under review

இன்குலாப்

From Tamil Wiki

To read the article in English: Inkulab. ‎

இன்குலாப்

இன்குலாப் (1944 - டிசம்பர் 1, 2016) தமிழ் புதுக்கவிஞர். கல்வியாளர். வானம்பாடி இதழுடன் தொடர்பு கொண்டவர். வானம்பாடி கவிதை இயக்கம் உருவாக்கிய கவிஞர்களில் ஒருவர். பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர். இன்குலாப் பொதுவுடைமைச் சிந்தனை கொண்டவர்

பிறப்பு, கல்வி

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. ஷாகுல் ஹமீது. கீழக்கரையில் சீனி முகமது - ஆயிஷா உம்மா இணையருக்கு பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.

இன்குலாப் வரலாறு

தனிவாழ்க்கை

இன்குலாப் சென்னை புதுக் கல்லூரியில் 1966-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்ர். ஈரோடு தமிழன்பன், நா. பாண்டுரங்கன் போன்றோர் இவருடன் பணிபுரிந்தனர். இன்குலாபின் மனைவி பெயர் கமருன்னிஸா. அவருக்கு செல்வம், இன்குலாம் என்னும் இரு மகன்களும் ஆமினா பர்வீன் என்னும் மகளும் உள்ளனர். ஆமினா மருத்துவராகப் பணிபுரிகிறார்.

அரசியல்

இன்குலாப் 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் வழியாக அரசியல் ஈடுபாடு கொண்டார். மதுரை தியாகராசர் கல்லூரியில் மாணவனாக இருந்த இன்குலாப் இப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் தடியடிபட்டு சிறையும் சென்றுள்ளார். உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா.காமராசன், கா. காளிமுத்து, பா. செயப்பிரகாசம், ஆகியோருடன் இணைந்து போராடினார்.

தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்த இன்குலாபின் பார்வையை மாற்றியது 1968-ல் கீழ்வெண்மணியில் 43 தலித் மக்கள் எரிக்கப்பட்ட நிகழ்வு. இன்குலாப் இடதுசாரி ஈடுபாடு கொண்டார். முதலில் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கங்களிலும் இணைந்து செயல்பட்டார். மார்க்ஸிய-லெனினிய இயக்கங்களில் தமிழ்த்தேசியப்பார்வை உருவானபோது தமிழ்த்தேசிய விடுதலை நோக்கும் அதன்வழியாக மீண்டும் பெரியாரிய - திராவிட இயக்க ஆதரவு பார்வையும் கொண்டவரானார். 1983 முதல் இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நிகழ்ந்தபோது அவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார். தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் அரசியல் கட்டுரைகளை எழுதினார்.

இலக்கியவாழ்க்கை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த இளவேனில் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. பின்னர் வானம்பாடி கவிதை இயக்கம் சார்ந்து செயல்பட்டார். வானம்பாடி இதழில் எழுதினார்.

இன்குலாப் ஓவியம்
இசைப்பாடல்கள்

இன்குலாப் கவிதைகள் இசையுடன் அமைகையில் விசை கொள்பவை. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குளம்பாடி கிராமத்துக் கிணற்றில் தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் குளித்தபோது, கிணறு தீட்டுப்பட்டது என ஆதிக்கச் சாதியினர் கிணற்றில் மின்சாரம் பாய்ச்சியபோது நான்கு சிறுவர்கள் இறந்த நிகழ்வை ஒட்டி அவர் எழுதிய "மனுசங்கடா நாங்க மனுசங்கடா" என்னும் இசைப்பாடல் அவருடைய முதன்மையான படைப்பாக அறியப்படுகிறது

நாடகங்கள்
இன்குலாப் மேடையில்

இன்குலாப் கவிதைக்கு சமானமாகவே நாடகத்தையும் கையாண்டார். குறிஞ்சிப்பாட்டு நாடகத்தில் ஈழப்போரில் மக்கள் புலம்பெயர்வதை நினைவூட்டும்படி பாரியின் பறம்பு மலையை மூவேந்தர் வென்றபோது அவர்கள் அதை விட்டுச் செல்வதை அமைத்தார். ஒளவை நாடகத்தில் ஒளவையை தீவிரமான இளம் பெண்ணாகவும் அதியமானின் காதலியாகவும் காட்டினார். மணிமேகலை நாடகத்தில் மணிமேகலையை அறச்செல்வியாகக் காட்டினார். .

வாழ்க்கைத்தடம் தொடர் கட்டுரைகள்-காக்கைச் சிறகினிலே இதழ்கள்

விருதுகள்

 • "காந்தள் நாட்கள்" என்னும் கவிதைத்தொகுதிக்காக 2017-ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்ய அகாதெமி விருது மரணத்திற்குப் பின்னர் வழங்கப்பட்டது. அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
 • சிற்பி இலக்கிய விருது
 • கவிஞர் வைரமுத்து விருது
 • 2006-ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.

மறைவு

டிசம்பர் 1, 2016 அன்று உயிரிழந்தார். அவரது உடல் செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.

நினைவுநூல்கள்

பா.செயப்பிரகாசம் இன்குலாப் நினைவுகளை 'இன்குலாப் சாகாத வானம்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார்

இலக்கிய இடம்

தமிழ்ச்சூழலில் அறுபதுகளின் இறுதிமுதல் நிகழ்ந்த இடதுசாரி அரசியல் கொந்தளிப்புகளின் பதிவுகளாக இன்குலாப் கவிதைகள் உள்ளன. தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டமைக்கும், அனைத்து திட்டங்களிலும் ஏழை மக்கள் கைவிடப்படுவதற்கும் எதிரான சீற்றக்குரல்களாக அவை ஒலிக்கின்றன. அவை நேரடியான அறைகூவல்களும் முழக்கங்களுமாக அமைந்தவை. இசையுடன் இணையும்போது உணர்ச்சிகரம் கொள்பவை. அவருடைய நாடகங்கள் ஆசிரியரின் அரசியல்தரப்பை கதைமாந்தரின் உரையாடல்கள் வழியாக முன்வைக்கும் தன்மை கொண்டவை. இன்குலாப் தமிழக இடதுசாரி அரசியல்களத்தில் வெளிப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பாளி.

நூல்கள்

கவிதை
 1. இன்குலாப் கவிதைகள் (1972)
 2. வெள்ளை இருட்டு (1977)
 3. சூரியனைச் சுமப்பவர்கள் (1981 டிசம்பர்)
 4. கிழக்கும் பின்தொடரும் (1985 பிப்ரவரி)
 5. கூக்குரல்
 6. இன்குலாப் கவிதைகள் - தொகுதி இரண்டு
 7. ஒவ்வொரு புல்லையும் (மேற்குறிப்பிட்ட தொகுப்புகளும் புதிய கவிதைகளும் அடங்கியது 1999)
 8. ஒவ்வொரு புல்லையும் - இரண்டாம் பதிப்பு (1972 முதல் 2004 வரை எழுதிய கவிதைகளின் தொகுதி - 2004)
 9. பொன்னிக்குருவி (2007 நவம்பர்)
 10. புலிநகச்சுவடுகள்
 11. காந்தள் நாட்கள் (2016) - 2017-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்
 12. ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (டிசம்பர் 1, 2017 - அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)
சிறுகதை
 1. பாலையில் ஒரு சுனை
கட்டுரை
 1. யுகாக்கினி
 2. ஆனால்
நாடகங்கள்
 1. ஒளவை
 2. மணிமேகலை
 3. குரல்கள்
 4. துடி
 5. மீட்சி
 6. இன்குலாப் நாடகங்கள் (அனைத்து நாடகங்களும் அடங்கியது)
நேர்காணல்கள்
 1. அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை
 2. மானுடக்குரல்: இன்குலாப் நேர்காணல்கள் (அனைத்து நேர்காணல்களும் அடங்கியது)
மொழிபெயர்ப்புகள்
 1. 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' - எஸ் .வி. ராஜதுரையுடன் இணைந்து

உசாத்துணை

[[]] ‎


✅Finalised Page