கீரனூர் ஜாகிர்ராஜா
- கீரனூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கீரனூர் (பெயர் பட்டியல்)
To read the article in English: Keeranur Zakir Raja.
கீரனூர் ஜாகிர்ராஜா (பிறப்பு:அக்டோபர் 8 1962) தமிழில் இஸ்லாமிய அடித்தள வாழ்க்கையை களமாகக் கொண்டு கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறார்.
பிறப்பு, கல்வி
பழனி அருகே கீரனூரில் அக்டோபர் 8, 1962 அன்று சதக்கத்துல்லா - மெஹருன்னிஸா பீவி இணையருக்கு பிறந்தார். பழனி, கீரனூர், திருப்பூர் என வெவ்வேறு ஊர்களிலாக இளமை கழிந்தது. நகராட்சி துவக்கப்பள்ளி, பழனி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் ஆண்கள்துவக்கப்பள்ளி, கீரனூர், நகராட்சி துவக்கப்பள்ளி, ராயபுரம், திருப்பூர் ஆகிய ஊர்களில் ஆரம்பக்கல்வி பயிறார். கீரனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்றார்.
தனிவாழ்க்கை
கீரனூர் ஜாகிர்ராஜா ராஜி (எ) சல்மா பானுவை ஏப்ரல் 10, 1996 அன்று மணந்தார். குழந்தைகள்: ஆயிஷா முத்தமிழ், முகமது பாரதி. முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்த ஜாகிர்ராஜா பாரதி புத்தகநிலையம் போன்ற பதிப்பகங்களில் அவ்வப்போது வேலைபார்த்துள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
கீரனூர் ஜாகிர்ராஜாவின் முதல் படைப்பு 'பாரம்’ என்னும் சிறுகதை 1995-ல் தஞ்சையில் இருந்து வெளியான சுந்தரசுகன் இதழில் பிரசுரமாகியது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'செம்பருத்தி பூத்த வீடு’ 2004-ல் அனன்யா பதிப்பக வெளியீடாக வந்தது. முதல்நாவல் 'மீன்காரத் தெரு' 2006-ல் மருதா பதிப்பக வெளியீடாக வந்தது. தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என வைக்கம் முகமது பஷீர், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். தஞ்சையில் வாழ்ந்த தஞ்சை பிரகாஷ் நேரடியான தூண்டுதலாக அமைந்தார்.
அரசியல் செயல்பாடுகள்
- 1983-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கோவை தபால் தந்தி அலுவலர் குடியிருப்பு இளைஞர் மன்றத்தின் சார்பில் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
- 1986-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சேலத்தில் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். (சேலம் மத்திய சிறை)
- 1987-ம் ஆண்டு கீரனூர்(பழனி) நண்பர்கள் மன்றத்தின் சார்பில் ஜாகீர்ராஜா எழுதிய 'ஈழம் மலரும்’ என்கிற கவிதைத் தொகுப்பு கையெழுத்துப் பிரதியை வெளியிட்டார்.
- 2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பல அறவழிப்போராட்டங்களில் கலந்து கொண்டார்.
- 2007-ம் ஆண்டு முதல் அடிப்படை வாதத்திற்கு எதிரான கருத்துப்போரில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து மத அடிப்படை வாதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
விருதுகள்
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் புனைவு விருது.
- தி இந்து குழுமத்தின் லிட் ஃபார் லைஃப் (lit for life) விருது
- சேலம் தமிழ்ச் சங்கம் விருது.
- விகடன் விருது (இரண்டு முறை 2010 & 2020)
- உயிர்மை-சுஜாதா அறக்கட்டளை விருது
- கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது.
- களரி அறக்கட்டளை வழங்கிய கு. அழகிரிசாமி நினைவு விருது.
- தமிழ் முஸ்லிம் திண்ணை வழங்கிய தோப்பில் முகமது மீரான் நினைவு விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில விருது (இரண்டு முறை)
- டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கிய பிரபஞ்சன் நினைவு விருது
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில விருது
- திருமதி. செளந்தரா கைலாசம் அறக்கட்டளை விருது
- ஏலாதி இலக்கிய விருது
- ரோட்டரி கிங்க்ஸ் ஆப் தஞ்சாவூர் சாதனை இளைஞர் விருது
- தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய அமைப்பின் விருது
- திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
- திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி வழங்கிய தமிழ் விருது
- சென்னை இலக்கிய வீதி வழங்கிய அன்னம் விருது
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமையாக ஓராண்டு பணி (2020-2021)
இலக்கிய இடம்
கீரனூர் ஜாகிர்ராஜா தமிழிலக்கியத்தில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுப் பதிவுகளை எழுதும் படைப்பாளி. வழக்கமாக தமிழ் இஸ்லாமியர்களில் உயர்குடியினரின் வாழ்க்கையே பதிவு செய்யப்படும் சூழலில் அடித்தள வாழ்க்கையை எழுதியவர். சமூக விமர்சனமும் மத ஆதிக்கம் மீதான விமர்சனமும் எள்ளலுடன் வெளிப்படும் படைப்புகள் அவை.
நூல்கள்
நாவல்
- மீன்காரத் தெரு
- கருத்த லெப்பை
- துருக்கித் தொப்பி
- வடக்கேமுறி அலிமா
- மீன்குகை வாசிகள்
- ஜின்னாவின் டைரி
- குட்டிச்சுவர் கலைஞன்
- சாமானியரைப் பற்றிய குறிப்புகள்
- ஞாயிறு கடை உண்டு
- இத்தா
சிறுகதை நூல்கள்
- செம்பருத்தி பூத்த வீடு
- பெருநகரக் குறிப்புகள்
- தேய்பிறை இரவுகளின் கதைகள்
- கொமறு காரியம்
- பஷீரிஸ்ட்
- ஹலால்
கட்டுரை நூல்கள்
- குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை
- சுயவிமர்சனம்
- கதாரசனை
- காலத்தை விஞ்சி நிற்கும் கலை
தொகை நூல்கள்
- காஃபிர்களின் கதைகள்
- 21-ம் நூற்றாண்டுச் சிறுகதைகள்
- அழியாத கோலங்கள்
- பால்ய காலம்
- சிறுபான்மை சமூகக் கதைகள் (இஸ்லாம்)
- தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம்
- குமாரபுரம் ரயில்வே ஸ்டேசனில் ஒரு இரவு (உதயசங்கரின் தேர்ந்தெடுத்த கதைகள்)
நேர்காணல் நூல்
- பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன் (எழுத்தாளர் கோணங்கியுடனான நேர்காணல்) (பாரதி புத்தகாலயம் வெளியீடு)
குழந்தை இலக்கியம் (தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில்)
- சேவலும் காகமும்
- நித்யாவும் ஜிம்மியும்
உசாத்துணை
- கீரனூர் ஜாகிர்ராஜா வலைத்தளம்
- துருக்கி தொப்பி விமர்சனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
- Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
- கீரனூர் ஜாகிர்ராஜா நாவலுக்கு பரிசு தினமணி
- குட்டிச்சுவர் கலைஞன் எனும் சைத்தானின் தோழர் சுனீல்கிருஷ்ணன்
- கீரனூர்க்காரர் சுரேஷ்பிரதீப்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:18 IST