பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ( அழகியமணவாள தாசர், ரங்கநாததாசர் ,பொ.யு 17-ம் நூற்றாண்டு) திருமால் மீது அஷ்டப்பிரபந்தம் என்னும் எட்டு பிரபந்தங்களைப் பாடியவர். திருவரங்கக் கலம்பகம் முக்கியமான நூல்.
வாழ்க்கைக் குறிப்பு
பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்கு அழகிய மணவாளதாசர், ரங்கநாத தாசர் எனும் சிறப்புப் பெயர்களும் உண்டு. சோழநாட்டில் உள்ள 'திருமங்கை' என்னும் ஊரில் பதுமநாப பட்டருக்கு மகனாகப் பிறந்தவர். வெண்மணி என்னும் ஊரினர் என்றும் கூறுவர். மணவாள மாமுனிகளின் மாணவர்க்கு மாணவர் என்றும் கூறுவர். தொல்காப்பியம் மற்றும் சங்கத்தமிழ் நூல்களையும் வைண சமய நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றார். தமிழ், வடமொழி எனும் இருமொழிகளிலும் புலமை பெற்றார். பட்டர் என்பவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவரது சீடரானார் என்பது பின்வரும் பாடலின் மூலம் அறியவருகிறது. இப்பாடலில் பட்டர் என்பது கூரத்தாழ்வாரின் மகனான பராசர பட்டரைக் குறிக்கிறது எனச் சிலர் கருதுகின்றனர்.
வாளிட்ட கீர்த்தி வளர்கூரத் தாழ்வான் மகிழவந்த
தேனிடோ தார்நம் பெருமாள் குமாரர் சிவனையயன்
தானியே சாபம் துடைத்தார் அரங்கர்சங் காழிபுயம்
நாளிடேன் என்றகுள் பட்டர்பொன் தாங்கதி நந்தமக்கே
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருவரங்கத்தில் வாழ்ந்தபோது அரங்கனைப் புகழ்ந்து திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல் திருநாமம் முதலிய பிரபந்தங்களைப் பாடினார் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அரங்கனைத் தவிர வேறு தலத்துப் பெருமாளைப் பாடாத இயல்பினர். ஆதலால் வேங்கடத்தான் இவரால் பாடப்பெற வேண்டுமென எண்ணி இவர் கனவில் தோன்றி, "வேங்கடத்தான் மீது சில நூல்கள் பாடுவாயாக!' எனக் கூற, வேங்கடமலையில் குரங்குகள் அதிகமாக இருப்பதால் 'அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்' என இகழ்ந்துரைத்தார். பிறகு வேங்கடத்தான் அய்யங்காருக்கு கண்டமாலை என்னும் நோயை உண்டாக்க, அது வேங்கடத்தான் உண்டாக்கியது என்பதை உணர்ந்த பின்னர் அத்தெய்வத்தின்மீது திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூல்களைப் பாடியதாகத் தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் (ப.36) கூறுகின்றது. திருவரங்கக் கோயில் முன்பு தியானத்தில் இருக்கும் பொழுது கோயிலுக்குரிய பசு காலிடறி இவர்மீது விழுந்ததாகவும் அதன் விளைவாகத் தம் 70-ம்வயதில் காலமானார் என்றும் வாழ்வியல் களஞ்சியம் கூறுகின்றது.
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பெயரர் கோனேரியப்பனையங்கார்.
காலம்
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் காலம் குறித்து ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. "1123-ல் தோன்றிய பராசர பட்டருடைய மாணவராக விளங்கியமையால் இவரது காலம் பொ.யு. 12-ம் நூற்றாண்டு" (தொ.1, ப. 887) என்று வாழ்வியல் களஞ்சியம் குறிப்பிடுகின்றது. ஆனால் கலைக்களஞ்சியம் 13-ம் நூற்றாண்டு (தொ.7, ப. 372) என்று கூறுகிறது. நா. இராமானுசம், சைவ எல்லப்ப நாவலர் பாடிய அருணைக் கலம்பகமும், ஐயங்கார் பாடிய திருவரங்கக் கலம்பகமும் ஒரே காலத்தில் பாடப்பெற்றவை என்னும் காரணத்தால் இவர் காலம் 16-ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17-ம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். "ஐயங்கார் 16-ம் நூற்றாண்டில் தமிழ்நூல் செய்திருக்கிறார்" (மு. அருணாசலம் 2005, 274) என்று மு. அருணாசலம் சுட்டுகின்றார். ந.சி. கந்தையா பிள்ளை, பாலூர் கண்ணப்ப முதலியார், கா. சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் இவர் 17-ம் நூற்றாண்டினர் எனக் கருதுகின்றனர். அஷ்டப்பிரபந்தத்திற்கு உரையெழுதிய மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, இவர் "பட்டர் என்பவரிடம் அருங்கலை பயின்றவர், கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் அவையில் பணிபுரிந்தார்" (ப. 5) என்று குறிப்பிட்டுள்ளார்.ஆய்வாளர்களில் பலரும் அவர் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று குறிப்பிடுகிறார்கள்.. திருமலை நாயக்கரின் அரசவையில் அரசியல் பணியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஈடுபட்டிருந்தாலும் அவரது இறை பக்தியை உணர்ந்த அரசன், இறைப்பணியாற்ற அப்பணியிலிருந்து விடுவித்தார் என்றும் கூறுவர்.
இலக்கிய வாழ்க்கை
திருமால் மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் பிள்ளைபெருமாள் அய்யங்கார் பாடிய எட்டு பிரபந்தங்களின் தொகுப்பிற்கு அஷ்டப்பிரபந்தம் என்பது பெயர். 'அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' எனும் வழக்கு அதன் மேன்மையினை எடுத்துக்காட்டுகின்றது.பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் கருத்துகளைத் தம் பிரபந்தங்களில் இவர் பயன்படுத்தியுள்ளார். அஷ்டப் பிரபந்தங்களில் திருவரங்கக் கலம்பகம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிள்ளைபெருமாள் அய்யங்கார் திரு நறையூர் நம்பி மீது மேக விடு தூது ( 205 பாடல்கள்), வீர வைணவ நிலையை நாட்டும் விடுதிக் கவிகள் 32 ஆகியவற்றையும் பாடியிருக்கிறார்.
விவாதங்கள்
அஷ்டப்பிரபந்தம் ஒருவரால் இயற்றப்படவில்லை; மணவாளதாசர் என்னும் பெயரைக் கொண்ட வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டது என்னும் கருத்தும் நிலவுகிறது. இதற்கு வலுவான சான்றாதாரம் இல்லை என்றாலும் அக்கருத்து முழுதாகப் புறந்தள்ளப்படவில்லை. ஏனெனில் அவர் எழுதிய அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள எட்டு பிரபந்தங்களில் திருவரங்கக் கலம்பகம் மொழிநடையாலும் யாப்பமைதியாலும் பெரிதும் வேறுபட்ட ஒன்றாகத் திகழ்கிறது. இக்கலம்பகத்தில் அவர் மரபைத் தழுவி பா எழுதிய போதிலும் பல பதுமையான பாவகைகளையும் இயற்றியிருக்கிறார். தமிழில் உள்ள விருத்த அமைப்பு முறைகளைக் சுட்டிக்காட்டி இலக்கணத்தை முறைப்படுத்திய விருத்தப்பாவியல் என்ற நூல் கூறாத பல அமைப்பு முறைகளில் குறிப்பாக அறுசீர், எண்சீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தப்பாக்களில் மிகுதியான புதுமைகளைப் படைத்திருக்கிறார். அவர் கட்டளைக் கலித்துறையில் மிகுதியான செய்யுட்களை இயற்றியிருந்தாலும் விருத்தப்பாவில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார்.
நூல் பட்டியல்
- திருவரங்கக் கலம்பகம்
- திருவரங்கத்து மாலை
- திருவரங்கத்தந்தாதி
- சீரங்க நாயகர் ஊசல் திருநாமம்
- திருவேங்கட மாலை
- திருவேங்கடத்தந்தாதி
- அழகர் அந்தாதி
- நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
உசாத்துணை
திருவரங்கக் கலம்பகம்-மூலமும் உரையும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Jan-2023, 06:20:41 IST
