under review

கோணங்கி

From Tamil Wiki
கோணங்கி
கோணங்கி
கோணங்கி

கோணங்கி ( நவம்பர் 1, 1958) எஸ்.இளங்கோ.நவீன தமிழ் இலக்கியத்தின் மாய யதார்த்தவாதக் கதை சொல்லியாக அறியப்படுபவர். கல்குதிரை என்னும் இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர். கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

பிறப்பு கல்வி

கோணங்கி நவம்பர் 1, 1958-ல் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள நென்மேனி மேட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரரும் நாடக ஆசிரியருமான மதுரகவி பாஸ்கரதாஸ் கோணங்கியின் தாய்வழி தாத்தா. பர்மாவில் தினகரன் நாளிதழைத் தொடங்கியவரான தினகரன் கோணங்கியின் இன்னொரு தாத்தா. கோணங்கியின் பெற்றோர் சு.சண்முகம் - சரஸ்வதி.

கோணங்கியின் தந்தை சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி ச. முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோணங்கியின் தம்பியர் இருவர் தமிழ்நாடு ஜனநாயக வாலிபர் சங்கம் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் இளைஞர் அமைப்பு) நிர்வாகப்பொறுப்பில் இருந்தனர். கோணங்கி கோவில்பட்டி அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வரை படித்தவர்.

தனிவாழ்க்கை

கோணங்கி கோயில்பட்டி கூட்டுறவு சங்கத்தில் பில்கலெக்டர் பணியை சிறிதுகாலம் செய்தார். ஓர் ஏழை விவசாயியின் மாடுகளை கடன் பாக்கிக்காக ஜப்தி செய்ததை கண்டு ஏற்பட்ட உளநெருக்கடியால் வேலையை விட்டதாகவும், அந்நிகழ்வையே கோயில்பட்டியில் ஒரு நாடகமாக அரங்கேற்றியதாகவும் அவருடைய கோவில்பட்டி நண்பர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். அதன்பின் தொடர் பயணியாகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். கோணங்கி திருமணம் செய்துகொள்ளவில்லை.

இலக்கிய வாழ்க்கை

கோணங்கி சுப்ரமணிய பாரதியின் 'புதிய கோடங்கி' என்னும் தலைப்பில் இருந்து தன் பெயரை உருவாக்கிக் கொண்டார். தன் அப்பாவை சந்திக்க வரும் எழுத்தாளர்கள் மற்றும் பொதுவுடமை இயக்கத்தினர்கள் தொடர்பால் பொதுவுடமை இயக்கத்தின் சித்தாந்தங்கள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இளமையில் கோணங்கியின் இலக்கிய ஆர்வத்திற்கு வழிகாட்டியாக அமைந்தவர்கள் கோவில்பட்டியில் இலக்கிய ஆளுமையாக அறியப்பட்டிருந்த ஜோதிவினாயகம் மற்றும் கவிஞர் தேவதச்சன். பின்னர் கி. ராஜநாராயணன், கவிஞர் சமயவேல் போன்றவர்களுக்கு நெருக்கமானவராக ஆனார். எஸ். ராமகிருஷ்ணன் கோணங்கியின் நெருங்கியநண்பர்.

சிறுகதைகள்

கோணங்கியின் முதல் படைப்பு சிகரம் இதழில் அக்டோபர், 1980-ல் வெளிவந்த 'இருட்டு’ என்னும் சிறுகதை. தேடல் சிற்றிதழில் அக்டோபர் 1981-ல் கருப்புரயில் என்னும் கதை வெளிவந்தது. மீட்சி இதழில் 1982-ல் வெளிவந்த மதினிமார்கள் கதை கோணங்கியின் கதைகளில் புகழ்பெற்றது. கோவை ஞானி 'புதிய கதைசொல்லியின் வருகை’ என்னும் தலைப்பில் அக்கதை பற்றி ஒரு குறிப்பை எழுதியிருந்தார்.1986-ல் மதினிமார்கள் கதை என்னும் தலைப்பில் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. தொடர்ந்து அன்னம் வெளியீடாக கோணங்கியின் கொல்லனின் ஆறு பெண்மக்கள். பொம்மைகள் உடைபடும் நகரம்,பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற கதைத்தொகுதிகள் வெளிவந்தன.

நாவல்கள்

கோணங்கியின் முதல் நாவல் பாழி 2000-த்தில் வெளிவந்தது. பிதிரா, த, நீர்வளரி போன்ற நாவல்கள் வெளிவந்துள்ளன.

கட்டுரைகள்

காவேரியின் பூர்வ காதை’ எனும் நூலில் தலை முதல் கடைவரை காவிரியின் பயணம், பதிவு என நம் தொன்மங்கள் கூறுவது என்ன, நமது கலை இலக்கியங்களில் காவிரி எவ்வாறு பதிவாகியுள்ளது, புராணங்கள் காட்டிய காவிரியின் ஆழ அகலங்கள் என்ன என எழுதியிருக்கிறார்.

கோணங்கியின் புதினங்களில் உள்ள ஏறு தழுவுதலின் படிமங்களை வைத்து ’என் பெயர் காஞ்சர மரம்’ என்கிற நவீன நாடகம் சென்னையில் 2017-ல் நடைபெற்றது

நடை, கதை கூறுமுறை

கோணங்கி கதைகளை வாய்மொழி மரபுக்கு அணுக்கமானதாக அமைத்துக்கொண்டவர். சித்தரிப்புத்தன்மை அற்ற கதைசொல்லும் தன்மை கொண்டவை அவருடைய கதைகள்.தொடக்ககாலக் கதைகள் நாட்டுப்புறக் கதைசொல்லிகளின் சொல்லாட்சிகளின் சாயல் கொண்டவை. கோவில்பட்டி வட்டாரத்து வறண்ட கரிசல் மண்ணில் வாழும் மக்களின் கிராமிய வாழ்க்கையின் சித்திரங்களும், குழந்தைகளின் அகவுலகும் தன்னியல்பாக இணைந்து ஒரு படிமவுலகை உருவாக்கின. அக்கதைகளில் இருந்த கள்ளமின்மையும் கவித்துவமும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

பிற்காலக் கதைகளில் கோணங்கி வாசிப்பு, பயணம் வழியாக சேர்த்துக்கொண்ட செய்திகளையும் மனநிலைகளையும் கதைகளுக்குள் கொண்டுவரத் தொடங்கினார். நடையை பிரக்ஞை சார்ந்த ஒரு மொழி விளையாட்டாக ஆக்கிக் கொண்டார். தமிழில் எண்பது தொண்ணூறுகளில் மீட்சி முதலிய இதழ்களில் வெளிவந்த பின்நவீனத்துவ காலத்தைச் சேர்ந்த நேர்கோடற்ற கதைகளின் மொழிபெயர்ப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டார். குறிப்பாக பிரம்மராஜன் மொழியாக்கம் செய்த போர்ஹெஸ் கதைகள் கோணங்கியில் தீவிரச் செல்வாக்கைச் செலுத்தியவை. படிப்படியாக கோணங்கி ஓர் அந்தரங்கமான தனிநடையை உருவாக்கிக் கொண்டார். உள்ளத்தில் ஓடும் கட்டற்றமொழி போன்ற சிக்கலான சொற்றொடர்களில் பலவற்றை தொட்டுத்தொட்டுச் செல்லும் நடை அது. படிமங்களையும் செய்திகளையும் தொடர்ச்சியின்றி இணைத்துச்செல்லும் அந்த நடையை தானியங்கி நடை என அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். கோணங்கியின் பிற்காலக் கதைகள், நாவல்களில் மட்டுமல்ல கட்டுரைகள் பேட்டிகளில் கூட அந்த நடையே உள்ளது.

இந்த நடையின் தொடக்கத்தை கோணங்கி கணையாழியில் 1987-ல் எழுதிய ’அப்பாவின் குகையில் இருக்கிறேன்’ என்னும் குறுநாவலில் தொடக்கநிலையில் காணமுடியும். மீண்டும் ஆண்டாளின் தெருக்களில், பொம்மைகள் உடைபடும் நகரம் போன்ற கதைகள் வழியாக அந்த நடையை உறுதிப்படுத்திக்கொண்டார். கோணங்கியின் கதைகளின் தனித்தன்மையும் எல்லையுமாக அந்த நடை அமைந்துள்ளது. கோணங்கியின் கதைகளும் நாவல்களும் வடிவமற்று ஒழுகும் மொழிப்பதிவுகளாகவே உள்ளன. 'எனது கதைகளின் ஊமையான கும்காரத்தில் மொழிக்கதையும் தொடர்ந்து இருப்பதாக ஊர்க்கோடாங்கி சொன்னான். கிரேக்கக் காலத்திலிருந்து தமிழில் இருந்துவரும் ராசிவட்டம் நம் ரத்த நாளங்களில் உடுகணங்களும் சுற்றிக் கொண்டிருப்பதை, நாழிகை வட்டிலுடன் காலத்தைப் பற்றிய நாலாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கணக்குழுக்களோடு ஓயாத சர்ச்சையில் 'அறிவன் தேயத்தார் இருப்பதும் காலத்தை எட்டி வளர்ந்த இளங்கோவின் தியானத்தில் உருவான மண் சிலம்பைத் தொடவே நீள்கிறதென் புனைவு’ என்று கோணங்கி தன் புனைவு பற்றிச் சொல்கிறார் (அரூ பேட்டி)

இதழியல்

அக்டோபர் 1989-ல் விருத்தாச்சலம் அருகே உள்ள பூவனூரில் கோயில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் வித்யாஷங்கர் ரயில்நிலைய மேலாளராகப் பணியாற்றியிருந்தபோது அங்கு சென்று தங்கியிருந்த நாட்களில் கல்குதிரை இதழை நடத்தவேண்டும் என்னும் எண்ணத்தை அடைந்ததாகச் சொல்கிறார். ’பருவகாலங்களின் இதழ்’ என்னும் பெயருடன் வெளிவரும் கல்குதிரை கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு மும்மாத இதழாக வெளிவந்தாலும் சீரான காலஇடைவெளி பேணப்படுவதில்லை. கல்குதிரை வெளியிட்ட தாஸ்தோயெவ்ஸ்கி சிறப்பிதழ், மார்க்யூஸ் சிறப்பிதழ், உலகச்சிறுதைச் சிறப்பிதழ் போன்றவை பரவலாக கவனிக்கப்பட்டவை.

விருதுகள்

 1. விளக்கு விருது (2013)
 2. கி.ரா. விருது, விஜயாபதிப்பகம் (2021)
 3. இலக்கியமாமணி விருது, தமிழக அரசு (2022)
கோணங்கி (நன்றி: விகடன் தடம்)

இலக்கிய இடம்

சரித்திரம்,இசை, தொன்மம்,ஓவியம், நுண்கலைகள், பௌத்தம், சமணம், கலோனியல் குறிப்புகள், செவ்வியல் என அவர் புனைவுகள் பல தளங்களில் இயங்கக் கூடியது. சிதறுண்ட மனதின் வெளிப்பாடாகவே அவருடைய கதைகள் உள்ளன.சன்னதம் கொண்ட புராதனக் கதைசொல்லி அவர்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். வலைத்தமிழ் ]

ஆரம்பகாலக் கதைகளை வைத்து கோணங்கியை தன் தலைமுறையின் முதன்மைச் சிறுகதையாளனாக நினைப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். "மொழித்தேர்ச்சியின்றி சொல்லப்பட்டவையானாலும் இவரது ஆரம்பகாலக் கதைகளில் மனித உறவுகளின் விசித்திரமும் வசீகரமும் களங்கமில்லாத குழந்தைக்கதைகள் போல வெளிப்படும் விதமும் முக்கியமானது. கோணங்கியின் எழுத்து தானியங்கி எழுத்து என்ற வகையைச் சேர்ந்தது. தன் மனஓட்டங்களை அப்படியே பின்பற்றும் விதமாக மொழியை அமைத்துக்கொள்வது. கட்டற்று பாயும் தன்மை கொண்டது. அவரது படைப்புப் பிரக்ஞை என்பது நாட்டார் தன்மை உடையதே ஒழிய இத்தகைய தானியங்கிப் படைப்பை எழுதும் அளவுக்கு மொத்தப் பண்பாட்டுக்குமாக விரியும் வீச்சுள்ளது அல்ல. கோணங்கியின் முதலிரு சிறுகதைத் தொகுதிகளுக்குப் பின்னால் வந்த எழுத்துக்கள் அனைத்தும் அர்த்தத்தையும் அனுபவத்தையும் அளிக்காத சொற்பிரவாகங்களையும், சில தேய்வழக்குகளையும் ஒரேமாதிரியான சொற்றொடரமைப்புகளையும் கொண்டவை" என்கிறார்[1]. 'ஓவியம் ஒன்றை சொற்களாக்க முயன்றால் அவையே கோணங்கியின் படைப்புகள்' என்று பாலசுப்ரமணியம் பொன்ராஜ் குறிப்பிடுகிறார் (தமிழ் ஹிந்து)

நூல்கள்

குறுநாவல்கள்
 1. கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்
 2. அப்பாவின் குகையில் இருக்கிறேன்
 3. தழும்புகள் சிவந்த அணங்கு நிலம்
சிறுகதைத் தொகுப்புகள்
 1. மதினிமார்கள் கதை (1986)
 2. கொல்லனின் ஆறு பெண் மக்கள் (1989)
 3. பொம்மைகள் உடைபடும் நகரம் (1992)
 4. பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் (1994)
 5. உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை (1997)
 6. இருள்வ மௌத்திகம் (2007)
 7. சலூன் நாற்காலியில் சுழன்றபடி (2008)
 8. வெள்ளரிப்பெண் (2016)
 9. கருப்பு ரயில் (2019)
நாவல்கள்
 1. பாழி (2000)
 2. பிதிரா (2004)
 3. த (2014)
 4. நீர்வளரி (2020)
கட்டுரைகள்
 1. காவேரியின் பூர்வ காதை (2017)
 2. பாட்டியின் குரல்வளையை காப்பாற்றி வைத்திருக்கிறேன் (நேர்காணல்).
விமர்சனம்
 1. எஸ். ராமகிருஷ்ணனின் ’தாவரங்களின் உரையாடல்’ சிறுகதை தொகுப்பு - 1998 (https://www.sramakrishnan.com/கோணங்கி)

உசாத்துணை


✅Finalised Page