under review

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை

From Tamil Wiki
மே.வீ.வேணுகோபால பிள்ளை
மே.வீ. வேணுகோபால பிள்ளை
மே.வீ
மே.வீ - குடும்பத்துடன்

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (மே.வீ.வேணுகோபாலன்)(ஆகஸ்ட் 31, 1896 - பெப்ருவரி 4, 1985) (மே.வீ. வேணுகோபாலன்) தமிழறிஞர், கல்வியாளர். இலக்கண ஆய்வு, பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதி பதிப்பித்தல், குழந்தை இலக்கியம் என்னும் பல தளங்களில் செயல்பட்டவர்.

பிறப்பு,கல்வி

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சென்னை, சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள மேட்டுப்பாளையம் எனும் ஊரில் வீராசாமி - பாக்கியம் இணையருக்கு ஆகஸ்ட் 31, 1896 அன்று பிறந்தார். தன் மகனின் கல்விக்காக சைதாப்பேட்டை பாலாஜி சிங்கு தெருவில் ஒரு வீட்டை வாங்கி அங்கே குடியேறினார்.வணிகம் செய்து வந்த வீராச்சாமிப் பிள்ளைக்கு அதில் இழப்பு உருவாகவே அவர் வீட்டை விற்றுவிட்டு பல்லவபுரத்திற்கு அருகே எருமையூர் என்னும் கிராமத்தில் குடியேறி விவசாயம் செய்தார். அப்போது மழை பொய்த்து பஞ்சம் உருவானது. சென்னை புரசைவாக்கத்தில் ஒரு சிறுவீட்டில் குடியேறினார்.

மே.வீ. வேணுகோபால பிள்ளை தொடக்கக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் பயின்றார். வறுமையால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சென்னை, வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகப் பணியாற்றினார். இரவுப்பள்ளியில் சேர்ந்து பயின்றபோது அவருக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்த வழக்கறிஞர் ’கலாநிலையம்’ இதழாசிரியர் டி.என். சேஷாசலம் அவரை மேலும் கற்க ஊக்கப்படுத்தினார்.

வி.ஆர். அரங்கநாத முதலியார், அருங்கலை விநோதர் கே.மாசிலாமணி முதலியார், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார், வழக்கறிஞர்களான எம்.தாமோதர நாயுடு, மோகனரங்கம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் பயின்றார். கா.ர. கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். அதன்பின் வித்துவான் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

மே.வீ.வேணுகோபால பிள்ளையுடன் மங்கலம்கிழார் (மங்கலம் குப்புசாமி முதலியார்) , மதுரை முதலியார், வேத.அருச்சுன முதலியார் ஆகியோர் தமிழ்க்கல்வியில் இணைமாணாக்கர்களாக பயின்றனர்.

தனிவாழ்க்கை

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (நன்றி: இந்து தமிழ் திசை)

மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை சென்னை வேப்பேரியிலுள்ள எஸ்.பி.ஸி.கே. இல் அச்சகப் பணி புரிந்தபடி கல்வி பயின்றார். அஞ்சலகத்தில் உதவியாளராகவும், வழக்கறிஞருக்கு தூக்குதூக்கியாகவும், ஒப்பந்த அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார். பின்னர் தமிழாசிரியராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றினார்.

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை செப்டெம்பர் 5, 1924-ல் ஜானகி அம்மையாரை மணந்தார். அவர்களுக்கு சீனிவாசன், சக்கரவர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று மகன்கள். கிருஷ்ணமூர்த்தி இரண்டு வயதிலேயே மறைந்தார். ஜானகி அம்மாள் ஜனவரி 27, 1950-ல் மறைந்தார்.

கல்விப்பணி

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 1920 முதல் 1923 வரை சென்னை, முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மணி திருநாவுக்கரசு அப்போது அங்கே தலைமையாசிரியராகப் பணியாற்றினார். தலைமையாசிரியர் எம்.ஏ.வேதநாயகம் வேண்டுகோளுக்கு இணங்க புரசைவாக்கம் லுத்தரன் மிஷன் நடத்திவந்த பெப்ரீஷியஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக 1924 முதல் 1938 வரை பணிபுரிந்தார்.அப்போது ஜெர்மன்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஸ்டாலின், அவர் மனைவி திருமதி கிராபே, குமாரி ஹில்கார்ட் ஆகியோருக்கு தமிழ் கற்பித்தார். லுத்தரன் மிஷன் கீழ்ப்பாக்கத்தில் நடத்திவந்த மதகுருக்களுக்கான பள்ளியிலும் தமிழ் கற்பித்தார்.

1938-ம் ஆண்டு ஆசிரியப் பணியைத் துறந்து, எழுத்துப் பணியிலும், பதிப்புத் தொழிலிலும் ஈடுபட்டார். ஆசிரியப்பணியை துறந்த பின்னரும் புரசைவாக்கம் லுத்தரன் மிஷனின் குருகுல மதக்கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வித்துவான் தேர்விற்குத் தனிவகுப்புகள் நடத்தியுள்ளார். இப்பயிற்சி வகுப்புகளை இலவசமாகவே அவர் நடத்திவந்தார். மாணவர்களுக்குரிய பாடநூல்களை எழுதிப் பதிப்பித்தார்.

பதிப்புப் பணி

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 1938-ல் வெளியிட்ட அரிச்சந்திரபுராணச் சுருக்கம் அவருடைய நூல்களில் புகழ்பெற்றது. அதற்கு திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தன் நவசக்தி (8 ஏப்ரல் 1938) இதழில் விரிவான மதிப்புரை எழுதினார்.

மே.வீ. வேணுகோபால பிள்ளை அரசாங்க இலக்கிய, இலக்கணப் பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட திருவாய்மொழி ஈடடின் பத்துத் தொகுதிக்கும் பதிப்பாசிரியராக விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கம்பராமாயணப் பதிப்புக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்

புதிய தமிழ் வாசகம்

1938- ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து விலகிய மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சொந்தமாகப் புத்தகங்களை எழுதி பதிப்பிக்கத் தொடங்கினார். அவர் எழுதிய நூல்கள் பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களாகப் பரிந்துரைக்கப்பட்டன. தமிழறிஞர்கள் பலர் தங்களது நூல்களைப் பதிப்பிக்கும் முன்னர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் அளித்து செப்பம் செய்துகொண்டனர்.

யாப்பருங்கல பழைய விருத்தியுரை பதிப்புகளின் பிழைகளை நீக்கி, விளக்கக் குறிப்புகளையும் சேர்த்து மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அளித்த வடிவம்தான் தமிழக அரசால் 1960-ல் வெளியிடப்பட்டது. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அளித்த நூல்வடிவத்தையும் அரசு வெளியிட்ட நூலையும் இரா. இளங்குமரனார் ஒப்புநோக்கித் திருத்தங்கள் செய்த செம்பதிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தான் செம்மைப்படுத்திய யாப்பருங்கல உரைநூலுக்கு முன்னுரையாக மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை எழுதிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில், அவருக்கு முன்பு 1916- ஆம் ஆண்டிலேயே யாப்பருங்கலத்தை நூலாக வெளியிட்ட பதிப்புச்செம்மல் சரவண பவானந்தத்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் யாப்பருங்கலக்காரிகை நூலை வெளியிட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள் பதிப்பு செய்துள்ளது.

சொற்பொழிவாளர்

மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை மணி திருநாவுக்கரசு தலைமையில் சென்னை தொண்டைமண்டல துளுவவேளாளர் பள்ளியில் 1930ல் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை தன் முதற்சொற்பொழிவை நிகழ்த்தினார். 1931ல் சென்னை லயோலாக் கல்லூரி மாணவர் தமிழ்க்கழக விழாவில் ஆற்றிய உரையும், 1948ல் மன்னார்குடியில் நடைபெற்ற தமிழ்த்திருநாள் விழாவில் சி.என். அண்ணாத்துரையுடன் ஆற்றிய உரையும் புகழ்பெற்றவையாகக் குறிப்பிடப்படுகின்றன.

சென்ன்னை புரசைவாக்கம் கம்பன்கழகத்திலும், சென்னை ஸ்ரீவைஷ்ணவ மகாசங்கத்திலும் மே.வீ.வேணுகோபால பிள்ளை சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். சொர்ணாம்பாள் அறக்கட்டளை சார்பாக திருக்குறள் பற்றி ஆற்றிய உரைகள் நூல்வடிவம் கொண்டன.

இரண்டாம் உலகப் போரின்போது சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு இடம்பெயர்ந்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சமண சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சீவக சிந்தாமணி குறித்த சொற்பொழிவுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். அந்தச் சொற்பொழிவுகளைத் தொகுத்து நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டார். அந்நிகழ்வின்போது, ‘சிந்தாமணிச் செல்வர்’ என்று மே.வீ. வேணுகோபாலப் பிள்ளைக்குப் பட்டம் அளித்துப் பாராட்டினார் திரு.வி.க.

பொறுப்புகள்

  • தமிழக அரசு இலக்கிய, இலக்கண பாடநூல்களின் தலைமைப் பதிப்பாசிரியர்
  • சென்னை பல்கலை தமிழ்ப்பேரகராதி திருத்தக்குழு தலைமைப் பதிப்பாசிரியர்
  • சென்னை பல்கலை திருவாய்மொழி ஈடு (வித்வான் புரா. புருஷோத்தம நாயிடு எழுதியது) 10 தொகுதிகளின் பதிப்பாசிரியர்
  • அண்ணாமலைப் பல்கலைக் கழக கம்பராமாயண பதிப்புக்குழு தலைமைப் பதிப்பாசிரியர்
  • தமிழகப் புலவர்க்குழு தலைவர்
  • வைணவ மகாசங்கம் சென்னை, தலைவர்
  • புரசை சுந்தரர் இரவு தமிழ்க்கல்லூரி முதல்வர்

விருதுகள்

  • 1956-ல் மே.வீ.வேணுகோபாலபிள்ளையின் மணிவிழா அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர், டி.என்.நாராயணசாமிப் பிள்ளை மற்றும் பி.டி.ராஜன் தலைமையில் நடைபெற்றது.
  • திருப்பனந்தாள் காசிமடத்தில் அக்டோபர் 29, 1967 அன்று நடந்த விழாவில் அறிஞர் அண்ணா 'செந்தமிழ்க் களஞ்சியம்' எனும் விருது வழங்கினார்
  • தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கிய 'கலைமாமணி'விருது
  • 1981-ல் அமெரிக்க உறவுபூண்ட உலகப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் (D.Litt).
  • மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் வழங்கிய, 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது.

மறைவு

மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, பெப்ரவரி 4, 1985 அன்று காலமானார்.

விவாதங்கள்

புகழ்பெற்ற குழந்தைப்பாடலான அம்மா இங்கே வா வா அழ.வள்ளியப்பா எழுதியது என்று பாடநூல்களில் உள்ளது. அது பிழையானது என்றும் அதை எழுதியவர் மே.,வீ. வேணுகோபால பிள்ளையே என்றும் மே.வீ.வேணுகோபால பிள்ளையின் பெயர்த்தி கீதாலட்சுமி ஶ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார். ச.து.சு. யோகியார் உரையெழுதிய கூத்தநூல் மே.வீ.வேணுகோபால பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. அதன் மூலச்சுவடிகள் அழிந்துவிட்டன என்று சொல்லப்பட்டது. அது ஒரு போலிநூல் என அறிஞர்கள் குற்றம்சாட்டினர்.ஆகவே இதை வெளியிட்ட மத்தியமாநில சங்கீத நாடக அக்காடமிகள் இந்நூலை மறுபதிப்பு செய்யவில்லை. இந்நூலின் எஞ்சிய பகுதியையும் வெளியிடவில்லை.

இலக்கிய இடம்

மே.வீ.வேணுகோபால பிள்ளை தமிழின் பதிப்பியக்கத்தில் உ.வே.சாமிநாதையர், தலைமுறைக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். நாலாயிர திவ்வியப்பிரபந்தம் முதலிய நூல்களை விரிவான உரைகளுடன் பதிப்பித்தார். இலக்கண நூல்களை பிழைநோக்கி பதிப்பித்தவர் என்பதனால் இலக்கணத்தாத்தா என்று பெயர் பெற்றார். சீவக சிந்தாமணியை உரையாற்றியமையால் சிந்தாமணிச் செல்வர் என்றும் அறியப்பட்டார். கல்வியாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளி.

நூல்கள்

யாப்பருங்கலக் காரிகை
பதிப்பு
எழுதியவை
தமிழ் அன்றும் இன்றும்
  • அம்பலவாணன் (நாவல்)
  • இளைஞர் தமிழ் கையகராதி
  • அரிச்சந்திர புராணச் சுருக்கம்
  • அராபிக் கதைகள்
  • அற்புத விளக்கு
  • இளங்கோவன் (நாவல்)
  • திருக்குறள் (சொற்பொழிவுகள்)
  • கம்பராமாயணம் ( பாலகாண்டம் முதல் சுந்தரகாண்டம் வரை வசனங்களாக நான்கு பகுதிகள் )
  • குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு
  • கொதிக்கும்மனம் (காந்தியின் மறைவு பற்றிய கவிதை நூல்) 1948 பிப்ரவரி, திராவிடர் கழகம், காஞ்சிபுரம்.
  • பத்திராயு (அ) ஆட்சிக்குரியோர்
  • தமிழ் அன்றும் இன்றும்
  • திருக்கண்ணபிரானார்
  • துருவன்
  • விமலன்
  • பொதுநலப்புரவலர்
  • திருக்கண்ணபிரானார்
  • இளங்கோவன்
  • தவளைமலைச் சுரங்கம்
  • குணவீர சிகாமணி

மேற்கோள்கள்

  • மே. வீ. வேணுகோபால் பிள்ளையின் பதிப்புத் தொழில் தமிழ்வட்டம் - முதல் ஆண்டுவிழா மலர் கட்டுரை, பக்கம்-43.
  • அ. ம. சத்தியமூர்த்தி, "தமிழுலகம் நினைக்க மறந்த தமிழர்கள்" - பக்கம்-140.

உசாத்துணை


✅Finalised Page