under review

கூத்தநூல்

From Tamil Wiki
கூத்தநூல்

கூத்தநூல் ( பொயு 15-ம் நூற்றாண்டு) : இது சாத்தனார் என்னும் கவிஞர் எழுதிய நாடக இலக்கண நூல். இந்நூலை 1963ல் ஏட்டுச்சுவடியில் இருந்து உரையெழுதிப் பதிப்பித்தவர் ச.து.சு.யோகியார். கூத்தநூல் என்னும் பழைய நூல் அல்ல இது பிற்காலத்தைய நூல், பெரும்பாலும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்நூல் நம்பகத்தன்மை அற்றது என்னும் எண்ணமும் ஆய்வாளர் நடுவே உண்டு.

(கூத்தநூல் என்னும் பெயரில் இன்னொரு நூல் உள்ளது. அதன் ஆசிரியர் கூத்தநூலார் என அழைக்கப்படுகிறார். அந்நூல் காலத்தால் இந்நூலுக்கு பழையது. பார்க்க:கூத்தநூல் (கூத்தநூலார்))

பதிப்பு வரலாறு

ச.து.சு. யோகியார் 1962-ல் கூத்தநூலின் ஏட்டுப்பிரதியை ஈரோட்டில் கண்டெடுத்தார். அவர் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் எழுதினார். மேலும் சில விளக்கவுரைகள் அந்நூலுக்கு எழுதவும், அதை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யவும் ச.து.சு.யோகியார் எண்ணியிருந்தார். அதற்குள் 1963ல் அவர் மறைந்தார் ச.து.சு.யோகியாரின் இறப்புக்குப்பின் மகாவித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை பதிப்பாசிரியராக அமைந்து 1968ல் இந்நூலை வெளியிட்டார். மத்திய சங்கீத நாடக அகாடமியும், மாநில சங்கீத நாடக சங்கமும் சேர்ந்து இதை பதிப்பித்தன. ச.து.சு.யோகியாரின் மனைவி இதை இரண்டம் முறையாக பதிப்பித்தார். கூத்தநூலின் இரண்டாம் பகுதியை ச.து.சு.யோகியாரின் கைப்பிரதியில் இருந்து அவருடைய மனைவி 1987-ல் வெளியிட்டார்.

தன் இறுதி நாட்களில் பெருமுயற்சியுடன் ச.து.சு.யோகியார் இந்நூலுக்கான உரையை எழுதியதாகவும் கையெழுத்துப் பிரதியை அச்சிட எண்ணி முதலில் தட்டச்சு செய்வதற்கு கொடுத்தபோது தட்டச்சு செய்பவரின் மனைவி தவறுதலாக அந்தக் கையெழுத்துப் பிரதியை எரித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. உடல் நலம் குன்றியிருந்த ச.து.சுயோகியாரிடம் மிகுந்த தயக்கத்தோடும் வருத்தத்தோடும் மருத்துவர் வழியாக இத்தகவலை சொன்னார்கள். மனம் தளராமல் மீண்டும் 1800 சூத்திரங்களுக்கும் விளக்கவுரை எழுதி நிறைவு செய்தார் என்று சொல்லப்படுகிறது.

நூலாசிரியர்

இந்நூலை எழுதச்செய்தவன் தென்னவன் (தென்னவன் வேண்ட) என பாயிரம் குறிப்பிடுகிறது

… முன்னைநூல் ஆய்ந்து

செந்தமிழ் நிலத்தும் சேர்பல நிலத்தும்

வந்தமெய்க் கூத்தின் வகைஎல்லாம் கண்டு

கூத்தநூல் நான்முகக் கூத்தன் சாத்தன்

வேத்தவை எல்லாம் வியப்பத் தந்ததே

என்னும் வரிகள் இதை எழுதியவர் சாத்தன் என்று கூறுகின்றன. தென்னவன் என்பது பாண்டியனைக் குறிப்பிடுகிறதா என்று ஆய்வாளர்கள் உறுதி செய்யவில்லை.

காலம்

கூத்தநூல் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியத்தில் வருகின்றன. தொல்காப்பியத்துக்கு உரைவகுத்த பேராசிரியர் (பொயு பதிமூன்றாம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் 32 உத்திகளுக்கு விளக்கம் அளிக்கையில் இசைநூலும், கூத்தநூலும் பிறன்கோள் கூறின என குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் ( பொயு பன்னிரண்டாம் நூற்றாண்டு) கூத்தநூலின் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டாக அளிக்கிறார்.

ஆனால் அந்தக் கூத்தநூல் தொன்மையானது என்றும், தென்னவன் ஆதரவில் சாத்தனார் எழுதிய இந்நூல் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள். முந்தைய கூத்தநூல் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.

ச.து.சு.யோகியார் பதிப்பித்த இந்நூலில் உள்ள புதிய சொற்கள் மற்றும் மொழிநடையை அடிப்படையாகக் கொண்டும், இந்நூலின் மூலச்சுவடிகள் பார்வைக்கு கிடைக்காமையாலும் இதன் நம்பகத்தன்மை ஐயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நூலின் நோக்கம்

கூத்தநூலின் உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தை அந்நூலின் பாயிரம் இவ்வாறு குறிப்பிடுகிறது

..மந்திர மாமலை யந்திரத் தவிசில்

வடக்குப் பரிதி கிடக்கப் போம்வழி

நால்வர்க்குத் தந்திர நான்மறை கூறும்

கூத்தனும் கூத்தியும் இயற்றிய கூத்தைக்

கண்டான் அகத்தியன் கண்ணுதல் செப்ப

இயற்றினான் கூத்தின் இலக்கண வைப்பே.

வடக்கே நால்வருக்கு தந்திர வேதம் சொன்ன கூத்தின் இயல்பைச் சொல்லும் நூல் இது. கூத்தனும் கூத்தியும் ஆக சிவனும் உமையும் ஆடிய கூத்தை அகத்தியன் கண்டான். சிவன் சொல்ல அகத்தியன் எழுதியது கூத்தநூலின் முதல் வடிவம். அந்நூலின் வழிநூல் இது என ஆசிரியர் சொல்கிறார்.

முன்னோடி நூல்கள்

அகத்தியரே கூத்துக்கு முதல் இலக்கணம் இயற்றியவர் என்பது கூத்தநூலின் முன்னுரையில் கூறப்படுகிறது ( அகத்தியன் இயற்றிய ஆகத்திய முதல்நூல்) அதை தொடர்ந்து சிகண்டி இயற்றிய தேன்இசை சார்பு எனும் நூல் வழிநூலாகச் சொல்லப்படுகிறது. தொடந்து

பேரிசை நாரை குருகு கூத்து

சயந்தம் குணநூல் முறுவல் சயிற்றியம்

தண்டுவம் நந்தியம் பண்ணிசை தக்கம்

தாளம் தண்ணுமை ஆடல்மூ வோத்தும்

வழிநூல்

என வழிநூல்களின் பட்டியலை நூலாசிரியர் சொல்கிறார். அவற்றை கற்று கூத்தநூல் இலக்கணத்தை உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார்

… அவற்றின் வழிவகை வகுத்துக்

கூத்தின் விளக்கம் கூறுவன் யானே (2)

உள்ளடக்கம்

ச.து.யோகியார் கூத்தநூலை ஒன்பது பகுதிகளாக பகுத்துள்ளார். அதை கூத்தநூலின் பொருளடக்கமாக ச.து.சு.யோகியார் வகுத்துச் சொல்கிறார்.

1. சுவை நூல்: (கலையின் தெய்வீக உணர்ச்சிகளை விவரிப்பது)

2. தொகை நூல்: (நாட்டிய வடிவங்களின் தொகுப்பு)

3. வரி நூல் (கிராமிய நாட்டியங்கள்)

4. கலை நூல் (கைகால்களின் நாட்டிய அமைப்பு)

5. கரண நூல்: (நாட்டியக் குறிப்புகளின் தொகுப்பு)

6. தாள நூல்: (காலவரையளவு)

7. இசை நூல்

8. அவை நூல்: (அரங்கமைப்பு வர்ணனை)

9. கண் நூல்: (கருத்து விளக்கம்)

இந்நூல் முழுமை பெறவில்லை என்றும்,கரணநூல், இசை நூல், அவை நூல், கண் நூல் ஆகியவை இன்னமும் தொகுக்கப்படவில்லை என்று ஆய்வாளர் தமிழ்த்தேசிக அரங்கர் குறிப்பிடுகிறார் (பார்க்க ஆடல்' ஆய்வுக்களம்)

மையப்பார்வை

சாத்தனாரின் கூத்தநூலின் மையப்பார்வை சைவமதம் சார்ந்தது. இது தொல்தமிழ் இலக்கணநூல்களின் அணுகுமுறை அல்ல

மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே

என்று சொல்லும் நூலாசிரியர் மோனத்தில் இருந்த சிவனின் உடுக்கில் இருந்து ஓசையும் அதில் இருந்து இசையும் ஆடலும் கூத்திலக்கணமும் உருவாயிற்று என்கிறார்.

விவாதங்கள்

கூத்தநூலின் மூலச்சுவடிகள் ஆய்வாளர்களுக்கு காட்டப்படவில்லை. ஆகவே அந்நூலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்நூல் வெளியானபோது வெளியிட்ட நிறுவனம் மீதும் பதிப்பாசிரியரான மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் உருவாயின. ஆகவே இதை வெளியிட்ட மத்தியமாநில சங்கீத நாடக அக்காடமிகள் இந்நூலை மறுபதிப்பு செய்யவில்லை. இந்நூலின் எஞ்சிய பகுதியையும் வெளியிடவில்லை .நீண்டகாலத்திற்கு பின்னரே நூல் மறுபதிப்பாகியது. கூத்தநூல் ஒரு போலிநூல், அது ச.து.சு.யோகியாரே எழுதியதாக இருக்கலாம் என்று அவ்வை நடராசன் ஒரு பேட்டியில் கூறுகிறார். (அவ்வை நடராசன் 14.3.2011 )

இலக்கிய இடம்

ச.து.சு.யோகியாரின் கூத்தநூல் மீது ஆய்வாளர்களுக்கு ஐயங்கள் உள்ளன. ஆகவே அவற்றை அவருடைய சாதனைகளாக கொள்ள இயலாதென்றாலும் இந்நூல் ஓர் இலக்கியப் படைப்பாக கருத்தில் கொள்ளத்தக்கது.

உசாத்துணை


✅Finalised Page