தாமரை (இதழ்)
தாமரை இதழ் (1958) தமிழில் வெளிவரும் மாத இதழ். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வமான கலைஇலக்கிய இதழ் இது. கலையிலக்கியப் பெருமன்றம் என்னும் அமைப்பின் முகப்பு இதழ்.
(பார்க்க தாமரை, இஸ்லாமிய இதழ்)
தோற்றம்,வரலாறு
'தாமரை' இலக்கிய மாத இதழ் ப. ஜீவானந்தத்தை ஆசிரியராகவும் மாஜினியைத் துணை ஆசிரியராகவும் கொண்டு 1958-ல் தொடங்கப்பட்டது. தாமரை இதழின் முதல் ஆசிரியர் ப. ஜீவானந்தம். ஜீவானந்தத்திற்குப் பிறகு மாஜினி பொறுப்பேற்றார். 1960-களில் தி.க.சிவசங்கரன்,ஆ.பழனியப்பன், கே. ராமசாமி ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு தாமரையை நடத்தியது. இவர்களதுபொறுப்பில் தாமரை பத்தாண்டுகள் வெளிவந்தது. 1965 முதல் 1973 வரை 100 இதழ்கள் வரை தி.க.சி. ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கம் இவ்விதழின் தற்போதைய ஆசிரியர் சி.மகேந்திரன். ஆசிரியர் குழு பொன்னீலன், தேவ. பேரின்பன்.
இதழ் நோக்கம்
முற்போக்கு இயக்கங்களின் சார்பில் அரசியல் சார்ந்தும், கலை இலக்கியம் சார்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் இதழ்களில் முக்கியமானது 'தாமரை' இலக்கிய மாத இதழ். நியூசெஞ்சுரி புத்தக நிலையம், கலையிலக்கிய பெருமன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதும் சோவியத் ரஷ்யா உள்ளிட்ட இடதுசாரி நாடுகளின் இலக்கியங்களையும், பிற இந்திய மொழிகளின் முற்ப்போக்கு இலக்கியப்படைப்புகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தல் இதன் நோக்கம்.
படைப்புகள், படைப்பாளிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே) கி.ராஜநாராயணன் முதல் பிரபஞ்சன் வரை இரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கு தாமரை களம் அமைத்துக்கொடுத்தது. அப்போதைய புதிய எழுத்தாளர்கள் பலரை தாமரை ஊக்குவித்து வளர்த்துள்ளது. பின்னாளில் தமிழின் சிறந்த சிறுகதையாளர்களாக அறியப்பட்ட பொன்னீலன், பூமணி, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், கந்தர்வன், ச. தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி போன்ற பலரும் தாமரை இதழில் ஆரம்பகாலங்களில் எழுதியவர்கள். சிற்பி, புவியரசு, இன்குலாப், நா.காமராசன் தமிழ்நாடன், பாலா, மே.து. ராசுகுமார் எனப் பலரும் தாமரையில் எழுதியுள்ளனர். கா.சிவத்தம்பி, ஆர். நல்லகண்ணு, ஆ.சிவசுப்பரமணியன், வல்லிக்கண்ணன் சோலை சுந்தரபெருமாள், செ. கணேசலிங்கன், விழி. பா. இதயவேந்தன், மு. முருகேஷ் , அ. வெண்ணிலா போன்ற அடுத்த தலை முறை எழுத்தாளர்களும் தாமரையில் பங்களிப்பு செய்து வருகின்றனர். ஜீவாவின் பாரதியார் பற்று, பழந்தமிழ் ஈடுபாடு உள்ளிட்ட பல முக்கியமான கட்டுரைகள் தாமரை இதழில் வெளிவந்துள்ளன. முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட கதை, கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம், நேர்காணல் போன்றவை வெளியாகி வருகின்றன.
சிறப்பிதழ்கள்
வியட்நாம் போராட்ட சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், புதுமைப்பித்தன் மலர், கரிசல் இலக்கிய மலர் என பல சிறப்பிதழ்கள் வெளியிட்டு அவற்றில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் தந்தது தாமரை.
விவாதங்கள்
தாமரை நீண்டகாலம் புதுக்கவிதையை ஏற்கவில்லை. புதுக்கவிதை இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. எழுத்து இதழின் வெளியீடாக வந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை முன்வைத்து நா.வானமாமலை,சி.கனகசபாபதி, கே.சி.எஸ்.அருணாச்சலம் ஆகியோர் புதுக்கவிதையை கடுமையாக நிராகரித்து எழுதினர். வானம்பாடி இயக்கத்திற்கு பின்னரே புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டது.
தொடக்க காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களையும் புதுமைப்பித்தன், மௌனி போன்றவர்களையும் தாமரை எதிர்த்து வந்தது. புதுமைப்பித்தன் நச்சிலக்கியவாதி என கூறப்பட்டார். புதுமைப்பித்தன் பற்றி 'புதுமையும் பித்தமும்’ 'வீரவணக்கம் வேண்டாம்’ என்னும் தலைப்புக்களில் தி.க.சிவசங்கரன் எழுதி தாமரை வெளியிட்ட கட்டுரைகள் புகழ்பெற்றவை. பின்னாளில் தாமரை புதுமைப்பித்தனை ஏற்றுக்கொண்டது
1992-ல் சோவியத் ருஷ்யாவின் உடைவை ஒட்டி தொ.மு.சி. ரகுநாதன் சோவியத் ருஷ்யாவில் நடந்த அடக்குமுறைகளை கண்டித்தும், சோஷலிச யதார்த்தவாதம் என்னும் கொள்கையை நிராகரித்து விமர்சன யதார்த்தவாதம் இருந்திருக்கவேண்டும் என்றும் எழுதினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அந்த உட்கட்சி விவாதங்களை நிறுத்திக்கொண்டது
1992-ல் பொன்னீலன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி 1975-ல் இந்திய நெருக்கடிநிலையை ஆதரித்தது பிழை என்று சொல்லி ஒரு விவாதத்தை தொடங்கினார். புதிய தரிசனங்கள் என்னும் நாவலையும் எழுதினார். அவ்விவாதங்களும் நீட்சி பெறவில்லை.
மதிப்பீடு
தி.க.சிவசங்கரன் தாமரை இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த 1965 முதல் 1972 வரையிலான ஏழு ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கியமான காலம். முற்போக்கு இலக்கிய வளர்ச்சியில் தாமரையின் பங்கு முக்கியமானது. சிறுகதைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள், க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை போன்ற ஆய்வாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகள் பற்றிய தொடர் விவாதங்கள் ஆகியவற்றுடன் சிறுகதைப்போட்டிகளையும் தாமரை அவ்வப்போது நடத்தியுள்ளது.
உசாத்துணை
- தமிழில் சிறு பத்திரிகைகள் இணையநூலகம் - வல்லிக்கண்ணன்
- தாமரை இதழ் சிறுகதைகளில் விளிம்புநிலை மக்கள்
- தாமரை இலக்கிய மாத இதழ் இணையப் பக்கம்
- தாமரை - சிற்றிதழ் அறிமுகம் - அந்திமழை மின்இதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:08 IST