under review

கா.ர. கோவிந்தராச முதலியார்

From Tamil Wiki
நன்றி: மு.இளங்கோவன்

கா.ர. கோவிந்தராச முதலியார் (கா.ர. கோ) (அக்டோபர் 31,1874 - ஜூலை 12, 1952) எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர். பல பழந்தமிழ் நூல்களுக்கு உரையெழுதினார். வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்தார். 'ஆழ்வார்கள் வரலாறு' குறிப்பிடத்தக்க படைப்பு.

பிறப்பு,கல்வி

கா.ர. கோவிந்தராச முதலியார் காஞ்சிபுரத்தில் அர்ங்கசாமி முதலியார்-கமலம்மாள் இணையருக்கு அக்டோபர் 31,1874 அன்று பிறந்தார். இரு சகோதரிகள் திருவேங்கடம் அம்மாள், நாகரத்தினம். இளம் வயதில் தந்தையை இழந்த கோவிதராச முதலியார் செங்கல்வராயன் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். வாசிப்பினாலும், சொற்பொழிவுகளைக் கேட்டு வளர்ந்ததாலும் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். பசுபதிநாயக்கர், அப்பன் செட்டியார் ஆகியோரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். காஞ்சியில் வாழ்ந்த மாகவித்வான் இராமசாமி நாயுடுவிடம் திருக்குறள், கம்பராமாயணம், நம்பி அகப்பொருள், தஞ்சைவாணன் கோவை ஆகியவற்றைக் கற்றபோது கா. நமச்சிவாய முதலியாரும் அவருடன் கற்றார். கோ. வடிவேலு செட்டியாரிடம் நன்னூல், தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றைக் கற்றார்.

தொல்காப்பியத்தை சுயமாகப் படித்து கற்றார். தன் ஐயங்களை த. கனகசுந்தரம் பிள்ளையிடம் தீர்த்துக்கொண்டார்.

தனி வாழ்க்கை

கா.ர.கோ ஜீவரத்னம் அம்மையாரை மணந்துகொண்டார். ஒரே மகள் கிருஷ்ணவேணி.

கல்விப்பணி

கா.ர,கோ. 1895-ல் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, தொடக்கத் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றார். சிறுவள்ளூர் துணை உயர்வுப் பள்ளியில் ஆசிரியராகவும், சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகவும், 1910 முதல் 1922 வரை பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் துணைத் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கா.ர. கோவிதசாமி முதலியார் பல செய்யுள் நூல்களையும், உரைநடை நூல்களையும் எழுதினார். அவற்றுள் 'கோவலன் சரிதை', 'சங்கநூல்', 'இந்திய வீரர்', 'ஆழ்வார் வரலாறு', 'ஆழ்வார் வழிக் குரவர் வரலாறு' உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 'திருப்பாவை ஆராய்ச்சி', 'முல்லைப்பாட்டு' உள்ளிட்ட ஆய்வு நூல்களையும் எழுதினார். 'அம்பிகாபதியும் அரசிளங்குமரியும்' என்னும் நாடக நூலையும் இயற்றியுள்ளார்.

செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட இதழ்களில் பல இலக்கியக் கட்டுரைகளும் எழுதினார். பல மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியமும், இலக்கிய நூல்களையும் கற்பித்தார். இவரது மாணவர்களில் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையும் ஒருவர்.

பதிப்பியல்

கா.ர. கோ பணி ஓய்வு பெற்றபின் தமிழாய்வுப் பணியில்கவனம் செலுத்தினார். யாப்பருங்கலக்காரிகை, நன்னூல் இராமானுசக் கவிராயர் விருத்தியுரை, இறையனார் அகப்பொருளுரை, வீரசோழியம் பழைய உரை, அகப்பொருள் பழைய உரை, நேமிநாதம், தொல்காப்பியம் முதல் சூத்திரவிருத்தி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை முதலிய நூல்களைப் பதிப்பித்தார். கா.ர. கோவின் விரிவான அடிக்குறிப்புகள் நூல்களைக் கற்பவர்களுக்கு பொருள் மேலும் விளங்கச் செய்யும் வகையில் அமைந்தவை

உரைகள்

கா.ர. கோ சரஸ்வதி அந்தாதி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, பன்னிரு பாட்டியல், அரங்கசாமிப் பாட்டியல் முதலிய நூல்களுக்கு உரையெழுதினார். களவழி நாற்பது, திரிகடுகம், நான்மணிக் கடிகை, ஏலாதி, நளவெண்பா உள்ளிட்ட நூல்களுக்கு விரிவான குறிப்புகள் எழுதினார். பல செய்யுள் நூல்களுக்கும் உரை எழுதினார்.

விருதுகள், பரிசுகள்

சென்னைத் தமிழார்வலர்களால் 1949-ல் மேயர் ராமசாமி நாயுடு தலைமையில் பொற்கிழிப் பரிசு வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

கா.ர. கோவிந்தசாமி முதலியார் பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் அறியப்படுகிறார். 'ஆழ்வார் வரலாறு', 'ஆழ்வார் வழிக் குரவர் வரலாறு' இருநூல்களும் குறிப்பிடத்தக்கவை.

படைப்புகள்

  • கோவலன் சரிதை
  • சங்கநூல்
  • இந்திய வீரர்
  • ஆழ்வார் வரலாறு
  • ஆழ்வார் வழிக் குரவர் வரலாறு
  • ஆழ்வார் உயிர்வர்க்க மாலை
  • மாறன் பஞ்சரத்தினம்
  • திருவேங்கடப் பதிற்றுப்பத்தந்தாதி
  • திருமகள் வெண்பாப்பத்து
  • திருமகள் கலித்துறைப்பத்து
  • சரஸ்வதி வெண்பாப்பத்து
  • சரஸ்வதி கலிவிருத்தப்பத்து
  • சரஸ்வதி வஞ்சிவிருத்தப்பத்து
  • சரஸ்வதி சந்திரகலாமாலை
  • திருப்பாவை ஆராய்ச்சி
  • முல்லைப்பாட்டு
உரைகள்
  • அகப்பொருள் விளக்கம் பழைய உரையுடன்
  • இனியவை நாற்பது,
  • இன்னாநாற்பது,
  • கார்நாற்பது,
  • திரிகடுகம்,
  • ஏலாதி,
  • நான்மணிக்கடிகை,
  • பன்னிருபாட்டியல்,
  • அரங்கசாமிப் பாட்டியல்,
  • அரிசமயதீபம்,
  • நளவெண்பா
குறிப்புரைகள்
  • நன்னூல் இராமாநுஜ விருத்தியுரை,
  • யாப்பருங்கலக் காரிகை,
  • இறையனாரகப்பொருளுரை,
  • நேமிநாதம்,
  • தொல்காப்பிய முதல் சூத்திரவிருத்தி,
  • தொல்காப்பிய எழுத்ததிகாரம் – இளம்பூரணர் உரை

உசாத்துணை


✅Finalised Page