under review

குசேலோபாக்கியானம்

From Tamil Wiki
books.dinamalar.com

குசேலோபாக்கியானம் (குசேல உபாக்கியானம்) கண்ணனின் கதையைக் கூறும் பாகவத புராணத்தின் ஓர் கிளைக்கதை. கண்ணனுக்கும் குசேலருக்குமான நட்பைச் சொல்வது. இருவரும் சாந்தீபனி முனிவரின் குருநிலையில் ஒன்றாகக் கல்வி கற்றவர்கள். வறுமையில் தவித்த குசேலர் கண்ணனைக் காணவந்தததையும், அதற்குப் பின் நடந்தவற்றையும் கூறும் நூல். வல்லூர் தேவராய பிள்ளையால் இயற்றப்பட்டது. சென்ற நூற்றாண்டில் பரவலாகப் பயிலப்பட்டு வந்தது.

ஆசிரியர்

குசேலோபாக்கியானத்தின் ஆசிரியர் வல்லூர் தேவராய பிள்ளை. தேவராய சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். தொண்டை நாட்டு வல்லூரில் கருணீகர் குலத்தில் வீராச்சாமிப் பிள்ளைக்கு 1837-ம் ஆண்டு பிறந்தார். வல்லூர் தேவராய பிள்ளை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்.

குசேலோபாக்கியானத்தை வல்லூர் தேவராய பிள்ளைக்காக மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றினார் என்றும் கூறப்படுகிறது[1]. வல்லூர் தேவராசப்பிள்ளை செய்யுள் நூலை இயற்ற ஆர்வம் கொண்டு அது சரியாக வராமல் தவித்த போது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தானே குசேலோபாக்கியானம் நூலை இயற்றி அதை வல்லூர் தேவராசப்பிள்ளை பெயரில் வெளியிடவைத்தார். இந்த வரலாறை உ. வே. சாமிநாதையர் எழுதிய 'திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்' என்ற நூலின் முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரங்கேற்றம்

    ஏராருஞ் சகாத்தமா யிரத்தெழுநூற் றெழுபத்
    திரண்டினிகழ் சௌமியநல் லாண்டுதனுத் திங்கள்
  வாராரு மிருபத்து நான்காநாள் பரிதி
    வாரமொன்பான் தி திசோதி சிங்கவிலக் கினத்திற்
  பேராருங் குசேலமுனி தனதுசரித் திரத்தைப்
    பெட்பினினி தருந்தமிழின் இயல்செறியப் பாடித்
  தாராரும் புயத்தேவ ராசவள்ள லான்றோர்
    தழைத் துவகை பூப்பஅரங் கேற்றினனுள் மகிழ்ந்தே.

குசேலோபாக்கியானம் அரங்கேறிய காலம் விளக்கமாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.சாலிவாகன சகாப்தம் 1772, சௌமிய ஆண்டு, மார்கழித்திங்கள் இருபத்து நான்காம் நாள், ஞாயிற்றுக்கிழமை,நவமிதிதி, சுவாதி நட்சத்திரம், சிங்கலக்னம் கூடிய தினம் அரங்கேற்றப்பட்டது.

நூல் அமைப்பு

குசேலோபாக்கியானம் பாகவத புராணத்தையும் தெலுங்கு மொழியில் கட்டுப்பிரபுநாமர் எழுதிய குசேலோபாக்கியானத்தையும் மூலநூல்களாகக் கொண்டது. 770 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கடவுள் வணக்கம், குரு வணக்கம், பாயிரங்கள், சிறப்புப் பாயிரங்கள் என 24 பாடல்கள் உள்ளன. இந்நூலைப் பாடுவித்த இரு வள்ளல்களின் பெயர்கள் (கருணீகர் குலத்தைச் சார்ந்த சீனிவாசன், கோவிந்தன்) பாயிரங்களில் குறிப்பிடப்படுகின்றன.

குரு வணக்கம்

கடவுள் வணக்கத்திற்குப்பின் தன் குருவாகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையை வணங்கும் ஆசிரிய வணக்கப் பாடல்

     சீராருந் திரிசிரா மலையின்வளர்ந்
           தெக்காலுஞ் சிறப்பி னோங்கும்
     ஏராருங் கலைக்கடன்முற் றுண்டாங்கு
            நின்றெழீஇ யென்வி வேக
     வாராருந் தடம்நிரம்ப மனப்பறம்பின்
            இனியதமிழ் மாரி பெய்த
     பேராரு மீனாட்சி சுந்தரதே
          சிகமுகிலைப் பேணி வாழ்வாம்.

'உலகெலாம் புகழ் நாளும்' எனத்தொடங்கும் குசேலோபாக்கியானம்

  • குசேலர் மேல் கடல் அடைந்தது (197 பாடல்கள்)
  • குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம் அடைந்தது (340 பாடல்கள்)
  • குசேலர் வைகுந்தம் அடைந்தது (209 பாடல்கள்)

என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது.

குசேலர் மேல் கடல் அடைந்தது

சந்திரகுலத்து மன்னன் பரீட்சித்துவிற்கு சுக முனிவர் குசேகரின் கதையை கூறுவதாக நூல் தொடங்குகிறது. வட மதுரைக்கருகேயுள்ள அவந்தி நகருக்கு வெளியே அமைந்த முனிவர் சேரியில் குசேலன் என்ற நெறிபிறழா அந்தணன் வாழ்ந்து வந்தான். குசேலர் கண்ணனுடன் சாந்தீபனி முனிவரிடம் கல்வி கற்றவன். கண்ணனுக்கு உற்ற நண்பன்.வீடும், காடும், பொன்னும், ஓடும் ஒன்றே என எண்ணும் இயல்பினால் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தான். கிழிந்த ஆடையை தைத்து தைத்து உடுத்தியதால் 'குசேலன்' என்று பெயர் பெற்றார். குசேலரின் மனைவி சுசீலை குசேலருக்கும் சுசீலைக்கும் 27 குழந்தைகள் பிறந்தனர். மிகுந்த வறுமையால் கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி குழந்தைகள் வாடினர். சுசீலை குசேலனை கண்ணனை சென்று நோக்கி சிறிது பொருள் பெற்று வருமாறு வேண்டினாள். குசேலர் "வறுமை முன்வினைப்பயனால் வந்தது. என் நண்பனிடம் சென்று இரக்க மாட்டேன்" என்று மறுத்தான். குழந்தைகளுக்காக செல்லும்படி சுசீலை மீண்டும் மீண்டும் வேண்ட, குசேலர் செல்லத் தயாராகிறார். நண்பனைக் காணச் செல்லும்போது சிறியதாகவேனும் தின்பண்டம் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் சுசீலை பல நாட்கள் பட்டினி இருந்து தன் பங்கு அரிசியை சேமித்து அவலாக்கி ஓர் கந்தைத் துணியில் பொதித்துத் தந்தாள். குசேலர் பல நாட்கள் வெய்யிலிலும், மழையிலும், கடும் பசியுடன், சோர்வுடன் நடந்து, மேல் கடலை வந்தடைந்தார்.

குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம் அடைந்தது

மேல் கடலை அடைந்த குசேலர் துவாரகைக்குச் செல்லும் கப்பலின் மீகாமனிடம் வேண்டி கப்பலில் துவாரகையை வந்தடைந்தார். துவாரகை நகரின் அழகையும் செல்வச் செழுமையையும் கண்டவாறே கண்ணனின் மாளிகையை அடைந்தார். வாயிற்காவலனிடம் தான் கண்ணனின் நண்பன் எனக்கூறி உள்ளே செல்ல அனுமதி வேண்டினார். சுற்றியிருந்தவர் ஏளனம் செய்ய, கண்னனைக் காணமுடியாதோ என மயங்கினார். வாயிற்காவலன் உண்மையான சான்றோரின் பண்பை அறிந்தவனாதலால் உள்ளே 72 வாயிலகளைக் கடந்து சென்று கண்ணனின் அந்தப்புரம் சென்று "தங்களுடன் குருகுலத்தில் பயின்ற குசேலர் என்பவர் உங்களைக் காண வேண்டி வந்திருக்கிறார்" என உரைக்க கண்ணன் குசேலரை விரைந்து அழைத்து வருமாறு பணித்தான். குசேலர் மாளிகையில் அந்தப்புரம் நோக்கி நடந்து வருகையில் கண்ணனின் ஓவியங்களைக்கண்டு அவை கண்ணனே என மயங்கினார். அந்தப்புரத்தை அடைந்ததும் கண்ணன் அணை கடந்த வெள்ளம் போல் விரைந்து வந்து அடி பணிந்து அவரை ஆரத் தழுவினான். குசேலருக்கு உபசாரங்கள் செய்து நலம் விசாரித்தபின் தனக்கு உண்பதற்காக குசேலர் என்ன கொண்டு வந்தார் என வினவி, கந்தல் பொதியை அவிழ்த்து, அதிலிருந்த அவலை இரு கைப்பிடி எடுத்து உண்டான். மூன்றாவது கைப்பிடி அவலை எடுக்கும்போது ருக்மணி அவன் கையைப் பிடித்து தடுக்கிறாள். பஞ்சணையில் உறங்கியெழுந்த குசேலர் நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில் எதுவும் கேட்காமலேயே ஊர் திரும்பினார்.

குசேலர் வைகுந்தம் அடைந்தது

குசேலர் தன் ஊரையடைந்தபோது ஊர் செல்வச் செழிப்பு மிக்கதாய் மாறியதைக் காண்கிறார். தன் ஓலைக்குடிசை மாட மாளிகையாக மாறியதையும் மனைவியும் குழந்தைகளும் செல்வத்தில் திளைப்பதையும் கண்டார். மகிழ்ச்சியாக சில நாட்கள் வாழ்ந்தபின் குசேலர் உலக இன்பங்கள் நிலையானவை அல்ல என உணர்ந்து கண்ணனை வேண்டி தன்னை மீண்டும் வறியவனாக்கும்படி வரம் கேட்டார். "செல்வம் உன்னை வணங்குவதற்கு இடையூறாகும்" என்ற குசேலரிடம் கண்ணன் "நின்போன்ற அறிவுடையோர் எவ்வகைப்பட்ட இன்பத்தில் வாழினும் தெய்வத்தை மறவார். செய்யும் கடமைகளும் செய்யாது விடார்" என செல்வ வாழ்வில் இருத்தினான். பல காலம் சிறப்புடன் வாழ்ந்து, வைகுந்தம் சென்றார் குசேலர்.

பாடல் நடை

குசேலனின் வறுமை

இருநிலத் தியாவர் கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி யென்ன
ஒருவிய உளத்தான் காட்டில் உதிர்ந்துகொள் வாரும் இன்றி
அருகிய நீவா ரப்புற்றானியம் ஆராய்ந் தாராய்ந்(து)
உருவவொண் ணகத்தாற் கிள்ளி எடுத்துடன் சேரக் கொண்டு.

கண்ணன் குசேலரை உபசரித்து நலம் விசாரித்தல்

வழிநடந் திளைத்த வேயிம்
       மலரடி யிரண்டு மென்று
கழிமகிழ் சிறப்ப மெல்ல
       வருடினான் கமலக் கண்ணன்
பழியில்பல் லுபசா ரங்கள்
        பண்ணவுந் தெரியா னாகி
ஒழிவறு தவக்கு சேல
         னொன்றும்பே சாதிருந்தான்.

கண்ணன் என்ன கொண்டு வந்தாய் என குசேலரை வினவுதல்

பந்தனை யகன்ற மேலோய்
        பற்பல நாட்குப் பின்பு
வந்தனை யெனக்கென் கொண்டு
        வந்தனை யதனை யின்னே
தந்தனை யாயி னன்று
        தருசுவைப் பக்க ணத்தென்ப
சிந்தனை நின்ற தென்றான்
        தெரிவரும் வஞ்சக் கள்வன்.

கண்ணன் இரு பிடிகள் அவல் தின்றது

முன்னுமிவ் மவலொன் றேனு
    முனைமுறிந் ததுவு மின்று
பன்னுமுட் டையுமின் றாகும்
     பட்டவங் கையு மணக்குங்
கொன்னும்வாய் செறிப்பி னம்ம
      குளமும்வேண் டுவதின் றென்னா
உன்னுபல் லுலகு முண்டோன்
      ஒருபிடி யவறின் றானே
அரியஅன் பினிற்கொ டுத்தல்
       இழிந்ததா யினுஞ்சி றந்த
திரியுமன் பினிற்கொ டுத்தல்
      இழிந்ததே சிறந்த தேனும்
பெரியவர் புகழ்ப் பட்ட
      பெருந்தவக் குசேல மேலோன்
 உரியஅன் பினையுங் கூட்டி
      ஒருபிடி யவல்தின் றானே.

மூன்றாம் பிடியை எடுக்குமுன் ருக்மணி கண்ணன் கை பிடித்துத் தடுத்தது

     மற்றொரு பிடியெ டுத்து
          வாயிடப் போகுங் காலை
     முற்றிழைத் திருவு ருக்கு
          மணியெனும் முத்த மூரற்
     பொற்றொடிப் பூங்கொம் பன்னாள்
          பொருக்கென ஓடி வந்து
     கற்றவர் புகழ்தன் கேள்வன்
          கரத்தினைப் பிடித்துக் கொண்டாள்.

சிறப்புகள்

இந்நூலில் மக்கட்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளும் விளங்கக் காணலாம். தெய்வத் திருவருள், இல்லறவியல், மனைக்கிழத்திமாண்பு, வறுமையிற் செம்மை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, நட்பின் பண்பு, செல்வத்திற் செருக்கின்மை, மறையோரியல்பு, மன்னவரியல்பு முதலியவற்றின் சிறப்பும் அவசியமும் சொல்லப்படுகின்றது. எளிய நடையில் படிக்கும்வண்ணம் அமைந்தது.

உசாத்துணை

குசேலோபாக்கியானம்-தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page