாழ்க்கை

Thi.ka.si1.jpg

தி.க.சி தனது அத்தை ராமலெட்சுமி அம்மாளின் மகளான தெய்வானையை ஆகஸ்ட் 22, 1942-ல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திருமணம் செய்து கொண்டார்.. தி.க.சிக்கு மூன்று மகன்கள் (கணபதி, கல்யாணசுந்தரம், சேதுராமலிங்கம்), மூன்று மகள்கள் (ஜெயலட்சுமி, சாந்தா, கௌரி).

தி.க.சி. கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே திருநெல்வேலியில் இயங்கி வந்த "தாம்கோஸ்" வங்கியில் (1945) வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு மாதச்சம்பளம் முப்பது ரூபாய் பஞ்சப்படி ஏழரை ரூபாய். தி.க.சி பொதுவுடைமைச் சார்பு கொண்டதால் சங்கம் அமைப்பதில் ஆர்வம் கொண்டார். 1948-ல் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1952-ல் மீண்டும் திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் வங்கிப் பணியாளர் சங்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். தி.க.சி யின் தொழிற் சங்க நடவடிக்கையால் 1961-ம் ஆண்டு பரமக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் தி.க.சியின் தொழில் சங்க ஈடுபாட்டால் அதிருப்திக் கொண்ட நிர்வாகம் ஆறு மாதத்தில் சேலம் எடப்பாடிக்கு மறு இடமாற்றம் செய்தது. அதனை தொடர்ந்து மூன்று மாதத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கேரளத்திலும் தி.க.சியின் தொழிற்சங்கப் பணித் தொடர்ந்தது. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கி பணியில் இருந்து விடுப்பு பெறும் வரை அங்கே பணியாற்றினார்.

மூத்த மகனான கணபதி முழுமுதலோன், தெய்வமைந்தன், திருவேந்தி என்கிற பெயர்களில் கவிதைகள் எழுதியுள்ளார். ஓவியர். கலீல் கிப்ரானின் முறிந்த சிறகுகள் என்னும் கவிதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இரண்டாவது மகனான கல்யாணசுந்தரம், நவீன தமிழிலக்கிய எழுத்தாளரான வண்ணதாசன். வண்ணதாசன் என்ற பெயரில் புனைக்கதைகளையும், கல்யாண்ஜி என்ற பெயரில் நவீன கவிதைகளையும் எழுதுபவர். மூன்றாவது மகனான சேது "திசைகள்" என்ற இலக்கிய இதழில் பணியாற்றினார். தி.க.சி க்கு மொத்தம் பன்னிரெண்டு பேரன்கள், பேத்திகள் போக கொள்ளு பேரன்கள், பேத்திகள் உண்டு.

அரசியல்

1941ல் காங்கிரஸ் கட்சிப்பொறுப்பில் இருந்த சிந்துபூந்துறை அண்ணாச்சி என அழைக்கப்பட்ட சண்முகம் அக்கட்சியில் இருந்து விலகி கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். அவர் வழியாக தி.க.சி ஜனசக்தி போன்ற கம்யூனிஸ்டுக் கட்சி இதழ்களுடன் அறிமுகம் கொண்டார். சிந்துபூந்துறை அண்ணாச்சி ஊக்கத்தால் தொ.மு.சி. ரகுநாதன், என்.டி. வானமாமலை போன்றவர்களுடன் சேர்ந்து நெல்லை வாலிபர் சங்கம் (கலைஞர் கழகம்) என்னும் அமைப்பை தொடங்கினார். அதில் தொ.மு.சி.ரகுநாதன் தலைவராகவும் தி.க.சி. செயலாளராகவும் இருந்தனர். சீனிவாசன், கணபதியப்பன், ஜெகந்நாதன், பாளை சண்முகம், சிந்துபூந்துறை அண்ணாச்சி ஆகியோர் இதில் பணியாற்றினர்.

தி.க.சி. இறுதி வரை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவாளராகவும், அதன் கலாச்சார அமைப்பான தமிழ்நாடு கலையிலக்கிய பெருமன்றத்தின் வழிகாட்டுநராகவும் செயல்பட்டார்.

Thi.ka.si2.jpg

இதழியல்

சோவியத் செய்தித்துறைப் பணி

டிசம்பர் 14, 1964-ல் தி.க.சி தன் இளம்பருவத்து நண்பரும், பொதுவுடைமைத் தோழருமான ஏ.எஸ்.மூர்த்தியின் பரிந்துரையின் பேரில் சோவியத் செய்தித்துறையில் பணி வாய்ப்பு பெற்றார். கொச்சியில் இருந்த வங்கி வேலையில் இருந்து விலகி இதழியில் வேலையில் சேர்ந்தார். அங்கு தொ.மு.சி.ரகுநாதன், வ.விஜயபாஸ்கரன், மாஜினி, கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.

சோவியத் செய்தித்துறையில் துறையில் வெளியீடுகளைக் கொண்டுவரும் பத்திரிகைப் பிரிவு, சோவியத் செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து பிற பத்திரிக்கைகளுக்கு வழங்கும் செய்திப் பிரிவு என இரு பிரிவுகள் இருந்தன. தி.க.சி. செய்திப்பிரிவில் பணியாற்றினார். அங்கே 20 ஆண்டுகள் பணியாற்றி 1990-ல் ஓய்வு பெற்றார்.

தாமரை இதழ் ஆசிரியர் பொறுப்பு

தி.க.சி சோவியத் செய்தித்துறைப் பொறுப்பை ஏற்று பணியாற்ற சென்னை வந்த போது "தாமரை" இலக்கிய இதழின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். தோழர் ப.ஜீவானந்தத்தால் முற்போக்குக் கலை இலக்கியத் திங்களிதழாகத் தொடங்கப்பட்டது தாமரை இதழ். அதற்கு முன்பாக 1962 முதல் 1964 வரை கொச்சியில் இருந்த காலக்கட்டத்தில் தி.க.சி தாமரை இதழில் எழுதி வந்தார். ஜீவா 1964-ல் மறைந்த காரணத்தினால் தி.க.சி அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 1965 முதல் 1972 வரை சுமார் நூறு இதழ்கள் தி.க.சி. யின் பொறுப்பில் வெளிவந்தன.

எழுத்துப் பணி

Thi.ka.si.vallikannan.jpg
இலக்கிய ஈடுபாடு

1941-ல் வல்லிக்கண்ணன் நெல்லைக்கு இடம் பெயர்ந்தார். அவரும் தி.க.சியின் வீட்டின் அருகே வசித்தார். அப்போது நெல்லை வாலிபர் சங்கம் மூலம் "இளந்தமிழன்" என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகையைத் தி.க.சி.யும் அவரது நண்பர்களும் நடத்தி வந்தனர். வல்லிக்கண்ணனின் இலக்கியப் பற்றை அறிந்த தி.க.சி அவரைச் சென்று சந்தித்தார். அவர்களது சந்திப்பிற்கு பின் வல்லிக்கண்ணனை "இளந்தமிழன்" இதழுக்கு ஆசிரியர் ஆக்கினார். அவ்விதழ் ஓராண்டு காலம் நடைபெற்றது. அப்போது தொடங்கி மறையும் வரை தி.க.சியும் வல்லிக்கண்ணனும் "இரட்டையர்கள்" என்று அறியப்படும் அளவிற்கு தோழமை கொண்டிருந்தனர். தி.க.சி. பல இடங்களில் வல்லிக்கண்ணனை தன் இலக்கிய ஆசான் என்றே குறிப்பிடுகிறார்.

இக்காலக்கட்டத்தில் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்ரை தி.க.சி சந்தித்தார். வல்லிக்கண்ணன், கே. வேலாயுதம், தி.க.சி மூவரும் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி அமைப்பில் பங்கெடுத்து இலக்கிய விவாதங்களை அறிந்தனர்.

படைப்புச் செயல்பாடு

தி.க.சி வல்லிக்கண்ணனின் ஊக்குவிப்பால் படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். தி.க.சியின் முதல் சிறுகதை வண்டிக்காரன் வல்லிக்கண்ணன் முயற்சியால் 1942-ம் ஆண்டு 'பிரசண்ட விகடன்’ இதழில் வெளிவந்தது. பின் கிராம ஊழியனில் தொடர்ந்து கவிதைகள் படைக்கத் தொடங்கினார். கலாமோகினி இதழிலும் எழுதினார்.

தொடக்கத்தில் படைப்பிலக்கியத்தில் செயல்பட்டு வந்த தி.க.சி அதன்பின் தன் எழுத்து பயணத்தை விமர்சனம் நோக்கி திருப்பினார். கிராம ஊழியனில் அவர் எழுதிய திரை விமர்சனங்கள் தி.க.சி.யைப் பரவலாக அறிமுகப்படுத்தின. அதன் பின் நாடகங்களையும் எழுதினார். திரை விமர்சனங்களில் இருந்து தி.க.சி.யை இலக்கியத் திறனாய்வு நோக்கி பேராசிரியர் நா. வானமாமலை திருப்பினார்.

1952-ல் நா. வானமாமலையுடன் இணைந்து சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி "நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்" என்னும் வெளியீட்டகத்தைத் தொடங்கினார். இதற்கு தி.க.சி எல்லா வகையிலும் உதவினார். தமிழ்ப் புத்தகாலயம் திரு. கண. முத்தையாவின் கோரிக்கைப்படி அரசியல், ரஷ்யா, சீன இலக்கிய நூல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்தார். இந்த அனுபவம் பின்னாளில் சோவியத் செய்தித்துறையில் பணியில் சேர அடிப்படையாய் அமைந்தது.

கடித இலக்கியம்

திகசி தமிழில் கடித இலக்கியத்தை வளர்த்தவர்களில் ஒருவராக அடையாளம் காணப்படுகிறார். அஞ்சலட்டைகளில் தொடர்ச்சியாக இளம்படைப்பாளிகளுக்கும் சகபடைப்பாளிகளுக்கும் கடிதங்கள் எழுதிவந்தார். இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய விவாதங்களை அக்கடிதங்கள்

புதுமைப்பித்தன் விவாதம்

திகசி புதுமைப்பித்தன் படைப்புகளை விமர்சனம் செய்து ‘வீரவணக்கம் வேண்டாம்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை தமிழ் இலக்கியச் சூழலில் விவாதத்தை உருவாக்கியது. அதில் புதுமைப்பித்தனை நச்சிலக்கியவாதி என அடையாளப்படுத்தியிருந்தார். ஆனால் பின்னாளில் அக்கருத்துக்களை மாற்றிக்கொண்டார்.

மறைவு

தி.க.சி. கடிதங்கள்.jpg

உடல்நிலை சரியில்லாமல் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.க.சி. மார்ச் 25, 2014 அன்று இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

விருதுகள்

 • லில்லி தெய்வசிகாமணி விருது
 • தமிழ்ச் சான்றோர் பேரவை விருது
 • உலகப் பெருந்தமிழர் விருது
 • ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருது
 • சாகித்திய அகாதெமி விருது (விமர்சனங்கள், பேட்டிகள், மதிப்புரைகள் - 2000)

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள்

நூல்கள்
 • இந்திய இலக்கியச் சிற்பிகள் (தி.க. சிவசங்கரன் - இரா. காமராசு)
 • தி.க.சி. என்னுமொரு திறனாய்வுத் தென்றல் (மு. பரமசிவம், நர்மதா பதிப்பகம், சென்னை, 1999)
 • பேசும் கால்க்காக கடுதாசி: தி.க.சி யின் திறனாய்வுகள் (பா. செயப்பிரகாசம், சென்னை, 2001)
 • தி.க.சி என்ற மனிதன் சில மதிப்பீடுகள் (தொகுத்தவர் அ.நா. பாலகிருஷ்ணன், ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சென்னை, 2004)
 • பிரிய சகோதர (தொகுப்பாசிரியர்கள் சுகதேவ் & சீனி. குலசேகரன், கலைஞர் பதிப்பகம், சென்னை, 2012)
 • தந்தைமை தவழும் வளைவுவீடு (தி. சுபாஷினி, மித்ராஸ், சென்னை, 2012)
 • நிழல் விடுத்து நிஜத்திற்கு (கடிதத் தொகுப்பு, குள்ளிக்காளிபாளையம் கே. பாலசுப்பிரமணியன்ம் ஆவாரம்பூ, நெல்லை, 2013)
 • தி.க.சி. என்றொரு தோழமை (தொகுத்தவர் கழனியூரன், காவ்யா பதிப்பகம், சென்னை, 2014)
 • தி.க.சி. எனும் ஆளுமை (தொகுத்தவர், இரா. மோகன், மு. தருமராஜன், வானதி பதிப்பகம், சென்னை, 2014)
 • தி.க.சி. என்றொரு மானுடன் (செ. திவான், சுஹைனா பதிப்பகம், நெல்லை, 2015)
 • வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் (தொகுத்தவர் கழனியூரன், மேன்மை பதிப்பகம், சென்னை, 2014)
ஆவணப்படம்
 • 21இ, சுடலைமாடன் கோயில் தெரு, திருநெல்வேலி டவுண் (தயாரிப்பு & இயக்குநர்: எஸ். ராஜகுமாரன், திருப்பூர் தமிழ்ச் சங்கம், த.மு.எ.க.ச., தாரகை இலக்கிய விருது பெற்ற ஆவணப்படம்)

இலக்கிய இடம்

தி.க.சி ஒரு மார்க்ஸிய இலக்கிய விமர்சகர். தன்னுடைய பார்வை முற்போக்கு இலக்கியம் எனப்படும் சோஷலிச யதார்த்தவாதம் சார்ந்தது என்று திகசி சொல்லிக்கொண்டாலும் கட்சிச்சார்பு அவருடைய முதன்மை அளவுகோலாக இருந்தது. தமிழகத்தின் இடதுசாரி முகாமைச் சார்ந்த எழுத்தாளர்களை முன்வைப்பதிலும், இலக்கியம் சார்ந்த கட்சிநிலைபாடுகளை வலியுறுத்துவதிலும் முக்கால்நூற்றாண்டுக்காலம் தீவிரமாகவே செயல்பட்டார். ஆனால் எல்லா முகாமைச் சேர்ந்தவர்களுடனும் தனிப்பட்ட நட்புணர்வுடனும் இருந்தார்.

திகசி ஆரம்பகாலத்தில் புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி உள்ளிட்ட நவீனத்துவ எழுத்தாளர்கள் மேல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, இலக்கியத்தின் சமூகவிமர்சனத் தன்மை மற்றும் சமூகப்பொறுப்பை வலியுறுத்தி எழுதினார். பிற்காலத்தில் நவீனத்துவ முன்னோடிகளான எழுத்தாளர்களிடமுள்ள முற்போக்குக் கூறுகளைச் சுட்டிக்காட்டுபவராக ஆனார். திகசியின் அணுகுமுறை மதிப்புரைகள் மற்றும் இலக்கியப்பூசல் தன்மைகொண்ட கட்டுரைகளை எழுதுவது. இலக்கியவிமர்சனத்திற்குரிய விரிவான ஆய்வுக்கட்டுரைகளை அவர் எழுதவில்லை.

திகசியின் முதன்மைச் சாதனை தாமரை இதழ் வழியாக புதிய தலைமுறை எழுத்தாளர்களைக் கண்டடைந்து ஊக்கப்படுத்தியது. அவர்களில் பலர் பின்னாளில் முதன்மையான படைப்பாளிகளாக ஆனார்கள். “தாமரை சி.பி.ஐ.யின் இலக்கியப் பத்திரிகை. அதில் வெளிவரும் சிறுகதை, கவிதைகளில் தி.க.சி. பொறுப்பேற்பதற்கு முன்பு ஒருவிதமான வறட்டுத்தனமும், கட்டுப்பெட்டித்தனமும் இருந்தது. ஆனால் தி.க.சி. பொறுப்பேற்ற பிறகு கலாபூர்வமான படைப்புகள் தாமரையில் இடம்பெறலாயின” என்று வண்ணதாசன் திகசியின் பங்களிப்பை குறிப்பிடுகிறார்.

நூல்கள்

 • தி.க.சி யின் திறனாய்வுகள் (கிறிஸ்துவ இலக்கியச் சங்கம், 1993)
 • விமர்சனத் தமிழ் (அன்னம், சிவகங்கை, 1993)
 • விமர்சனங்கள், பேட்டிகள், மதிப்புரைகள் (விஜயா பதிப்பகம், கோவை, 1994)
 • மனக்குகை ஓவியங்கள் (பூங்கொடி பதிப்பகம், சென்னை, 1999)
 • தமிழில் விமர்சனத்துறை - சில போக்குகள் (2001)
 • கடல்படு மணல் (நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை, 2010)
 • தி.க.சி. யின் நேர்காணல்கள் (தொகுத்தவர் வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, 2011)
 • காலத்தின் குரல் (ஆவாரம்பூ, நெல்லை, 2012)
 • தி.க.சி யின் நாட்குறிப்புகள் (தொகுத்தவர் வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, 2014)
 • தி.க.சி. திறனாய்வுக் களஞ்சியம் (தொகுத்தவர் கழனியூரன், முழுத் திறனாய்வுகள், காவ்யா பதிப்பகம், சென்னை, 2015)
 • தி.க.சி. கவிதைகள், (தொகுத்தவர் வே. முத்துக்குமார், ஆவாரம்பூ, நெல்லை, 2017)
 • தி.க.சி. நாடகங்கள், (தொகுத்தவர் வே. முத்துக்குமார், ஆவாரம்பூ, நெல்லை, 2017)
 • தி.க.சி. திரை விமர்சனங்கள், (தொகுத்தவர் வே. முத்துக்குமார், ஆவாரம்பூ, நெல்லை, 2017)
 • நினைவோடைக் குறிப்புகள், (தொகுத்தவர் வே. முத்துக்குமார், சந்தியா பதிப்பகம், சென்னை, 2018)

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:09 IST