under review

கா.பொ. இரத்தினம்

From Tamil Wiki
கா.பொ. இரத்தினம்

கா.பொ. இரத்தினம் (மார்ச் 10, 1914 - டிசம்பர் 20, 2010) ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர். திருக்குறள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியவர். திருக்குறளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றார். தனிநாயகம் அடிகளுடன் இணைந்து உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தைத் தோற்றுவித்தவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல்வாதி.

பிறப்பு, கல்வி

கா.பொ. இரத்தினம் இலங்கை யாழ்ப்பாணம், வேலணையில் கார்த்திகேசு பொன்னம்பலம், பத்தினிப்பிள்ளைக்கு மகனாக மார்ச் 10, 1914-ல் பிறந்தார். அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பன்னிரெண்டாம் வயதில் தனிமொழிப் பாடசாலை விடுகைச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றார். 1929-ல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

கா.பொ. இரத்தினம் 1933-ல் பண்டிதர் பட்டம் பெற்றார். 1940-ல் அரசினர் புலமைப் பரிசில் பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல் பட்டம் பெற்றார். 1942-ல் வித்துவான் பட்டமும் பெற்றார். 1945-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைமாணி சிறப்புப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1952-ல் கீழைத்தேய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். வட அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கா.பொ. ரத்தினம் சிந்தாமணியை மணந்துகொண்டார். மகன் நிமலன்.

ஆசிரியப்பணி

கா.பொ. இரத்தினம் ஆசிரியப்பயிற்சிக்குப் பின் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1934-ல் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பணியில் சேர்ந்தார். 1942-ல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1943-ல் பாடசாலை ஆய்வாளராக கண்டி, திரிகோணமலை ஆய்வு அலுவலராகப் பணியாற்றினார். 1944-ன் இறுதியில் கொழும்பு அரசினர் ஆங்கில ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக பணியாற்றினார். 1945 முதல் 1956 வரை மகரகமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். கொழும்பில் அரச கரும மொழிகள் திணைக்களத்தில் எட்டாண்டுகள் பணியாற்றினார். பின்னர் மலேயாப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளோடு இணைந்து பணியாற்றினார்.

அமைப்புப் பணி

  • பல ஆண்டுகள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராகவும் 1958-1959 காலப்பகுதியில் அதன் தலைவராகவும், 1973-1981 காலத்தில் துணைக் காப்பாளராகவும் இருந்து பணியாற்றினார்.
  • 1963-ல் கோலாலம்பூரில் உலகத் தமிழ் மன்றத்தை நிறுவினார்.
தமிழ்மறைக் கழகம்

கா.பொ. இரத்தினம் 1952--ம் ஆண்டு கொழும்பில் 'தமிழ்மறைக் கழகம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். திருக்குறளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியைச் செய்தார். இதன் தலைமைக் காப்பாளராக சு. நடேசபிள்ளை இருந்தார். 1953-1993 வரை அதன் தலைவராக கா.பொ. இரத்தினம் இருந்தார். திருக்குறள் மனனப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் நடத்தினார்.

அரசியல் வாழ்க்கை

கா.பொ. இரத்தினம் 1960 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965-ல் கிளிநொச்சித் தேர்தல் தொகுதியிலும், 1970-ல் ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதியிலும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தீண்டாமைக்கு எதிராக தமிழரசுக் கட்சி பேசிய பல நிகழ்வுகளில் பங்கெடுத்தார். 1977-ம் ஆண்டு தேர்தலில் ஊர்காவற்துறைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதழியல்

1960-ல் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட 'முருகு' என்ற இலக்கிய வெளியீட்டின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கா.பொ. இரத்தினம் உலக அளவில் திருக்குறளைப் படிக்கவும், திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடவும் வகை செய்தவர். உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். சி. கணபதிபிள்ளையிடமிருந்து கவி புனைவதைக் கற்று பாடல்கள் இயற்றினார்.

விருது

  • 1980-ல் மதுரை திருஞானசம்பந்தர் ஆதினம் செந்தமிழ்க் கலைமாணி விருது வழங்கியது.
  • 1983-ல் தமிழ்ச்சான்றோர் விருதை தமிழ்ப்புலவர் குழு வழங்கியது.
  • உலகத் தமிழ் பேரமைப்பு 2003-ல் ’உலகப் பெருந்தமிழர்’ விருதினை வழங்கியது.
பட்டங்கள்
  • தமிழ்மறைக் காவலர்
  • திருக்குறள் செல்வர்
  • குறள் ஆய்வுச் செம்மல்

மறைவு

1983-ல் இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு சென்று தங்கியிருந்தார், 2003-ல் மீண்டும் கொழும்பு திரும்பி வெள்ளவத்தையில் வசித்தார். டிசம்பர் 20, 2010 அன்று கொழும்பில் தனது 96-ஆவது வயதில் காலமானார்.

நூல்கள்

கவிதை
  • அன்புச்சோலை
  • இமயத்து உச்சியில்
  • தமிழ் ஈழம் ஐம்பது
பிற
  • நினைவுத்திரைகள்(சுயசரிதை)
  • தமிழ், இலக்கியம் கற்பித்தல்
  • தமிழ் உணர்ச்சி
  • உரை வண்ணம்
  • காவியமணம்
  • தனி ஆட்சி
  • எழுத்தாளர் கல்கி
  • இலங்கையில் இன்பத் தமிழ்
  • தமிழ் மறை விருந்து
  • தாவாரம் -ல்லை
  • அடிமைச் சாசனம்
  • இருபத்து நான்கு மணி நேரத்தில் தமிழ் ஈழம்
  • பச்சை மண்ணும் சுட்ட மண்ணும்
  • மனப்பால்
  • யாஅம் இரப்பவை(1987)
பதிப்பித்த நூல்கள்
  • எழுத்தாளர் கல்கி
  • தமிழ்மறைக் கட்டுரைகள்
  • திருவள்ளுவர் திருநாள்
  • நாவலர் நினைவுமலர்
  • பேரம்பலப்புலவர் நினைவுமலர்
  • முருகு
இவரைப்பற்றிய நூல்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page