under review

இறையனார் களவியல் உரை

From Tamil Wiki
archive.org

இறையனார் களவியல் (இறையனார் அகப்பொருள்) என்னும் நூல் தமிழரின் அகவாழ்வைப் (காதல் வாழ்க்கையை) பற்றிக் கூறும் இலக்கண நூல். சங்க காலத்தில் எழுந்த இறையனார் அகப்பொருளுக்குச் சங்கப் புலவராகிய நக்கீரர் (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) முதன்முதலாக உரை எழுதினார். இவ்வுரை காலத்தால் தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. முச்சங்க வரலாறு பற்றிய தொகுப்புக் குறிப்பினை முதன்முதலில் தந்த உரையாசிரியர் நக்கீரர். உரைநடை வளர்ச்சியில் சிலப்பதிகாரத்தில் வரும் உரைப்பாட்டு மடை என்னும் பகுதிக்குப் பின்னர் தமிழில் காணப்படும் உரைநடை இறையனார் களவியல் உரை. தமிழ் உரைநடை வரலாற்றில் சிறப்பிடம் பெறும் நக்கீரரின் இந்த உரையே இன்று நமக்குக் கிடைத்துள்ள உரைநூல்களில் காலத்தால் முந்தியது.

நூல் அமைப்பு

களவின் இலக்கணத்தையும் கற்பின் இலக்கணத்தையும் உரைக்கும் இறையனார் களவியல் நூலில் களவுப் பிரிவில் 33 நூற்பாக்களும் கற்பு பிரிவில் 27 நூற்பாக்களுமாக மொத்தம் 60 நூற்பாக்கள் உள்ளன. இப்பாக்களுக்கான உரை நக்கீரரால் இயற்றப்பட்டு 'இறையனார் களவியல் உரை' அல்லது 'இறையனார் அகப்பொருள் உரை' எனப் பெயர்பெற்றது. நக்கீரர் தாம் செய்த களவியல் உரையை வாய்மொழியாகத் தம் மகன் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரங்கொற்றனார் தேனூர்க் கிழாருக்கு உரைத்தார். இவ்வாறாக இந்த உரை அடுத்தடுத்து வாய்மொழியாக எட்டு தலைமுறைகளுக்கு ஒப்படைக்கப்பட்டது என்றும் இந்த உரை குறிப்பிடுகிறது. இறுதியில் பொ.யு. 10-ஆம் நூற்றாண்டில் முசிரி நீலகண்டன் இந்த உரையை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தார் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

நக்கீரர் கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை என்னும் நான்கு வகை உரைக் கூறுபாடுகளை விளக்கி, அதன் பின்னர் களவியல் நூற்பாக்கள் அறுபதுக்கும் முறையே நான்கு வகை உரைகளையும் வகுத்துக் கூறியுள்ளார். உரையில், உரைநடை கவிதைப் பண்பு கொண்டதாகவும், எளிமையானதாகவும், வினா விடை முறையிலும் அமைந்துள்ளது.

களவியல்

நூல் சிறப்பினாலும் உரைசிறப்பினாலும் பெயர்பெற்றது இறையனார் களவியல் உரை. தமிழில் ஐந்திணைகளின் வரலாறு, நூல்வரலாறு, முதல், கரு,உரிப்பொருள்களின் விளக்கம், எட்டுவகைத் திருமணம், நயப்பு, பிரிவச்சம், வன்புறை, அருமையறிதல் போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன. (தலைவன் தலைவியின் இடையே நடைபெறும் ஊடல்களைப் போக்கவும் இருவரையும் ஒன்றிணைத்து வைக்கவும் பாங்கற் கூட்டம், உற்றது உரைத்தல், தலைவனை வியந்து கூறுதல் என்பவையும் இதில் அடங்கும்). மடல் திறம் கூறல், தோழியின் பண்புநலன்கள், அறத்தோடு நிற்றல், புணர்ச்சியில் களிறுதரும் புணர்ச்சி, புனல் தரும் புணர்ச்சி, களவின் வழியே கற்பு, இரவுக்குறி, அல்லல்குறி, பகற்குறி, களவு வெளிப்படுதல், அலர் தூற்றல், ஊரார், போவோர், கண்டோர், வேலனைக் கேட்டல் போன்ற இன்னும் பல செய்திகள் களவியியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாடல் நடை

இறையனார் களவியல் உரையில் அமைந்த உரைநடைக்குச் சான்றாக அந்நூலிலிருந்து ஒரு பகுதியைக் காணலாம்.

இனிப் பயன் என்பது ‘இது கற்க இன்னது பயக்கும்’ என்பது. ‘இது கற்க இன்னது பயக்கு மென்பதறியேன்; யான் நூற்பொருள் அறிவல்’ என்னுமேயெனின், ‘சில்லெழுத்தினால் இயன்ற பயனறியாதாய், பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள் எங்ஙனம் அறிதியோ பேதாய்’ எனப்படுமாகலின் இன்னது பயக்குமென்பது அறியல் வேண்டும்.

இறையனார் களவியல்-தோற்றம்

க. வெள்ளைவாரணர் தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் மறைந்து போனதால் பொருளதிகாரத்தின் சூத்திரங்களை நன்கறிந்த இறையனார் என்னும் புலவர் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை முதல்நூலாகக் கொண்டு இறையனார் களவியலை இயற்றியிருக்க வேண்டும் எனவும், குறுந்தொகையின் முதல் பாடலை இயற்றிய இறையனாரும் இவரும் ஒருவரே எனவும் தன் முடிபை முன்வைக்கிறார்.

வடுவில்‌ காப்பிய மதுர வாய்ப்பொருள்‌
மரபு வீட்டியதால்‌ வழுதி யாட்சியை
வளவன்‌ மாற்றிட மதுரை கூப்‌பிடுநாள்‌
அடைவு கோத்தன அமுத சூத்திரம்‌
அறுபதாய்ச்‌ சமைநூல்‌ அமரர்‌ கீழ்ப்பட
அறிஞர்‌ மேற்பட அருள மூர்த்தகளே (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், காப்புப் பருவம்))

என்ற ஒட்டக்கூத்தரின் பாடலும் இக்கருத்துக்கு சான்றாகிறது.

இறையனார் களவியல்-தோற்றம் பற்றிய தொன்மக் கதை

இறையனார் களவியல் என்ற நூல் கடைச் சங்க காலத்தின் இடைப்பகுதியில் தோன்றியது. பாண்டியனது ஆட்சிக்காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மழையின்றி பஞ்சம் வாட்டியுள்ளது. இது ‘வற்கடம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இந்த வற்கடம் வாட்டிய காலத்தில் ஆண்ட பாண்டியனின் பெயர் இந்நூலில் குறிப்பிடப் படவில்லை. வேறு சில நூல்கள் இப்பாண்டியன் பெயரை உக்கிரப்பெருவழுதி என்று கூறுகின்றன.வற்கடம் தீர்ந்து மழை பெய்யும் காலம் வரும் வரை புலவர்கள் இந்த நாட்டில் வாழாமல் அனைவரும் வேறு நாடுகளில் வாழ்ந்துவிட்டு மழை பெய்து நாடு செழித்தால் மட்டும் அனைவரும் வரவேண்டும் என்று மன்னன் அனைத்துப் புலவர்களுக்கும் ஓலைமூலம் செய்தி அனுப்ப, புலவர்கள் நூல்களுடன் நாடு நீங்கினர். சிறிது காலம் சென்று அதேபோல மழைபொழிந்து வற்கடம் தீர்ந்துபோகிறது. சென்ற புலவர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர். அவ்வாறு மீண்டும் வந்த புலவர்கள் சில நூல்களை (ஓலைச்சுவடிகள்) கொண்டு வருகின்றனர். அந்நூல்களில் தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் மட்டும் காணவில்லை. "எழுத்தும் சொல்லும் பொருளதிகாரத்தின் பொருட்டு அல்லாவா உருவாயின. அஃதின்றேன் எழுத்தும் சொல்லும் மட்டும் கிடைத்து என்ன பயன்" என மன்னன் கவலை கொண்டு , மதுரையில் கோவில் கொண்ட ஆலவாயனிடம் முறையிட்டான் மறுநாள் சொக்கலிங்கத்தின் பீடத்தில் செப்பேடு ஒன்றில் இறையனார் களவியல் என்ற பெயரில் 60 சூத்திரங்கள் கொண்ட பொருள் நூல் ஒன்று காணக்கிடைத்தது. கடைச்சங்கப் புலவர்கள் 49 பேரும்அப்பொருள் நூலுக்கு உரை எழுதியிருந்தனர். இவ்வுரைகளில் எதைக் கொள்வது எதை விடுவது என்று சிக்கல் மன்னருக்கும் புலவர்களுக்கும் ஏற்பட்டது. மதுரைக்கு வெளியே உள்ள உப்பூரிக்குடியில் ஓர் ஊமை இருப்பதாகவும் அவன் பெயர் சிவகுமரன் (வடமொழியில் உருத்திரசன்மன்) என்றும் எந்த உரையை அவன் கேட்கும்போது கண்களில் நீர்மல்க தலையசைத்து கரவொலி எழுப்புகின்றானோ அதுவே சிறந்த உரை என்று அசரீரி எழுந்தது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உரை நக்கீரரின் உரைதான் என்று கூறப்படுகிறது. அதுவே இறையனார் களவியல் உரை என வழங்கி வருகிறது.

சிறப்புகள்

இறையனார் அகப்பொருளுக்கு எழுந்த நக்கீரர் உரையே இன்று நமக்குக் கிடைத்துள்ள உரைநூல்களில் காலத்தால் முந்தியது. மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறுகளைக் கூறும் ஆவணமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. 'தமிழ் உரைநடையின் ஆரம்ப காலத்தை - கவிதை நிலையிலிருந்து உரைநிலைக்குத் தமிழ் மாறுகிற ஒரு காலப்பகுதியைக் களவியல் உரை காட்டுகிறது"என்றுமு.வரதராசன்குறிப்பிட்டார். இவ்வுரைநடை பற்றி அ.மு.பரமசிவானந்தம் "இக்களவியல் உரை தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஒரு மைல் கல். அடுத்து வரப்போகின்ற பெரிய உரையாசிரியர்க்கெல்லாம் வழிகாட்டியாகவும், மணிப்பிரவாள நடைக்கு வித்திட்டதோ என்னுமாறும் இவ்வுரை செல்கிறது" என்று குறிப்பிடுகிறார். "நூலின் பொருளை வினாவிடைகளால் விளக்கும் தருக்க நூல்மரபும் இயற்கைக் காட்சிகளையும் ஆடவர் மகளிராகிய இருபாலாரின் உள்ளத்துணர்வுகளையும் சொல்லோவியமாகப் புனைந்துரைக்கும் கற்பனைத் திறமும் பாடல்களின் பொருள்களை நயம்பெற விளக்கும் இலக்கியச் சுவைநலமும் உலக வாழ்க்கையின் நுட்பங்களைச் சிறந்த உவமைகளாலும் பழமொழிகளாலும் புலப்படுத்தும் நுட்பமும் தமிழ்மொழியின் இலக்கணங்களைத் தெளிய வைக்கும்திட்பமும் ஒருங்கே பெற்றுத் திகழும் சீரிய உரைநடை இலக்கியம் இறையனார் களவியலுரையாகும்" என க. வெள்ளைவாரணர் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக் கழகம்

இறையனார் அகப்பொருள் உரை-மதுரைத் திட்டம்


✅Finalised Page