under review

தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

From Tamil Wiki
மீனாட்சிசுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மீனாட்சிசுந்தரம் (பெயர் பட்டியல்)
தெ.பொ.மீ
தெ.பொ.மீ
தெபொமீ
வாழ்க்கை வரலாறு

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தென்பட்டணம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரம்:ஜனவரி 8, 1901 - ஆகஸ்ட் 27, 1980) தமிழறிஞர், தமிழியல் ஆய்வாளர்,பன்மொழிப் புலமை பெற்றவர். பழந்தமிழ்ப்பண்பாட்டு ஆய்வை மேலைநாட்டு ஆய்வுமுறைகளைக்கொண்டு வகுத்துரைத்த கல்வியாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் மொழியியல், ஒப்பிலக்கணத் துறைகளை ஏற்படுத்தி, அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு வழிகோலியவர்.

பிறப்பு,கல்வி

தெ. பொ. மீனாட்சி சுந்தரம் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் ஜனவரி 8,1901 அன்று பொன்னுசாமி கிராமணியாருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பொன்னுசாமிக் கிராமணியார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரான தி. க. சுப்பராய செட்டியாரிடம் தமிழ் பயின்றவர். தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரை தன் மகனுக்கு இட்டார். நாடகக் கலைஞரும், தேசபக்தி நாடகங்களை அரங்கேற்றியவருமான தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் இவரது மூத்த சகோதரர்.

தெ.பொ.மீ பள்ளிக்கல்வியை சிந்தாதிரிப்பேட்டையில் முடித்தார்.1920-ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் 1922-ல் பி.எல். பட்டமும் பெற்றார். 1923-ல் வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1934-ல் பி.ஓ.எல் பட்டம் பெற்றார்.

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் வேதாந்த சங்கத்தை நடத்திய கோ. வடிவேலு செட்டியாரிடம் தருக்கம், வேதாந்தம், தமிழிலக்கியம் ஆகியவற்றைப் பயின்றார். கா.ர. கோவிந்தராச முதலியார், திருமணம் கே. செல்வகேசவராய முதலியார் போன்ற அறிஞர்களிடம் வேதாந்தமும் தமிழ் இலக்கியங்களும் கற்றார். இராமலிங்கத் தம்பிரானிடம் தணிகைப் புராணம் , சேது புராணம் ஆகியவற்றைக் கற்றார். மறைமலையடிகளிடம் சைவ சித்தாந்தத்தையும், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கரச்சாரியார், திருப்புறம்பியம் ராமசாமி நாயுடு மற்றும் ஶ்ரீரங்கம் சடகோபாச்சாரியார் ஆகியோரிடம் வைணவத் தத்துவமும் பயின்றார்.

1939-40 ஆண்டுகளில் தமிழ் வித்வான் இளநிலை, நிறைநிலைத் தேர்வுகள் எழுதி 'வித்வான்' பட்டம் பெற்றார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

ஜூல்ஸ் ப்லாக்(Jules Block) என்ற பேராசிரியரின் மேற்பார்வையில் 1939-ல் எம். ஒ. எல் பட்டத்திற்காக ஒலியியலில் (Phonology) தமிழ் ஒலிகளில் ஆராய்ச்சி செய்தார். அவரது ஆய்வுக்கட்டுரை மிகச்சிறந்த மொழியியல் ஆய்வு எனத் தேர்வாளர்களால் பாராட்டப்பட்டது. ஜூல்ஸ் ப்லாகின் தூண்டுதலால் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் உயர் சான்றிதழ் பெற்றார்.

அரசியல்

தெ.பொ.மீ காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர். 1941-ல் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.

தனிவாழ்க்கை

தெ.பொ.மீ 1923-ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். இருப்பினும் அத்துறையில் மிகக் குறைந்த காலமே பணி செய்தார்.

பொதுவாழ்க்கை

தெ.பொ,மீ 1924-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அல்டெர்மனாகவும் (alderman-மேயருக்கு அடுத்த நகராட்சிக்குழு மூத்த உறுப்பினர்) பணிபுரிந்தார்.

1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் (Indian Aluminium factory worker's association) தலைவராய் பணியாற்றினார்.

அமைப்புப்பணிகள்

தெபொமீ சென்னைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவி பத்துப்பாட்டு, தொல்காப்பியம் மாநாடுகளை நடத்தினார்.

கல்விப் பணிகள்

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வியாளர்களில் ஒருவர். நாற்பதாண்டுகாலம் தமிழகக் கல்வி வளர்ச்சிக்காகப் பணியாற்றினார்.

  • 1924-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் பணியாற்றியபோது சிந்தாதிரிப்பேட்டையிலும், சுற்றுப்புறங்களிலும் பல ஆரம்பப் பள்ளிகளை ஏற்படுத்தி, அவற்றின் வளர்ச்சியை தொடர்ச்சியாக கண்காணித்தார்.
  • 1936-ல் கோ. வடிவேலு செட்டியாரின் மரணத்திற்குப்பின் வேதாந்த சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்தல், சென்னைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி பல இலக்கிய மாநாடுகளை நடத்துதல் ஆகிய பணிகளை இக்காலகட்டத்தில் மேற்கொண்டார்.
  • 1944-ல் ராஜா.சர்.அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டு 1946 வரை பணியாற்றினார்.
  • 1954-ல் சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைத் தமிழ் பேராசிரியராகப் பணியேற்று, ஒப்பிலக்கியத்தையும், கல்வெட்டு மொழி ஆய்வையும் பாடங்களாக்கினார். மீண்டும்
  • 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.
  • 1945-ல்நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாடு திராவிடப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தை தலைவராக நியமித்தது.
  • 1961ல் சிகாகோ பல்கலைகழகத்தில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டபோது தெ. பொ. மீனாட்சிசுந்தரம் வருகைதரு பேராசிரியராக அழைக்கப்பட்டு பத்து சொற்பொழிவுகள் தமிழ் மொழி வரலாற்றைப் பற்றியும் பத்து சொற்பொழிவுகள் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் ஆற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அச்சொற்பொழிவுகளின் இறுதிவடிவம் ' A history of Tamil Language[1]' 'A history of Tamil literature' என்ற இரு நூல்களாக வெளியானது.
  • 1963 முதல் 65 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் (Advanced Centre for Dravidian Linguistic) இயக்குனராகப் பணியாற்றி தமிழகத்தில் மொழியியல் கல்வி தனித்து வளர்வதற்கும் துறைசார் ஆய்வாளர்கள் பலரைத் தோற்றுவிக்கவும் காரணமானார்.
  • 1966 முதல் 1971 வரை மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பணியாற்றினார். மதுரை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக புதிய அறிவியல் துறைகள், உயிரியல், பொருளாதாரம், கணிதம் போன்ற துறைகளைத் தொடங்கினார். தமிழ்த்துறை தமிழியல் துறையாக அமையவும், ஒப்பிலக்கியத் துறை உருவாகவும் வழி வகுத்தார். தொலைதூரக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.
  • 1973-74-ம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார்.
  • 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இலக்கிய/தமிழியல் பணி

கலைக்களஞ்சியம்

தெ, பொ. மீனாட்சிசுந்தரம் கலைக்களஞ்சியத்தில் தமிழ் எழுத்தியல், மொழியியல், இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் 88 கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய ஆய்வு

தெபொமீ 'கலாநிலையம்', 'விவேக சூடாமணி', 'லோகோபகாரி', 'நவசக்தி' ஆகிய இதழ்களில் இலக்கியம், மொழியியல், தத்துவம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை "நாடகக் காப்பியம்" என்றும் "குடிமக்கள் காப்பியம்" என்றும் வரையறுத்தார்.

திருக்குறள் பற்றி 'வள்ளுவரும் மகளிரும்' ' 'வள்ளுவர் கண்ட நாடும் காமமும்' ஆகிய நூல்களை எழுதினார்

'தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை' என்ற நூலில் தமிழ்நாட்டுச் சடங்குகளுக்கும், தாய்லாந்து நாட்டு சடங்குகளுக்கும் உள்ள ஒற்றுமையை இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கினார். தாய்லாந்தின் ஊஞ்சல் திருவிழா தமிழ்நாட்டின் பாவை நோன்புடனும் திருவெம்பாவை, திருப்பாவையுடனும் தொடர்புடையது என்பதை சான்றுகளுடன் நிறுவினார்.

மொழியியல்

தமிழில் மொழியியல் துறையின் முன்னோடியாகக் கருதப்படும் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் மொழியியல் நோக்கில் மொழியை அணுகி ஆராயும்போது மொழியின் கட்டமைப்பையும் அது சமுதாயத்தில் வழங்கி வரும் முறையையும் காணலாம் என்பதைத் தன் ஆய்வுகளின் மூலம் அறியச் செய்தார்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழ் இலக்கண வரலாற்றை வடமொழி இலக்கணம், தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஆய்வுசெய்தார்.

தெபொமீ தமிழ் மொழி எழுத்துக்களை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றியும், திருத்தியும், குறைத்தும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

"Rhythm of the common speech; Glorification by Bharathi" என்ற நூலில் பாரதியின் மொழிநடை தமிழ் மரபிலிருந்து எதைப் பெற்றுக்கொண்டது என்பதைஆராய்கிறார்.

நோம் சோம்ஸ்கியின்( Noam Chomsky) மாற்றிலக்கணம் ( transformational grammar) என்ற கோட்பாட்டை தமிழுக்கு அறிமுகம் செய்யும் முகமாக தமிழ் எடுத்துக்காட்டுகளுடன் 'மாற்றிலக்கணம்'[2] என்ற நூலை எழுதினார்.

அறிவியல் தமிழ்

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழ் வழிக் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார். ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கை போன்ற அறிவியல் தத்துவங்களைத் தமிழில் எழுதினார்.

இதழியல்

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 'யுனெஸ்கோ கூரியர்' தமிழ் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

விருதுகள், சிறப்புகள்

  • பல்கலைச் செல்வர் - திருவாடுதுறை ஆதினம்
  • பன்மொழிப் புலவர் - குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம்
  • பெருந்தமிழ் மணி - சிவபுரி சன்மார்க்க சபை (முதலமைச்சர் காமராசர் தலைமை)
  • கலைமாமணி விருது-தமிழக அரசு
  • பத்மபூஷண் விருது
நாட்டுடைமை

தெ.பொ. மீனாட்சிசுந்தரத்தின் படைப்புகள் தமிழக அரசால் 2007-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

வாழ்க்கை வரலாறு

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் -தா.வே..வீராசாமி (சாகித்ய அக்காதமி வெளியீடு)

ஆய்வு

  • ப. மருதநாயகம் -'திறனாய்வாளர் தெ.பா.மீ

இறப்பு

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் ஆகஸ்ட் 27, 1980 அன்று சென்னையில் புற்றுநோயால் காலமானார்.

இலக்கிய இடம்/மதிப்பீடு

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கல்வியாளர், இலக்கிய ஆய்வாளர், மொழியியலாளர், மெய்யியலாளர் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றினார்.

  • பல்கலைக் கழக பேராசிரியர். துணைவேந்தர் ஆகிய நிலைகளில் பணியாற்றிய தெ.பொ.மீ தமிழ் கல்விச்சூழலில் மொழியியலையும் ஒப்பிலக்கியத்தையும் பாடமாக்கி ஆய்வாளர்களுக்கு வழிகாட்டினார். இலக்கியத் துறையில் ஆய்வு, ஆய்வு வழிகாட்டல், இலக்கண மொழியியல் கோட்பாடு, இலக்கியக் கோட்பாடு, மொழி வரலாறு ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு தொடங்க ஆவன செய்தார். அவரது ஆய்வுகள் சிந்தனைகள் கட்டுரைகள் நூல்கள் யாவும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுக்கு அறிவியல் நெறிப்பட்ட அணுகுமுறைகளை புதிய செல்நெறிகள் வழங்கிச் சென்றுள்ளன.
  • மொழியியலில் ஒப்பிலக்கணம், மாற்றிலக்கணம் ஆகியவற்றை தமிழுக்கு அறிமுகம் செய்தார். அவற்றை பல்கலைகழகத்தில் பாடமாக ஆக்கினார்.ஒப்பிலக்கண ஆய்வு, மொழி வரலாற்றாய்வு என மொழியியல் ஆய்வை இரு கோணங்களில் அணுகினார். தமிழ் இலக்கணத்தில் பிறமொழிக்கூறிகளை ஆய்வு செய்தார். திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் தலைவராக திராவிட மொழிகளின் ஒலியமைப்பை விளக்கிய முன்னோடி. திராவிட மொழிகளின் பால்பாகுபாடுகள் பற்றிய பற்றிய அவரது ஒப்பிலக்கண ஆய்வு அத்துறையில் முன்னோடியாகக் கருதப்படுகிறது.
  • தெ.பொ.மீ இலக்கிய ஆய்வை வரலாற்று நோக்கில், அறிவியல் முறைமைப்படி நிகழ்த்தினார். தமிழ் இலக்கியங்களை புறவயமான ஆய்நோக்கி வகுத்துரைத்தார்.
  • இறுதிக்காலத்தில் மெய்யியலில் ஆர்வம் கொண்டிருந்த தெ.பொ.மீ ஆழ்நிலைத் தியானப் பயிற்றுநராகப் பணிபுரிந்தார். தமிழர் மெய்யியலை ஆய்வுசெய்து எழுதினார்.

படைப்புகள்

  • வள்ளுவரும் மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல் ஒப்பிலக்கணம்
  • தமிழா நினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
  • பிறந்தது எப்படியோ?
  • கானல்வரி
  • சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
  • கல்விச் சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • மொழியியல் விளையாட்டுக்கள்
  • பத்துப்பாட்டு ஆய்வு
  • குடிமக்கள் காப்பியம்,
  • பிறந்தது எப்படியோ,
  • தமிழா நினைத்துப்பார்
  • சமணத் தமிழிலக்கியம்
  • குசேலர்.
  • அச்சொற்கள்
  • மனோதத்துவ சாத்திரம்
ஆங்கில நூல்கள்
  • A History of Tamil Language
  • A History of Tamil Literature
  • Philosophy of Thiruvalluvar
  • Advaita in Tamil
  • Tamil - A Bird's eye view

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 12:09:27 IST