under review

சேவியர் தனிநாயகம் அடிகள்

From Tamil Wiki
சேவியர் தனிநாயகம் அடிகள்
தனிநாயகம் அடிகள் ( நன்றி தினமணி)

சேவியர் தனிநாயகம் அடிகள் (தனிநாயக அடிகளார்) (தனிநாயகம் அடிகள்) (ஆகஸ்ட் 2, 1913 - செப்டம்பர் 1, 1980) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர், இதழாளர், ஆய்வாளர், ஆன்மீகவாதி, தமிழ்த்தூதர். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடைபெற காரணமானவர். தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு தமிழரின் கலைகள், வாணிகத்தொடர்புகள், வாழ்க்கை நிலை, உளவியல், அயல் நாட்டுத்தொடர்புகள் போன்றவையும் ஆராயப்பட வேண்டும் என தமிழ் ஆராய்ச்சியில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர். தமிழ் ஆராய்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும் பதிவாக வேண்டுமென வலியுறுத்தினார். ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து பதிப்பித்தார்.

பிறப்பு

சேவியர் தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் தனிநாயகம். இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்துறையில் கரம்பொன் கிராமத்தில் கணபதிப்பிள்ளை ஸ்ரனிசுலாசு, சிசிலி ராசம்மா இணையருக்கு ஆகஸ்ட் 2, 1913-ல் பிறந்தார். கணபதிப்பிள்ளையின் தந்தை நாகநாதர். நெடுந்தீவின் புகழ்பெற்ற தனிநாயக முதலி வழி வந்ததால் தனிநாயகம் என இவரது தந்தை பெயர்சூட்டினர். கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்தனிஸ்லாஸ். சேவியர் தனிநாயகம் அடிகள் என அறியப்பட்டார்.

கல்வி

சேவியர் தனிநாயகம் அடிகள் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் தொடக்கக் கல்வி பயின்றார். 1920 முதல் 1922 வரை இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யில் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து தத்துவவியலில் கலைமாணி பட்டம் பெற்றார். பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் முறையாக தமிழ் பயின்றார். 1945-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். தனிநாயகம் அடிகளின் தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஆகியோர் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைமாணிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், லத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், எசுப்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றார். தொடர்ந்து ரஷ்யம், கிரேக்கம், ஹீபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றார்.

இரண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் தனிநாயகம் அடிகள்

ஆய்வுகள்

  • திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934-1939 வரை ரோம் நகரில் வாட்டிக்கான் பல்கலைக்கழகம் சென்று ”The Carthaginian Clergy” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றார். இந்த ஆய்வுக்கட்டுரை 1960-ல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்னாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.
  • 1947-1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டம் பெற்றார். இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.
  • ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள் மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். 1556 -ம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) "காட்டில்கா" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை தனிநாயகம் அடிகளார் 1950-ம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார்.
  • 1578-ல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் (Thambiran Vanakkam) 1579-ல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்"(Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார். அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.
  • தனிநாயகம் அடிகள் போர்ச்சுகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு. தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-ல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  • மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராக எட்டு ஆண்டுக்காலம் பணிபுரிந்தபோது பல புதிய பொருள்பற்றியும் துறைகள் பற்றியும் அப்பல்கலைக்கழகத்தில் தமிழாய்வு நடைபெற வழிவகை செய்தார்.

ஆசிரியப்பணி

குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

அறிமுக உரை: தனிநாயகம் அடிகள்: மலேசியா மாநாடு
உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்

1963--ம் ஆண்டளவில் தமிழக அரசில் எம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி மகாநாட்டினை நடத்தும் யோசனையை முன்வைத்தார். இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதனை அடுத்து இம்மாநாட்டினைத் தாமே முன்னின்று உலகளவிலே நடத்த வேண்டும் என்ற உத்வேகம் கொண்டதனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் உருவானது. 1964-ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்கக் காரணமானார்.

உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் ஜனவரி 1964-ல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை ஜனவரி 7, 1964 அன்று ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்ஸ் நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் மர்ரே பான்சன் எமனோ, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிறுவனமே தொடர்ச்சியாக பத்து உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியது. தனிநாயகம் அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன.

கோலாலம்பூர் மாநாடு

தனிநாயகம் அடிகள் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை ஏப்ரல் 16 - 23, 1966 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். 1961-ல் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் தனிநாயகம் அடிகள் இருந்தார். அப்போதைய மலேசிய அமைச்சர்களான விதி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் தனிநாயகம் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். பக்தவத்சலமும் கலந்து கொண்டார். புரொயென்காவின் போர்ச்சுகீசிய-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார். சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதழியல்

சேவியர் தனிநாயகம் அடிகள்
தமிழ் இலக்கியக் கழகம்

தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகள் "தமிழ் இலக்கியக் கழகம்" என்ற அமைப்பினை நிறுவி 1952-ல் Tamil Culture (தமிழ்க் கலாச்சாரம்) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்தது. தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். தமிழை தாய் மொழியாகக் கொண்டிராத பல அறிஞர்களின் தமிழாய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. 1952 முதல் 1966 வரை இவ்விதழ் வெளிவந்தது. முதல் நான்கு ஆண்டுகள் தூத்துக்குடி கல்விக் கழகத்தின் மூலமே இவ்விதழ் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலமாக இவ்விதழ் வருவதற்கு மானியம் வழங்கப்பட்டது. 45 இதழ்கள் வெளிவந்தன. 350 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிஞர்கள் தமிழியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

1961-ல் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக "Journal of Tamil Studies" என்னும் ஒரு இதழுக்கான ஆசிரியராக சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்தார்.

ஆசிரியப் பணி

1952 முதல் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968 வரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் பணிற்றினார். 1969-ல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிஸ் மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் பற்றிய இரு நூறுக்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தினார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடம் நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

தனிநாயகம் அடிகள்

தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதினார். 137 நூல்களை எழுதினார். தனிநாயகம் அடிகள் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு 'தமிழ்த் தூது' 1952-ல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பயணங்களின் அனுபவங்களை ’ஒரே உலகம்’ என்ற தலைப்பில் 1963-ல் வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகள் ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு ’திருவள்ளுவர்’ என்ற பெயரில் 1967-ல் நூலாக வெளிவந்தது. இவர் எழுதிய 30 ஆய்வுக்கட்டுரைகள், தமிழ் காலாசரம் சஞ்சிகையில் வெளிவந்த 70 கட்டுரைகள் பலவேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்தன.

தமிழைப் பற்றிய ஐரோப்பிய மொழிகளில் வெளி வந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ்மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். 'Reference Guide to Tamil Studies' என்ற நூற்றி இருபத்தியிரண்டு பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து நூலாக வெளியிட்டார். இந்நூல் இலத்தின், பிரெஞ்சு, ஜெர்மனி, ரஷ்யம், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுப்பு நூலாக வந்தது. தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு ஒரு உசாத்துணை நூலாக விளங்க இதனை வெளியிட்டார்.

இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார். 1980-ல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். 1980-ல் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய 'தமிழ்மறை விருந்து' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். தனிநாயகம் அடிகள் Tamil Culture இதழில் பண்டைத் தமிழ் கல்வி பற்றி எழுதிய நான்கு ஆங்கிலக் கட்டுரைகளை ’பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி’ என்ற பெயரில் ந. மனோகரன் 2009-ல் மொழிபெயர்த்தார்.

மாற்றுவெளி ஆய்விதழ்: சேவியர் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சிறப்பிதழ்

விருதுகள்/சிறப்புகள்

  • தனிநாயகம் அடிகளின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது.
  • 1981-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையை நினைவுகூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான ’கௌரவ கலாநிதிப் பட்டம்’ வழங்கிக் கௌரவித்தது.
  • 1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • நெடுந்தீவு மக்கள் தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்தனர்.
  • சென்னையில் பெப்ரவரி 16, 2013 அன்று தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது.

ஆவணப்படம்

'தமிழின் தூதுவர் அல்லது அம்பாசிடர் ஒப் தமிழ்' (Ambassador of Tamil) என்பது 2013-ல் வெளிவந்த தமிழ் ஆங்கில ஆவண நிகழ்படம். இது சேவியர் தனிநாயகம் அடிகளாரின் வாழ்கையையும், அவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளையும் ஆவணப்படுத்துகிறது. இதன் இயக்குனர் செந்தில்வேணு.

மறைவு

சேவியர் தனிநாயகம் அடிகள் செப்டம்பர் 1, 1980-ல் காலமானார்.

சொற்பொழிவுகள்

  • Aspects of Tamil Humanism (1959-1960)
  • Indiajn Thought and Roman Stoicism (University of Malaya, Kuala Lumpur) (1962)
  • Tiruvalluvar, Sornammal Endowment Lectures, Annamalai University (1967)
  • The Humanistic Scene (1972)
  • The Humanistic Ideals (1972)
  • Tamil Humanism - The Classical Period (1972)
  • The Tirukkural and the Greek Ethical Thought (1997)
  • Research in Tamil Studies, - Retrospect and Prospect (1980)
  • தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும் (1980)

நூல் பட்டியல்

தனிநாயகம் அடிகள் சிலை
தமிழ்
  • தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்
  • தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் (1980)
  • தமிழ்த்தூது (1952) (தமிழ் இலக்கியக் கழகம்)
  • ஒன்றே உலகம் (1966, பாரி நிலையம்)
  • திருவள்ளுவர் (1967, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
  • உலக ஒழுக்கவியலில் திருக்குறள்
  • நம் மொழியுரிமைகள் நந்தன் (1961, பதிப்பகம்)
ஆங்கிலம்
  • The Carthaginian Clergy (1950)
  • Nature in the ancient poetry
  • Aspects of Tamil Humanism
  • Indian thought and Roman Stoicism
  • Educational thoughts in ancient Tamil literature
  • Landscape and Poetry a Study of Nature in Classical Tamil Poetry (1997)
  • A Reference guide to Tamil studies (1966) (University of Malaya, Kuala Lampur)
  • Tamil Studies Abroad (1968, The International Association of Tamil Research)
  • Tamil Culture and Civilization: Readings - The Classical Period, Asia Publishing House, London (1970)
  • Educational Thought in Ancient Tamil Liteature, Bharathidasan University (2010)
நூல் தொகுப்புகள்
  • தனிநாயகம் அடிகளாரின் படைப்புகள் (2013) (பூம்புகார் பதிப்பகம்)
  • Complete Works of Thaninayagam Adigalar vol-I (2013)
  • Complete Works of Thaninayagam Adigalar Vol-II (2013)
மாநாட்டுத் தொகுப்புகள்
  • Proceedings of the first International Conference Seminar of Tamil Studies, Kulala Lumpur
  • International Association of Tamil Research, Proceedings of the Third International Conference Seminar, Paris
  • The culture problems of Malyasia in the contact of South - East 1965. The Malayasian Society of Orientalists
ஆய்வேடுகள்
  • The Cartheginian Clergy : During the Episcopate of Saint Cyprian. Colombo : Ceylon printers 1947, Doctoral thesis at Ponifical urban Univerisity, Rome: 1939
  • “Nature in Ancient Tamil poetry: Concept and intepreation” Tuticorin : Tamil literature society, 1953 Thesis (M.Litt.,) Annamalai University, Madras 1949. Party Revised and Published under the Title: Nature Poetry in Tamil : The Classical Period: 1963
  • Educational Thought in Ancient Tamil Literature. (University of London for the Ph.D., Degree 1957, Published by Bharathithasan University: 2012.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள்
  • 1960 Educator Typology in Ancient Tamil Literature, International Congress of Orientalists xxvth, Moscow
  • 1965 Ideals and Values Common to South and South East Asian Cultures, Proceedings of the Malaysian Society of Orientalists
  • 1966 Chairman’s Introductory Remarks, Proceedings of the International Conference Seminary of Tamil Studies, Kula Lumpur, (முதல் தொகுதி 1968)
  • 1966 Appereption in Tamil Literary Studies, (இரண்டாம் தொகுதி - 1968)
  • 1967 The period of Ethical Literature in Tamil : Third Century to the Seventh Century A.D., Paracidanum - Indian, Iranian and Indo - European studies, The Houge Moutan
  • 1968 Tamil Migrations to Guadeloupe and Martinique 1853-1883, Conference Seminar of Tamil Studies, Madras (இரண்டாம் தொகுதி - 1971)
  • 1968 Tamil Trade, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு விழா மலர், சென்னை
  • 1970 The Study of Contemporary Tamil Groups, Conference Seminar of Tamil Studies, Paris Pondicherry
  • 1974 Inaugural Address, (நான்காவது மாநாடு - முதல் தொகுதி)
  • 1974 ஆரம்ப உரை, (நான்காவது மாநாடு - இரண்டாம் தொகுதி)
  • 1981 சங்க இலக்கியத்தில் விரிவாகும் ஆளுமையின் பண்பு, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு விழா மலர், மதுரை.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page