under review

ச.தமிழ்ச்செல்வன்

From Tamil Wiki
hindutamil.com

ச.தமிழ்ச்செல்வன் (பிறப்பு:மே,27,1954) சிறுகதை எழுத்தாளர், களப் பணியாளர், மாற்றுக் கல்வியாளர்,அறிவொளித் திட்ட ஒருங்கிணைப்பாளர், அறிவொளி புத்தகங்களின் ஆசிரியர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மதிப்புறு தலைவர். பூ திரைப்படத்தின் திரைக்கதைக்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார்.

பிறப்பு,கல்வி

ச.தமிழ்ச்செல்வன் மே 27, 1954-ல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம்-சரஸ்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்தார். தாய்வழித் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் புகழ்பெற்ற நாடகவியலாளர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோருக்கு இசை கற்பித்தவர், பாடலாசிரியர். தந்தை எம்.எஸ்.சண்முகம் திராவிட இதழ்களில் எழுதிய எழுத்தாளர். சகோதரர்கள் எழுத்தாளர் கோணங்கி , நாடகவியலாளர் ச. முருகபூபதி. தமிழ்ச்செல்வன் மேட்டுப்பட்டியில் பள்ளிப்படிப்பையும், கோவில்பட்டியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.

கல்லூரி காலங்களில் நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என விரிவடைந்த வாசிப்புத் தளம் அவரை எழுத்தாளராக வளர்த்தெடுத்தது. அவரது முதல் கவிதை "ஒருநாள் டைரி" கோவில்பட்டியிலிருந்து வெளியான "நீலக்குயில்"என்ற சிறுபத்திரிக்கையில் 1972-ல் வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவரின் கவனம் பின்னர் சிறுகதை பக்கம் திரும்பியது.

தனி வாழ்க்கை

அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் பணியாற்றினார். மனைவி இரா.வெள்ளதாய். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகன் சித்தார்த் சென்னையில் வசிக்கிறார்.

இந்தியாவை முழுதாகச் சிந்தித்து மீள ஓர் அரிய வாய்ப்பாக இராணுவ வாழ்வு அமைந்தது 20-25 வயதில் நத்துல்லா செக்டார் எனப்படும் இந்திய-சீன எல்லைப் பிராந்தியத்திலும், காங்டோக் (சிக்கிம்) ராணுவ முகாமிலும் பணியாற்றினார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அஞ்சல் துறையில் மீண்டும் பணியாற்றினார். அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் கிராமங்களில் பணியாற்றினார். களப் பணிகளுக்காகவும், த.மு.எ.க.சங்க அமைப்பு பொறுப்புகளிலும் இயங்குவதற்காக அஞ்சலகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

இலக்கியப் பணி

commonfolks.in

சு.தமிழ்ச்செல்வனின் முதல் கவிதை ஒருநாள் டைரி கோவில்பட்டியிலிருந்து வெளியான "நீலக்குயில்"என்ற சிறுபத்திரிகையில் 1972-ல் வெளியானது. முதல் சிறுகதை "திரைச்சுவர்கள்" 1978ல் தோழர் ஜீவானந்தம் ஆசிரியராக இருந்த தாமரை இதழில் வெளிவந்தது. தொடர்ந்து கதைகள் எழுதினார். முதல் கதைத் தொகுப்பு வெயிலோடு போய் 1984-ல் வெளிவந்தது. அசோகவனம்,வெயிலோடு போய். சிறுகதைகள், பூ என்ற திரைப்படத்தின் மூலக்கருவாகின.இத்திரைப்படத்திற்காக தமிழக அரசின் 2008-ஆம் வருடத்தின் சிறந்த கதாசிரியர் விருதினைப் பெற்றார். ஆனந்த விகடனின் சினிமா விருதும், மக்கள் தொலைக்காட்சி விருதும் , ஜெயகாந்தன் விருதும் கிடைத்தன.

commonfolks.in

எழுத்தாளர் சுதிர் கக்கர் தொகுத்த Indian Love Stories சிறுகதைத் தொகுப்பில் வெயிலோடு போய் சிறுகதையின் ஆங்கிலவடிவம் இடம் பெற்றுள்ளது. 13 தமிழ்க்கதைகள் என்ற மலையாள நூலிலும் இடம்பிடித்தது. தின்டே துஸாட் தொகுத்த " L'arbre Nagalinga " பிரெஞ்சு சிறுகதை தொகுப்பில் "குரல்கள்" என்ற சிறுகதையின் பிரெஞ்சு மொழியாக்கம் இடம் பெற்றுள்ளது.வாளின் தனிமை என்ற சிறுகதைத் தொகுப்பு 1992-ல் வெளிவந்தது. அதில் பல சிறுகதைகள் தீப்பெட்டித் தொழிலாளிகளின் வாழ்வையே களமாகக் கொண்டுள்ளன. 1992-க்குப் பின் தமிழ்ச்செல்வன் புனைவுகள் எழுதவில்லை. "என் முதல் தொகுப்பை வாசித்து விட்டு சில நண்பர்கள் எழுத்து என்பது வாழ்க்கைக்கு இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமா என்று பாராட்டினார்கள். அப்போது அதுபோதை தந்தது. 27 வருடங்களுக்குப் பிறகு அதே கதைகளை இப்போது நான் வாசிக்கும்போது என் கிராமத்தின் ஆன்மா என் கதைகளில் இல்லாததை உணர்கிறேன். அழுத்தம் பெறாத கதைகளாக சின்னவயதில் எழுத்தாளனாகிற ஆசையில் வேகவேகமாக எழுதிப் பார்த்த கதைகளாகவே இவை என் முன்னால் விரிந்து கிடக்கின்றன". என்று தன்னை சுயவிமரிசனம் செய்துகொண்டார்.

களச் செயல்பாட்டாளராக தன் அனுபவங்களையே கட்டுரைகளாக, நூல்களாக எழுதினார்.ஞாநி யின் தூண்டுதலால் தீம்தரிகிட இதழில் ஜிந்தாபாத் ஜிந்தாபாத் என்ற பெயரில் தன் தொழிற்சங்க அனுபவங்களை எழுதினார்.Paulo Freire[1] என்ற கல்வியாளரால் ஈர்க்கப்பட்டு, மாற்றுக்கல்வியில் ஈடுபாடு கொண்டார். இருளும் ஒளியும் என்றஅவரது அறிவொளி இயக்க அனுபவங்களின் தொகுப்பில் வயது வந்தவர்களுக்கு கல்வி கற்பித்த அனுபவங்கள் சொல்லப்பட்டுள்ளன.அறிவொளி இயக்கத்திற்குப் படிக்க வந்ததால் அடி வாங்கிய, பைத்தியம் என்று ஏசப்பட்ட, தன் முதல் மகப்பேற்றில் உயிர் துறந்த வளர்மதி என்ற பெண்ணுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[2]

சமுதாயப் பணி

அறிவொளி இயக்கப் பணிகளுக்காக புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக 30-க்கு மேற்பட்ட சிறு நூல்களை எழுதியுள்ளார். ஆண்-பெண் சமத்துவக் கருத்துக்களைப் பரவலாக்கவும், சமத்துவ உணர்வூட்டவும், பல நூல்களை எழுதியும், பல பயிலரங்குகளை நடத்தியும் வருகிறார்.

1978- ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து மாநில செயலாளராக, தலைவராக பணியாற்றி தற்போது மதிப்புறு தலைவராகத் தொடர்கிறார். பள்ளிக்கல்வியில் மாற்றங்களுக்கான தேவையை உணர்ந்து, பள்ளிகளில் மாணவ மாணவிகளோடு, சில சோதனை முயற்சிகளைச் செய்தார். தமிழ்நாடு அரசு பாடநூல் தயாரிக்கும் குழுவில், மேலாய்வாளராகப் பங்காற்றினார்.

த.ம.மு.க வின் மூலமாக நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளைத் தொகுத்து வளர்த்தெடுக்கும் பணிகளை முன்னெடுத்தார். தேர்ந்தெடுத்த, ஆர்வமுள்ள உறுப்பினர்களுக்கு விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு போன்றவற்றில் ஆய்வு செய்வது, தொகுப்பது பற்றிய பயிற்சியும் ,உள்ளூர் வரலாறு எழுதுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கழகம் அவர் தலைமையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தது.

இலக்கிய இடம்

தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் எளிய பேச்சு நடையில் கரிசல் மண்ணின் வாழ்வைச் சொல்பவை. வலிகளோடும், மெல்லிய நம்பிக்கையோடும் வாழும் எளிய மக்களின் அன்றாட வாழ்வைச் சொல்பவை.துயரத்தின் சாயலே அதிகம் தென்பட்டாலும் அவற்றில் அன்பும் நேசமும் பொதிந்துள்ளது. குழந்தைகளின் உலகம் உளவியல் நுணுக்கத்துடன் அணுகப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தின் துயரங்களை பகடி வடிவில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.ஜெயமோகனின் தமிழ் சிறுகதைகள்-திறனாய்வாளன் பட்டியலில் 'வாளின் தனிமை' மற்றும் 'வெயிலோடு போய்' இரு கதைகளும் இடம்பெறுகின்றன.[3] வாளின் தனிமை சிறுகதையில் மாய யதார்த்தக் கூறுகள் தென்படுகின்றன.

தீப்பெட்டித் தொழிலைக் களமாகக் கொண்டு நிகழும் பல கதைகள் தனியார் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலும் பெண் தொழிலாளர்கள் மீதான வன்முறையும் வசைகளும், வறுமையும்,பசியும் சொல்லப்பட்டுள்ளன.

கலை,இலக்கியம் சார்ந்த தளங்களில் இயங்கினாலும், பண்பாட்டியல், அரசியல் சார்ந்த களங்களில் அவரது பிற்காலச் செயல்பாடுகள் அமைந்தன. அபுனைவுகளில் அவரது களப்பணிகளும், சமுதாய நோக்கும் பதிவாகியுள்ளன.

"கதைகள் எழுதாமல் கழித்த கால் நூற்றாண்டில் தமிழ்ச்செல்வன் ஒரு பண்பாட்டுப் போராளியாக, தலைமைப் பண்பில் மிளிர்ந்தவராக அறிவொளி இயக்கச் செயல்வீரராக மறுஅவதாரம் எடுக்க முடிந்திருப்பது பலம். இந்த இடைவெளியில் கிடைத்த அனுபவங்களை அவர் படைப்பிலக்கியமாக எழுதிப் பார்க்கவேண்டும். எல்லாத் தோழர்களும் ஒருங்கிணைந்து செய்யவேண்டிய தலையாய பணி அவரை மீண்டும் கதைகள் எழுத வைப்பதுதான். ஆம் அந்தப் பேனாவின் தனிமையைப் போக்கவேண்டும்" என்று கீரனூர் ஜாகிர்ராஜா குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

சிறுகதைகள்
 • வெயிலோடு போய் (1984)
 • வாளின் தனிமை(1992)
 • மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-(2006)
அனுபவங்கள்
 • இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள்
 • ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள்
 • ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
 • இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள்
 • அரசியல் எனக்குப் பிடிக்கும்- 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை
 • நான் பேச விரும்புகிறேன் -சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள்
 • வீரசுதந்திரம் வேண்டி - (ஜா.மாதவராஜுடன் இணைந்து)
 • பெண்மை என்றொரு கற்பிதம்
 • பேசாத பேச்செல்லாம்
 • இருவர் கண்ட ஒரே கனவு
 • சந்தித்தேன்
 • வலையில் விழுந்த வார்த்தைகள்
 • அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்
 • ஒரு சாப்பாட்டுராமனின் நினைவலைகள்
 • எசப்பாட்டு-ஆண்களோடு பேசுவோம்

சிறு நூல்கள்

 • 1947
 • 1806 (1806 வேலூர் புரட்சியைப் பற்றி)
 • நமக்கான குடும்பம்
 • வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்
 • அலைகொண்ட போது.. -சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம்
 • தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்
 • பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை
 • எது கலாச்சாரம்?
 • அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல்.

விருதுகள்

 • தமிழக அரசின் சிறந்த திரைக்கதையாளர் விருது(பூ-2008)
 • ஆனந்த விகடன் சினிமா விருது
 • ஜெயகாந்தன் விருது
 • மக்கள் தொலைக்காட்சி விருது

உசாத்துணை

சாபக்காடு-ச.தமிழ்ச்செல்வன்

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் – வகைமையியல் பார்வை

மிதமான காற்று, இசைவான கடலலையும் -மதிப்புரை

ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல்

மாற்றுவெளி-கீரனூர் ஜாகீர் ராஜா தமிழ்ச்செல்வன் கதைகளை முன்வைத்து -கீற்று இதழ்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page